கோடை மழை- விமர்சனம்
80 களின் பாரதிராஜா இன்னும் எங்காவது மிச்சம் இருக்கிறாரா என்று தேடிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஏக்க சாமிகளுக்கு, ஐம்பது சதவீத ஆறுதல்…. இப்படத்தின் இயக்குனர் கதிரவன்! வறட்சியும் பொட்டல் வெளியுமாக கிடக்கிற சங்கரன் கோவில் ஏரியாவை கூட, காட்சிக்கு காட்சி அழகாக காட்டியிருக்கிறார். ஒளிப்பதிவாளரும் இவரே என்பது கூடுதல் ஆச்சர்யம்.
களவை தொழிலாக வைத்திருக்கிற அந்த கிராமத்து இளைஞர்கள் மத்தியில், கனவே மிலிட்டிரிதான் என்று வாழ்கிறார் ஹீரோ. அதே ஊரிலிருக்கும் இன்ஸ்பெக்டர் தங்கை மீது அவருக்கு திடீர் காதல் வர, அதன் முடிவு என்னவாக இருக்கும் என்று தாறுமாறாக யோசிக்க ஆரம்பிக்கிறது மனசு. ‘அண்ணன் ஒரு கோவிலென்றால் தங்கை ஒரு தீபமன்றோ..’ என்றே வாழ்கிறாள் ஹீரோயினும். ‘எந்தங்கச்சி நான் கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டாள்’ என்று அண்ணன் நினைத்துக் கொண்டிருக்க, தாண்டவே கூடாது என்று நினைத்துக் கொண்டிருக்கும் அந்த பாசக்கார தங்கச்சியை எல்லைக் கோட்டை தாண்டி இழுக்கிறது காதல். இருவரையும் நேருக்கு நேர் பார்த்துவிடும் அண்ணன் என்ன செய்தார். அந்த காதலுக்கு நிஜமாகவே அண்ணன்தான் எதிரியா? அல்லது வேறொன்றா? பரபரவென நகர்கிறது படம்.
கட்டுத்தறி காளை ஒண்ணு, கன்னுக்குட்டி ஆன பின்பு அவன் எப்படியெல்லாம் உழப்புவான் என்பதை அவ்வளவு துல்லியமாக மனதில் வாங்கி திரையில் பிரதிபலிக்கிறார் அறிமுக ஹீரோ கண்ணன். தன் உயிர் நண்பன் அவ்வப்போது கேரளாவுக்கு போய் திருடிக் கொண்டு வந்து பிழைப்பு நடத்துகிறவன் என்ற உண்மையும், அந்த திருட்டுக்கு ஒரு நாள் நாமே துணையாக நின்றிருக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சியும் அவரை போட்டு தாக்குவதை மிக இயல்பாக வெளிப்படுத்துகிற அவர், காதலில் குழைந்து தவித்து போராடுவதையும் நிஜம் போலவே உணர்த்தியிருக்கிறார். நல்ல வரவான கண்ணனுக்கு ஒரு நல்வரவு! (அதெப்படிதான் ஒருத்தியை பிடித்தவுடன் பளிச்சென்று பச்சை குத்திக் கொள்கிறார்களோ? அப்படி பார்த்தால், திருநெல்வேலி கன்னியாக்குமரி பகுதியிலிருந்து சென்னைக்கு வந்திறங்கும் அநேக ஆம்பிளைகளை ஆராய்ந்தால் உட்கார்ந்த இடத்திலேயே ஒரு வாக்காளர் பட்டியல் தயாரித்து விடலாம் போலிருக்கே?)
அடக்க ஒடுக்கமான கிராமத்துப் பெண் கேரக்டரில் ஸ்ரீபிரியங்கா. ஏற்கனவே கங்காரு, வந்தா மல போன்ற படங்களில் நடித்து அசத்தியவர். ‘உதடுகள் பேசத் தேவையில்லை. கண்கள் போதும்… ஆயிரம் பக்கத்தில் சொல்ல வேண்டியதை அது சொல்லும் அசால்ட்டாக’ என்று நிமிஷத்துக்கு நிமிஷம் புரிய வைக்கிறார். அந்த காலத்து ஷோபா போல தமிழ் சினிமாவுக்கு கிடைத்த நல்ல நடிகை. “குறுக்கு பிடிச்சுக்குச்சு” என்று ஹீரோவின் வீட்டுக்கு யதார்த்தமாக வரும் அவர், அதற்கப்புறம் காதல் வந்த பின் சும்மாச்சுக்கும் வந்து குறுக்குப்பிடி வைத்தியம் பார்த்துக் கொள்வதெல்லாம் அழகோ அழகு. அந்த வாதக் கிளை வைத்தியம்… செம்ம!
ஒரு கிராமத்து இன்ஸ்பெக்டர் எப்படியிருப்பார். அவரது கோபம் எப்படியிருக்கும் என்பதையெல்லாம் அவ்வளவு துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கிறார் மு.களஞ்சியம். தமிழ்சினிமாவுக்கு ஒரு நல்ல குணச்சித்திர நடிகர் ரெடி! தைரியமாக ரெகமண்ட் பண்ணுகிறோம்… இயக்குனர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்!
ஹீரோவின் நண்பராக நடித்திருக்கும் அந்த இளைஞரும் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். கடைசியில் அவரது மரணம் தியேட்டரை உலுக்கி எடுக்கிறது. டிராக் காமெடியாக இருந்தாலும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார் இமான் அண்ணாச்சி.
மிக இயல்பாக நகரும் கதையில் எங்கும் தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை உணர்ந்து நறுக்கியிருக்கிறார் எடிட்டர் டி.எஸ்.ஜெய். வெகு காலத்திற்கு பிறகு யாரையும் துன்புறுத்தாத அழகான இசை. பாடல்கள் அத்தனையும் காதில் கரைந்த சர்க்கரை மூட்டை என்றால், பின்னணி இசை அதைவிட அற்புதம். இசையமைப்பாளர் சாம்பசிவத்திற்கு தனி பாராட்டுகள். ட்யூன்களுக்கு ஏற்ப வரிகளை போட்டு அதை மேலும் அழகாக்கி கொடுத்திருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.
இந்தக்கதை இப்படிதான் முடியும் என்று யூகிக்க வைக்காமல் கதை சொல்லியிருக்கும் அறிமுக இயக்குனர் கதிரவன் பாராட்டுக்குரியவர்தான். ஆனால் ஆங்காங்கே உயர்த்திப் பிடிக்கும் ஒரு சாதி பெருமையைதான் ஒப்புக் கொள்ள முடியவில்லை.
கோடை மழை… அடிச்சுப் பெய்திருக்கு!
-ஆர்.எஸ்.அந்தணன்