கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 15 ஆர்.எஸ்.அந்தணன் | அஜீத்தின் வயிற்றில் குத்துவிட்ட உதவி இயக்குனர்… கோவிந்தாவான எதிர்காலம்!

நடிகர் நடிகைகளை கையாளும் விதம்

செய்கிற வேலையிலேயே கொஞ்சம் ரிஸ்க்கான வேலை இதுதான். அநேகமாக எல்லா நடிகர், நடிகைகளுமே அனிச்ச மலர் டைப் எனலாம். சின்ன மனக்குறை என்றாலும் லென்ஸ் வைத்து காட்டியதை போல முகம் காட்டிக் கொடுத்துவிடும். அதனால் படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் கண்ணாடி கிளாஸ் போலவே கையாள வேண்டும் இவர்களை.

உதாரணத்திற்கு ஒரு சின்ன விஷயத்தை சொல்லலாம். ஒரு நடிகர் நடித்துக் கொண்டிருக்கிறார். முதல் டேக்கில் அவர் சொதப்பி விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அடுத்த ஷாட் போகும். அதிலும் முடியவில்லை என்றால் அடுத்தது. இப்படி ஷாட்டுகள் தொடர்ந்து கொண்டே போகும்போது ‘ஷாட் ஒன்று இரண்டு’ என்று உரக்க சொல்லிக்கொண்டே கிளாப் அடிப்பார் உதவி இயக்குனர். ஒன்று இரண்டுகளின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போய் ஷாட் நம்பர் பத்து என்று சொல்கிறபோது எவ்வளவு நம்பிக்கையோடு அந்த காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாலும், முகம் இருண்டுவிடும் நடிகருக்கு. அதனால் புத்திசாலி உதவி இயக்குனர் என்ன செய்வார் தெரியுமா?

ஷாட் ஒன்… ஷாட் டூ என்று அடுக்கி¢க் கொண்டேயிருப்பார். ஒரு கட்டத்தில் அதை நீளவிடாமல் திடீரென்று ஷாட் ஒன் ஏ என்று சுருக்கிக் கொள்வார். அது பி, சி என்று நகருமே தவிர பத்தை நோக்கி போகாது. இந்த எண்ணிக்கை யுக்தி மேலோட்டமாக பார்த்தால் பெரிய விஷயமாக தெரியாது. உளவியல் ரீதியாக பார்த்தால் கிரேட்! அடிக்கடி ரீ டேக் வாங்குகிற ஹீரோ சோர்வடைய மாட்டார் அல்லவா?

இன்னொரு விஷயம். எவ்வளவுதான் நெருங்கி பழகிய ஹீரோ என்றாலும் பொது இடங்களில் அவர்களுக்கான மரியாதையை உதவி இயக்குனர் என்பவர் கொடுத்தே ஆக வேண்டும். நானும் இந்த ஹீரோவும் ரொம்ப நெருக்கம் தெரியுமோ… என்று ஊர் உலகத்திற்கு காண்பிக்க வேண்டும் என்பதற்காகவே மிகவும் அன்னியோன்யமாக நடந்து கொள்வார்கள் சிலர். அந்த நேரத்தில் முதுகை தட்டி பேசுவது, மேலே விழுந்து நசுக்குவது போன்ற கீழ் குணங்களோடு நடந்து கொண்டால் அது அவரது எதிர்காலத்தையே குழி தோண்டி கூட புதைக்கலாம். நான் ஆரம்பத்திலிருந்தே ஒரு விஷயத்தை அழுத்தமாக வலியுறுத்திக் கொண்டேயிருக்கிறேன். பிஹேவியர்… பிஹேவியர்… என்பதுதான் அது. உதாரணத்திற்கு இந்த எபிசோடில் இரண்டு சம்பவங்களை சொல்ல ஆசைப்படுகிறேன். முதல் சம்பவம், தல அஜீத் சம்பந்தப்பட்டது. ரசிகர்களை மட்டுமல்ல, சக சினிமாக்காரர்களையும் நேசிக்கிறவர் அவர். ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்தாலும் கூட, அவரையும் மதித்து அவருக்காக நேரம் ஒதுக்கி பேசக் கூடிய ஒரே நல்ல ஹீரோ என்பார்கள் அவரை. அப்படிப்பட்டவரையே டென்ஷன் ஆக்கிவிட்டார் ஒரு உதவி இயக்குனர்.

அஜீத் நடித்த பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சத்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). படப்பிடிப்பு முடிந்தால் பணி முடிந்ததென்று வீட்டுக்கு போய்விடுகிறவர் அல்ல அஜீத். தனது யூனிட்டை சேர்ந்த உதவி இயக்குனர்களோடு பேட்மிட்டன் ஆடுவார். வீட்டுக்கு வரச்சொல்லி மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார். இப்படியே அஜீத்திடம் மிக நெருங்கி பழக ஆரம்பித்தார் சத்யா. இந்த பழக்கம் எந்தளவுக்கு வளர்ந்தது என்றால், சத்யாவுக்கு கால்ஷீட் கொடுத்து அவரை விரைவில் இயக்குனராக்கிவிட வேண்டும் என்று அஜீத்தே ஆசைப்படுகிற அளவுக்கு.

விதி இருக்கிறதே, அது தேர் ஏறியும் வரும். சில நேரங்களில் திண்ணையிலும் படுத்திருக்கும். இந்த பாழாய் போன விதி, சத்யாவுக்கு அவர் சொன்ன ஜோக்கில் குடியிருந்தது. ஒரு மாலை நேரம் அஜீத் வீட்டுக்கு போயிருந்தார் சத்யா.

சிலருக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கும். ஜோக்கடிப்பார்கள். அந்த ஜோக்குக்கு அவர்களே குய்யோ மொய்யோ என்று குரல் விட்டு சிரிப்பார்கள். அப்படியே ஓடிவந்து அந்த ஜோக்கை ரசித்துக் கொண்டிருக்கும் நம்மையும் ஒரு தாக்கு தாக்குவார்கள். அதாவது நமது முதுகில் ஓங்கி தட்டிவிட்டு சிரிப்பார்கள். சிலருக்கு வயிற்று பிரதேசம்தான் ரொம்ப பிடிக்கும். சிரித்துக் கொண்டே பொசுக்கென வயிற்றிலும் குத்திவிடுவார்கள். இது போன்ற ஆசாமிகள் ஜோக் சொல்ல ஆரம்பிக்கும்போதே பாதுகாப்பான து£ரத்தில் நின்று அதை ரசிக்க பழகியிருப்பார்கள் சக தோழர்கள். சத்யாவும் அப்படி ஒரு ‘ஜோக்’காளிதான்.

திருமதி அஜீத்தும் அந்த சந்திப்பின்போது இருந்தார். ஏதோ ஒரு ஜோக் சொல்லிவிட்டு வானளாவ சிரித்துக் கொண்டே எழுந்து ஓடிய சத்யா, அப்படியே என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்று அறியாமலேயே அஜீத்தின் வயிற்றில் குத்திவிட்டார். கொஞ்சம் வாய்விட்டு சிரிக்கக் கூடிய பெரிய ஜோக் போலிருக்கிறது. அதற்கேற்றார் போன்ற முரட்டு குத்து அது.

இதை பார்த்துக் கொண்டிருந்த ஷாலினி கோபத்தில் விருட்டென்று எழுந்து உள்ளே போக, முகத்தில் வலியை காட்டிக் கொள்ளாமல் இறுக்கமானார் அஜீத். அந்த அறையே வேறொரு மூடுக்கு போனது. “சரி, நான் நாளைக்கு வர்றேன்” என்று கிளம்பினார் சத்யா. மறுநாள் அவர் போனபோது பழைய அஜீத்தை பார்க்க முடியவில்லை அவரால். அஜீத்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற சத்யாவின் ஆசையும், நமக்கு பிடிச்ச பையன் இவன். இவனை டைரக்டர் ஆக்கிடணும் என்ற அஜீத்தின் பெருந்தன்மையும் அந்த சம்பவத்தால் நிறைவேறாமல் போனது. பல வருடங்களுக்கு பின் சத்யா இயக்கிய ஒரே ஒரு படமும் ஓடவில்லை. தனக்காக காத்திருந்த ஒரு பெரிய வாழ்க்கையை வெள்ளந்தியான அவரது குணமே காவு வாங்கியது.

இன்னொரு சம்பவத்தை சொல்லவா? இன்று மிகப்பெரிய உயரத்திலிருக்கும் இயக்குனர் அவர். கமலை வைத்து படம் தயாரிக்கிற அளவுக்கு உயர்ந்துவிட்டார். அவரது திரைப்பட நிறுவனம் இன்று வெளிப் படங்களையும் வாங்கி வெளியிட்டு வருகிறது. அதில் பெருமளவு லாபமும் பார்த்து வருகிறது. யாரென்று வெளிப்படையாக சொல்வது அவரது இமேஜுக்கு திருப்பதி மொட்டை போட்டுவிடும் என்பதால் நீங்களே யூகித்து கொள்க…

விக்ரமனிடம் உதவி இயக்குனராக இருந்தவர், அதற்கப்புறம் தானே படம் இயக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெரிய பெரிய தயாரிப்பாளர்களை சந்தித்து கதை சொல்ல ஆரம்பித்திருந்தார். அப்படிதான் அன்றும் இன்றும் மிகப்பெரிய தயாரிப்பாளராக விளங்கிக் கொண்டிருக்கும் ஏ.எம்.ரத்னம் அலுவலகத்தின் கதவையும் தட்டினார். ஏ.எம்.ரத்னம் கதை கேட்கும் விதமே அலாதியாக இருக்கும். தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிடுவார். கதை சொல்ல வரும் இயக்குனரின் டென்ஷனை குறைக்கும் விதத்தில் மிகவும் இயல்பாக அவரிடம் இருபது நிமிடமாவது பேசி, அவரை ரிலாக்ஸ் பண்ணிவிட்டுதான் கதையை கேட்கவே ஆரம்பிப்பார். அதற்கு முன்பு வந்தவரை பசியாற வைப்பதுதான் அவரது நல்ல குணங்களிலேயே மிகவும் நல்ல குணம். கதையை கேட்ட பின்பு நாளைக்கு வாங்க என்று சொல்லிவிடுவது அவரது வழக்கமில்லை. அந்த கதை குறித்து அப்பவே தனக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்பார். அந்த கதை குறித்து சுமார் ஒரு மணி நேரமாவது விவாதிப்பார்.

அன்றும் அப்படிதான் நடந்தது. இன்னும் பெரிய ஆச்சர்யம். இவர் கதை சொல்லி முடித்த சில நிமிடங்களிலேயே ‘நாம் இந்த கதையை படமாக்குறோம்’ என்று உத்தரவாதம் கொடுத்தார். அத்துடன் ஒரு கணிசமான தொகையை அட்வான்சாகவும் அவர் கையில் திணித்துவிட்டார். எவ்வளவு பெரிய சந்தோஷம் அது. திக்குமுக்காடி போனார் இயக்குனர். எத்தனை வருட கனவு. எத்தனை வருட போராட்டம்! இன்றோடு முடிவுக்கு வந்ததே என்ற சந்தோஷம் ஒருபுறம். நண்பர்களிடம் சொல்ல வேண்டும் என்கிற பரபரப்பு மறுபுறம். சந்தோஷமாக கைகுலுக்கிவிட்டு கிளம்பினார். அன்று மாலையே விதி டிராபிக் சிக்னலில் நின்று கொண்டிருந்ததை அவர் அறிவாரா என்ன?

வாங்கிய அட்வான்ஸ் தொகையில் தன் அறை தோழர்களுக்கு செமத்தியான ஒரு பார்ட்டி கொடுத்தார். இப்போது நினைத்திருந்தால் சென்னையிலேயே சிறப்பான நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி வைத்திருக்க முடியும். அப்போது தெருவோரை ‘சரக்கு’ கடைதானே பட்ஜெட்டுக்குள் அடங்கும்? எல்லாரும் தள்ளாடியபடியே 100 அடி சாலையை கடந்து கொண்டிருந்தார்கள். அந்த நேரம் பார்த்துதானா ஏ.எம்.ரத்னத்தின் கார் அந்த சாலையில் வர வேண்டும்? இவர்கள் கடந்து வருவதற்கும் அவர் கார் குறுக்கே வருவதற்கும் சரியாக இருந்தது. ‘டேய்ய்ய்ய்ய்ய்… நின்னு போ மாட்டியா?’ என்று ஆக்ரோஷமாக கத்தியபடியே அந்த காரின் பேனட்டில் ஒரு குத்துவிட்டார் இயக்குனர். உள்ளேயிருந்த ரத்னம், குத்தியது யார் என்று கண்ணாடி வழியே பார்க்க… காலையில் வந்து அட்வான்ஸ் வாங்கிய டைரக்டர்!

உள்ளேயிருந்தவர் ரத்னம் என்ற விஷயமே இயக்குனருக்கு தெரியாது. மறுநாள் எவ்வித பதற்றமும் இல்லாமல் தயாரிப்பாளரை சந்திக்கப் போனார் இயக்குனர். ‘நேற்று உங்களை டிராபிக் சிக்னல்ல பார்த்தேன் ’ என்று ஒருவரியில் சகலத்தையும் போட்டு உடைத்த தயாரிப்பாளர், ‘தம்பி போயிட்டு வாங்க. உங்களுக்கு இங்க இடம் இல்லே’ என்றார் நிதானமாக. ஏதோ வேறொரு தயாரிப்பாளரால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று உயர்ந்த நிலைக்கு அந்த டைரக்டர் வந்துவிட்டார். இல்லாவிட்டால், சத்யாவின் கதிதான் இவருக்கும் ஏற்பட்டிருக்கும். அதனால் உதவி இயக்குனர்களே…. திறமையெல்லாம் பிறகுதான். பிஹேவியர்தான் முதலில்!

சரி, படப்பிடிப்பில் உதவி இயக்குனர்கள் நடந்து கொள்ளும் முறை எப்படி என்பது குறித்து பேசுவோமா?

(தொடர்ந்து கூப்பிடுவேன்…)

எச்சரிக்கை – இந்த கட்டுரையும் இனி வரப்போகும் கட்டுரையின் சாராம்சங்களும் தமிழ்சினிமா கலைஞர்களிடமிருந்து திரட்டப்பட்டவையே. இதில் ஏதேனும் திருத்தங்கள் மற்றும் கருத்து மாறுபாடுகள் இருப்பின் anthananpro@gmail.com ல் தெரிவிக்கவும். ஏற்புடையதெனில் திருத்திக் கொள்கிறேன். நன்றி

எச்சரிக்கை 2 – இந்த கட்டுரையை என் அனுமதியின்றி யாரும் மறு பிரசுரம் செய்யவோ, வெளியிடவோ அனுமதியில்லை.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தொடர்ந்து இளையராஜாவை வெறுப்பேற்றுகிறாரா யுவன்?

‘தென்னைய பெத்தா இளநீரு... புள்ளைய பெத்தா கண்ணீரு...’ என்று சும்மாவா சொன்னார் கண்ணதாசன்? யுவன் வைக்கிற ஒவ்வொரு ஸ்டெப்பும் அப்படிதான் இருக்கிறது. இளையராஜாவுக்கு நெருக்கமாக இருந்த யாரெல்லாம்...

Close