அது ரஜினி சாரின் பெருந்தன்மை! கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 10 -ஆர்.எஸ்.அந்தணன்
காஸ்ட்யூம்களை கவனிக்கும் உதவி இயக்குனர் பற்றி கடந்த பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். இவர்களை போன்ற உதவி இயக்குனர்களுக்கே தெரியாமல் கூட பல சிக்கல்கள் அரங்கேறியிருக்கும். படத்தின் தனிப்பட்ட காஸ்ட்யூமரே அந்த சிக்கல்களையெல்லாம் இவர்களுக்கு தெரிய வராமல் சமாளித்திருப்பார். ஆனால் அப்படி மறைக்கப்பட்டதை கூட அன்றாடம் விசாரித்து தெரிந்து வைத்துக் கொள்வதுதான் நல்ல உதவி இயக்குனருக்கு அழகு.
அப்படிப்பட்ட காஸ்ட்யூமர் மட்டும் சிக்கி உதவி இயக்குனர் தப்பிய இரண்டு சம்பவங்களை சொல்ல ஆசைப்படுகிறேன்.
காஸ்ட்யூம் ஆர்கனைசர் முருகனின் அனுபவங்களை கேட்க கேட்க பிரமிப்பாக இருக்கிறது. சுமார் 32 வருடங்களாக இந்த தொழிலில் இருக்கிறார் இவர். ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யா என்று எல்லா நடிகர்களின் படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். நாம் கடந்த வாரம் சொன்ன கருணாஸ் பற்றிய சம்பவம், இவருக்கு ரஜினி படத்தில் நடந்தது. அதை அவர் வாயாலேயே கேட்போமே!
‘சந்திரமுகி படத்துக்காக என்னை காஸ்ட்யூமரா வேலை பார்க்க கூப்பிட்டாங்க. ரஜினி சாருக்கு மும்பையில இருந்து டிரஸ் வந்துருச்சு. அதையெல்லாம் பார்த்தவர், ‘எனக்கு துணி எடுத்து தைச்சுருங்களேன்’ என்று கூறிவிட்டார். என்னை அழைத்து ரஜினிக்கு அளவெடுக்க சொன்னார்கள். துணியை வாங்கும் பொறுப்பும் எனக்குதான். சண்டைக்காட்சிகளுக்கு தேவைப்படும் துணியை மட்டும் இரண்டு செட் தைத்து வைத்துக் கொள்வது என்னுடைய வழக்கம். டைரக்டரிடம் கேட்டு அதை மட்டும் இரண்டு செட் தைத்து வைத்துக் கொண்டேன். என் விதி பெங்களூர் படப்பிடிப்பில் கை கொட்டி சிரித்தது’.
ஒரு மீன் தொட்டியை ரஜினி சார் உடைப்பது போல காட்சி. கண்ணாடி தொட்டியை அவரை விட்டு உடைக்க சொல்வது ஆபத்து என்பதால் டூப் போட்டுக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார் டைரக்டர். ஒரு செட் துணியை ரஜினி சார் அணிந்து கொண்டிருக்கிறார். டூப்புக்கு இன்னொரு செட் வேண்டுமே, நான் திண்டாடி திக்குமுக்காட என்னையே கவனித்துக் கொண்டிருந்த ரஜினி சார், ‘என்னங்க குழப்பம்’ என்றார். நான் தயங்கி தயங்கி விஷயத்தை சொல்ல, அதுக்கென்ன? நான் கழட்டி தர்றேன். அவரை போட்டுகிட்டு நடிக்க சொல்லுங்க என்றார்.
அந்த ஷாட் முடிந்ததும் மீண்டும் அதே துணியை போட்டுக் கொள்ள வேண்டும். துவைத்து அயர்ன் செய்து தரக்கூட அவகாசம் இல்லை. நான் கவலையோடு அவரை பார்க்க, அதெல்லாம் ஒண்ணும் இல்லண்ணே. அவரு போட்டுட்டு கொடுக்கட்டும். நான் போட்டுக்குறேன் என்றார் சர்வ சாதாரணமாக. ரஜினிசார் சாதாரணமாக இதை எடுத்துக் கொண்டாலும், இந்த பொறுப்பை கவனித்துக் கொண்டிருக்கும் உதவி இயக்குனர்தான் காஸ்ட்யூமரை வேலை வாங்கி இன்னொரு செட் தைத்து வைத்திருக்க வேண்டும். அதற்கப்புறம் சம்பந்தப்பட்ட காஸ்ட்யூமரும், அந்த துறையை கவனிக்க வேண்டிய உதவி இயக்குனரும் இயக்குனரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது தனி ஸ்டோரி.
இதை போலவே இன்னொரு சம்பவமும் நடந்தது. வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் நடந்த விஷயங்களையும் கூறுகிறார் காஸ்ட்யூமர் முருகன். வடிவேலண்ணனுக்கு நான்தான் காஸ்ட்யூம் ஆர்கனைசர். அவருக்கு ராஜ அலங்கார உடைகளை மட்டுமல்ல, அவர் அணிந்திருக்கும் அணிகலன்களையும் நானே வடிவமைத்து வைத்திருந்தேன். எதற்கு இரண்டு செட் என்று ஒரு செட் மட்டும் செய்து வைத்திருந்தேன். படப்பிடிப்பு முடிந்த ஒவ்வொரு நாளும் அந்த நகைகளை வடிவேலண்ணன் ஓய்வெடுக்கும் கேரவேனிலேயே வைத்து விடுவோம். கொடுமை என்னவென்றால், நடுவில் ஒரு நாள் ஷுட்டிங் நடக்கவில்லை. அன்றைய தினம் கேரவேன் சும்மாதானே இருக்கிறது. அதை வேறொரு கம்பெனிக்கு அனுப்பலாம் என்று நினைத்தவர்கள், அதிலிருந்த நகைகளை பெட்டியோடு இறக்கி கீழே வைத்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த நேரம் பார்த்து ஏ.வி.எம் ஸ்டுடியோவுக்கு வந்த இன்னொரு வேன், இந்த நகைப்பெட்டியின் மீது ஏறி இறங்கிவிட்டது. இந்த சம்பவம் நடக்கும் போது இரவு எட்டு மணி. மொத்த நகையும் நசுங்கிவிட்டதாக தகவல் வர, அலறி அடித்துக் கொண்டு ஏவிஎம்முக்கு ஓடினேன். கண்ணீரே வந்துவிட்டது எனக்கு. இனி தாமதிப்பதில் பிரயோஜனம் இல்லை. அவ்வளவு நகைகளையும் அள்ளிக் கொண்டு பாரிமுனைக்கு ஓடினேன். அங்கு விடிய விடிய அதே போல நகைகளை செய்யும் வேலையை செய்யும்படி ஊழியர்களை உசுப்பிவிட்டேன். காலையில் எட்டு மணிக்கு வடிவேலண்ணன் படப்பிடிப்புக்கு வருவார். நான் ஏழு மணிக்கெல்லாம் அதே நகைகளோடு வந்து விட்டேன். படம் வெளியாகிற வரைக்கும் இந்த தகவல் யாருக்குமே தெரியாது. வேதனை என்னவென்றால், அந்த நகைகளை மீண்டும் தயாரிப்பதற்கு ஆன செலவு என்னுடைய சொந்த செலவு என்று இப்பவும் அந்த சம்பவத்தை அலர்ஜியோடு நினைத்து பார்க்கிறார் காஸ்ட்யூமர் முருகன்.
நல்லவேளையாக சம்பவத்திற்கு பாதி பலிகடா ஆகியிருக்க வேண்டிய உதவி இயக்குனர் தப்பினார்.
உதவி இயக்குனர் -2 –
இவரது பணி ஆர்ட் டிபார்ட்மென்ட்டுடன் இணைந்து ஆர்ட் கன்ட்டினியூடியை கவனித்துக் கொள்வது. சீன் பேப்பர் படிவத்தை வைத்துக் கொண்டு இன்டோர்-அவுட்டோர் ஆகிய இரு இடங்களிலும் பிராப்பர்ட்டி கன்ட்டினியூடி பார்ப்பது.
இவரது அடிப்படை தகுதி படம் வரைய தெரிந்திருக்க வேண்டும். சும்மாவாவது கிறுக்க தெரிந்தால் போதுமானது. அல்லது அந்த படம் என்ன என்பதை அவரளவுக்காவது புரிந்து கொள்கிற அளவுக்கு வரைய வேண்டும். ஏனென்றால் படப்பிடிப்பு நடைபெறும் போது அந்த காட்சியில் என்னென்ன பொருட்கள் எங்கெங்கு இருந்தன என்பதை சுமாராகவாவது வரைந்து வைத்துக் கொள்ள வேண்டும். சில மாதங்கள் கழித்து மீண்டும் அந்த காட்சியையோ, அந்த அறையையோ எடுக்க வேண்டி வந்தால் அந்த ஸ்கெட்ச் உதவும். இதே முறைதான் அறையை தாண்டி எடுக்கப்படுகிற காட்சிகளுக்கும் பயன்படும்.
இந்த உதவி இயக்குனர் புத்திசாலியாக இருந்தால் யாரும் சொல்லாமலே ஒரு வேலையை முதலில் செய்வார். எங்காவது அறைகளில் அல்லது வீடுகளில் ஷுட்டிங் நடந்தால் அங்கிருக்கிற சுவர் கடிகாரத்தை கழற்றி விடுவார். இல்லையென்றால் என்ன நடக்கும்? அறைக்குள்ளிருந்து ஒரு நபர் வெளியே வருகிற காட்சி எடுப்பதாக வைத்துக் கொள்வோம். அவர் கதவுக்கு அருகில் வருவது போல எடுப்பார்கள். அப்போது கடிகாரத்தில் ஒரு நேரம் இருக்கும். அவரே சில அடிகள் நடந்து வாசலுக்கு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த காட்சியை எடுத்து முடிக்கும்போது வேறு சில காரணங்களில் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கூட ஆகியிருக்கும்.
படம் ஒடும்போது கதவருகில் இருந்து வாசலுக்கு வந்து சேர அத்தனை மணி நேரமா ஆகும்? என்று ரசிகர்கள் நக்கலடித்து சிரிக்கிற நிலைமை ஏற்படும். இந்த தொல்லையே வேண்டாம் என்றுதான் இந்த முன்னேற்பாட்டை செய்வார்கள் சில உதவி இயக்குனர்கள்.
இந்த உதவி இயக்குனரிடமே இன்னொரு முக்கியமான வேலையையும் ஒப்படைப்பார்கள். ஒரு கேரக்டர் பேசிக் கொண்டிருந்தால் அந்த கேரக்டருக்கான அசைவுகளையும் அப்படியே பேப்பரில் நேரடி வர்ணனை செய்து எழுதிக் கொண்டிருக்க வேண்டும். டயலாக் பேசிக்கொண்டிருக்கிற அந்த கேரக்டர் எந்த திசையை நோக்கி பேசுகிறது. இடது புறத்தை நோக்கியா? வலது புறத்தை நோக்கியா? அவரது கை கால் அசைவுகள் கேமிராவுக்கு எந்த பக்கம் இருந்தது? அந்த காட்சி துவங்கும் போதும் முடியும் போது கேரக்டரின் இன் அண்டு அவுட் ஆகிய விஷயங்களையும் குறிக்க வேண்டும். அது மட்டுமா இவரது வேலை? கேமிராவும் எந்த பக்கம் நகர்கிறது என்று அதனுடைய அசைவுகளையும் இவர் எழுதிக் கொள்ள வேண்டும். (கண்ணும் கையும் மூளையும் பரபர என்று இயங்கினால்தான் இது சாத்தியம்)
(தொடர்ந்து கூப்பிடுவேன்…)
எச்சரிக்கை – இந்த கட்டுரையும் இனி வரப்போகும் கட்டுரையின் சாராம்சங்களும் தமிழ்சினிமா கலைஞர்களிடமிருந்து திரட்டப்பட்டவையே. இதில் ஏதேனும் திருத்தங்கள் மற்றும் கருத்து மாறுபாடுகள் இருப்பின் anthananpro@gmail.com ல் தெரிவிக்கவும். ஏற்புடையதெனில் திருத்திக் கொள்கிறேன். நன்றி
எச்சரிக்கை 2 – இந்த கட்டுரையை என் அனுமதியின்றி யாரும் மறு பிரசுரம் செய்யவோ, வெளியிடவோ அனுமதியில்லை.
//இவரது அடிப்படை தகுதி படம் வரைய தெரிந்திருக்க வேண்டும். சும்மாவாவது கிறுக்க தெரிந்தால் போதுமானது. அல்லது அந்த படம் என்ன என்பதை அவரளவுக்காவது புரிந்து கொள்கிற அளவுக்கு வரைய வேண்டும். ஏனென்றால் படப்பிடிப்பு நடைபெறும் போது அந்த காட்சியில் என்னென்ன பொருட்கள் எங்கெங்கு இருந்தன என்பதை சுமாராகவாவது வரைந்து வைத்துக் கொள்ள வேண்டும். சில மாதங்கள் கழித்து மீண்டும் அந்த காட்சியையோ, அந்த அறையையோ எடுக்க வேண்டி வந்தால் அந்த ஸ்கெட்ச் உதவும். இதே முறைதான் அறையை தாண்டி எடுக்கப்படுகிற காட்சிகளுக்கும் பயன்படும்.//
யோவ் ஒரு மொபைல் கேமரால போட்டோ எடுத்துக்கறத விட்டுட்டு வரைஞ்சிட்டு இருக்கணுமா?
தமிழ் சினிமா வெளங்கிரும்!
SUPER STAR RAJINIYIN PERUNTHANMAI EVANUKKUM VARAATHU.
VAZGA THALAIVAR RAJINI AVARGAL.