கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் 13 -ஆர்.எஸ்.அந்தணன் – நண்பர்களுக்காக தோசை கடத்திய கவுண்டமணி

மிகப்பெரிய ஹீரோ ஒருவரிடம் முதல் படத்திலேயே துண்டு போட்டு இடம் பிடித்த ஒரு உதவி இயக்குனர், பின்னாளில் அதே ஹீரோவை வைத்து தன் முதல் படத்தை எடுத்தார், அவர் யார்? கால்ஷீட் கொடுத்த ஹீரோ யார்? அடுத்த வாரம் சொல்வேன்… என்று கூறியிருந்தேனல்லவா?

இதோ- அவரைப்பற்றி… மறைந்துவிட்ட இயக்குனர் திருப்பதிசாமிதான் அவர். தமிழில் விஜயகாந்த் நடித்த ‘நரசிம்மா’ படத்தின் இயக்குனர். அந்த படம் தயாரிப்பில் இருக்கும் போதே கார் விபத்தில் மாண்டுபோனார்.

ஜுனியர் விகடனில் நிருபராக பணியாற்றி வந்தவர், அதற்கப்புறம் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு தெலுங்கு நன்றாக தெரியும். அவரது அதிர்ஷ்டம், சுரேஷ்கிருஷ்ணா இயக்கிய தெலுங்கு படம் ஒன்றிலேயே பணியாற்றும் வாய்ப்பு முதல் வாய்ப்பாக அமைந்தது. படத்தின் பெயர் ‘தர்ம சக்கரம்’. தெலுங்கு படவுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான வெங்கடேஷ்தான் ஹீரோ. படப்பிடிப்பின் முதல் நாள்.

பொதுவாக வேலைக்கு சேரும் உதவி இயக்குனர்கள் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், கடைசி அசிஸ்டென்ட் என்றுதான் கருதப்படுவார். அவரது பொறுப்பான வேலைகளில் ஒன்று ஷாட் ரெடியாகிற நேரத்தில் கேரவேனிலோ, அறையிலோ அமர்ந்திருக்கும் ஹீரோவிடம், சார்… ஷாட்டுக்கு போகலாம் என்று கூறி அழைத்து வருவது.

அப்படிதான் இவரை வெங்கடேஷை அழைப்பதற்காக அனுப்பி வைத்தார் சுரேஷ்கிருஷ்ணா. இவர் கதவை தட்டி அறைக்குள் போனதும் பேசிய முதல் வார்த்தைகள், ‘சார்… எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். நான் இந்த படத்தின் அசிஸ்டென்ட் டைரக்டர். இன்னைக்குதான் வேலைக்கு சேர்ந்திருக்கிறேன். இருந்தாலும் கேட்டுடறேன்… நான் சுரேஷ்கிருஷ்ணா சாரிடம் நாலைஞ்சு படங்கள் வொர்க் பண்ணிட்டு உங்ககிட்ட வருவேன். நீங்க கதை கேட்கணும் சார். பிடிச்சிருந்தா கால்ஷீட் கொடுங்க. இப்பவே உங்களை நான் ரிசர்வ் பண்ணி வச்சுட்டேன்’ என்றார் சரளமான தெலுங்கில்.

வெங்கடேஷின் சினிமாவுலக அனுபவத்தில் இப்படியொரு அப்ரோச்சை எந்த உதவி இயக்குனரும் செய்ததில்லை. அதுவும் வேலைக்கு வந்து முதல் நாளே! ஆனால் திருப்பதிசாமியின் தோற்றமும், அந்த கான்ஃபிடன்ட்டும், வார்த்தைகளில் இருந்த தெளிவும் பிடித்துப் போனது. முதுகில் தட்டிக் கொடுத்து, ‘உன் பெயரென்ன?’ என்றார். அதற்கப்புறம் அந்த படம் முடிகிற வரைக்கும், இந்த அப்ரண்டிஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி வேலை செய்கிறார் என்பதை அவதானித்துக் கொண்டேயிருந்தாராம்.

சொன்ன மாதிரி நாலைந்து படங்களில் பணியாற்றி முடித்துவிட்டு வெங்கடேஷிடம், டாண் என்று போய் நின்றார் திருப்பதிசாமி. ‘சார் என்னை ஞாபகம் இருக்கா? உங்ககிட்ட தர்மசக்கரம் ஷுட்டிங்கில் சொல்லி வைச்சுருந்தேனே…’ என்று தன்னை அறிமுகம் செய்துவிட்டு கதை சொல்லவும் நேரம் வாங்கினார். என்ன ஆச்சர்யம்? திருப்பதிசாமியின் முதல் படமான ‘கணேஷ்’ படத்தில் வெங்கடேஷ்தான் ஹீரோ. அந்த படம் தெலுங்கில் ஏழு நந்தி அவார்டுகளை வாங்கியது. தமிழில் வெளிவந்த ‘வேலாயுதம்’ படத்தில் பாதி போர்ஷன் இந்த படத்திலிருந்து உருவப்பட்டதுதான்.

அதற்கப்புறம் தமிழில் விஜய்யிடம் கதை சொல்லி, ‘வேலா’ என்ற பெயரில் ஒரு படத்தையும் துவங்கினார்கள். அதற்குள்தான் காலம் அவரை கொண்டுபோய் விட்டதே? இந்த ‘வேலா’ பட டிஸ்கஷனில் இருந்தவர்தான் இன்றைய பிரபல இயக்குனர் தரணி. இதை தொடர்ந்து ஒரு அதிர்ச்சியான அதே நேரத்தில் கவலைப்பட வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. அது இந்த கட்டுரை தொடருக்கு சம்பந்தம் இல்லாதது என்பதால் ‘விட்டுத்தள்ளுக….’

கடந்த எபிசோடில் நான் எழுதியிருந்த ‘இணை இயக்குனர்- பிரியாணி பொட்டலம்’ விஷயம், பல உதவி இயக்குனர்களையும் நமது வாசகர்களையும் முணுமுணுக்க வைத்திருப்பதை அறிகிறேன். சிலர் நேரடியாகவே போன் செய்து, ‘அந்த பிரியாணி பொட்டலம் விஷயத்தை எழுதியிருக்க வேண்டுமா?’ என்றார்கள் என்னிடம். நான் சொல்ல வந்தது பசியோ, ருசியோ பற்றிய விஷயமல்ல, ‘பிஹேவியர்…’! எல்லா இடங்களிலும் நம்மை உயர்த்தி விடுவதும் அதுவே, குப்புறத் தள்ளுவதும் அதுவே.

இந்த கட்டுரையில் நான் எழுதி வரும் எல்லா தகவல்களும், கிராமத்திலிருந்தோ, அல்லது சென்னையில் எவ்வித பின்புலமும் இல்லாமல் சினிமாவில் வெற்றிபெற போராடுபவர்களுக்கோவான ஒரு சின்ன வழி காட்டுதல்தானே தவிர, யாரையும் நோகடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமைந்தது அல்ல. இன்னும் சொல்லப் போனால், ‘உதவி இயக்குனர்களின் அவல வாழ்க்கை’ என்ற தலைப்பிலேயே கூட ஒரு புத்தகம் போடலாம். அவ்வளவு இருக்கிறது இங்கே. அவற்றில் சிலவற்றை சொல்லிவிட்டு அதற்கப்புறம் போகலாம் முக்கியமான ஏரியாவுக்கு. வேடிக்கை என்னவென்றால், வறுமை என்ற சிங்கத்தின் கடியில் சிக்கினாலும், தப்பித்து வந்து சிம்மாசனத்தை பிடித்தவர்களின் கதையும் இருக்கிறது இதில்.

சென்னையில் உதவி இயக்குனர்களின் அவல வாழ்க்கை

ஒரு உதவி இயக்குனருக்கு தீராத வயிற்று வலி. தானாக சரியாகிவிடும் என்று பொறுத்திருந்தவர், வலியின் உச்சகட்டத்தில் மருத்துவரிடம் போனார். அவர் சில மாத்திரைகளை எழுதி, இதை ரெண்டு நாள் தொடர்ந்து சாப்பிடுங்க. சரியாகிவிடும் என்றார். இரண்டு நாட்கள் கழிந்தது. ம்ஹும். வலி தீர்ந்தபாடில்லை. மறுபடியும் டாக்டரிடம் ஓடோடி வந்தார் உதவி இயக்குனர். அவர் ஏதேதோ டெஸ்ட்டுகளை எழுதிக் கொடுத்தார். எப்படியோ, யார் புண்ணியத்திலோ அந்த டெஸ்ட்டுகளையெல்லாம் எடுத்துக்கொண்டு ரிசல்டுக்காக மறுபடியும் டாக்டரிடம் வந்தார் உதவி இயக்குனர். எல்லாவற்றையும் ஆராய்ந்த மருத்துவர், “தம்பி நீங்க என்ன தொழில் செய்யறீங்க?” என்றார். “சார் நான் அசிஸ்டென்ட் டைரக்டரா இருக்கேன்” என்றார் உதவி.

“என்ன தம்பி. இதை முன்னாடியே சொல்லக் கூடாதா? இந்தாங்க. இதுல நு£று ரூபா இருக்கு. போயி சரவணபவன்ல வயிறார சாப்பிட்டு வாங்க. எல்லாம் சரியாயிரும்” என்றார் மருத்துவர்.

செரிக்கவே செரிக்காத எத்தனையோ நிஜங்களில் இதுவும் ஒன்று. படப்பிடிப்பு தினங்களில் மட்டும் வயிறார சாப்பிடும் இவர்கள் படப்பிடிப்பு இல்லாத காலங்களில் படுகிற பாடு பெரும் பாடு. உதவி இயக்குனராக சேர்வதற்கே பல ஆண்டுகள் ஆகிவிடும் சிலருக்கு. ஊரிலிருந்து ஏதோ ஒரு நம்பிக்கையில் சென்னைக்கு வந்திருப்பார்கள். முதலில் வேறு வேலை பார்க்க பிடிக்காமல் தொடர்ந்து கோடம்பாக்கத்தில் சுற்றி வரும் இவர்களை பார்த்தவுடனே அறிந்து கொள்வது அவ்வளவு கஷ்டமான காரியம் அல்ல. இப்படி வந்த நு£ற்றுக்கணக்கான உதவி இயக்குனர்கள் காலம் தந்த படிப்பினையால் வீடு புரோக்கர்களாகவும், கல்யாண வீட்டில் பந்தி பரிமாறுகிறவர்களாகவும் மாறிவிட்டார்கள். இத்தனைக்கும் நடுவிலேயும் சினிமா கனவு மட்டும் அவர்களை இன்னும் துரத்தி வருவது பரிதாபமான உண்மை.

இன்று பிரபலமாக இருக்கும் டைரக்டர் ஒருவரின் நண்பர் செந்தமிழன். இவரும் சிந்து நதிப்பூ, பீஷ்மர், பயமில்லை ஜெயமுண்டு என்ற சில படங்களை இயக்கியவர்தான். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்த பிரபல இயக்குனரும் இவரும் டைரக்டர் பவித்ரனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்து வந்தார்கள். படப்பிடிப்பு இருந்தால் சாப்பாடு. இல்லையென்றால் படப்பிடிப்பு நடைபெறும் காலங்களில் வருகிற பேட்டாவை சேர்த்து வைத்து அடுத்த ஷூட்டிங் வரை அதில் வாழ்க்கை ஓடும். இந்த சேமிப்பை வைத்துக் கொண்டு மூன்று வேளை சாப்பாடு சிக்கல் என்பதால் மதியம் ஒரு வேளை மட்டும் சாப்பிடுவார்களாம்.

இவர்களை தொடர்ந்து கவனித்து வந்த பக்கத்து ரூம் நண்பருக்கு இவர்கள் மேல் பரிதாபத்தின் மேல் பரிதாபம். தனது சைக்கிளையும் கொடுத்து இரண்டு அன் லிமிட்டடு மீல்சுக்கான பணத்தையும் கொடுத்து அனுப்பி வைத்தார் சாப்பிட. வடபழனியில் இப்போது அமைந்துள்ள ஓட்டல் சரவணபவனுக்கு எதிரில் இருக்கிற குமர பிரசாத் என்ற ஓட்டல் அன்றைய தினங்களில் ரொம்ப ஃபேமஸ். வாசலில் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே போனார்கள் இருவரும். மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டு திரும்பி வந்தால் சைக்கிளை காணவில்லை. அந்த காலத்தில் நு£தனமான முறையில் திருடுகிற சைக்கிள் திருடர்கள் இருந்தார்கள். பூட்டப்பட்டிருந்தாலும் பின் சக்கத்திற்கு கீழே ஒரு வீல் கட்டையை வைத்து தள்ளிச் சென்று விடுவார்களாம். அந்த நு£தன ஆசாமிகள்தான் இவர்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டார்கள்.

பக்கத்து ரூம் நண்பர் சொன்ன வார்த்தை இப்போதும் ஞாபகத்திலிருக்கிறது என்கிறார் செந்தமிழன். “நீங்க தரித்திரம் புடிச்சவங்கடா. உங்களுக்கு போய் இரக்கப்பட்டேன் பாரு….”

இன்று பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கிறார் அந்த டைரக்டர். இந்தியாவிலேயே விலை உயர்ந்த கார்களில் ஒன்று அவர் பயன்படுத்துவது. ஆனால் அந்த நேரத்தில் இழந்த சைக்கிளை இப்போது தேடினாலும் கிடைக்காதல்லவா? ‘அந்த பிரபல டைரக்டர் யார் என்று சொல்லிவிடுவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், இன்று அவர் இருக்கிற உயரம் வேறு. அவர் விருப்பம் இல்லாமல் அவரது பெயரை சொல்வது அவ்வளவு நாகரீகம் இல்லை’ என்கிறார் செந்தமிழன்.

இன்னொரு பிளாஷ்பேக் இது. பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், கவுண்டமணி ஆகியோர் வாய்ப்புக்காக அலைந்த காலங்களில் ஒன்றாகதான் தங்கியிருந்தார்கள். நாள் முழுக்க பட்டினி என்பதுதான் அவர்களின் சராசரி மெனு. இதில் கவுண்டர் மட்டும் கெட்டி. ஒரு ஹோட்டலில் சரக்கு மாஸ்டராக வேலைக்கு சேர்ந்துவிட்டார். நாடகமோ, சினிமாவோ கிடைத்தால் அன்றைக்கு லீவு போட்டுவிடுவாராம். வேலை பார்க்கும்போது எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் பார்சல் மட்டும் கூடாது.

ரூமில் பட்டினி கிடக்கும் நண்பர்களுக்காக ஒரு காரியம் செய்வாராம் கவுண்டர். வேலை முடிந்து வீட்டுக்கு கிளம்பும்போது, தோசையை மெல்லிசாக பார்சல் செய்து வயிற்றில் கட்டிக் கொள்வாராம். அதன்மேல் வேட்டியை இறுக்கமாக கட்டிக் கொண்டு தோசை கடத்தல் செய்வாராம். எல்லாம் தன் தோழர்களுக்காக.

இன்று நிலைமை தேவலாம். பட்டினி சதவீதம் குறைந்திருக்கிறது. அதற்கு காரணம் யார் தெரியுமா?

(தொடர்ந்து கூப்பிடுவேன்…)

எச்சரிக்கை – இந்த கட்டுரையும் இனி வரப்போகும் கட்டுரையின் சாராம்சங்களும் தமிழ்சினிமா கலைஞர்களிடமிருந்து திரட்டப்பட்டவையே. இதில் ஏதேனும் திருத்தங்கள் மற்றும் கருத்து மாறுபாடுகள் இருப்பின் anthananpro@gmail.com ல் தெரிவிக்கவும். ஏற்புடையதெனில் திருத்திக் கொள்கிறேன். நன்றி

எச்சரிக்கை 2 – இந்த கட்டுரையை என் அனுமதியின்றி யாரும் மறு பிரசுரம் செய்யவோ, வெளியிடவோ அனுமதியில்லை.

1 Comment
  1. KABILAN says

    சந்தேகமே இல்ல அந்தணன் அது அம்மா உணவகம் தான்.. தற்போதைய உதவிஇயக்குனர்களின் மறுவீடு….

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஹீரோயின் விஷயத்தில் தில்லுமுல்லு? ஷுட்டிங்கையே கேன்சல் செய்த இயக்குனர்

சிவி.குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘சரபம்’. விளம்பர செலவு, தயாரிப்பு செலவு, தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்கான செலவு என்று சுமார் பத்து கோடியை விழுங்கிய அந்த...

Close