ஒரு கிளாஸ் டீயில் ஒரு மூட்டை சர்க்கரை- – ஆர்.எஸ்.அந்தணன் எழுதும் கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் / 2

நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்…நான்..நான்.. என்கிற குரல்கள் கோடம்பாக்கத்தில் கேட்கத் தொடங்கியதே பெரும் புரட்சிதான். மணிரத்னம் வெற்றிப்பட இயக்குனர் என்கிற தனது அந்தஸ்தை சமீப காலமாக இழந்து ‘மினி’ ரத்னம் ஆகிவிட்டாலும், அவருக்கான பெருமையை யாராலும் அழிக்க முடியாது. அதிலும் அவர் நேரடியாக இயக்குனர் ஆனவர் என்ற பெருமையை அழிக்கவே முடியாது. அந்த வகையில் லேட்டஸ்ட் வரவு சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின். இவரும் இயக்குனரான விஷயத்தில் சுயம்புதான்.

கோச்சடையான் என்ற தனது முதல் படத்திலேயே அவர் வெற்றியும் பெற்றுவிட்டார். இந்த படத்தை நான்தான் டைரக்ட் செய்தேன். வேறு யாரும் என் தொழிலில் மூக்கை நுழைக்கவில்லை என்பதை நாட்டுக்கு சொல்ல வேண்டும் என்பதற்காகவே சில க்ளிப்ங்ஸ்களை படத்துடன் சேர்த்து, தன்னை நிரூபித்திருக்கிறார் சவுந்தர்யா. 

கடந்த வாரம் ஒரு பிரஸ்மீட். இயக்குனர் ஒரு பெண். அதுவும் என்ஜினியரிங் முடித்துவிட்டு அப்போதுதான் காலேஜ் கலகலப்பிலிருந்து வெளியே வந்திருந்தார். எங்கம்மா நிறைய கதைகளை எழுதி வச்சுருப்பாங்க. ஆனால் அதை எந்த பத்திரிகைகளுக்கும் அனுப்புற பழக்கம் இல்ல. அப்படி ஒரு நாள் அதை யதார்த்தமா எடுத்து படிச்சேன். நல்லாயிருக்கே… இதை படமா எடுக்கலாமேன்னு கேட்டேன். அவங்களும் சரின்னுட்டாங்க. அப்பாவை நச்சரிச்சு பணம் வாங்கினோம். நானே டைரக்டர் ஆகிட்டேன். அம்மா தயாரிப்பாளர். இப்போ படத்தையே முடிச்சுட்டோம்’ என்றார்.

காலையில் வீட்டு வாசலில் கோலம் போட்டதை போல அவ்வளவு சாதாரணமாக ஒரு படம் எடுத்த விஷயத்தை அவர் சொல்ல, சொல்ல, என் கண்களில் பூச்சி பறந்தது. ஆயிரக் கணக்கான உதவி இயக்குனர்கள் இன்னும் கோடம்பாக்கத்தில் செருப்பு தேய தேய சுற்றி வருகிற காட்சியை அன்றாடம் பார்க்கிறவன் நான். பணம் இருக்கிறது. கதை இருக்கிறது. முயற்சி இருக்கிறது. ஆர்வம் இருக்கிறது. ஈக்குவல் டூ ஒரு படமே வந்துவிட்டது. (அது தேறுகிறதா, இல்லையா என்பதை காலமும் மக்களும்தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால்? இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாமல் நீங்கள் எங்கேதான் போவீர்கள்?)

அப்படிதான் சில தினங்களுக்கு இரண்டு பைலட்டுகளிடமிருந்து அழைப்பு. போனால் ‘நாங்க ரெண்டு பேரும் ர என்றொரு படத்தை எடுத்திருக்கோம். மிச்ச வெவரத்தையும் கேளுங்க’ என்கிறார்கள். ‘ஆகாயத்தில் பறக்கும் போதே இந்த கதையை யோசிச்சோம். டயர் லேண்ட் ஆகும்போது தயாரிப்பாளர் கம் டைரக்டராதான் ஃபிளைட்டை விட்டு இறங்குனோம்’ என்று அவர்கள் சொல்வதை கேட்டால், ‘சினிமா அவ்ளோ சிம்ப்பிளாவா இருக்கு?’ என்று தோன்றியது.

ஆனால் கடந்த மூன்று அறிமுகங்களிலுமே ஒரு விஷயத்தை பளிச்சென்று கவனித்திருக்கலாம். அம் மூவருக்கும் பணம் ஒரு பொருட்டல்ல. ஆனால் ஒரு தயாரிப்பாளரை சந்தித்து ஒரு கிளாஸ் டீ யில் ஒரு சர்க்கரை மூட்டையையே கொட்டி கரைக்கிற அளவுக்கு பேசி பேசி பணம் போட வைப்பது சின்ன விஷயமல்ல. ‘நீங்கள் யாரிடம் தொழில் பயின்றீர்கள்?’ இதுதான் எந்த தயாரிப்பாளரும் கேட்கிற முதல் கேள்வி. அதற்கு விடையில்லாத எவராலும் இங்கு லுங்கிக்கு கூட ஓரம் அடிக்க முடியாது.

உதவி இயக்குனராக யாரிடமும் பணியாற்றாமல் இயக்குனராகிவிடலாம். ஆனால் உதவி இயக்குனர்கள் இல்லாமல் அவர்களாலேயே கூட படத்தை உருவாக்கிவிட முடியாது. பணம் வாய்ப்பு தரும். ஆனால் வாய்ப்பு வெற்றி தர வேண்டுமெனில் தொழில் தெரிந்தவர்கள் பக்கத்திலிருக்க வேண்டும். அப்படி தொழில் தெரிந்தவர்கள் யார் என்றால் அதுதான் இந்த உதவி இயக்குனர்கள் என்கிற அற்புதமான உழைப்பாளிகள். ராப் பகல் தெரியாத தேனீக்கள்.

உதவி இயக்குனர்களே இல்லாமல் ஒரு திரைப்படத்தை எடுத்துவிட முடியுமா? வேண்டுமானால் ஒரு புகைப்படத்தை எடுக்கலாம். திரைப்படத்தை எடுக்கவே முடியாது. இவர்கள் இல்லாமல் சினிமாவே இல்லை. குண்டூசி தேவைப்படுகிறதா? எங்கய்யா அவரு… என்று இயக்குனர்களின் பார்வை இவர்கள் பக்கம்தான் திரும்பும். பீரங்கி தேவைப்படுகிறதா? ‘ஏம்ப்பா நெட்ல தேடி அதுக்கு பர்மிஷன் வாங்குறது எப்படின்னு பாரு…’ என்று கட்டளையிடுவதும் இவர்களிடம்தான்.

தமிழ்சினிமாவில் 24 சங்கங்கள் இருக்கின்றன. இந்த சங்கத்தினர்களின் உழைப்பில்தான் ஒரு திரைப்படம் உருவாகிறது. இத்தனை சங்கத்தையும் தனது திறமையால் ஒருங்கிணைப்பவர்தான் உதவி இயக்குனர். இத்தனை குதிரைகள் பூட்டிய ரதத்தை ஓட்டுகிற அசாத்தியமான சாரதி நாம்தான் என்று இவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அதற்காக கடிவாளத்தை பிடித்திருக்கிற வேலைதானே என்று அலட்சியம் காட்டினால் குதிரைகள் அத்தனையும் சேர்ந்து குப்புற தள்ளிவிடுகிற அபாயமும் உண்டு.

எந்நேரமும் விழிப்போடு இருப்பவரே உதவி இயக்குனர். இந்த ஓய்வறியா உழைப்பாளர்களை பற்றிதான் இந்த தொடரில் நான் எழுதப் போகிறேன். இதை தொடர்ந்து வாசிக்கிற எல்லா இளைஞர்களுக்கும் சினிமா என்கிற பெரும் கதவை சுண்டு விரலால் தட்டுகிற துணிச்சல் வரவழைக்கிற கட்டுரையாக இது இருக்கும் என்று கருதுகிறேன்.

இனி நேரடியாக விஷயத்திற்கு போய் விடலாம்.

ஒரு உதவி இயக்குனர் என்பவர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கும், எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் இரண்டு சம்பவங்களை சொல்ல ஆசைப்படுகிறேன். முதலில் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு…

பாலசந்தரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்தான் இன்றைய பிரபல இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா. இவர் தொழில் கற்றுக் கொண்டிருக்கும் போது நடந்த சம்பவம் இது. படத்தின் ஹீரோ, ஹீரோயின் இருவரும் வெவ்வேறு படங்களில் நடிக்க போய்விட்டார்கள். அது கடைசி நாள் படப்பிடிப்பு. விட்டுப் போன காட்சிகளை படம் பிடிக்க நினைத்த பாலசந்தர், அதில் ஒரு முக்கியமான காட்சியை எடுக்க வேண்டி முதல் நாளே சுரேஷ் கிருஷ்ணாவுக்கு ஒரு கட்டளையிட்டிருந்தார்.

ஒரு க்ளோஸ்-அப் எடுக்க வேண்டியிருக்கு. ஹீரோ, ஹீரோயினுக்கு டூப் போட்டுக்கலாம். யாராவது ஒரு பெண்ணை அழைச்சிட்டு வந்திரு. கால் அழகா இருந்தா போதும். கால் விரலில் ஹீரோ மெட்டியை மாட்டுவது மாதிரி காட்சி. எடுத்திட்டா பூசணிக்காய் உடைச்சிடலாம் என்றார். இந்த பூசணிக்காய் உடைப்பது என்பது தமிழ்சினிமாவில் முக்கியமான சம்பிரதாயம். படப்பிடிப்பு முடிவடைந்த கடைசி நாளில் ‘உஸ், அப்பாடா…’ என்று அத்தனை நாள் டென்ஷனையும் போட்டு உடைக்கிற சென்ட்டிமென்ட்தான் இந்த பூசணிக்காய் உடைப்பு!

குருநாதர் சொன்னபடி மறுநாளே ஒரு துணை நடிகையை செட்டுக்கு வரவழைத்து விட்டார் சுரேஷ் கிருஷ்ணா. மெட்டியை மாட்டி விடுகிற டூப்ளிகேட் ஹீரோவும் ரெடி. பாலசந்தருக்கு ஒரு வழக்கம். என்னவென்றால், அன்றைய படப்பிடிப்புக்கு தேவையான எல்லா ஐட்டமும் தயாராக இருக்க வேண்டும். எப்போது எது மனதில் தோன்றுகிறதோ, அதை படமாக்குவார். காலுக்குதான் ஷாட் என்பது தெரியாமல் ஃபுல் மேக்கப்போடு காலையில் இருந்தே காத்திருந்தார் துணை நடிகை. நேரம் போக வேண்டுமே? போகிற வருகிற தொழிலாளிகள் எல்லாம் இவரிடம் வழிந்து நெளிந்து கொண்டிருக்க, வேறொரு பக்கம் படப்பிடிப்பு போய் கொண்டிருந்தது சின்சியராக. எல்லா காட்சிகளையும் எடுத்து முடித்த டைரக்டர், “எங்கய்யா அந்த பொண்ணையும் பையனையும் வரச்சொல்லு” என்றார் கம்பீரமான குரலில்.

முந்தைய காட்சிகளில் ஹீரோயின் கட்டியிருந்த புடவையை தழைய தழைய கட்டிக் கொண்டு வந்து நின்றார் டூப்ளிகேட் நாயகி. கையில் மெட்டியுடன் கீழே உட்கார்ந்தார் டூப்ளிகேட் நாயகன். “ஒரு மானிட்டர் போயிடலாம்ப்பா” என்று உதவியாளர்களுக்கு உத்தரவு போட்டுவிட்டு, “தம்பி அந்த மெட்டிய மாட்டு பார்க்கலாம்” என்றார் பாலசந்தர். அங்குதான் அதிர்ச்சி. புடவையை லேசாக உயர்த்தி மெட்டியை கொண்டுபோன பையன் பேந்த பேந்த விழிக்க, அதைவிட மிரட்சியாக விழித்தார் சுரேஷ்கிருஷ்ணா. வேறொன்றுமில்லை, அந்த பெண்ணுக்கு மெட்டி அணிகிற விரல் மட்டும் இல்லை!

கோபத்தில் முகம் சிவந்தது பாலசந்தருக்கு. வேறொரு பெண்ணை அழைத்து வந்து படப்பிடிப்பை நடத்தலாம் என்றால், அதற்கான அவகாசம் சுத்தமாக இல்லை. மறுநாள் படப்பிடிப்பை தள்ளிப்போடவும் முடியாது. இந்த ஒரு க்ளோஸ்-அப்புக்காக ஒரு லட்ச ரூபாய் எப்படி செலவு செய்ய முடியும்? அதுமட்டுமல்ல, அன்றைய தினம் பூசணிக்காய் உடைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம். வேறு வழியில்லாமல் அந்த காட்சியை எடுக்காமலேயே படத்தை வெளியிட்டார் பாலசந்தர்.

உதவி இயக்குனர் செய்த தவறென்ன? முதல்நாளே டைரக்டர் தெளிவாக சொல்லிவிட்டார் இதுதான் காட்சியென்று. பெண்ணை அழைத்து வந்தவர், அவளது கால்களையும் விரல்களையும் கவனித்திருக்க வேண்டுமல்லவா? இதுதான் காட்சி என்று அந்த பெண்ணிடம் கூறியிருந்தாலாவது பிரச்சனையை வெளிப்படையாக சொல்லியிருப்பாள். அதையும் செய்யவில்லை. ஒரு மிகப்பெரிய இயக்குனர் தான் எடுக்க நினைத்த ஒரு காட்சியை எடுக்க முடியாமலே போனது யாருடைய தவறு?

அதே சுரேஷ்கிருஷ்ணாதான் பின்னாளில் ரஜினி, கமல் என்ற இருபெரும் இமயங்களை வைத்து வெற்றிப்படங்களை கொடுத்தார். அனுபவங்கள் ஒவ்வொன்றுமே பாடங்கள் அல்லவா?

எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு அந்த உதாரணத்தை பார்த்தோம். ஒரு உதவி இயக்குனர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் ஒரு உதாரணத்தை சொல்லி விடுகிறேன். அது?

(தொடர்ந்து கூப்பிடுவேன்…)

எச்சரிக்கை – இந்த கட்டுரையும் இனி வரப்போகும் கட்டுரையின் சாராம்சங்களும் தமிழ்சினிமா கலைஞர்களிடமிருந்து திரட்டப்பட்டவையே. இதில் ஏதேனும் திருத்தங்கள் மற்றும் கருத்து மாறுபாடுகள் இருப்பின் anthananpro@gmail.com ல் தெரிவிக்கவும். ஏற்புடையதெனில் திருத்திக் கொள்கிறேன். நன்றி

எச்சரிக்கை 2 – இந்த கட்டுரையை என் அனுமதியின்றி யாரும் மறு பிரசுரம் செய்யவோ, வெளியிடவோ அனுமதியில்லை.

 

 

2 Comments
 1. வாசகன் says

  அந்து டியர்,

  தொடர்….ந்து வருமா?
  இல்ல வழக்கம்போல நாலு ரவுண்டுக்கு அப்புறம் அப்பீட் ஆயிருமா?

  1. Ghazali says

   சரியான சந்தேகம்தான்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மிஷ்கின் வேணாம்… பவர் ஸ்டார் பரவால்ல… இளையராஜாவின் முடிவால் இன்டஸ்ட்ரி குழப்பம்!

யூத்துகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா, எபவ் யூத்துகளுக்கு இளையராஜா, வசதியானவர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், மாடி வீட்டு ஏழைகளுக்கு இமான், குண்டான் உருட்டு இசைக்கு தேவி ஸ்ரீ...

Close