கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 17 ஆர்.எஸ்.அந்தணன் டைரக்டர் ஷங்கர் மீது கோபம் வரும்… ஆனால் வேறு வழியில்லை!
‘அந்நியன்’ படப்பிடிப்பில் மேட்ரிக்ஸ் ஸ்டைலில் எடுக்கப்பட்ட ஒரு ஃபைட் சீன் பற்றியும் அதில் ஏற்பட்ட விபத்து பற்றியும் கடந்த பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். ஒரு உதவி இயக்குனர் நினைத்திருந்தால் அந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும் என்றும் கூறியிருந்தேன். நடக்கப் போகும் ஒரு விபத்தை உதவி இயக்குனரால் எப்படி தடுத்திருக்க முடியும்? முன்பே சொல்லிவிட்டு வருவதற்கு பெயர் விபத்தல்லவே?
அதை கொஞ்சம் விளக்கமாகவே பார்ப்போமா?
ரோப் என்கிற ஒரு விஷயம் மட்டும் இல்லையென்றால், நாம் வியக்கிற அத்தனை ஹீரோக்களும் சுத்த டம்மி பீஸ்கள்தான். அந்தரத்தில் பறந்து அடிக்கிறார்கள் அல்லவா? அதற்கு இந்த ரோப்தான் பயன்படும். நன்றாக வளைந்து கொடுக்கக்கூடிய மெல்லிய கம்பிதான் அது. பார்ப்பதற்கு சற்றே தடித்த நுல் போலிருந்தாலும், ஒரு யானையையே கூட அதில் கட்டி இழுத்துவிடலாம். அப்படியொரு வலிமை கொண்டது அது. சில முன்னணி ஸ்டன்ட் மாஸ்டர்கள் இந்த ரோப் பர்சேசுக்காகவே வெளிநாடுகளில் அலைந்து திரிவார்கள். அப்படிப்பட்ட ரோப்தான் இங்கும் ரோல் பிளே செய்தது.
ஃபைட்டர்களின் முதுகில் கட்டப்பட்ட ரோப், பில்டிங்குக்கு அந்த பக்கம் உள்ள லாரி ஒன்றில் இணைக்கப்பட்டிருந்தது. பைட் மாஸ்டரின் ஐடியா என்னவென்றால் குறிப்பிட்ட நேரத்தில் அந்த லாரியை டிரைவர் இயக்க வேண்டும். லாரி நகரும்போது அதில் கட்டப்பட்டிருக்கும் ரோப்பும் உயரும். இதில் அலாக்காக து£க்கிச் செல்லப்படும் ஃபைட்டர்கள் கீழே நிற்கிற மற்ற ஃபைட்டர்களின் முதுகில் ஏறி ஓடுவதை போல காட்சி அமையும். இப்படி லாரியை இயக்கும் போது குறிப்பிட்ட ஒரு புள்ளியில் சென்று மிக சரியாக நிறுத்த வேண்டும். ஷுட்டிங்கின் போது டிரைவர் வண்டியை நிறுத்த வேண்டிய அந்த இடத்தில் ஒரு மார்க் மட்டும் வரையப்பட்டிருந்தது.
இதை மேற்பார்வையிடுவது ஒரு உதவி இயக்குனரின் வேலை. கேமிரா ஓடவிடப்பட்டதும், லாரியை கிளம்ப சொல்லி இவர்தான் கையை உயர்த்த வேண்டும். குறிப்பிட்ட இடத்தில் நிற்பதற்கும் இவர்தான் சிக்னல் தர வேண்டும். ஆனால் இவரது கட்டுப்பாட்டையும் மீறி அந்த குறிப்பிட்ட புள்ளியை தாண்டி லாரி நிறுத்தப்பட்டது. லாரி நகர நகர வேகமாக மேலே உயர்த்தப்பட்ட ஃபைட்டர்கள் குறிப்பிட்ட அளவையும் தாண்டி லாரி சென்றதால், மேலே உள்ள சுவற்றில் மோதி தாவங்கட்டை பிளந்தது அவர்களுக்கு. இதற்கு உதவி இயக்குனர் என்ன செய்வார்? அது டிரைவரின் தவறுதானே என்று உச் கொட்டினாலும், அவர் கடுமையாக சில விஷயங்களை பின்பற்றியிருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம். வேறொன்றுமில்லை. அந்த லாரி டிரைவர் வேகமாக ஆக்சிலேட்டர் கொடுத்தால் கூட அந்த மார்க்கை தாண்டி சிறிதளவு கூட முன்னேற முடியாதபடி ஒரு பெரிய மரக்கட்டையை போட்டிருந்தால் இந்த விபத்தை தடுத்திருக்கலாம் அல்லவா?
எப்படியோ கவனக்குறைவால் நடந்த அந்த விபத்தால் முகம் சிதைந்த பலர் இப்போதும் அதே மார்க்கோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு மரணம்! என்னவொரு கொடுமை?
சரி போகட்டும். நாம் உதவி இயக்குனர்களின் சாதுர்யத்தை பற்றியல்லவா பேசிக்கொண்டிருக்கிறோம்? இதே அந்நியன் படப்பிடிப்பில் நடந்த சுவையான சம்பவம் ஒன்று. படித்தபின் டைரக்டர் ஷங்கரின் மீது உங்களுக்கு கோபம் கூட வரலாம். (ஷங்கரின் உதவி இயக்குனர் ஒருவரே சொன்ன தகவல் இது என்பதால் அப்படியே எழுதியிருக்கிறேன். ஷங்கர் தரப்பிலிருந்து யாராவது மறுத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல)
அந்நியனுக்கு ஒரு பிளாஷ்பேக் உண்டு படத்தில். விக்ரம் ஏன் அப்படி ஒரு மன நோயாளி ஆனார் என்பதற்கான வலுவான காரணம் அது. அன்பான தங்கையை மின் வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் இழந்திருப்பார் விக்ரம். சாலையில் தேங்கிக் கிடக்கும் மழைநீரில் மின்சார வயர் விழுந்து கிடக்கும். அதிலிருந்து மின்சாரம் தாக்கி அவள் இறந்திருப்பாள் என்பதுதான் கண்ணீர் வரவழைக்கும் அந்த பிளாஷ்பேக். சிறுவயது விக்ரமுக்கு தங்கையாக அனு என்ற சிறுமி நடித்திருந்தாள்.
மின்சாரம் தாக்குவது போல காட்சியை எடுத்து முடித்துவிட்டார்கள். அது மட்டுமல்ல, இந்த பெண் தன் குடும்பத்தினருடன் எவ்வளவு அன்பானவளாக இருந்தாள் என்பதை உணர்த்தவும் ஏராளமான காட்சிகள் முன்பே எடுக்கப்பட்டுவிட்டன. சிறிது நாட்கள் கழித்து இறந்து போன அந்த சிறுமியை பாடையில் ஏற்றிக் கொண்டு போவது போல காட்சிகளை எடுக்க விரும்பினார் ஷங்கர்.
ஸ்ரீபெரும்புது£ரில் படப்பிடிப்பு. ஒரு குறுகலான தெருவையும், ஒரு வீட்டையும், சாவு வீட்டுக்கான செட்டப்பையும் அங்கே ஏற்பாடு செய்துவிட்டார்கள். ஸ்பாட்டுக்கு வந்த சிறுமிக்கு காட்சியை விளக்கினார் உதவி இயக்குனர். அவ்வளவுதான். அழ ஆரம்பித்துவிட்டாள் அந்த சிறுமி. “நான் பொணமா நடிக்க மாட்டேன்” என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள். யார் யாரோ பேசினார்கள். எந்தெந்த முறையிலோ கெஞ்சினார்கள். அவளது பெற்றோர்கள் சொல்லியும் மசியவில்லை அவள். ஷங்கரும் முடிந்தவரை சொல்லி பார்த்தார். அப்படி நடிக்க முடியாது என்பதற்கு அவள் சொன்ன காரணம், “நான் பிணமாக நடித்துவிட்டு ஸ்கூலுக்கு போனால் என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் என்னை பேய் என்று கிண்டல் செய்வார்கள். அதனால் முடியாது” என்றாள்.
இப்படியே நேரம் போய் கொண்டிருந்தது. என்ன செய்வதென்றே தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருந்தது யூனிட். இந்த சிறுமியை நீக்கிவிட்டு வேறொரு சிறுமியை நடிக்க வைக்கலாம் என்றால், இதற்கு முன்பு எடுத்த காட்சிகள் எல்லாவற்றிலும் இந்த சிறுமியை மாற்றியாக வேண்டும். ரீ ஷுட் என்றால் ஏகப்பட்ட பொருட் செலவு, நேர விரயம். என்ன செய்வது? அப்போதுதான் ஒரு உதவி இயக்குனர் ஷங்கரின் காதில் கிசுகிசுத்தார். “து£க்க மாத்திரை கொடுத்து அனுவை து£ங்க வச்சிரலாமா?”
வேறு வழி? மதிய சாப்பாட்டில் து£க்க மாத்திரையை கலந்தார்கள் சிறுமிக்கு. அடுத்த அரை மணி நேரத்தில் கண்ணயர்ந்து து£ங்கிய அனுவை வைத்து எல்லா காட்சிகளையும் படம் பிடித்தார்கள். படம் வெளியான பின்புதான் இப்படி ஒரு காட்சியில் நடித்ததே அவளுக்கு தெரிய வந்தது. நியாயமாக பார்த்தால், இது நியாயமில்லைதான். ஆனால் ஒரு உதவி இயக்குனரின் குறுக்கு யோசனை பெரும் சிக்கலில் இருந்து இயக்குனரை விடுவித்தது அல்லவா?
இது போலவே சாதுர்யமான இன்னொரு சம்பவம்….
சேரன் இயக்கிய ‘பொக்கிஷம்’ படப்பிடிப்பில் நடந்தது. கொல்கத்தாவில் வேலை பார்க்கும் சேரன், நாகப்பட்டிணத்தில் இருக்கும் பத்மப்ரியாவுடன் தினமும் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்வது போல ஏராளமான காட்சிகளை அமைத்திருந்தார் சேரன். சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடந்தது. சில முக்கியமான காட்சிகளை அங்குள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் எடுக்க வேண்டும். எல்லா ஏற்பாடுகளுடனும் கொல்கத்தா கிளம்பியது படக்குழு. கடைசி நேரத்தில்தான் ஒரு கழுத்தறுப்பு சம்பவம். படப்படிப்புக்கு பர்மிஷன் வாங்கித் தரவேண்டிய புரடக்ஷன் மேனேஜருக்கு தவிர்க்க முடியாத சங்கடம். நான் வர ஒரு வாரம் ஆகும். எப்படியாவது மேனேஜ் பண்ணிக்குங்க என்று இவர்களை மட்டும் அனுப்பி வைத்துவிட்டார். டம்மியாக இவர்களால் அழைத்துச் செல்லப்பட்ட தயாரிப்பு நிர்வாகி நமக்கு பிரயோஜனப்பட மாட்டார் என்பதை அங்கு சென்று இரண்டே நாட்களில் புரிந்து கொண்டார் சேரன்.
வேறு வழியில்லாமல் உதவி இயக்குனரான ஜெயந்தனிடம் தயாரிப்பு நிர்வாகி வேலையை தற்காலிகமாக ஒப்படைத்துவிட்டார். கல்கி வார இதழில் உதவி ஆசிரியராக வேலை பார்த்தவர் இந்த ஜெயந்தன். எல்லாவற்றையும் விட ஆங்கிலத்தில் பேசக் கூடியவர் என்பதால்தான் இந்த பொறுப்பு.
கொல்கத்தாவுக்கு போய் இறங்கிய முதல் நாளே பெரிய கண்டத்திலிருந்து மீண்டார் ஜெயந்தன். அது பெரிய சுவாரஸ்யம்…
சொல்கிறேன் அடுத்த வாரம்…
(தொடர்ந்து கூப்பிடுவேன்…)
எச்சரிக்கை – இந்த கட்டுரையும் இனி வரப்போகும் கட்டுரையின் சாராம்சங்களும் தமிழ்சினிமா கலைஞர்களிடமிருந்து திரட்டப்பட்டவையே. இதில் ஏதேனும் திருத்தங்கள் மற்றும் கருத்து மாறுபாடுகள் இருப்பின் anthananpro@gmail.com ல் தெரிவிக்கவும். ஏற்புடையதெனில் திருத்திக் கொள்கிறேன். நன்றி
எச்சரிக்கை 2 – இந்த கட்டுரையை என் அனுமதியின்றி யாரும் மறு பிரசுரம் செய்யவோ, வெளியிடவோ அனுமதியில்லை.
அந்நியன் படத்தில வரும் வசனம் தான் நினைவுக்கு வருது , “சின்ன தவறோட விளைவு எக்ஸ்ட்ரா லார்ஜ் “.. ஹ்ம்ம் மொதல்ல அந்நியன் ஷங்கரை தான் போட்டு தள்ளிருக்கோணும்