கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 16 ஆர்.எஸ்.அந்தணன் பிரபுதேவா என்பதால் பொறுத்துக் கொண்டார்!

நடிகர், நடிகைகளை படப்பிடிப்பு நடக்கும் ஸ்பாட்டுக்கு அழைத்து வருவதே ஒரு கலை. ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்காக லைட்டிங் செட் பண்ணிக் கொண்டிருப்பார் ஒளிப்பதிவாளர். அந்த இடைவெளியில் சில நடிகர், நடிகைகள் கேரவேனுக்குள் புகுந்து கொள்வார்கள். அல்லது தன்னை பார்க்க வந்த ரசிகர்களோடு பேசிக் கொண்டிருப்பார்கள். இன்னும் பலர் அந்த நிமிடத்திலும் ஒரு குட்டி து£க்கம் போட்டுக் கொண்டிருப்பார்கள். புத்தகம் படித்தல், சீட்டாடுதல் போன்ற விஷயங்களும் நடக்கும்.

மீண்டும் படப்பிடிப்புக்கு அவர்களை அழைக்கும்போது படக்கென்று கேரவேன் கதவை தட்டி, ‘ஷாட் ரெடி சார். வாங்க’ன்னு சொல்வது அவ்வளவு நாகரிகம் அல்ல. அப்படியென்றால் என்ன செய்வதாம்? பெரும்பாலும் இந்த கேரவேன் கதவுகளுக்கு வெளியே தங்கள் மேக்கப் மேனையோ காஸ்ட்யூமரையோ நிறுத்தி வைத்திருப்பார்கள் நடிகர்கள். அவர்களிடம் சொல்லி கதவை திறக்க செய்யலாம். அப்படி திறக்கிற நேரத்தில் தனது வருகையை அவர்களுக்கு அறிவித்துவிட்டு கீழேயே நிற்கலாம்.

டைரக்டர் பாண்டியராஜன், பாக்யராஜிடம் உதவி இயக்குனராக சேர்ந்த புதிதில் ஒரு காமெடி செய்தார். பொதுவாக படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் அவர் கலகலப்பானவர். சேர்ந்த புதிதில் தான் செய்த காரியத்தை இப்போதும் நினைத்து நினைத்து சிரிப்பாராம் அவர். “யோவ்… ஷாட் ரெடி. போய் ஆர்ட்டிஸ்ட்டை அழைச்சுட்டு வா” என்று கூறினார் டைரக்டர். அடுத்த வினாடி பாண்டிய ராஜன் என்ன செய்தார் தெரியுமா?

நின்ற இடத்திலிருந்தபடியே து£ரத்தில் நாற்காலியில் அமர்ந்திருத்த ஒரு மூத்த நடிகரை கைதட்டி அழைத்தார். அவர் திரும்பி பார்த்ததும், “ஏங்க… உங்களை டைரக்டரு கூப்பிடுறாரு” என்றார் எவ்வித தயக்கமும் இல்லாமல். சம்பந்தப்பட்ட நடிகரும் அதிர்ந்து, டைரக்டரும் நடுநடுங்கிப் போனார். “யோவ். இப்படியெல்லாம் யாரையும் கூப்பிடக் கூடாது. அருகில் போய் மரியாதையாகதான் கூப்பிடணும். புரியுதா?” என்று சொல்லிக் கொடுத்தார்.

தங்கர்பச்சானிடம் உதவி இயக்குனராக இருந்த தமிழ்செல்வனின் அனுபவம் வேறு மாதிரி. அடிப்படையில் கவிஞரான இவருக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் பல வருட கனவும், போராட்டமும். முதல் படத்திலேயே பெரிய இயக்குனரிடம் தொழில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு. சந்தோஷம் தாங்க முடியவில்லை அவருக்கு. தங்கர்பச்சான் இயக்கிய களவாடிய பொழுதுகள் படத்தின் அதுபவம் இது. இப்படத்தில் பிரபுதேவாதான் ஹீரோ.

கொஞ்சம் அதிர்ஷ்டசாலி தமிழ்ச்செல்வன். நேரடியாக பிரபுதேவாவுக்கு வசனங்களை படித்துக் காட்டும் வேலையை கொடுத்தார் தங்கர்பச்சான். பெரும் ஆர்வத்திலிருந்த தமிழ், டயலாக்கை படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதை ஏற்ற இறக்கங்களோடு படித்துக் கொண்டே லேசாக நடித்தும் காட்டினார் பிரபுதேவாவுக்கு.

பொதுவாக பெரிய ஹீரோக்கள் இதை விரும்ப மாட்டார்கள். படத்தின் இயக்குனரே கூட சொல்லிக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளாது அவர்களது ஈகோ. இத்தனை படத்தில் நடிச்சிட்டோம். நமக்கு போய் நடிக்க சொல்லித் தருவதா? என்று அலட்டிக் கொள்வார்கள். அதிலும் உதவி இயக்குனர்கள் நடிப்புச் சொல்லிக் கொடுத்தால் எப்படி பொறுத்துக் கொள்வார்கள்? இதையெல்லாம் அறிந்திருக்கவில்லை தமிழ். அதற்காக இவரை பிரபுதேவா கடிந்து கொள்ளவும் இல்லை. ஆனால், சிரித்துக் கொண்டே “நீங்க புதுசா சேர்ந்திருக்கீங்க போலிருக்கு. கரெக்டா?” என்று கேட்டதுடன் “நீங்க டயலாக்கை மட்டும் படிங்க. எப்படி நடிக்கணும் என்பதை நான் பார்த்துக்கிறேனே… உங்களுக்கு எதுக்கு கஷ்டம்” என்றார் மிக மிக நாகரீகமாக.

ஏதோ இவராக இருந்ததால் தப்பித்தார் தமிழ். இல்லையென்றால்?

இன்னும் சில உதவி இயக்குனர்கள் இருக்கிறார்கள். மிக சினேகமாக பழகுவார்கள் நடிகர் நடிகைகளிடம். சந்தர்ப்பம் கிடைத்தால் இந்த படப்பிடிப்பு முடிவதற்குள்ளாகவே இவர்களை கதை சொல்லி கவிழ்த்து கால்ஷீட் வாங்கி அடுத்த படத்தை ஆரம்பித்துவிட வேண்டும் என்ற வெறியோடு பழகுவார்கள். இது எப்போதாவது ஒரு கட்டத்தில் இயக்குனருக்கு தெரியவரும்போது அந்த யூனிட்டிலிருந்தே பாதியில் நீக்கப்படுவார்.

நம்மிடம் வேலை செய்து கொண்டிருப்பவன் அதற்குள் படம் எடுக்க அனுமதிப்பதா? கூடவே கூடாது என்ற மன அழுத்தத்தால் இப்படி செய்ய மாட்டார்கள். ஒருவேளை தனது உதவி இயக்குனர் சொல்கிற கதை அந்த ஹீரோவுக்கு பிடித்துப் போய்விட்டால் இந்த கதையில் கவனம் இல்லாமல் போய்விடும். இப்போது நடிக்கிற படத்தை விட இது முன்பே ரிலீஸ் ஆகிவிட்டால் நமக்கு பெரிய பிரேக் கிடைங்குமே என்று அந்த ஹீரோ நினைத்தால் இன்னும் சுத்தம். இந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டு நல்ல கதை சொன்ன அந்த டைரக்டரை இழுத்துக் கொண்டு சென்று விடுவார். இந்த அபாயங்களிலிருந்து தப்பிக்கதான் தன்னிடம் பணியாற்றுகிற உதவி இயக்குனர் ஹீரோவிடம் கதை சொல்ல முயல்கிறார் என்று தெரிந்தாலே யூனிட்டிலிருந்து விரட்டி விடுவார் இயக்குனர். இது போல ஏராளமான உதவி இயக்குனர்கள் பாதியில் நீக்கப்பட்ட சம்பவங்கள் கோடம்பாக்கத்தில் ஏராளம்.

இப்படியெல்லாம் அவசரப்படாமல் தனக்கான காலம் வரும் வரைக்கும் காத்திருந்து வெற்றி பெறுவதுதான் முறை. அதுதான் அழகும் கூட!

எல்லோராலும் திருப்பதி சாமி ஆகிவிட முடியாதல்லவா?

படப்பிடிப்பில் இக்கட்டான நேரத்தில் சாதுர்யம்

ஊருக்கு போவதை போல லக்கேஜ்களோடு போய் இறங்குவது மட்டும் உதவி இயக்குனர்களின் வேலையல்ல, போருக்கு போவதை போல புத்திசாலித்தனமாகவும் இருக்க வேண்டும் படப்பிடிப்பில். எங்கு, எப்போது, என்ன நடக்கும் என்பதை யாரால் அறிய முடியும்?

‘அந்நியன்’ படத்தில் மேட்ரிக்ஸ் ஸ்டைலில் ஒரு கராத்தே ஃபைட் பார்த்திருப்பீர்கள். ஒருவர் முதுகில் ஒருவர் ஏறி வேக வேகமாக ஓடுவார்கள். இந்த காட்சியை எடுத்துக் கொண்டிருக்கும்போது நாலைந்து ஃபைட்டர்களின் முகங்கள் சுவற்றில் மோதி தாவங்கட்டை பிளந்து உயிருக்கே ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டதையெல்லாம் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

மிக கொடூரமான சம்பவம் அது. சிலர் ஸ்பாட்டிலேயே இறந்தும் போனார்கள். அங்கிருந்த உதவி இயக்குனர் மட்டும் ஒரு சின்ன வேலையை செய்திருந்தால், அந்த சம்பவம் நடக்காமலே போயிருந்திருக்கும். அது?

அடுத்த வாரம் சொல்கிறேன்.

(தொடர்ந்து கூப்பிடுவேன்…)

எச்சரிக்கை – இந்த கட்டுரையும் இனி வரப்போகும் கட்டுரையின் சாராம்சங்களும் தமிழ்சினிமா கலைஞர்களிடமிருந்து திரட்டப்பட்டவையே. இதில் ஏதேனும் திருத்தங்கள் மற்றும் கருத்து மாறுபாடுகள் இருப்பின் anthananpro@gmail.com ல் தெரிவிக்கவும். ஏற்புடையதெனில் திருத்திக் கொள்கிறேன். நன்றி

எச்சரிக்கை 2 – இந்த கட்டுரையை என் அனுமதியின்றி யாரும் மறு பிரசுரம் செய்யவோ, வெளியிடவோ அனுமதியில்லை.

1 Comment
  1. அந்துவன் மொந்தைக்கள்ளு says

    அந்து,

    6க்கு அப்புறம் 7தானே? அதென்ன 16?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
புதிய படங்கள் சாதிக்க முடியாததை ஆயிரத்தில் ஒருவன் சாதித்திருக்கிறது! முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா நடித்து வெளிவந்த ஆயிரத்தின் ஒருவன் திரைப்படத்தின் டிஜிட்டல் பதிப்பு மாபெரும் வெற்றி கண்டு வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, படத்தை வெளியிட்ட திவ்யா...

Close