கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 08 ஆர்.எஸ்.அந்தணன்

உதவி இயக்குனர்களின் வகைகள், அவர்களின் பணிகள்

குருகுலம் என்பார்கள் அந்த காலத்தில். கிட்டதட்ட அது போலதான் உதவி இயக்குனர்களின் பயிற்சி காலமும். பாரதிராஜாவிலிருந்து பாக்யராஜ். பாக்யராஜிலிருந்து பார்த்திபன். பார்த்திபனிலிருந்து விக்ரமன், விக்ரமனிலிருந்து கே.எஸ்.ரவிக்குமார். ரவிக்குமாரிடமிருந்து சேரன். சேரனிடமிருந்து சிம்பு தேவன். இப்படி தொடர்ந்து கொண்டேயிருக்கிறது படைப்பாளிகளின் பயணம். இது முடியவே முடியாத தொலைது£ர பயணம்தான். இன்று ஒரே மேடையில் அத்தனை பேரும் கம்பீரமாக உட்கார்த்திருக்கிற காட்சிகளை கூட பார்க்க முடிகிறது. ஆனால் பயிற்சி காலங்களில் எப்படியிருந்திருப்பார்கள் இவர்கள்? தனக்கு அடுத்த நிலையில் இருப்பவருக்கு பிரம்படி கொடுக்காத குறையாக கண்டிப்பு காட்டியிருப்பார்கள். மற்றபடி சகல அர்ச்சனைகளும் நடந்திருக்கும். அதுவும் வேலை நேரத்தில் ராட்சச கோபமெல்லாம் கூட வந்திருக்கும்.

பாரதிராஜாவுக்கு பின்னால் எப்படி ஒரு கலைக் குடும்பமோ, அப்படி ஒவ்வொரு புகழ்பெற்ற இயக்குனருக்கும் ஒரு குடும்பம் இருக்கும். அப்படி யாரும் விரும்பாவிட்டாலும் அது தானே உருவாகி கிளை பரப்பும் என்பதுதான் அதிசயம்!

தனக்கு கீழே பணியாற்றி வருகிற உதவி இயக்குனர்களை பலருக்கும் தெரிய பாராட்டுகிற மனப்பக்குவம் இன்று இருக்கிற பல இயக்குனர்களுக்கு வந்திருப்பது மிக மிக ஆரோக்கியமான விஷயம். அண்மையில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தின் பிரஸ்மீட்டில், தனது இணை இயக்குனரின் பெயரை மேடையில் குறிப்பிட்ட இயக்குனர் பார்த்திபன், ‘இன்னும் கொஞ்ச நாளில் அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய டிமாண்ட் வரப்போவுது பாருங்க’ என்று வெளிச்சம் காட்டியது அவ்வளவு ஈஸியான விஷயமல்ல. அது பார்த்திபனின் பரந்த மனசுக்கு உதாரணம்.

பூலோகம் பிரஸ்மீட்டிலும் கிட்டதட்ட இதே போலொரு நல்ல காரியத்தை செய்தார் அப்படத்தின் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன். ‘இந்த படத்திற்கு நான்தான் இயக்குனர் என்றாலும், இந்த படம் இந்தளவுக்கு வளர என் உதவி இயக்குனர்கள்தான் காரணம். அவர்கள் இல்லையென்றால் இந்த படமே இல்லை’ என்று எல்லாரையும் மேடைக்கு அழைத்து கவுரவித்தார்.

பிரபல சினிமா விமர்சகர் கேபிள் சங்கர், தான் இயக்கிய ‘தொட்டால் தொடரும்’ பாடல் வெளியீட்டு விழாவில், தனது உதவி இயக்குனர்கள் அத்தனை பேரையும் மேடையில் ஏற்றினார். ‘இவர்கள் இன்றி இந்த படம் சாத்தியமில்லை’ என்று அவர் பேசியதை பாராட்டாமல் எப்படி விடுவது?

இப்போதிருக்கிற இந்த பக்குவம் வெகு காலத்திற்கு முன் வாழ்வாங்கு வாழ்ந்த பல இயக்குனர்களுக்கு இல்லையென்றே படுகிறது.

சரி ஒரு படத்திற்கு எத்தனை இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் தேவைப்படுவார்கள்? அது நாம் எடுக்கப் போகிற கதையை பொருத்த விஷயம். பொன்னியின் செல்வன் மாதிரி ஒரு கதையை படமாக்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு எத்தனை பேர் தேவைப்படுவார்கள்? அதே லோ-பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஒரு படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நான்கு சுவற்றை தாண்டி வெளியே வராத கதைக்கு எத்தனை பேர் தேவைப்படுவார்கள்? சொல்லாமலே புரிந்திருக்கும் உங்களுக்கு. ஆனால் ஒவ்வொரு படத்திற்கும் குறைந்தது இத்தனை பேர் தேவை என்ற கணக்கு இருக்கிறது. சராசாரியாக யார் யார் தேவை. அவர்களுக்கு என்னென்ன பணிகள் என்பதை இப்போது பார்க்கலாம்.

இணை இயக்குனர்-

இயக்குனர் மனதில் உருவான கதை, முதலில் இவருக்குதான் சொல்லப்படும். அதற்கு முன்பே இந்த கதை வாய்ப்புக்காக ஓராயிரம் முறை கோடம்பாக்கத்தையே சுற்றி வந்திருக்கும். அது வேறு விஷயம். ஆனால் நாம் எடுக்கப் போவது என்ன என்பதை முழுமையாக இவரிடம் சொல்லியிருப்பார் இயக்குனர். இந்த கதை எந்த ஏரியாவில் நடக்க வேண்டும். என்னென்ன பேக்ரவுண்ட் வேண்டும் என்பதெல்லாம் இவருக்கு தெரியும். அதனால் லொக்கேஷன் ஹன்ட்டிங் என்று சொல்லப்படும் வேலையை ஒளிப்பதிவாளருடன் செய்வது இந்த இணை இயக்குனர்தான். சமயங்களில் இயக்குனரும் வருவார். இல்லையென்றால் இணை இயக்குனரும் ஒளிப்பதிவாளரும், புரடக்ஷன் மேனேஜரும் கிளம்புவார்கள் லொகேஷன் பார்க்க. கதைக்கு தேவையான இடங்களை வீடியோவில் பதிவு செய்துவிட்டு வருவது இவர்களின் முதல் வேலை.

கதாநாயகன், கதாநாயகி இருவருக்கும் டைரக்டரே கதை சொல்லிவிடுவார். ஆனால் படத்தில் நடிக்கும் மற்றவர்களுக்கு கதை சொல்வது அநேகமாக இவர்களாகதான் இருக்கும். படத்தில் வரப்போகும் சின்ன சின்ன கேரக்டர்களுக்கு நடிகர் நடிகைகளை தேர்வு செய்வதும் இணை இயக்குனர்தான்.

இந்த இடத்தில் ஒரு சம்பவத்தை சொன்னால் உங்களுக்கு நன்றாக புரியும். ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் பாரதிராஜாவுடன் இணை இயக்குனராக பணியாற்றினார் பாக்யராஜ். அதோடு வசனம் எழுதுகிற பொறுப்பும் இவருக்குதான். அந்த நேரத்தில் வாய்ப்பு கேட்டு தினந்தோறும் இவரை நச்சரிப்பாராம் நடிகர் விஜயன். அப்போது ஒரு சீனில் எப்படியாவது தலைகாட்ட வைக்கிறேன் என்று உத்தரவாதம் கொடுத்திருந்தார் பாக்யராஜ். ஒவ்வொரு நாளும் விஜயன் இவரை சந்திக்க வருவதும், ‘சார் என்னை மறந்திராதீங்க’ என்று கெஞ்சுவதும் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

விஜயனுக்கு நேரம் நல்ல நேரம் போலும். தன்னையறியாமல் அந்த கேரக்டரை கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்திக் கொண்டே வந்த பாக்யராஜ், ஒரு கட்டத்தில் க்ளைமாக்சையே விஜயனின் கேரக்டர் தீர்மானிக்கிற மாதிரி கதையை அமைத்துவிட்டார். அதுமட்டுமல்ல, இவரது தியாகத்தை தொடர்ந்து காதலர்கள் இணைகிற மாதிரியும் காட்சியை அமைத்துவிட்டார். ஒரு காட்சியில் தலை காட்டலாம் என்று வந்த விஜயன் அப்படத்தின் செகண்ட் ஹீரோ அளவுக்கு வளர்ந்தார். காரணம் பாக்யராஜ் என்ற இணை இயக்குனர் உருவாக்கிய ஸ்கிரிப்ட். ‘என்னய்யா, இந்த கேரக்டரை இவ்வளவு பெரிசா கொண்டாந்துட்டே’ என்று பாரதிராஜாவே அலுத்துக் கொள்கிற மாதிரி அமைந்தது சூழ்நிலை. அப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜயன் பெரிய நடிகராக வளர்ந்ததும், ஏராளமான படங்களில் கதாநாயகனாகவே நடித்தார் என்பதும் எத்தனை சுவாரஸ்யமான செய்தி.

ஷுட்டிங்குக்கு தேவையான பிரேக் டவுன் போடுவதும் இந்த இணை இயக்குனரின் பணிகளில் ஒன்று. அதென்ன பிரேக் டவுன்? நடிகர் நடிகைகள் படத்திற்கு கொடுத்திருக்கும் தேதிகளை எப்படி சரியாக பயன்படுத்துவது என்பதுதான் இந்த பிரேக் டவுன். ஒவ்வொரு ஷெட்யூலுக்கும் எந்த காட்சிகளை எடுக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்யும் சின்ன கணக்கீடுதான் இது. முதலில் க்ளைமாக்ஸ் கூட எடுக்கப்படலாம். அல்லது க்ளைமாக்சில் வரும் கடைசி ஷாட்டை கூட முதலில் எடுக்கலாம். தனித்தனியாக பிரித்துக் கொள்வதுதான் இந்த முறை.

இந்த இணை இயக்குனருக்கு உதவி இயக்குனர்கள் மத்தியில் எந்தளவுக்கு மரியாதை கிடைக்கும். ஒரு இயக்குனருக்கு எந்தளவுக்கு மரியாதை தரப்படுமோ, அந்தளவுக்கு! சில நேரங்களில் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் கருத்து வேறுபாடுகள் எழலாம். (அதென்ன …லாம்? கண்டிப்பாக எழும். அப்போதெல்லாம் இடையில் நுழைந்து சமாதானக் கொடியை பறக்க விடுவதும் இவரது தலையாயப் பணிதான்)

இதற்கு உதாரணமாக நான் என் நண்பர்கள் உதவியுடன் தயாரித்த ‘கிழக்கு கடற்கரை சாலை’ படத்தையும், அதன் இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லிக்கும் எனக்குமான சண்டை சலசலப்பு நேரங்களில் நடுவில் புகுந்து சமாதான கொடியை பறக்கவிட்ட இணை இயக்குனர் சேகர் பற்றியும் கூட சொல்லலாம். இந்த சொந்த கதை, நொந்த கதையை மிக சொற்பமான வரிகளில் முடித்துக் கொள்கிறேன். விட்டால், நான் எழுதிக் கொண்டேயிருப்பேன். அவ்வளவு இருக்கிறது அந்த படத்தின் பின்னணியில் நடந்த இடிபாடு கடிபாடு செய்திகள்.

‘மெர்க்குரி பூக்கள்’ வெளிவருவதற்கு முன்பே நண்பர் முத்துராமலிங்கம் (இப்போது சினேகாவின் காதலர்கள் படத்தின் இயக்குனர்) வற்புறுத்தலால் இவரை இயக்குனராக ஒப்பந்தம் செய்தோம். அப்போதெல்லாம் அவரிடம் கதை கூட கேட்கவில்லை. ‘ஹீரோவுக்கு கதை பிடிச்சுருக்கு. அது போதுமே’ என்று கூறியே உள்ளே வந்தார் ஸ்டான்லி. இருந்தாலும் கதை கேட்காமல் ஷுட்டிங் இல்லை என்ற முடிவில் தெளிவாக இருந்தேன் நான். ஷுட்டிங் போவதற்கு ஒரு பத்து நாளைக்கு முன்புதான் கதையே சொன்னார் அவர். பதறிப்போன நான், ‘இந்த கதையும் வேணாம், டைரக்டரும் வேணாம்’ என்று முடிவெடுத்து அதை செயல்படுத்த துடியாய் துடித்தேன். காலம் என்னை ஓரமாக தள்ளிவிட்டு ஸ்டான்லிக்கு சாதகமாக நின்றது. அந்த உருப்படாத கதையோடுதான் ஷுட்டிங் போனோம்.

ஒரு வாரம் வரைக்கும் நிம்மதியாக போன ஷுட்டிங், எட்டாவது நாளிலிருந்தே இம்சிக்க துவங்கியது. பொதுவாக பூனை மாதிரி தயாரிப்பாளரை அணுகும் இயக்குனர்கள் (எல்லாரும் அல்ல, ஒரு சிலர் மட்டும்) தயாரிப்பாளர் பாதி பணத்தை இறக்கிவிட்டார் என்று தெரிய வந்ததும் புலியாய் ஆட ஆரம்பிப்பார்கள். அதற்கப்புறம் அவர் பின்வாங்க முடியாதே? அந்த திமிரில். ஸ்டான்லியும் அப்படிதான் ஆடினார்.

இது தொடர்பாக பல புகார் கடிதங்களை நான் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அனுப்பினேன். இடையில் சில நாட்கள் ஷுட்டிங்கே நின்று போனது. அப்போதெல்லாம் இந்த சேகர்தான் வந்து வந்து பேசுவார். எப்படியாவது இருவருக்கும் நடுவில் பச்சைக்கொடியை பறக்கவிட படாத பாடு படுவார். எப்படியோ அந்த படத்தை முடித்தோம். அந்த பட நேரத்திலும் அதற்கப்புறம் நான் பெற்ற அனுபவங்களையும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பதிவு செய்வேன். இப்போதைக்கு இது போதும். நான் சொல்ல வந்தது இணை இயக்குனரின் எக்ஸ்ட்ரா வேலைகளில் முக்கியமான வேலையான இந்த தகராறு படலத்தை பற்றிதான். சரி… கட்டுரையின் அடுத்த கட்டத்திற்கு போவோம்…

ஸ்கிரிப்ட் அசிஸ்டென்ட்-

தமிழ்சினிமாவில் மட்டுமல்ல, எல்லா மொழி படங்களிலும் கதை விவாதம் என்ற ஒரு விஷயம் நடைபெறும். இயக்குனரின் மனதில் இருக்கிற கதையை ஒரு குழுவாக அமர்ந்து விரிவு செய்வது. இதைதான் ஸ்டோரி டிஸ்கஷன் என்று சுருக்கமாக அழைக்கிறோம்.

இப்படி உருவான ஒரு கதையை ஒன் லைன் என்று சொல்லக்கூடிய ஒரு வரிப் பகுதிகளாக பிரித்துக் கொள்வார் இயக்குனர். மொத்தம் 70 வரிகளாக அந்த கதை பிரிக்கப்படும். மணிரத்னம் 60 வரிகளாக பிரித்துக் கொள்வாராம். அதற்கு மேல் போகக் கூடாது என்பது அவரது பாணி.

இப்படி உருவான ஒரு வரிக்கதை பல பிரிண்டுகள் எடுக்கப்பட்டு உதவி இயக்குனர்களுக்கு ஆளுக்கொரு பிரதி வழங்கப்படும். இதை படித்துவிட்டு தங்கள் கருத்துகளை எழுத்து வடிவத்தில் டைரக்டரிடம் இந்த உதவி இயக்குனர்கள் அளிப்பார்கள். அதன்பிறகுதான் இந்த கதைக்கு திரைக்கதை எழுத உட்காருவார் டைரக்டர். (இப்போது பல இயக்குனர்கள் ஒன் மேன் ஷோ என்பது போல எங்காவது மலையடிவாரத்திலோ, குளுகுளு பிரதேசத்திலோ போய் உட்கார்ந்து முழுசாக எழுதியே கொண்டு வந்து விடுகிறார்கள்)

வசனத்தை பிறர் எழுதுகிற சவுகர்யமும் இருக்கிறது. ஆனால் பல இயக்குனர்கள் அதையும் அவர்களே செய்துவிடுகிறார்கள். சரி… இதில் ஸ்கிரிப்ட் அசிஸ்டென்டுகளின் வேலை என்ன?

திரைக்கதையை எழுதிய பின் படப்பிடிப்புக்கு போகும் இயக்குனர் அங்கு போய் சில மாற்றங்களை செய்வார் அல்லவா? அங்கு அவர் ஸ்கிரிப்டில் செய்யும் மாற்றங்களை இவர் உடனுக்குடன் பதிவு செய்து கொள்ள வேண்டும். வசனத்தை வேறொரு எழுத்தாளர் எழுதுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த வசனகர்த்தாவோடு இணைந்து பணியாற்றுவதும் இவரது வேலை. சில எழுத்தாளர்கள் முழு வசனத்தையும் கொடுக்காமல் சிறிய சிறிய பகுதிகளாக கொடுப்பார்கள். அப்போதெல்லாம் நேரில் சென்றோ, தொலைபேசி வழியாகவோ குறிப்பிட்ட பகுதிகளை வாங்கி எழுதிக் கொள்வதும் இவரது வேலை.

கொஞ்சம் பெரிய எழுத்தாளர்கள் என்றால் ஸ்கிரிப்ட் அசிஸ்டென்ட் பாடு திண்டாட்டம்தான். அவர் வாயால் சொல்ல சொல்ல இவரேதான் எழுத வேண்டும். வசனகர்த்தாவோடு முடியாது இவர்களின் பணி. பாடலாசிரியர்கள் முழு பாடலையும் கொடுக்காமல் இழுத்தடிப்பதும் நடக்கும். அப்போது வரி வரியாக பாடல்களை வாங்கி சென்று இசையமைப்பாளரிடம் சேர்ப்பதும் இவரது வேலை.

ஒருவழியாக படப்பிடிப்புக்கு சென்றால், அங்கே மானிட்டர் (படப்பிடிப்பு நடப்பதை காட்டும் டிவி) பக்கத்திலேயே அமர்ந்திருப்பார் இவர். கேரக்டர்கள் பேசுகிற வசனங்களை குறித்துக் கொள்வார்.

கடைசியில் படம் முடிந்து எடிட்டிங் நடந்து முதல் பிரதி தயாரான பின்பும் இவரது பணி ஓயாது. முழு படத்தையும் பார்த்து ஸ்கிரிப்ட் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். மற்ற உதவி இயக்குனர்களுடன் ஒப்பிடும்போது இவருக்கு வேலை குறைவு என்பதாலோ என்னவோ, பல நேரங்களில் எடுபிடியாகவும் பயன்படுத்திக் கொள்வார்கள் இவரை.

சும்மாதானே இருக்கீங்க. போய் ஹீரோ, ஹீரோயினை ரூம்லேர்ந்து பிக்கப் பண்ணிட்டு வாங்க என்று அனுப்பி விடுகிற கொடுமையும் நடக்கும். படம் பிடிக்கப்பட்ட பிலிம் கேன்களை சுமந்து சென்று பொறுப்பாக வைக்க வேண்டும் இவர். சில நேரங்களில் திடீர் அதிர்ஷ்டம் கூட அடிக்கும். எங்காவது வட மாநிலங்களில் படப்பிடிப்பு நடக்கும்போது இந்த பிலிம் கேன்களை இவர் வசம் ஒப்படைத்து விமானத்தில் அனுப்பி வைப்பார்கள். அதை விமான நிலையத்தில் ஸ்கேன் செய்துவிடாமல் லேப்பில் கொண்டு வந்து சேர்க்கிற பெரும் பொறுப்பையும் சுமப்பார் இவர்.

(தொடர்ந்து கூப்பிடுவேன்…)

எச்சரிக்கை – இந்த கட்டுரையும் இனி வரப்போகும் கட்டுரையின் சாராம்சங்களும் தமிழ்சினிமா கலைஞர்களிடமிருந்து திரட்டப்பட்டவையே. இதில் ஏதேனும் திருத்தங்கள் மற்றும் கருத்து மாறுபாடுகள் இருப்பின் anthananpro@gmail.com ல் தெரிவிக்கவும். ஏற்புடையதெனில் திருத்திக் கொள்கிறேன். நன்றி

எச்சரிக்கை 2 – இந்த கட்டுரையை என் அனுமதியின்றி யாரும் மறு பிரசுரம் செய்யவோ, வெளியிடவோ அனுமதியில்லை.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘ தல ’ வெயிட்டா இருக்கக் கூடாது! அவார்டு விழாவில் அஜீத்தை சீண்டிய விஜய்

தெரிந்தோ தெரியாமலோ அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வியை எழுப்பி, அவர் விஜய்தான் என்ற முடிவையும் கொடுத்தது பிரபல வார இதழான குமுதம். இதையடுத்து நாடு...

Close