இருக்கவே இருக்கு பருத்திவீரன் சென்ட்டிமென்ட்! பொங்கலும் கார்த்தியும் விக்ரமும் அஜீத்தும்?

‘நேற்று வரை நீ யாரோ… இன்று முதல் நீ வேறோ’ ஆகிக்கிடக்கிறது கோடம்பாக்கம். வேறொன்றுமில்லை, அவ்வளவும் ஐ படத்தின் அறிவிப்பு செய்த மாயம். வரும்…ஆனா வராது ரேஞ்சிலேயே அப்படத்தை டீல் பண்ணி வந்த தயாரிப்பாளர்கள், ஒவ்வொரு முறையும் ஐ வருவதாக பேச்சிருக்கும் போதெல்லாம் அசராமல் தங்கள் படத்தையும் வெளியிட நாள் குறிப்பார்கள். நினைத்த மாதிரியே ஐ வராது. அவரவர் படங்களும் நிம்மதியாக ரிலீஸ் ஆகும்.

இந்த முறையும் ஐ பற்றி அப்படிதான் நினைத்துக் கொண்டிருந்தார்கள் இங்கே. பொங்கலுக்கு என்னை அறிந்தால், ஆம்பள, இவற்றுடன் கார்த்தி நடித்த கொம்பனும் வரும் என்று விளம்பரங்கள் வர ஆரம்பித்தன. ஆனால் எல்லாருடைய திட்டத்திலும் நாட்டு வெடிகுண்டை வீசியிருக்கிறது ஐ அறிவிப்பு. ‘பொங்கல் வெளியீடு’ என்று திட்ட வட்ட அறிவிப்புடன் விளம்பரம் வெளியாகி இருக்கிறது. படத்தை சென்சார் செய்யும் வேலைகளிலும் கன ஜோராக இறங்கிவிட்டார்கள்.

ஐ வந்தாலும் அஜீத் படம் வரும் என்கிறார்கள் இங்கே. ஏனென்றால் கடந்த பல்லாண்டுகளாகவே அஜீத்திற்கும் விக்ரமுக்கும் ஒரு அண்டர் ‘வார்’ சைலண்ட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. அஜீத் பின்வாங்கினால் அதை ரசிகர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். கொம்பன் எப்படி?

‘பொங்கல் என்னுடைய ராசி தினம்’ என்கிறாராம் கார்த்தி. ‘பருத்தி வீரன் பொங்கலுக்குதான் வந்துச்சு. சிறுத்தை பொங்கலுக்குதான் வந்துச்சு. ரெண்டு படத்தோட வெற்றியை பற்றி நான் சொல்லவே தேவையில்ல. அப்படியிருக்கும் போது இந்த பொங்கலை விட்டுட முடியுமா?’ என்கிறாராம் அவர். நடுவில் சிவகார்த்திகேயனின் காக்கி சட்டையும் காலை எடுத்து முன் வைக்கும் திட்டத்திலிருப்பதால் கோடம்பாக்கமே கலகல…

யாரை யார் வெல்லுவாரோ?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
காக்கி சட்டை படத்தில் சிவகார்த்திகேயனின் அழ்ழ்ழ்….ழகான ஸ்டில்ஸ்

Close