தள்ளி விட்டவர்களும், சறுக்கி விழுந்தவர்களும்!

‘குறடு, திருப்புளியையெல்லாம் குரல்வளைக்குள்ள விட்டு, ‘ஊர்ல இருக்கிற கெட்ட வார்த்தையெல்லாம் ஒண்ணு விடாம கொட்றா’ என்பார்கள் போலிருக்கு! வேற வழியில்ல, திட்டிற வேண்டியதுதான்’ என்று கிளம்புகிறது ஒரு கூட்டம்! அவர்களை திகட்ட திகட்ட திட்ட வைத்துக் கொண்டிருக்கிறது இன்னொரு கூட்டம். ‘ரப்பர் வாயா, கோமுட்டி தலையா, களிமண்ணு மண்டையா’, என்று கவுண்டமணி திட்டினால் கைதட்டுகிற கூட்டம், அதையே செந்தில் திட்டினால் மட்டும் ‘திமிர்டா’ என்கிறது. அவர் போட்டால் ஆஃப் பேண்ட். இவர் போட்டால் அண் டிராயரா? என்று யாரும் கேட்பதில்லை. அதனாலென்ன…? செந்திலை தவிர சறுக்கி விழுந்தவனின் மனசெல்லாம் தள்ளிவிட்டவனுக்காக சேறு குழைக்கிறது.

உலகத்தின் எந்த மூலையிலும் இப்படி நடந்ததாக நினைவில்லை. சில வருஷங்களுக்கு முன்பு செத்துப்போனார் தொழில் விஷயத்தில் ஜீவனுள்ள அந்த கேமிராமேன். தமிழ்சினிமா மட்டுமல்ல, அண்டை மாநில சினிமா இன்டஸ்ட்ரியும் வியக்கிற அளவுக்கு திறமைசாலி. அவரால் அறிமுகப்படுத்தவர்கள்தான் இன்று மார்க்கெட்டில் திரியும் மச்சக் காளைகள், மச்சக் கன்னிகள்! அப்படிப்பட்டவரின் திடீர் மரணம் பல ஹீரோக்களையும் ஹீரோயின்களையும் கலங்க வைத்தது. அதே சமயம் வேறொன்றும் நடந்தது கோடம்பாக்கத்தில். அவர் இறந்தார் என்ற செய்தி கேட்டதும், இங்கு சுட சுட போஸ்டர் அடித்தது ஒரு கும்பல். ‘வருந்துகிறோம்’ என்றல்ல, ‘மகிழ்கிறோம்’ என்று! சம்பந்தப்பட்ட ஒளிப்பதிவாளரின் பெயரை கொட்டை எழுத்தில் போட்டவர்கள் அவரது போட்டோவையும் பிரிண்ட் பண்ணியிருந்தார்கள்

அந்த போஸ்டரின் கீழே வாசகம் வேறு…

‘மேற்படி கேமிராமேன் அகால மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மகிழ்கிறோம். இப்படிக்கு —–மேன்கள்’ என்று அச்சிடப்பட்டிருந்தது அதில். கண்ணில் பட்ட சுவற்றில் எல்லாம் பரபரவென ஒட்டியும் விட்டார்கள். கொடுமை என்னவென்றால் அப்படியொரு அடாத செயலில் ஈடுபட்டவர்கள் அத்தனை பேரும், அந்த ஒளிப்பதிவாளரின் யூனிட்டில் அவ்வப்போது பணியாற்றியவர்கள்தான்! ‘வார்த்தைக்கு வார்த்தை எங்கள் பிறப்பை சந்தேகப்பட்டவர் சார் அவரு…’ என்று விளக்கம் கொடுத்தார்கள் அவர்கள். இருக்கட்டும், ஹிட்லரே செத்துப் போனால் கூட, அவன் மீசை சைசுக்கு ரெண்டு சொட்டு கண்ணீர் துளிகள் வரைவதுதானேய்யா நம்ம பண்பாடு?

தமிழ்சினிமாவில் எல்லா ஓணான்களும் ஓரமாதான் போயிட்டு இருக்கு. சும்மாயில்லாத சூரியன்தான் சுளீர்னு அடிச்சு வம்புக்கு இழுக்குது! அப்படி வம்பிற்கிழுத்த சூரியனும், வாலை நீட்டிய மியூசிக் டைரக்டரும்தான் இந்த எபிசோடின் ஹீரோக்கள்!

இப்பதான் அவர் டண்டனக்கா! அறிமுகமான காலத்தில் தமிழ்நாட்டு இளைஞர் படை மொத்தமும் அவரது படைப்புக்காக பித்து பிடித்து அலைந்தது. பாடல்கள் ஒவ்வொன்றும் ரவா லட்டு! அதில் வழியும் மெலடியை இப்போது டி.வி யில் கேட்டாலும், பார்த்தாலும் அப்படியே கிறங்கிப் போய் கிடக்கும் ஊர். மியூசிக் மட்டுமல்ல, அவர் இயக்கிய படங்கள் எல்லாம் அந்த காலத்தில் சில்வர் ஜுப்ளி. ஏ யாவது பி யாவது? எல்லா சென்ட்டரும் நான்தாண்டா என்று அவர் கொண்டாடிய காலமும், ஜனங்கள் அவரை கொண்டாடிய காலமும் உண்டு. இப்போதெல்லாம் ஒரு ஹிட்டுக்கே கோவணத்தை அவிழ்த்து தலையில் பரிவட்டமாக கட்டிக் கொள்கிறார்களே, அப்போதெல்லாம் அவர் தொடர்ச்சியாக ஏழெட்டு ஹிட்டுகள் கொடுத்தார். அப்போதே கோடி கோடியாக கொட்டி அள்ளியது அவர் படங்கள்.

‘டே.ய்… காதலிக்கிறவன்ட்ட இல்லடா சின்சியாரிடி, இருந்தாலும் காதலுக்கு நான்தாண்டா அத்தாரிடி’ என்று சொல்வது போலவே இருக்கும் அவரது படங்கள். அந்த பரபரப்பான நேரத்திலும் ரொம்ம்ம்ம்…ம்ப கேட்டுக் கொண்டால், மற்றவர் படங்களுக்கும் இசையமைத்து தந்தார் அவர். அப்படி அவர் இசையமைத்த படம் ஒன்றின் ஹீரோ…? ஐயோ, சொல்லவே நடுங்குது. நடிப்புக்கே அவர்தான் அத்தாரிடி. வாழும்போதே வரலாறு, சாகும்போதே சரித்திரம்னு தமிழ்சினிமா மட்டுமல்ல, உலகமே கொண்டாடுற பெரிய்ய நடிகர்.

சுச்சுவேஷனை டைரக்டர் சொல்லுவார். இவர் ட்யூன் போட்டுக் கொடுப்பார். அத்தோடு முடிந்தது அந்த பெரிய நடிகரின் படத்தில் இவரது பங்களிப்பு. ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு போக வேண்டிய வேலையெல்லாம் இல்லை.

இவர் கால்சட்டை போட்டு திரிந்த காலத்திலேயே அந்த பெரிய நடிகரை வியந்தவரல்லவா? அதனால் பூ பழம் குங்குமம் வைத்து பூஜிக்காத குறையோடுதான் அந்த படத்திற்கு மியூசிக் போட்டுக் கொண்டிருந்தார் . பஞ்சாங்கம் சும்மாயிருந்தாலும், பல்லி சும்மாயிருக்குமா? நச்சென்று உச்சந்தலையில் விழுந்து, ‘நாளைக்கு நீங்களும் அவரும் சந்திக்கிறீங்க, தெரியுமோ?’ என்றது. வேறொன்றுமில்லை, ஒரு படத்தின் இசையமைப்பாளர் அப்படத்தின் ஹீரோவை மரியாதை நிமித்தமாக சந்திக்கணுமே, அதற்கான சந்திப்புதான் அது. விடிய விடிய தூங்கவில்லை இவர். எவ்வளவு பெரிய நடிகர் அவர். நூற்றுக்கணக்கான படங்கள். எந்த படத்திலிருந்து எதை சொல்லி ஆரம்பிப்பது. பேசாம அவரு படத்துல வர்ற பாட்டு ஒன்றை பாடி அப்படியே அறிமுகத்தை ஆரம்பிச்சுரலாமா? இப்படி விடிய விடிய யோசனை….

காலையில் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு அது. உருமி மேளத்தை உடைச்சு, ஊரு முழுக்க விசிறியடிச்ச மாதிரி, இன்னமும் புலம்ப வைத்த சந்திப்பு! ஸ்பாட் ஒரே நிசப்தமாக இருந்தது. அப்படிதான் இருக்கும். ஏனென்றால் யாராவது சப்தம் போட்டு பேசினால், டிஸ்ட்ரப் ஆவார் நடிகர். இவரும் மெல்ல நடந்து அருகில் சென்றார். அன்றைய தேதியில் இளைஞர்களின் ஆகர்ஷம் ஆச்சே நம்ம மியூசிக் டைரக்டர்? அங்கிருந்த அத்தனை கூட்டமும் அப்படியே மெல்ல நடந்து அருகே வந்து இந்த சந்திப்பை கண்குளிர காண முற்பட்டது.

தன்னை நோக்கி ஒருவர் அழைத்துவரப்படுகிறார் என்பதை அறிந்த நடிகர், அப்படியே மெல்ல திரும்பினார் இவர்கள் பக்கம். ‘ஐயா… வணக்கம்’. என்று பம்மிய டைரக்டர், ‘இவர்தான் நம்ம படத்தோட மியூசிக் டைரக்டர்’ என்று அறிமுகப்படுத்தினார். இவரும் பவ்யமாக இரு கையையும் எடுத்து கும்பிட்டார். அதோடு கருமேகங்கள் கலைந்திருந்தால், அங்கு இடிக்கும் வேலையில்லை. மின்னலுக்கும் சோலியில்லை. விதி சும்மாயிருக்குமா? தகர டப்பாவை உருட்டியது. நடிகர்தான் துவங்கினார்.

ஓ…. நீதான் அந்த டமுக்கு டப்பானா? (ஓ… நீதான் அந்த மியூசிக் டைரக்டரா? என்று கேட்க நினைத்திருக்க வேண்டும். டங்க் ஸ்லிப்! ) அதற்குள் சுற்றியிருந்த கூட்டம் கலீரென்று சிரிக்க, அவமானமாகிப் போனார் இவர்.

நம்ம மியூசிக் டைரக்டர் இருக்காரே, சும்மாவே சூரத் தேங்காய். பாறை வேறு பலமாக மோதிவிட்டதா? தலையை சிலுப்பிக் கொண்டார். ‘ஆமாங்க… உங்களை மாதிரி மூஞ்சியில சுண்ணாம்பு அடிச்சுகிட்டு ஆடுறாங்கள்ல… அவங்களுக்கெல்லாம் நான்தான் டமுக்கு டப்பான்’ என்றார் ஆவேசத்தோடு. அப்படியொரு பதிலை யாரும் எதிர்பார்க்கவில்லை. சம்பந்தப்பட்ட நடிகரும் எதிர்பார்க்கவில்லை. சுவிட்ச் ஆஃப் செய்தால் கூட நிற்காத டெக்னாலஜியில் செய்யப்பட்ட உதடுகள் நம்ம மியூசிக் டைரக்டருக்கு. உடனே நெய்வேலிக்கு தந்தியடித்து மின்சார உற்பத்தியையே நிறுத்தினால்தான் ஆச்சு. தொடர்ந்து ஏதோ சொல்ல வாயெடுத்தவரை, அப்படியே காலில் விழுந்து தடுத்தார் டைரக்டர்.

‘சார்… வாங்க போயிரலாம்’ என்று கெஞ்சாத குறையாக இழுத்துக் கொண்டு புளோரை விட்டே வெளியேறியிருந்தார். கொடுமை என்னவென்றால் மியூசிக் டைரக்டரும், நடிகரும்  அடுத்தடுத்த தெருக்களில் வசித்து வந்ததுதான். இனிமே அவரு குடியிருக்கிற தெரு வழியாக கூட போக மாட்டேன் என்று சபதமே எடுத்துவிட்டார் இவர். அந்த தெருவை தாண்டிப் போகிற வேலை இருந்தாலும், நாலு தெரு சுற்றிதான் செல்கிறார் இப்போதும்.

ஒருமுறை ஏற்பட்ட வெறுப்பு அதற்கப்புறமும் நீங்காத வெறுப்பாகி போவதெல்லாம் அவரவர் ஸ்மரணையை பொறுத்தது. நம்ம மியூசிக் டைரக்டர் அதற்கப்புறம் ஒரு வார இதழை ஆரம்பித்திருந்தார். அங்கு வேலை செய்த பத்திரிகையாளர்களுக்கு தரப்பட்ட கட்டளை என்ன தெரியுமா? அந்த நடிகர் பற்றிய செய்தியோ, போட்டோவோ நம்ம இதழ்ல வரக் கூடாது என்பதுதான். ஆனால் மறுபடியும் ஒரு நாள் உச்சந்தலையில் பல்லி விழுந்தது.

அது ஒரு கரிநாள், சொறிநாள், வெறிநாள்தான். சத்தியமாக திருநாள் அல்ல.

டைரக்டர் ஊரிலில்லாத நேரம். ஏதோ ஒரு பிட் செய்தி. அதுவும் அந்த சாகா வரம் பெற்ற நடிகர் பற்றிய சுவாரஸ்யமான தகவல். எங்கிருந்தோ ஒரு வாசகர் அனுப்பி வைத்திருந்தார். அட நல்லாயிருக்கே என்று நினைத்த பொறுப்பாசிரியர், அதை ஒட்டி பக்கத்திலேயே நடிகரின் படத்தையும் ஒட்டி பிரிண்டுக்கு அனுப்பிவிட்டார். மறுநாள் ஊருக்கு போன டைரக்டர் என்ட்ரி. அது அலுவலக நேரம்தான்.  குய்யோ முய்யோவென்று ஓடி வந்தார்கள் பிரஸ்சிலிருந்து. அப்போதுதான் பொழுது போகல என்பதற்காக நாலு பேரை பிராண்டிவிட்டு, ஆறு பேரை கடித்து தள்ளிவிட்டு வாயில் வழிந்த ரத்தத்தை துடைத்துக் கொண்டு சிட்டிங் பொசிஷனுக்கு வந்திருந்தது சிங்கம்!

‘அண்ணே… ஒரு தப்பு நடந்து போச்சு. பிரிண்டிங்ல கலர் கரெக்ஷன் பண்ணுறவன் செருப்பை உள்ள விட்டுட்டான். அது மெஷின்ல சிக்கிக்கிட்டு எல்லாம் ஸ்டக் ஆகிருச்சு’. என்று மூச்சிரைக்க சொல்ல, வினாடி நேரம் கூட தாமதிக்காமல் விழுந்தது ‘பொட்டேர் ’ என்று தகவல் சொன்னவனுக்கு! இது போல பின்னங்கழுத்தில் பொட்டேர் வாங்கிய தொழிலாளர்கள் அங்கு அநேகம் பேர் இருந்தார்கள். சேதி சொல்ல வந்தவனுக்கும் கூட சேர்த்து பிரசாதம் தருகிற அளவுக்கு கோவக்கார குழந்தையாச்சே இவர்? விழுந்த அடியை வாங்கிக் கொண்டு தூதுவன் கிளம்ப, பின்னாலேயே ஓடியது சிங்கம். ‘கோடிக்கணக்குல செலவு பண்ணி வாங்குன மிஷின்டா அது. இன்னும் ஒரு மாசம் கூட ஆவல. அதுக்குள்ளயா?’ என்கிற ஆத்திரம்.

நாலு தெரு தள்ளி அமைந்திருந்த சொந்த பிரஸ்சுக்கு போய் இறங்கி, காரை திறந்து கொண்டு அப்படியே உள்ளே ஓடினார். மிஷினை சமீபித்து ‘என்னடா நடந்துச்சு இங்க?’ என்று கேட்டுக் கொண்டே மெஷினை சுற்றி சுற்றி வர, அப்போதுதான் அவர் கண்ணில் பட்டது அந்த காட்சி. பிரிண்டிங் ஓட ஆரம்பித்து முதல் பார்ஃம் மெல்ல வெளியே எட்டிப்பார்த்திருந்தது. அதில், சிரித்த முகத்துடன் காட்சி தந்தார் இவருக்கு எப்போதுமே ஆகாத அந்த பெரிய ஹீரோ!

க்ஷண நேரம் கூட தாமதிக்காமல் தன் இடுப்பு வேட்டியிலிருந்த பெல்டை இவர் உருவியதுதான் தாமதம்…. வினாடி நேரத்தில் பிரஸ்சே வெறிச்!  அதற்கப்புறம் அவர்களை விரட்டிக் கொண்டு இவர் தெருமுனை வரைக்கும் ஓடியதெல்லாம் மயான கொள்ளை சமயத்துல மர்ம ராத்திரியில மட்டுமே கிடைக்கிற தர்ம தரிசனம்!

திரும்பவும் அந்த காட்சியை பார்க்கணும்னா நடிகரின் போட்டோவை நம்ம டைரக்டருக்கு கூரியர்ல அனுப்பி பாருங்களேன்…

(குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிய கோடம்பாக்கம் செக்போஸ்ட் தொடரிலிருந்து)

2 Comments
  1. Dandanakka says

    Dandanakka reaction absolutely right. Fraud overacting family.

  2. shanmugam says

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஜய்யின் நீலக்கண் பரம்பரை ? இது புலி பட ரகசியம்!

புலி படம் குறித்த சின்னஞ்சிறு செய்திகளை கூட மிக மிக ரகசியமாக வைத்திருக்கிறார்கள். அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமாச்சாரத்தையே கூட தடபுடலாக நாள் நட்சத்திரம் பார்த்துதான் ரிலீஸ்...

Close