கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 03 ஆர்.எஸ்.அந்தணன் -விஷால் நெற்றியில் வைக்கப்பட்ட நிஜ துப்பாக்கி!

நேற்று ஒரு உதவி இயக்குனரை பார்த்தேன். அநேகமாக தமிழ்சினிமாவில் எல்லா முக்கிய இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக வேலை பார்த்திருக்கிறார். தனியாக ஒரு படம் இயக்கலாமே என்கிற முடிவில் பிய்த்துக் கொண்டு கிளம்பிவிட்டார். சிறகுகளுக்கு இருக்கிற வலிமை மகத்தானது. ஆனால் அதையும் தானாக ஒடிய வைக்கிற இடம்தான் இந்த முள்வேலி நீண்டிருக்கும் கோடம்பாக்கம். வந்தவர் வந்த நிமிடத்திலிருந்தே ஒரு மேனேஜரை சந்திக்க முயன்று வருகிறாராம். வேறெதற்கு? மேனேஜர்கள் மனசு வைத்தால்தான் ஹீரோக்களை சந்திக்க முடியும். ஹீரோக்கள் சம்மதம் சொன்னாலொழிய இங்கே முன்னணி நிறுவனங்களின் கதவுகள் திறக்காது. அதனால்தான்.

ஆனால் மேனேஜர் எப்போது போன் செய்தாலும், ‘ஏன்யா உனக்கு எத்தனை தடவ சொல்றது? நேரமில்லன்னா கேட்க மாட்டே?’ என்று எரிந்து விழுகிறாராம். ‘சார்…உங்களுக்குதான் அவரை தெரியுமே, கொஞ்சம் சொல்லுங்க’ என்றார். மேனேஜர்களையும் சொல்லி குற்றமில்லை. ஒரு ஹீரோ வருஷத்திற்கு ஆறு படம்தான் நடிக்க முடியும். அதற்கு மேல் நடிக்க வேண்டும் என்றால், அது பாக்ஸ் ஆபிஸ் படமாக இருக்காது. வெறும் பாக்சில் வைத்து சாம்பிராணி போடுகிற வகை படமாகதான் இருக்கும். இன்றைய போட்டியுலகத்தில் ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடல் முக்கியம். வதவதவென படங்களில் நடிக்கும் போது அது நடக்காது.

கோடம்பாக்கத்தில் சுமார் இரண்டாயிரம் உதவி இயக்குனர்களாவது இருப்பார்கள். இவர்களது ஒரே முயற்சி யாராவது முன்னணி ஹீரோக்களிடம் கதை சொல்ல வேண்டும் என்பதாகதான் இருக்கும். அப்படி கணக்கு போட்டால், ஒவ்வொரு நடிகரின் மேனேஜரையும் தினமும் முப்பது அல்லது நாற்பது பேராவது போன் செய்தோ, நேரில் வந்தோ தொல்லை கொடுத்துக் கொண்டேதான் இருப்பார்கள். நாளொரு கதைக்கு மேல் கேட்கிற வலிமை எந்த ஹீரோவுக்கும் இருப்பதில்லை. அட ஒரு குழுவை போட்டு கதை கேட்க வைக்கிறார் என்றே வைத்துக் கொண்டாலும், தினமும் இரண்டு கதைகளுக்கு மேல் கேட்டால், தலை கிறுகிறுக்கும்.

முன்னணி பின்னணி நடுவினி என்றிருக்கும் சுமார் பதினைந்து ஹீரோக்களை இந்த இரண்டாயிரம் உதவி இயக்குனர்களும் விரட்டுவதாக கற்பனை செய்து பாருங்களேன். மேனேஜர் எரிந்து விழுந்ததில் தவறில்லை என்று தோன்றும். அப்படியிருந்தும் பாய்ந்து சென்று விதையாக விழுந்து, மரமாக முளைப்பதுதான் சாதனை. இன்று நல்ல படமோ, ஓடாத படமோ, உப்புமா படமோ, படம் இயக்குகிற அத்தனை பேரும் சாம்பியன்கள்தான்.

சரி… கடந்த வாரம் விட்ட விஷயத்திலிருந்து தொடர ஆரம்பிப்போமா?

கடந்த வாரம் ஒரு உதவி இயக்குனர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்லியிருந்தேன். ஒரு உதவி இயக்குனர் எவ்வளவு சமயோஜிதமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான உதாரணம்தான் நான் அடுத்து சொல்லப்போவது.

விஷால், நயன்தாரா நடித்து ராஜசேகர் இயக்கிய படம் சத்யம். படப்பிடிப்பில் நடந்த வேடிக்கையான சம்பவம் இது. நேப்பியர் பாலம் அருகே விடியற்காலையில் கூடியது யூனிட். சன் ரைஸ் ஷாட் அது. சூரியன் மேலெழும்பி வருவதற்குள் ஒரு சண்டைக்கான முன்னோட்டத்தை எடுத்து முடித்திருந்தார்கள். அதற்குள் வெளிச்சம் தனது அடர்த்தியை அதிகப்படுத்த, மீதி காட்சியை சூரியன் அடங்குகிற நேரத்தில் எடுத்து, விடியற்காலை காட்சியாக மேட்ச் செய்து கொள்ளலாம் என்பது ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகரின் ஐடியா.

மாலை நேரம். திட்டமிட்டபடி சுமார் எண்பது பேர் கொண்ட படப்பிடிப்புக்குழு கோவளம் பீச்சில் கூடியது. கதைப்படி வில்லன் தனது துப்பாக்கியை விஷால் நெற்றியில் வைக்க வேண்டும். ஸ்கிரிப்ட் பேப்பரில் எழுதியிருப்பது போல கடலின் சில அடி து£ரத்தில் அமைந்துள்ள குட்டிப்பாறை ஒன்றில் நின்று கொண்டார் விஷால். அவரது நெற்றியில் துப்பாக்கியை வைக்க வேண்டிய வில்லனும் தயார். மணி ஐந்தரைக்கு வந்ததும் கேமிராவை ஓடவிடலாம் என்பது ஒளிப்பதிவாளரின் முடிவு.

சரியாக ஐந்தரை. ஓ.கே என்பது போல டைரக்டரும் சைகை காட்ட, துப்பாக்கிய கொடுங்க சார் என்றார் வில்லன். அப்போதுதான் தெரிந்தது. முக்கிய பிராப்பர்ட்டியான துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வரவேயில்லை யாரும்! ஆர்ட் டிபார்ட்மென்ட் பொறுப்பை கவனிக்கும் உதவி இயக்குனர், அங்கிருந்தால் அடி விழும் என்று நினைத்தாரோ என்னவோ, கண்ணிமைக்கும் நேரத்தில் எஸ்கேப். (இது போன்ற இக்கட்டான நேரத்தில் சம்பந்தப்பட்ட பொறுப்பை கவனிக்கும் உதவி இயக்குனர் ஓடிவிடுவது சினிமா வழக்கம். கோபம் அடங்கிய பின் குட்டிப்பூனை மாதிரி நைசாக வந்து யூனிட்டில் இணைந்து கொள்வார்)

படத்தின் ஹீரோ மட்டுமல்ல, தயாரிப்பாளரும் விஷால் என்பதால் அவரது கண்களில் பொறி பறக்கிறது. “என்ன சார் வேலை பார்க்கிறீங்க” என்று அத்தனை பேரையும் காய்ச்ச, மின்னலாக ஒரு வேலை செய்தார் அசோசியேட் இயக்குனர்.

சூரியன் மறையும் இந்த அரை மணி நேரத்திற்குள் இந்த காட்சியை எடுக்கவில்லை என்றால், இதற்காக மறுநாளும் இதே யூனிட், இதே இடத்தில் கூட வேண்டும். செலவு நிச்சயம் ஒரு லட்சத்திற்கு குறையாமல் ஆகும். (இந்த தொகை அப்போதைய கணக்கு. இப்போது ஐந்து லகரத்தை சுளையாக எண்ணி வைக்க வேண்டும், விலைவாசி அவர்களுக்கும்தானே கூடுகிறது) தேவையா அது? கொஞ்சம் கூட கூச்சமோ, பயமோ இல்லாமல் அங்கே பாராவுக்கு வந்திருந்த காவல் துறை அதிகாரியிடம், “சார் உங்க துப்பாக்கியை கொடுத்திங்கன்னா…” என்று தயக்கத்தோடு தலையை சொறிந்தார்.

அவ்வளவுதான். கடும் கோபம் வந்தது அந்த அதிகாரிக்கு. “ஏன்யா, நீ என்ன லு£சா?” என்றார் ஆத்திரம் அடங்காமல். “மேலதிகாரிகளுக்கு தெரிஞ்சா என் வேலை போயிடும் தெரியுமா. நான் தர மாட்டேன்” என்று அந்த இடத்திலிருந்தே அகல முற்பட்டார். அவர் மீது பாய்ந்தாவது துப்பாக்கியை பிடுங்கிவிட வேண்டும் என்கிற அளவுக்கு பரபரப்பான அசோசியேட், “அண்ணே, ப்ளீஸ். அதில இருக்கிற குண்டையெல்லாம் எடுத்துட்டு கொடுங்கண்ணே. ஒரு ஐஞ்சே நிமிஷம். உங்க கையில பத்திரமா சேர்த்திர்றேன்” என்று கெஞ்ச, விஷாலும் தனது பங்குக்கு ஓடிவந்தார் அதிகாரியிடம்.

கோபத்தை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொண்ட போலீஸ் அதிகாரி, “சார். நீங்க தண்ணிக்கு மேல எடுக்கிறீங்க. தவறி தண்ணியில விழுந்திச்சின்னா என் வாழ்க்கையே போயிடும். வேணாம்” என்றார் கெஞ்சாத குறையாக. “இல்ல சார். படப்பிடிப்பு நடக்கிற இடத்துக்கு பக்கத்திலேயே நீங்களும் வந்து நின்னுக்கலாம். கடல் பகுதி என்பதால் ஏற்கனவே சில மீனவர்களையும் செக்யூரிடிக்கு வச்சிருக்கோம். துப்பாக்கி கீழே விழவே விழாது. விழுந்தாலும் எடுத்துக் கொடுக்கதான் இவங்க” என்றெல்லாம் மந்திரம் போட்டு துப்பாக்கியை கைப்பற்றினார்கள். நினைத்த மாதிரியே பத்தே நிமிடத்தில் ஷாட்டை முடித்துவிட்டு பத்திரமாக துப்பாக்கியை திருப்பிக் கொடுத்தார்கள்.

இப்போது சொல்லுங்கள், அந்த அசோசியேட் இயக்குனர் காவல் துறை அதிகாரியை அணுகி அவரது துப்பாக்கியை கேட்காமல் போயிருந்தால், மறுநாள் ஒரு லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் கூடியிருக்கும். நினைத்த மாதிரி காட்சி அமைந்திருக்குமா என்பதும் சந்தேகம்.

இம்சை அரசன் 23 ம் புலிகேசி படத்தை இயக்கிக் கொண்டிருந்த போது அப்படத்தின் இயக்குனர் சிம்புதேவனுக்கும் ஒரு மோசமான அனுபவம் நேர்ந்தது.

‘பஞ்சு மெத்தை கிளியே’ என்றொரு பாடல் அப்படத்தில் உண்டு. இதை செஞ்சி அருகே படமாக்க நினைத்திருந்தார் சிம்புதேவன். அதிகாலையில் சென்னையில் இருந்து கிளம்பி ஏழு மணிக்கெல்லாம் ஸ்பாட்டுக்கு போய்விட்டார்கள். நடிக்க வேண்டிய நடிகர் நடிகைகளும் வந்தாயிற்று. காலை டிபனை முடித்துவிட்டு லொகேஷனில் கேமிராவையும் வைத்துவிட்டார். ஷாட் வைக்கப் போகும் போதுதான் தெரிந்தது. பாடலை பதிவு செய்து வைத்திருக்கிற நாகராவை எடுத்துக் கொண்டு வரவில்லை என்பது. இந்த வேலையை கவனிக்க வேண்டிய உதவி இயக்குனர் பதறிப் போய் நிற்க, யாரை கடிந்து கொள்வது?

(இந்த நாகரா என்பது பாடல் காட்சிகளின் போது பயன்படுத்தப்படும் ஒரு வகையான ஒலிப்பதிவு கருவி. குறிப்பிட்ட வரிகளில் துவங்கி குறிப்பிட்ட வரியில் வந்து நிற்பது மாதிரி செட் செய்துவிட்டால் திரும்ப திரும்ப அதையே பாடிக் கொண்டிருக்கும்)

திரும்பி சென்னைக்கு வந்தால் அன்றைய படப்பிடிப்புக்கான செலவுகளை நஷ்டக்கணக்கில்தான் சேர்க்க முடியும். தயாரிப்பாளரிடம் படப்பிடிப்பு கேன்சல் ஆனதற்கு இப்படி ஒரு காரணத்தை  சொல்வது நாகரிகமாகவும் இருக்காது. என்ன செய்வது என்று விரல் நகத்தை கடித்து துப்பிய சிம்பு தேவனுக்கு ஒரு யோசனை வந்தது. இந்த பாடலை ஒரு டேப்பில் பதிவு செய்து வைத்திருந்தார். அதை ஒரு மைக் முன் வைத்து பாட வைத்தார். ஒவ்வொரு வரியையையும் ரிவைண்ட் செய்து செய்து படமாக்கினார். கருத்துக்கு தெரிந்தே இதில் ஒரு தவறு நிகழும். அதாவது நாகராவுக்கும் இந்த டேப் பதிவுக்கும் இரண்டு வினாடி வித்தியாசம் வரும். அதனால் எடிட்டிங்கில் பிரச்சனை ஆகும். ஆனாலும் வேறு வழியில்லாமல் அந்த படப்பிடிப்பை நடத்தி முடித்தார் அவர்.

ஒரு நல்ல உதவி இயக்குனரின் அடையாளம் என்ன? படப்பிடிப்பில் யாருடைய பெயரை ஒரு இயக்குனர் பலமுறை உச்சரிக்கிறாரோ, அவர்தான் சிறந்த உதவி இயக்குனர். இப்படி சொல்வது தமிழ்சினிமாவுக்கு உலக அரங்கில் ஒரு பார்வையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் இயக்குனர் ஷங்கர். இவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மதி என்பவரை படப்பிடிப்பில் அடிக்கடி அழைத்துக் கொண்டேயிருப்பாராம். இந்த மதி, இவரிடமிருந்து விலகி அரிது அரிது என்ற படத்தை இயக்கப் போய்விட்டார். அப்போதும் வாய் தவறி சில நேரங்களில் மதி என்று அழைத்து, அவர்தான் இப்போ நம்மிடம் இல்லையே என்று நாக்கை கடித்துக் கொண்டிருக்கிறாராம் பலமுறை.

அதோடு விட்டிருந்தால் கூட இது வழக்கத்தால் வந்தது என்று நினைத்திருக்கலாம். தனது எந்திரன் படத்தில் ஒரு முக்கியமான வேலை இருந்தது. அதை சரியாக செய்யக் கூடியவர் மதி மட்டும்தான் என்பது ஷங்கரின் எண்ணம். அரிது அரிது படத்தை இயக்கிக் கொண்டிருந்த மதியை அழைத்து எனக்கு இந்த வேலையை செய்து தரணும். உன்னால் முடியுமா என்றார். தனது படப்பிடிப்பை தள்ளி வைத்துவிட்டு குருநாதருக்காக செய்து கொடுத்தார் மதி.

தன்னை விட்டு போன பிறகும் நம்பிக்கையோடு ஒரு இயக்குனரை திரும்ப அழைக்க வைப்பதுதான் ஒரு நல்ல உதவி இயக்குனருக்கு அடையாளம்.

ஆணானப்பட்ட ரஜினியே ஒரு உதவி இயக்குனர் போகிற போக்கில் சொன்ன ஒரு டயலாக்கில் மயங்கி அவருக்கு ஸ்பாட்டிலேயே 25 ஆயிரம் பரிசு கொடுத்த சம்பவம் ஒன்று இருக்கிறது. அது மிக மிக சுவாரஸ்யமானது. அது என்ன என்பதை தெரிந்து கொள்ள அடுத்த திங்கட் கிழமை வரை காத்திருங்கள்.

(தொடர்ந்து கூப்பிடுவேன்…)

எச்சரிக்கை – இந்த கட்டுரையும் இனி வரப்போகும் கட்டுரையின் சாராம்சங்களும் தமிழ்சினிமா கலைஞர்களிடமிருந்து திரட்டப்பட்டவையே. இதில் ஏதேனும் திருத்தங்கள் மற்றும் கருத்து மாறுபாடுகள் இருப்பின் anthananpro@gmail.com ல் தெரிவிக்கவும். ஏற்புடையதெனில் திருத்திக் கொள்கிறேன். நன்றி

எச்சரிக்கை 2 – இந்த கட்டுரையை என் அனுமதியின்றி யாரும் மறு பிரசுரம் செய்யவோ, வெளியிடவோ அனுமதியில்லை.

2 Comments
  1. கபிலன் says

    சினிமாவை பற்றி மேலும் புரிந்து கொள்ள உதவுகிறது உங்களது கட்டுரை, தொடர்ந்து எழுதவும். நன்றி….

  2. Anantharaman says

    அந்தணர் அவர்களே …என்னை போன்று சினிமா துரையில் வரநிநைது ….ஆனால் குடும்ப சூழ்நிலையால் வரமுடியாமல் போன என்பொன்றோர்களுக்கு …இது ஒரு நல்ல கட்டுரை…நன்றி ஸார்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
காங்கிரசுக்கு ‘ காரியம் ’ பண்ணிய மல்லிகாஷெராவத்!

போகிற போக்கை பார்த்தால் காங்கிரஸ் கட்சிக்கு ‘காரியம்’ செய்யாமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது. ஏற்கனவே மூக்கெல்லாம் அடிபட்டு முன் பக்கம் முழுக்க பிளாஸ்திரியோடு திரிகிறது காங்கிரஸ். இந்த...

Close