சமுத்திரக்கனியை வீட்டுக்கு அனுப்பிய வாய்… கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 11 ஆர்.எஸ்.அந்தணன்

உதவி இயக்குனர்கள் 3 மற்றும் 4

கதைக்கு தேவையான காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை அறிவது இவர்களின் பணி. பீரியட் பிலிம் என்று சொல்லப்படும் படங்களில் இவர்களது பணி சற்று கடினமாகவே இருக்கும். உதாரணத்திற்கு சேரன் இயக்கிய பொக்கிஷம் படத்தை எடுத்துக் கொள்வோம்.

1970 களில் நடந்த கதைதான் இது. இப்படத்தில் பணியாற்றிய இத்தகைய உதவி இயக்குனர்களுக்கு தரப்பட்ட முதல் வேலை அந்த காலத்து அஞ்சல் உறைகளை தேடி கொண்டு வர வேண்டும் என்பதுதான். போஸ்ட் மாஸ்டரின் காஸ்ட்யூம்களை வடிவமைக்க உதவும் விதத்தில் பழைய காலத்து போஸ்ட் மாஸ்டரின் புகைப்படங்களை தேடிக் கண்டு பிடித்து தருவது. தபால் பை, பெயர் பொறிக்கப்பட்டிருக்கும் நேம் பேட்ஜ், எழுபதுகளில் நாகப்பட்டினம் ஏரியாவில் எந்த மாதிரி டிசைன் செய்யப்பட்ட பஸ்கள் ஓடின போன்ற விபரங்களை தேடி கொண்டு வருவது.

இவை எல்லாவற்றையும் விட படப்பிடிப்பு காலங்களில் இவர்கள் பையில் எப்போதும் ஐயோடக்ஸ், அமிர்தாஞ்சன், மூவ் போன்ற வலி நிவாரணிகளை வைத்திருக்க வேண்டிய அளவுக்கு ஒரு வேலை கொடுப்பார்கள். அது… கூட்டத்தை கட்டுப்படுத்துவது!

நாலு பேர் கூடி நின்று சண்டை போட்டால் கூட, நடுவில் தலையை நுழைத்து ஆவலோடு புத்திசொல்கிற வழக்கம் நமது நாட்டில் 90 சதவீதம் பேருக்கு இருப்பதால் படப்பிடிப்பு ஏரியாக்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். வெளியூர் படப்பிடிப்புகளில் இன்னும் சுத்தம். இது போன்ற நேரங்களில் கடைநிலை உதவி இயக்குனர்களின் பணி ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தது. கோபத்தில் யாரையாவது பிடித்து தள்ளிவிட்டால் கூட போச்சு. ஷுட்டிங்கே தடை படுகிற நிலை ஏற்படும். கோபம், பொறுமை, கண்டிப்பு, தைரியம், இவற்றுடன் சாதுர்யமும் இருக்க வேண்டிய இடம் அது.

தென் மாவட்டங்களில் படப்பிடிப்புக்கு போன படப்பிடிப்புக்குழுவினர் ஊர் மக்களிடம் அடி வாங்கி திரும்பி வந்த கதையெல்லாம் சினிமாவில் உண்டு. சிலர் அங்கு வேடிக்கை பார்க்க வந்த பெண்களிடம் காதல் வயப்பட்டு அது டெவலப் ஆகி குடும்பமாகிய பின் ஊர் மக்களிடம் தப்பித்து வந்த சம்பவங்கள் கூட இங்கு உண்டு. இப்பவும் ராஜா ராணிகளாக வாழும் சிலரை எனக்கு தெரியும்.

கிளாப் அசிஸ்டென்ட்-

புதிதாக வேலைக்கு சேருகிற உதவி இயக்குனருக்கு கொடுக்கப்படுகிற வேலை இது. பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம் போன்ற பெரிய இயக்குனர்களை பற்றி புகழ்கிற இன்றைய இயக்குனர்களில் பலர், “இவங்க படத்துல கிளாப் அடிக்கிற வேலை கிடைச்சா கூட அதை நான் பெருமையா நினைப்பேன்” என்று மேடைக்கு மேடை சொல்ல கேட்டிருப்பீர்கள். கிளாப் அடிக்கிற வேலை கொடுத்தா கூட… என்று அவர்கள் சொன்னாலும் அந்த வேலை எவ்வளவு கஷ்டமானது என்பதை அவர்கள் அறியாமல் இருக்க மாட்டார்கள். அவர்களும் இந்த அரிச்சுவடி பாடத்தை கற்று வந்தவர்களாகதான் இருப்பார்கள்.

சரி அப்படியென்ன வேலை அது? படத்தின் எடிட்டர் குழம்பாமல் ஷாட்டுகளை உரிய இடத்தில் பொறுத்த வேண்டும் என்றால் இந்த கிளாப் சொல்கிற பாடத்தை கேட்டால்தான் முடியும். டைரக்டர் ‘கிளாப் இன்’ என்று சொல்கிற நொடிக்காக காத்திருந்து, பிரேமுக்குள் கையை மட்டும் நுழைத்து, காக்காய் எச்சம் போடுகிற நேரத்தில் ஷாட் நம்பர்களை சொல்லிவிட்டு ஓடி விடுவதுதான் இந்த வேலையின் நுட்பம். ஒவ்வொரு ஷாட் நம்பரையும் இதில் எழுதி வைத்திருப்பார்கள். ஒரு காட்சி எத்தனையாவது ஷாட்டில் டைரக்டரால் ஓ.கே சொல்லப்பட்டிருக்கிறது என்பதை இதை வைத்துதான் கண்டு பிடிக்க முடியும் அவரால். வசனக்காட்சி, வசனம் அல்லாத காட்சி, என்று தனித்தனியாக பிரிக்க உதவுவதும் இந்த கிளாப் போர்டுதான்.

பயிற்சி நிலை இயக்குனர்கள் என்பதால் நிறைய அவமானங்களை சந்திப்பார்கள் இந்த கிளாப் அசிஸ்டென்ட்டுகள். நல்ல ஆடைகள், உற்சாகமான மனநிலை இருந்தால் இவற்றையெல்லாம் தாண்டி வரலாம் என்பது இந்த நிலையை கடந்தவர்களின் அட்வைஸ்.

‘அவமானங்களை…’ என்று சொல்லும்போது ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. பிரபல இயக்குனரான சமுத்திரக்கனியே ஒரு மேடையில் பகிர்ந்து கொண்ட விஷயம் இது. ‘நான் வேலைக்கு சேர்ந்தது புதுசு அது. எல்லாரும் வேலை பார்த்துகிட்டு இருந்தோம். படத்தின் ஹீரோவை அதுவரைக்கும் நான் பார்த்தது இல்ல. அந்த படத்தில்தான் அவர் அறிமுகம். ஷுட்டிங் ஆரம்பிக்கறதுக்கு சிறிது நேரத்திற்கு முன்னால், அந்த படத்தின் தயாரிப்பு நிர்வாகி அவரை தன் பைக்கில் ஏற்றிக் கொண்டு ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருந்தார்’.

‘இவர்தான் ஹீரோ என்றார்கள் உடன் வேலை பார்த்த நண்பர்கள். அந்த நபரை பார்த்தால் ஹீரோ மாதிரியே இல்லை. இந்தாளை ஹீரோவாக நடிக்க வைக்கறதுக்கு பதிலா, இவரை பைக்ல கூட்டிட்டு வந்தானே, அந்த பையனை ஹீரோவா நடிக்க வைக்கலாமே என்று தோன்றியது. சும்மாயில்லாமல் இதை அப்படியே டைரக்டரிடமும் வெளிப்படையா சொல்லிட்டேன். அவ்வளவுதான்… நீ வீட்டுக்கு கிளம்பு என்று கூறிவிட்டார் அவர்’.

இதுதான் சமுத்திரக்கனியின் அனுபவம். இதன் மூலம் அறியப்படுவது யாதெனின், அந்த படக்குழுவினரிடம் குறிப்பாக டைரக்டரிடம் தனக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்கிற வரைக்கும் வெட்டி பேச்சோ, வெட்டி தைத்து ஒட்டிய பேச்சோ கூடவே கூடாது என்பதுதான்.

எடிட்டிங் ரிப்போர்ட்-

ஒரு காட்சியை ஒளிப்பதிவாளர் பல ஷாட்டுகளாக பிரித்துக் கொள்வார். இந்த ஒவ்வொரு ஷாட்டும் பல முறை எடுக்கப்படலாம். நடிப்பு சரியாக வரும் வரைக்கும் என்பதற்காக மட்டுமல்ல, பல காரணங்களுக்காக ரீ டேக் எடுக்கப்படலாம். அது கேமிரா சம்பந்தப்பட்ட பர்பெக்ஷனுக்காக கூட இருக்கலாம். எந்த காட்சியை ஓ.கே என்று இயக்குனர் ஒப்புதல் கொடுக்கிறாரோ, அந்த ஷாட்டில் எந்த லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இந்த எடிட்டிங் ரிப்போர்ட்டில் குறிப்பார் உதவி இயக்குனர்.

பிலிம் பிராசஸ் செய்யும்போதோ, அல்லது கிரேடிங் செய்யும் போதோ (இதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் இன்னும் பல கிணறுகள் தாண்ட வேண்டும்) எடுக்கப்பட்ட ஷாட் வீணாக போய்விடலாம். அப்போது ரீஷுட் செய்ய இந்த குறிப்புகள் உதவும். படத்தொகுப்பாளர் என்று சொல்லக் கூடிய எடிட்டர் இந்த குறிப்புகளின் அடிப்படையில்தான் ஓ.கே செய்யப்பட்ட ஷாட் எது என்பதை தேர்ந்தெடுத்து படத்துடன் இணைப்பார். இந்த ரிப்போர்ட் மட்டும் இல்லையென்றால் திருப்பதியில் மொட்டையை தேடிய கதைதான். ஒவ்வொரு ஷாட்டாக உற்று உற்று பார்த்து தேர்வு செய்து படத்தில் இணைக்க வேண்டும். அதற்குள் ஒரு ரிலீஸ் தேதி போய் மறு தேதி வந்து விடும்.

இந்த நேரத்தில் ஒரு இனிமையான சம்பவத்தை சொன்னால் பிரமித்துப் போவீர்கள். (இனிமை கேட்கிற படிக்கிற நமக்குதான். ‘அனுபவித்த’ எடிட்டருக்கு அல்ல) பாரதிராஜாவின் படங்களுக்கு வசனகர்த்தாவாக இருந்து பின்பு இயக்குனரான ரத்னகுமாரின் அனுபவம் இது. ‘செங்காத்து பூமியிலே’ என்ற படத்தை இயக்கினார் அவர். அந்த படத்தில் நடித்தது தொழில் முறை நடிகர்கள் அல்ல. பலரும் அவரது கிராமத்தை சேர்ந்தவர்கள். அப்பாவி மக்கள். கிளாப் அடிக்கும் உதவி இயக்குனர் கேமிராவை ஆன் பண்ணுவதற்கு முன் கிளாப் அடிக்க நிற்பார். காட்சியை எடுப்பதற்கு முன், ‘சொல்லிக் கொடுத்த வசனத்தை பேசுங்கப்பா’ என்றால், அப்படியே பின்னி எடுக்கும் அவர்கள், இவர் கிளாப் கட்டையை உள்ளே கொண்டு வந்து ‘லொட்’ என்று அடித்ததும் அப்படியே கப் சிப் ஆகிவிடுவார்களாம். வேறொன்றுமில்லை, வசனம் மறந்துவிடும். அவ்வளவுதான்.

பொறுத்து பொறுத்து பார்த்த ரத்னகுமார், ‘வேணாம்ப்பா… அந்த கட்டைய உள்ளயே கொண்டு வராத. இவங்க இஷ்டத்துக்கு பேசட்டும். நடிக்கட்டும்’ என்று கூறிவிட்டார். அப்புறமென்ன? எந்த ஷாட் ஓ.கே. எது வேஸ்ட்? என்று ஒருவராலும் முடிவெடுக்க முடியாதளவுக்கு போய் விட்டது நிலைமை. வெறும் வசன காட்சிகள் என்றால் பரவாயில்லை. ஒரு ஊரை சேர்ந்த இரண்டு கோஷ்டிகள் ஆவேசமாக வசனங்களை பேசிக் கொண்டும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டு மேலே பாய்ந்து சண்டை போட வேண்டிய காட்சிகளையும் அப்படியே எடுத்தார் டைரக்டர். எவ்வளவு சீரியஸான பைட் சீனாக இருந்தாலும், கிளாப் அடிக்கும் உதவி இயக்குனர் உள்ளே புகுந்து ஷாட் எண்ணை குறிப்பிடுவார். இங்கு அதெல்லாம் எடுப்படவே இல்லை.

ஏய்…. கொஞ்சம் இரு என்று கூறும் டைரக்டர் அப்படியே கேமிமேன் பக்கம் திரும்பி, கேமிராவை ஓடவிடு என்று சைகை செய்துவிட்டு, இப்ப அடிச்சுக்கங்க என்பாராம் சப்தமாக. அவ்வளவுதான்… இரண்டு கோஷ்டியும் பேய் கூச்சல் போட்டுக் கொண்டு விழுந்து புரள்வார்கள். இப்படியாக எடுக்கப்பட்ட 16 ஆயிரம் அடிகளையும் கொண்டு வந்து எடிட்டரிடம் போட்டுவிட்டு போய்விட்டார். அவரும் பைத்தியம் பிடிக்காத குறையாக எல்லாவற்றையும் பார்த்து பார்த்து கடைசியாக நல்லதை தேடி தேடி படத்தை உருவாக்கிக் கொடுத்தார்.

எடிட்டிங் பணியை சுலபப்படுத்த அட்டவணையை தயார் செய்து வைத்திருக்கிறார்கள் தொழில் நுட்ப கலைஞர்கள். இதில் உதவி இயக்குனர் ஆங்காங்கே என்ன நடக்கிறது என்பதை குறித்தால் போதும். வெளியூரில் எடுக்கப்படும் பட சுருள்கள் லேபுக்கு வருகிற போது இந்த எடிட்டிங் ரிபோர்ட்டையும் கூடவே கொண்டு செல்ல வேண்டும். இந்த ரிப்போர்ட் எழுதுகிற அசிஸ்டென்ட், அவசரமாக பாத்ரூம் வருகிறது என்று வேறொருவரிடம் விட்டு போகிற வேலையெல்லாம் வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படி போனால் மறுபடியும் ரிப்போர்ட்டை எடுத்து பார்க்கும் போது குழப்பம் நேரிடலாம்.

கிளாப் அசிஸ்டென்டுக்கும் எடிட்டிங் ரிப்போர்ட் எழுதுகிற உதவி இயக்குனருக்கும் ஒரு அதிர்ஷ்டம். ஒரு முழு படத்தை எடுப்பதையும் அருகில் இருந்து பார்க்கிற வாய்ப்பு இவர்களுக்கு மட்டும்தான் அமையும். அதிலும் ஆபரேடிவ் கேமிராமேனை நண்பராக்கி கொண்டால் லென்ஸ் கூட அத்துப்படியாகிற அளவுக்கு நாலெட்ஜ் தேற்றிக் கொள்ளலாம்.

(தொடர்ந்து கூப்பிடுவேன்…)

எச்சரிக்கை – இந்த கட்டுரையும் இனி வரப்போகும் கட்டுரையின் சாராம்சங்களும் தமிழ்சினிமா கலைஞர்களிடமிருந்து திரட்டப்பட்டவையே. இதில் ஏதேனும் திருத்தங்கள் மற்றும் கருத்து மாறுபாடுகள் இருப்பின் anthananpro@gmail.com ல் தெரிவிக்கவும். ஏற்புடையதெனில் திருத்திக் கொள்கிறேன். நன்றி

எச்சரிக்கை 2 – இந்த கட்டுரையை என் அனுமதியின்றி யாரும் மறு பிரசுரம் செய்யவோ, வெளியிடவோ அனுமதியில்லை.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அஜீத் சூர்யாவுக்கு தனுஷ் தந்த பாடம்!

அதி தீவிர ரசிகர்கள் மட்டுமல்ல, ஆவரேஜ் ரசிகர்கள் கூட இல்லையென்றால் ஒரு ஹீரோ கண்டிப்பாக ஜீரோதான். இந்த உண்மையை அவ்வப்போதுஆணி அறைந்து நிரூபித்து வருகிறது காலம். இப்போதெல்லாம்...

Close