கொம்பன் / விமர்சனம்

‘ஒரு டிக்கெட் வாங்குனா கூடவே ஒரு பட்டியல் சாதிக் சாதிக்காரனோட குடல் கறிய இலவசமா தர்றாங்களாமே?’ என்று பொதுமக்கள் அச்சப்படுகிற அளவுக்கு இந்த படத்தில் சாதி வெறி வழிஞ்சு கிடக்கறதா பேதியை கிளப்பி வந்தார் டாக்டர் கிருஷ்ணசாமி. படம் பார்த்தபின் அத்தனை பேரும் தேடி தேடி கேள்வி கேட்பார்கள் அவரிடம், நீங்க ‘கிளப்பிவிட்ட’ மாதிரி எதுவுமே இல்லையேங்ணா படத்துல?

கோவக்கார கொம்பய்யா பாண்டியன், பாசக்கார பச்சைக்கிளியா மாறுவதுதான் கதையின் மெயின் ரூட்! தனது குடும்பம், மனைவி, அம்மா, மாமனார் என்று வாழ ஆசைப்படுகிறான் அவன். அதே ஊரிலிருக்கும் இன்னொரு கொலகார கும்பலுக்கும் (அதுவும் வேறு சாதியல்ல) கொம்பனுக்கும் உரசல் வருகிறது. சும்மாவே சொடக்கு போட்றவனுங்களுக்கு மத்தியில, சொடக்கு போட்டே ஒருவன் வெறுப்பேத்தினா என்னாகும்? எரிச்சலாகிறார்கள் அவர்கள். இவன் மட்டும் சாதாரணமா? சும்மா பார்த்தாலே இழுத்து வச்சு அடிப்பேன். முறைச்சு வேற பார்க்குறியா? என்று மூக்கை உடைக்கிற ஆசாமி. பெட்ரோலுக்கும் நெருப்புக்குமே சண்டை வந்த மாதிரி படம் முழுக்க தக தக அதிரடிதான். நடுவில் தன் ஒரே மகளை இந்த முரடனுக்கு கட்டிக் கொடுத்துவிட்டு, அவ நிறைஞ்ச சுமங்கிலியா வாழணுமேன்னு நெருப்பை கட்டிகிட்டு இருக்கிற மாமன். இருவருக்குமான முறைச்சல், புகைச்சல் ஒரு கட்டத்தில் அன்பாய் மாறுகிறது. அந்த நேரத்தில் மாமனார் உயிரையும் சேர்த்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு வருகிறது மருமகனுக்கு. அதை அவர் செவ்வனே செய்து முடிப்பதுதான் கொம்பன்.

என்னாவொரு நக்கல்? துடிப்பு? வேகம்? சின்ன இடைவெளிக்கு பிறகு சகல உற்சாகத்தோடும் பார்க்க முடிகிறது கார்த்தியை. கோபம் வந்தால் அப்படியே வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு எதிராளிகளை அவர் பொளந்து கட்டும்போது, நாடி நரம்பெல்லாம் உற்சாக வெள்ளம்தான்! தான் விரும்புகிற பெண்ணே தனக்கு மனைவியாக போகிறாள் என்று தெரிந்து சந்தோஷப்படும் அவர், ‘நம்ம ஊரை கேவலமா பேசின இவ அப்பனை பழி வாங்கிடலாம். ஆனா இவள கட்டிக்கலாம்’ என்று ஜகா வாங்கும் போது ஆஹாவாகிறது தியேட்டர். டெம்போ மேல் டெம்போ ஏற்றிக் கொண்டேயிருக்கிறது கார்த்தியின் வேகம். மாமனார் ஜெயிலுக்கு போய்விட்டார். அவர் உயிருக்கு ஆபத்து என்பது தெரிந்து, அடுத்த போலீஸ் வேன் பிடித்து இவர் அதே ஜெயிலுக்குள் என்ட்ரி கொடுக்க, அடுத்தடுத்த காட்சிகள் கத்தியின் கூர்மைக்கு நிகரான புத்திசாலித்தனம்.

கார்த்திக்குக்கு ஜோடி நம்ம லட்சுமிமேனன். ‘இன்னும் கொஞ்சம் அவர் கேரக்டரை நீளப்படுத்தியிருக்கலாமே முத்தையா?’ என்கிற அளவுக்கு முழியால் பேசி, முட்டை கோஸாக பீஸ் போடுகிறது பொண்ணு. அப்பாவுக்கு வறுத்த மீனை பொறிச்சு வச்சு, வாகாக சரக்கு கலந்து, பொண்ணுன்னா இப்படியல்லவா இருக்கணும் என்கிற ஏக்கமே வந்துவிடுகிறது அந்த காட்சியில். அதே அப்பனை கணவன் அடிக்க, அப்படியே பொங்கி எழுந்து அவரையும் கைதாங்கலாக அழைத்துக் கொண்டு ஊரை விட்டு கிளம்புகிற போது, அச்சச்சோ… குடும்பம்ங்கிற கோவில்ல, சிதறு தேங்கா உடைச்சுட்டாங்களே என்று கவலைப்படவும் வைக்கிறது.

ராஜ்கிரணை விட்டால் ஆளேது என்கிற மாதிரி, அவருக்கென செதுக்கப்பட்ட அளவான கேரக்டர் அது. ‘சனம் இருக்கிற இடத்துக்கு வரலாம். சாதி இருக்கிற இடத்துக்கு எதுக்கு?’ என்று கோவில் திருவிழாவுக்கு அவர் வராமல் ஒதுங்கிக் கொள்கிற போது வசனகர்த்தாவையும் சேர்ந்து உச்சத்தில் ஏற்றுகிறார் ராஜ்கிரண். மகளை அடிக்க எவன் கை ஓங்கினாலும் தொலைச்சுப்புடுவேன் என்கிற அவரது கோபம், பொறுத்தமான இடங்களில் வைக்கப்பட்ட பளிச் பளிச்.

வில்லன் சூப்பர் சுப்பராயனை பாராட்டுவதற்காகவே நாலு பக்கத்தை தனியாக ஒதுக்கலாம். அப்படியொரு அசால்ட்நஸ் அந்த முகத்தில். ஊருக்கு நாலு பேர் இப்படியிருந்தால், போலீஸ் ஸ்டேஷனில் எப்.ஐ.ஆர் எழுதியே விரல் தேய்ஞ்சு போவார் ஏட்டு. வேல ராமமூர்த்தி, கருணாஸ், கோவை சரளா என்று எல்லா கேரக்டர்களுமே கொடுத்ததை உணர்ந்து அந்தந்த கேரக்டர்களுக்குள் வாழ்ந்திருக்கிறார்கள். அப்புறம்… தம்பி ராமய்யா! தன்னை தாழ்த்திக் கொண்டு சிரிப்பு காட்டுகிற யாரும், காமெடியில் உயர்ந்து நிற்பார்கள் என்கிற கோட்பாட்டை கரைத்து குடித்து வைத்திருக்கிறார் தம்பியண்ணன். வாழ்க.

வேல்ராஜின் அழகான ஒளிப்பதிவில் அந்த கிராமத்தையும், அங்கு வழியும் ரத்தத்தையும் மெய்யுணர்ந்து ரசிக்க முடிகிறது. இந்த படத்தின் இன்னொரு பலம் இசை. பின்னணி இசையில் பெருமை சேர்த்துக் கொள்ளும் ஜி.வி.பிரகாஷ், பாடல்களில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அந்த ‘கருப்பு நிறத்தழகி’ பாடல் இந்த வருடத்தின் சந்து பொந்துகளில் கூட புகுந்து புறப்பட போகும் பெருமைமிகு ட்யூன். புகழ்மிகு வரிகளாக இருக்கப் போவது நிச்சயம்.

பல படங்களுக்கு பிறகு வசனங்களை ரீவைன்ட் பண்ணி ரசிக்க வைக்கிறார் இயக்குனர் முத்தையா. ‘எம் மவனை மாட்டு சாணியா நினைச்சுகிட்டு இருக்கு ஊர். அவனை விபூதியாக்குறது உன் கையில்தான் இருக்கு. அவனை விபூதியாக்குவியோ, இல்ல அஸ்தியாக்குவியோ? உன் பொறுப்பு’ என்று சித்தாந்தம் பேசுகிற போதும், ‘பெத்தவங்க வெறும் நெற்றிதான். அதுல இருக்கிற பொட்டுதான்மா புருஷன். நெத்தி எவ்வளவு பெரிசா இருந்தாலும் பெருமையில்ல. ஆனா அதுல பொட்டு நிரந்தரமா இருக்கணும்’ என்று இல் வாழ்க்கை பேசும்போதும் அசரடிக்கிறது முத்தையாவின் வசன டச்!

படத்தின் உயிர்நாடியாக விளங்குவது வசனங்கள் என்றால், தியேட்டரை படு சூடாக வைத்திருப்பது சண்டைக்காட்சிகள்தான். பாராட்டுகள் திலீப் சுப்பராயன்.

‘ஏலேய்… ஒழுங்கா படிச்சுப்புடணும். இல்லேன்னா …ந்தா போறானுங்க பாரு. பெருசு பெருசா மீசைய வச்சுகிட்டு. அவனுக மாதிரி வெட்டியா திரிய வேண்டியதுதான்!’ முதல் காட்சியிலேயே இப்படி ஸ்டிராங்காக ஸ்டாம்ப் அடித்துவிட்டு, டைரக்டர் முத்தையா பேக்கேஜ் பண்ணியிருக்கும் இந்த கொம்பனை அதற்கப்புறமும் ரசிக்காமலிருக்க முடியுமா என்ன?

அறிவுக்கூர்மையை தீட்டுவதற்கும் அருவாளைதான் பயன்படுத்தியிருக்கிறார் டைரக்டர் முத்தையா. அந்த ஷார்ப்தான் கொஞ்சம் தள்ளி உட்கார வைக்கிறது. மற்றபடி கொம்பன், கோலாகல சந்தோஷம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
உதயநிதி, விஜயகாந்துக்கு ஒரு நீதி கார்த்தி, ஞானவேலுக்கு ஒரு நீதி? பாரபட்சம் காட்டும் பலே தியேட்டர்

நெல்லிக்காய் மூட்டைகள் போல சிதறிக்கிடந்த தமிழ்சினிமா அமைப்புகளை ஒன்று சேர்த்துவிட்டார் டாக்டர் எம்.கிருஷ்ணசாமி. (டாக்டரல்லவா?) சினிமா தொடர்பான எந்த முடிவை யார் எடுத்தாலும், இது சரியில்ல... அது...

Close