கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் 01 – ஆர்.எஸ்.அந்தணன் சினிமா ஆர்வமுள்ள இளைஞர்களுக்கான புதிய தொடர்
‘அவரு யாருகிட்டயும் வொர்க் பண்ணல… நேரடியா டைரக்டர் ஆகிட்டாரு தெரியுமா?’ இப்படி பலரையும் வியப்படைய வைத்த டைரக்டர்களான மணிரத்னம், டி.ராஜேந்தர் லிஸ்ட்டில் மற்றும் பலர் இணைவதென்பது நடக்கவே நடக்காத காரியமா?
பிக் பாக்கெட் அடிப்பதற்கும் ஒரு குரு தேவைப்படுகிற காலம் இது. அவ்வளவு ஏன்? துறவறத்திற்கும் கூட சிஷ்யன்–குரு காம்பினேஷன் இல்லையென்றால் ஒன்றும் வேலைக்கு ஆகாது. மதுரை ஆதினமும், மல்லிகைப்பூ சிரிப்பழகர் நித்யானந்தாவும் காட்டிய குரு–சிஷ்யன் ப(ட்)டத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா என்ன?
உள்ளங்கையை உச்சந்தலையில் வைத்து ஆசி வழங்குவதென்பது ஒரு கொசு அடிப்பதை விடவும் எளிமையான செயல்தான். (சாமியார்னா அவ்வளவு சல்லிசா போச்சா என்று முண்டா தட்டும் முரட்டு சாமியார்களுக்கு அடியேனின் பதில், ‘நான் உங்களையெல்லாம் நம்புகிறவனில்லை‘) அதற்கே இத்தனை பாரம்பரிய பதவுரைகள் இருக்கும் போது சினிமாவின் முதுகெலும்பு, நரம்புகளான இருபத்தி நான்கு தொழிற் சங்கங்களையும் கட்டி மேய்க்கிற வேலை சினிமா இயக்குனர் வேலை! அதற்கு குரு சிஷ்யன் பால பாடம் ரொம்ப ரொம்ப அவசியம்தான் என்கிறது முன்பு இருந்தவர்களின் நிலை. ஆனால்? என்ன ஆனால்….? இந்த கட்டுரையின் கடைசியில் நான் சொல்லப் போகிற விஷயம்தான் இந்த ‘ஆனால்‘
ஒரு உதவி இயக்குனரை ஒரு இயக்குனர் எப்படி தேர்ந்தெடுக்கிறார்? குருகுல கோட்பாடுகளை விட மோசமானதாக இருக்கிறது அது. தினந்தோறும் தனது வீட்டு வாசலில் காத்திருக்க வேண்டும். கார் கண்ணாடி இறங்காவிட்டாலும் உத்தேசமாக ஒரு வணக்கம் போட வேண்டும். சுமார் ஆறு மாதமோ, ஒரு வருடமோ இதை செய்தால் குறைந்த பட்சம் கண்ணாடியாவது இறங்கும். நான் சொல்வது அதிகப்படியான கருத்து பிரயோகமாக இருந்தால், முன்னணி இயக்குனர்களின் வீட்டை வாசகர்கள் நோட்டமிடலாம்.
நு£று நாட்கள் ஓடக்கூடிய பட ஸ்கிரிப்டுகள் பலவற்றை கக்கத்தில் அடக்கிக் கொண்டு பவ்யமாக காத்திருக்கும் பல இளைஞர்கள் ஒவ்வொரு இயக்குனரின் வீடுகளுக்கு முன்பும் தவம் கிடக்கிறார்கள். சிலரது வீட்டு வாட்ச்மேன்கள் இவர்களை அடித்து விரட்டும் காட்சியெல்லாம் காணவே சகிக்காத பகீர்!
அண்மையில் வெளிவந்த என்னமோ நடக்குது படத்தின் இயக்குனர் ராஜபாண்டி, இந்த படம் என்னுடைய பதினைந்து வருடத்து கனவு என்றார் அந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சியில். பதினைந்து வருடமாக ஒரு வெற்றிப்படம் யாரும் சீண்டப்படாமலேயே இருந்திருக்கிறது என்பது எவ்வளவு பெரிய கொடுமை?
இவ்வளவு கொடூரத்திற்கு நடுவிலும் நமக்கு கிடைக்கும் ஒரே ஆறுதல் இதுதான். ஒரு முன்னணி ஹீரோவின் வீட்டு வாசலில் குவியும் ரசிகர் கூட்டத்திற்கு சற்றும் குறையாமல் குவிகிறார்கள் இன்றைய இளம் இயக்குனர்கள் பலரது வீடுகளுக்கு முன்னால். ஷங்கர், மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ், அமீர், லிங்குசாமி, பாலாஜி சக்திவேல். இன்னும் இந்த லிஸ்ட்டில் விடுபட்ட பலர் என்று இவர்களது மனங்களில் நிறைந்திருக்கும் லட்சிய படைப்பாளிகளிடம் ஒரு எடுபிடியாகவாவது நுழைந்துவிட மாட்டோமா என்ற வேட்கை திமிறிக் கொண்டு நிற்கிறது அத்தனை பேரிடத்திலும்.
முன்பெல்லாம் கார் துடைக்கிற வேலையாளாகவோ, ஆபிஸ் பாயாகவோ இயக்குனர்களின் வீடுகளுக்குள் நுழைந்துவிடலாம். அப்புறம் மெல்ல மெல்ல கதை விவாதத்தில் மூக்கை நுழைப்பார்கள். அதற்கப்புறம் கிளாப் கட்டையை கையில் எடுக்கிற காலம் கனிந்திருக்கிறது பலருக்கு. பாரதிராஜாவிடம் அன்றாட வேலைக்கு சேர்ந்தவர்தான் பிற்பாடு சமுதாயத்தை புருவம் உயர வைத்த டைரக்டர் மணிவண்ணன். திரைக்கதை மன்னன் பாக்யராஜிடம் ஆபிஸ் பாய் வேலை பார்த்தவர்தான் பின்னாளில் ஆண்பாவம் போன்ற பிரமாதமான படங்கள் சிலவற்றை இயக்கிய பாண்டியராஜன். பல சினிமா கம்பெனிகளில் ஆபிஸ் பாயாக இருந்தவர்தான் அதற்கப்புறம் ‘மறுமலர்ச்சி‘ என்ற அற்புதமான படத்தை இயக்கிய பாரதி. பசங்க, வம்சம் போன்ற படங்களை இயக்கிய பாண்டிராஜ் கூட ஆரம்பத்தில் நேரடியாக உதவி இயக்குனராக சேர்ந்தவரில்லை.
எப்படியாவது சினிமாவில் ஜெயித்துவிட வேண்டும் என்கிற வேட்கையே இவர்களை எப்படி வேண்டுமானாலும் பணியவும் துணியவும் வைக்கிறது. முந்தைய காலம் போலவே பிரபல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக சேர்கிற ஆசை ஒரு சதவீதம் கூட குறையவில்லை இக்கால இளைஞர்களிடம். ஆனால் அந்த அணுகுமுறையில் கொஞ்சம் முன்னேற்றம் கூடியிருக்கிறது. நகரத்தில் வாழ்கிற இளைஞர்களால் நிகழ்ந்த மாற்றம் இது என்று கூட கூறலாம்.
இப்பவும் கிராமத்திலிருந்து வருகிற இளைஞர்கள் யதார்த்தத்தை உணர்ந்து மேலேறி வர எடுத்துக் கொள்கிற காலத்தை விட நகரத்து இளைஞர்கள் எடுத்துக் கொள்கிற காலம் குறைவென்றே தோன்றுகிறது. (இந்த துரதிருஷ்டமான நிலைமையும் விரைவில் மாறும்) ஒரு விசிட்டிங் கார்டை வைத்தே சம்பந்தப்பட்ட இயக்குனர்களை கவர்ந்துவிடுகிற அதிசயத்தையெல்லாம் நிகழ்த்துகிறார்கள் இவர்கள்.
‘எங்கிட்ட உதவி இயக்குனரா சேர்ற ஆசையில் வர்ற பல இளைஞர்கள் வரும்போதே ஒரு ஷார்ட் பிலிம் சிடியை கையில் எடுத்துட்டு வர்றாங்க. பல படங்கள் அற்புதமா இருக்கு. இன்னும் நான் பார்க்காம வச்சுருக்கிற சிடியே சுமார் நானு£று இருக்கும்‘ என்கிறார் பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த்.
தான் எடுக்கிற படங்களை யூ ட்யூபில் பதிவு செய்துவிட்டு ஆலம்பழம் நெற்றியில் விழுகிற வரைக்கும் காத்திருக்கிற புத்திசாலி இளைஞர்களும் இங்குதான் இருக்கிறார்கள். ‘காதலில் சொதப்புவது எப்படி‘ என்ற திரைப்படத்தை இயக்கிய இளைஞர், ஆரம்பத்தில் இந்த படத்தை ஒரு குறும்படமாக எடுத்து யூ ட்யூபில் வெளியிட்டவர்தான். இதை பார்த்த பல இயக்குனர்கள், நாமே இந்த படத்தை விரிவாக எடுத்தால் என்ன என்று ஆசைப்பட்டார்களாம். அப்புறம் இந்த படத்தை நடிகர் சித்தார்த் கவனித்து… அந்த குறும்பட இயக்குனரை நேரில் வரவழைத்து பேசி… அப்படி இயக்குனரானவர்தான் பாலாஜி மோகன் என்ற அந்த இளைஞர். அதற்கப்புறம் அவர் வாயை மூடி பேசவும் என்ற திரைப்படத்தை இயக்கியதை யாவரும் அறிந்திருக்கலாம். இந்த படம் கூட ஆரம்பத்தில் குறும்படமாக தயாரிக்கப்பட்டதுதான்.
யூ ட்யூபில் வெளிவரும் குறும்படங்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்த்துவிடுகிறார் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். அந்த படம் பிடித்திருந்தால் சம்பந்தப்பட்ட இளைஞரை தேடிப்பிடித்தாவது பேசிவிடுகிற குணம் அவருக்கிருக்கிறது. இல்லையென்றால் செல்போனில் அவருக்கு குறுந்தகவல் அனுப்பி பாராட்டுவாராம். முருகதாசிடம் பணியாற்றுகிற உதவி இயக்குனர்கள் சிலர் இப்படி இடம் பிடித்தவர்கள்தான்.
ஷங்கரிடம் பணியாற்றுகிற இளைஞர்கள் கம்ப்யூட்டரை பொறுத்தவரை ஒரு குட்டி பில்கேட்சாகவே இருக்கிறார்கள். எந்த விஷயத்தையும் கம்ப்யூட்டரில் தேடித்தரும் சர்ச் என்ஜினாகவே கூட அவர்களை சில நேரம் பயன்படுத்துகிறார் ஷங்கர். போட்டோ ஷாப், கோரல் டிரா என்று சகலத்தையும் கற்றுக் கொண்டு நுழைந்தவர்கள்தான் இவர்கள்.
‘நாலு பேரு சேர்ந்து ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டோம். ஒரு படமாவே வந்துருச்சு அந்த முயற்சி‘ என்று அசால்டாக சொல்கிற இளைஞர்கள் இன்று கூட்டு சேர்வது கண்கொள்ளாக் காட்சி! (இதே ஊர்லதான் நாலு பேரு கூட்டு சேர்ந்து குவார்ட்டரையும் ஆஃப் சமாச்சாரங்களையும் கரெக்ட் பண்ணுகிற கொடுமையும் நடக்கிறது, அது வேறு மாதிரியான கருமம்)
அடையார் பிலிம் இன்ஸ்ட்டியூட்டையும், புனே பிலிம் இன்ஸ்டியூட்டையும் நம்பியிருந்த இளைஞர்களுக்கு இன்று தெருமுனையில் கிடைத்துவிடுகிறது எல்லாமே! மிக குறைவான செலவில் விஷுவல் கம்யூனிக்கேஷன்கள் வந்துவிட்டன. எல்லாவற்றையும் முறையாக கற்றாலும் குருவுக்காக காத்திருக்க நேரிடும் சங்கடத்தை பற்றிதான் இங்கே விளக்க ஆசைப்படுகிறேன்.
எனக்கு தெரிந்த ஒரு இயக்குனரின் கதை பரிதாபமானது. வெகு கால போராட்டத்திற்கு பின் அவருக்கு ஒரு பெரிய நிறுவனத்தில் படம் கிடைத்தது. ஆனால் சம்பளம் இல்லை. யாருக்கு வேணும் அதெல்லாம்? படம் கிடைத்தால் போதும் என்று விழுந்தடித்துக் கொண்டு ஒப்புக் கொண்டார் அவர். முதல் படத்திலேயே சம்பளம் கேட்கிற வழக்கமோ, கொடுக்கிற வழக்கமோ இங்கு இரு தரப்புக்கும் இல்லை என்பது வேதனையான விஷயம். அதனால் நண்பரும் அதிகம் ஆசைப்படவில்லை. படத்தை சின்சியராக எடுத்தார். ஆனால் இவரது துரதிருஷ்டம்… படம் ஒரு சில நாட்கள் கூட தேறவில்லை.
முன்பாவது பரவாயில்லை. எங்காவது கையேந்தி பவனில் நின்று நாலு இட்லி, கொஞ்சமா கெட்டி சட்னி என்று காலத்தை ஓட்டிவிடலாம். இப்போது அவரை எங்கு போனாலும் தெரிந்து கொள்கிற அளவுக்கு மீடியா பிரபலபடுத்தியிருந்தது. காலை டிபனுக்கு பத்து ரூபாய் கொடுத்து அறைக்கு வரவழைத்து சாப்பிடுகிற அளவுக்கு போனது நிலைமை. இப்படியே நாட்கள் போனது. அந்த பத்து ரூபாய்க்கும் தட்டுப்பாடு. அறையிலிருந்த ஒவ்வொரு பொருட்களாக விற்றார். ஒருபுறம் கம்பெனி கம்பெனியாக ஏறி சென்று கதை சொல்வார். இன்னொரு புறம் சாப்பாட்டுக்கு ஒவ்வொரு பொருளாக காணாமல் போய் கொண்டிருந்தது. அவர் முதல் படத்தை இயக்குகிற காலத்திலிருந்தே அவரிடம் உதவி இயக்குனராக சேர ஆசைப்பட்ட இளைஞர் ஒருவர் இவரிடம் தொடர்ந்து உதவி இயக்குனர் வாய்ப்பு கேட்டு வந்தார்.
இந்த கஷ்ட காலத்திலும் அந்த தம்பி தன் முயற்சியை விட்டாரில்லை. தொடர்ந்து இவரை தேடி வந்து கொண்டேயிருந்தார். அவரை வாசலில் நிறுத்தியே பதில் சொல்லிக் கொண்டிருந்த இயக்குனர், நான் சொல்லப் போகும் சம்பவம் நடப்பதற்கு முன் பத்து நாட்களாகதான் அவரை உள்ளே அழைத்து உன் ஊரென்ன? குடும்ப பின்னணி என்ன? என்றெல்லாம் விசாரிக்க ஆரம்பித்திருந்தார். ஒருநாள் வாய்ப்பு கேட்டு வந்த தம்பி, டைரக்டர்தான் நன்றாக பேசுறாரே என்று நினைத்திருக்கலாம். சார்… இங்க ஒரு டி.வி இருந்திச்சே, அது எங்க? என்றார் கேஷூவலாக. வேதனை என்னவென்றால், அன்று காலைதான் அந்த டி.வி யை சேட்டு கடைக்கு பேக் பண்ணி அனுப்பிவிட்டு, பாதி வாடகையை கொடுத்திருந்தார் டைரக்டர்.
டி.வி போன எரிச்சல். வறுமையின் கொடுமை. அந்த கேள்வியை கிண்டலாக எடுத்துக் கொண்டாரோ என்னவோ? விட்டார் ஒரு அறை… பேரதிர்ச்சியாகிவிட்டது தம்பியின் முகம். கன்னத்தை தடவிக் கொண்ட அந்த தம்பி அன்று படியிறங்கி போனவர்தான். அதற்கப்புறம் வேறொருவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து படமே இயக்கிவிட்டார். அவர் இயக்கிய முதல் படத் துவக்கவிழாவுக்கு இந்த இயக்குனரை தேடி வந்து அழைப்பிதழ் வைத்துவிட்டு போனார்.
இது போன்ற ஓராயிரம் சம்பவங்கள் இங்கே அன்றாடம் நடந்து கொண்டேயிருக்கிறது. இந்த நேரத்தில்தான் நேரடியாக குறும்படத்தை இயக்கிவிடுகிற இயக்குனர்களுக்கு நம் அன்பான ஆலோசனை…
குறும்படத்தையே இயக்கிவிடுகிற உங்களுக்கு, கூடவே ஒரு குட்டிக்கரணம் போட்டால் முழு படத்தையும் உருவாக்குகிற சாமர்த்தியம் வராமலா போய்விடும்? நீங்கள் எப்போது மணிரத்னமாவது? டி.ராஜேந்தராவது?
வாருங்கள்… குருகுல கோட்பாடுகளை உடைக்க வேண்டிய பொன்னான நேரம்தான் இது! மறுபடியும் ஒரு ஆனால்? இந்த ஆனாலுக்கான விளக்கத்தை கட்டுரையின் அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
(தொடர்ந்து கூப்பிடுவேன்…)
எச்சரிக்கை – இந்த கட்டுரையும் இனி வரப்போகும் கட்டுரையின் சாராம்சங்களும் தமிழ்சினிமா கலைஞர்களிடமிருந்து திரட்டப்பட்டவையே. இதில் ஏதேனும் திருத்தங்கள் மற்றும் கருத்து மாறுபாடுகள் இருப்பின் anthananpro@gmail.com ல் தெரிவிக்கவும். ஏற்புடையதெனில் திருத்திக் கொள்கிறேன். நன்றி
எச்சரிக்கை 2 – இந்த கட்டுரையை என் அனுமதியின்றி யாரும் மறு பிரசுரம் செய்யவோ, வெளியிடவோ அனுமதியில்லை.
தொடருக்கு நன்றி.
(தொடர்ந்து கூப்பிடுவேன்…)தொடந்து கூப்பிடுங்க….
nice sir