உதயநிதி, விஜயகாந்துக்கு ஒரு நீதி கார்த்தி, ஞானவேலுக்கு ஒரு நீதி? பாரபட்சம் காட்டும் பலே தியேட்டர்

நெல்லிக்காய் மூட்டைகள் போல சிதறிக்கிடந்த தமிழ்சினிமா அமைப்புகளை ஒன்று சேர்த்துவிட்டார் டாக்டர் எம்.கிருஷ்ணசாமி. (டாக்டரல்லவா?) சினிமா தொடர்பான எந்த முடிவை யார் எடுத்தாலும், இது சரியில்ல… அது சரியில்ல… இது நொட்டை… அது நொள்ளை… என்று பங்கு பிரிக்க கிளம்பிவிடும் பல்வேறு அமைப்பின் பொறுப்பாளர்கள் கூட ‘கொம்பன்’ விஷயத்தில் ஒன்று பட்டுவிட்டார்கள். இனி சென்சார் அமைப்பு சான்றிதழ் அளித்த பின்பு, ‘படத்தை எங்ககிட்ட போட்டுக் காட்டணும். அப்பதான் ரிலீஸ் பண்ண விடுவோம்’ என்று சொல்லிக் கொண்டு யார் கிளம்பினாலும் அவர்களுக்கு எதிராக நாங்களும் போராட்டத்தில் குதிப்போம் என்று அறிவித்திருக்கிறார்கள். பாராட்டுகள். இந்த ‘ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் சாவு…’ பொன்மொழி காலம் கடந்தாவது இவர்களுக்கு உரைத்ததே!

உங்க ஒற்றுமையையெல்லாம் உங்க சங்கத்தோட வச்சுக்கங்க. எங்ககிட்ட வேகாது என்கிற மன நிலையோடு நடந்து கொள்கிற பல ஆணவப் போக்கு திரையரங்கங்களில் மிக முக்கியமான திரையரங்கம் சத்யம். இன்று தனது ஆணவத்தை சற்று ஓப்பனாகவே காட்டியிருக்கிறது அது. கொம்பன் படத்தை எங்கள் வளாகத்தில் திரையிட முடியாது என்று கூறிவிட்டார்களாம். அப்புறம் ஏன்? எதற்கு? என்று விளக்கம் கேட்டபின், வேணும்னா சாந்தம் தியேட்டர்ல போட்டுக்கோங்க என்று கூறியிருக்கிறார்கள். இந்த சாந்தம், நாலு கோழி ஒண்ணா சேர்ந்தா கூட அடைகாக்க முடியாதளவுக்கு சின்னஞ்சிறு தியேட்டர்.

ஒரு காலத்தில் இதே ‘கொம்பன்’ பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்த எல்லா படங்களையும் இங்கு வெளியிட்டு கல்லா கட்டிய புண்ணியவான்கள்தான் இவர்கள். இப்போது மட்டும் படத்தை போட்டுக் கொள்ள தயங்குவது ஏன்? அதெல்லாம் முடியாதுன்னா முடியாதுதான். ஏன் எதுக்குன்னு கேட்காதீங்க என்று நழுவுகிறார்கள். சரி போகட்டும்… வேறு ஏதோ பிரஷர். வேறு ஏதோ ஒரு உள் குத்து. ஆனால் வாசலில் பேனர் வைக்கிற விஷயத்திலும் கூடவா தகராறு?

உங்க பேனரை நீங்க எங்கயும் கட்டக் கூடாது என்று கூறிவிட்டார்களாம். அதே நேரத்தில் உதயநிதி நடித்த நண்பேன்டா படத்தின் பேனர்களும், விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்த சகாப்தம் பட பேனர்களையும் அங்கு கட்டிக் கொள்ள அனுமதி தந்திருக்கிறார்களாம்.

இதற்கப்புறம் சூர்யா நடித்த படங்களை தொடர்ந்து தயாரிக்கவிருக்கும் ஞானவேல்ராஜாவுக்கே இந்த கதி என்றால், ஸ்மால் படங்களை எடுத்துக் கொண்டு யாராவது சத்யம் தியேட்டருக்கு ரிலீஸ் பண்ணுவேன்னு போனா, டமால்னு கதவ சாத்திதான் அன்பை காட்டுவாங்க போலிருக்கு. பேர்ல இருக்கிற சத்யம், செய்யுற வேலையில இல்லையே?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
லிங்கா -பாகப்பிரிவினை- எபிசோட் 300 இன்று ஒரு தகவல்- வேந்தர் மூவிஸ் மதன்!

ரஜினியின் பேரன் ஹீரோவாக நடிக்க வரும்போது கூட லிங்கா பண செட்டில்மென்ட் முடியாது போலிருக்கிறது. இன்று ஒரு தகவல் மாதிரி, தினந்தோறும் இன்று ஒரு அறிக்கை அனுப்புவதை...

Close