கொடிவீரன் -விமர்சனம்
ஏழு தலைமுறைக்கு முன்னால் வந்திருந்தால் கூட, ‘எதுக்குப்பா இவ்ளோ பழசு?’ என்று கேட்கிறளவுக்கு அரத பழசான கதை. அதை அரிவாளால் கொத்தி, ரத்தத்தால் பக்தி பண்ணியிருக்கிறார் ‘சாதி வெறி சங்கரலிங்கம்’ மிஸ்டர் முத்தையா! வெட்டி வம்பு, வீரத்தழும்பு இவ்விரண்டும்தான் மானத் தமிழனின் மேங்கோ ஜுஸ் என்று நம்பி வாழும் ஒரு கூட்டத்தின் கதை என்று சுருக்கமாக சொன்னால் இன்னும் பொளிச்சென்று விளங்கிவிடும். (இவரிடமிருந்து இனியொரு படம் தாங்கவே தாங்காது. எச்சரிக்கையா இருந்துக்கோ இன்டஸ்ட்ரி!)
அப்பா அம்மா இல்லாமல் தன் தங்கையை வளர்க்கும் சசிகுமார், வளர்ந்து பெரியவன் ஆன பின் செய்யும் தொழில் சாமியாடுவது. ஊருக்கே நல்லபடியாக குறி சொல்லும் அவன், தன் தங்கச்சிக்கு மட்டும் ஒரு சொரேர்… கொடுக்க, அந்த அன்பான தங்கச்சிக்கு துளி வருத்தமில்லை. ‘அண்ணன் நீயிருக்கும்போது எனக்கென்ன கவலை?’ என்கிறார். ஐயோ… கொடுமை. மொத்த கவலையும் அதே தங்கச்சியால் வந்து சேர்கிறது அண்ணனுக்கு. எப்படி?
அந்த தங்கச்சி சனுஷாவை விரும்பும் விதார்த், லோக்கல் ஆர்.டி.ஓ. இவருக்கும் வில்லன் பசுபதிக்கும் முன் பகை. விதார்த்தை போட்டுத்தள்ள கிளம்பும் அவரை, சசிகுமார் போட்டுத் தள்ளுவதுதான் க்ளைமாக்ஸ். சனுஷாவை தவிர படத்தில் வரும் மேலும் இரண்டு தங்கச்சிகளால் படத்தில் வரும் சண்டைக்காட்சிகள் அடிஷனல் அநியாயம்.
சுப்ரமணியபுரம், நாடோடிகள், சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் நடித்த அந்த சசிகுமாரா இது? உங்க கதை நாலெட்ஜ் என்னாச்சுண்ணே? எங்க போச்சு? ‘வரவர அண்டா, வளைஞ்சுப் போன சொம்பா போன மாதிரி’ போயிட்டீங்களே? ஆனாலும் கொடுத்த கேரக்டருக்கு வஞ்சகமில்லாமல் நடித்திருக்கிறார் சசிகுமார். அவ்வளவு பெரிய அருவா வீரன், மகிமா நம்பியாரிடம் காதலை சொல்ல தவிக்கிற காட்சிகள் சுவாரஸ்யம். பைட் காட்சிகளில் பரோட்டா மாவு போல நசுக்கி பிசையப்பட்டிருக்கிறார் சசி. அதற்காகவும் தனி அப்ளாஸ்.
பசுபதி எல்லா படங்களிலும் விழுந்தடித்துக் கொண்டு நடிப்பதில்ல. எப்பவாவது வருகிற படங்களும் இப்படியிருந்தால் என்னாவது? ஒரு ஆட்டுக்கிடாயை ஒரே வெட்டில் வெட்டுவதற்கு இவர் காட்டுகிற பில்டப்… சிரிப்பதா, அழுவதா ரகம்.
பூர்ணாவும் ஒரு தங்கச்சி. கெட்டதை மட்டுமே செய்து பழக்கப்பட்ட புருஷன் கொல்லப்பட்டான் என்றவுடன் கொதித்தெழுகிற இவரது கேரக்டர் எந்த விதத்திலும் நியாயமில்லாதது. ஆனால் அண்ணனை உசுப்பிவிட்டு அடுத்த கொலைக்கு தயாராகிறார். கொடுக்கப்பட்ட வேடத்தை சிறப்பாக செய்தது மகிழ்ச்சிதான். இந்த பொல்லாத கேரக்டருக்காக மொட்டையெல்லாம் அடித்திருக்க வேண்டுமாங்க?
படத்தின் ஒரே ஆறுதல் சனுஷாவும் மகிமாவும்தான். தேன் சிரிப்பும் திகட்டாத இனிப்புமாக வளைய வருகிறார்கள்.
படத்தில் விதார்த்தும் இருக்கிறார். ஒரு காலத்தில் தனி ஹீரோவாக நடித்து வந்தவர். இப்போது கேரக்டர் ரோலுக்கு இறங்கி வந்ததற்கு என்ன காரணமோ? எனிவே… கிடைத்த கேரக்டருக்கு நேர்மை செய்திருக்கிறார்.
சசிகுமாரை போலவே தாடி மீசையெல்லாம் வளர்த்துக் கொண்டு திரிகிறார் காமெடியன் பால சரவணன். ஆங்காங்கே சிரிக்கவும் வைக்கிறார்.
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் ரிப்பீட் ட்யூன் என்றாலும், ரசிக்க முடிகிறது. பின்னணி இசை பிரமாதம். காட்சிகளின் வேகத்தை கம்பீரமாக கடத்துகிறது கதிரின் கேமிரா.
சாதிவெறிக்குள் விழுந்து கிடக்கும் முத்தையாவை கரையேற்றுவது கடினம். ஆனால், சசிகுமார் மாதிரி ஹீரோக்கள் மாறிக் கொள்வதே சுலபம்.
கொடிவீரன் – அரைக்கம்பம்!
-ஆர்.எஸ்.அந்தணன்.
Ranjith edutha mattum purachi! Muthaiyana saathi veriyaa?
Muththaih mela ippo than konjam adhigama saathi veru nu comment varudhu…. Ana Ranjith Madras edukkumpodhe neriya peruku erinchadhu…. adhu yen?? Ranjith saathi peruma pesala, ana Muththaih pesuran….