கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 05 ஆர்.எஸ்.அந்தணன் பகட்டு… பந்தா… படாடோபம்… ஆகவே ஆகாது!

ரெகமன்டேஷன் இல்லாத துறை ஏதாவது இருக்கிறதா? ப்ரிகேஜி யில் துவங்கி யுனிவர்சிடி படிப்பு வரைக்கும் ரெகமன்டேஷன் வேண்டும். கல்வி துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் வார்த்தைதான் இந்த ‘ரெகமன்டேஷன்’. இப்போதெல்லாம் உதவி இயக்குனராக சேர்வதற்கு மினிஸ்டர்கள் தரும் சிபாரிசு கடிதங்களோடு வந்து ‘மிரட்டுவதாக’ கூட புலம்புகிறார்கள் சில இயக்குனர்கள்.

கோடம்பாக்கத்தில் சுமார் ஒரு வருஷ காலமாக உலவிக் கொண்டிருக்கும் ஜோக் இது. இதை நியூஸ், அல்லது கிசுகிசு என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

தமிழுலகமே அண்ணாந்து பார்க்கும் இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். இவரிடம் உதவி இயக்குனராக சேர்வதென்றால், அவ்வளவு சுலபமான விஷயமல்ல அது. அதற்கு உருண்டு புரண்டு படித்து கலெக்டரே கூட ஆகிவிடலாம். ஆனால் அவரிடமே ஒருவர் சுலபமாக உதவி இயக்குனராக சேர்ந்தார். எப்படி? தென் மாவட்டத்தில் கோலோச்சும் ஒரு அரசியல் தலைவர் சிபாரிசு செய்து அனுப்பி வைத்தாராம். ‘நமக்கு ரொம்ப வேண்டப்பட்ட தம்பி. சேர்ந்தா உங்ககிட்டதான் சேரணும்னு ஒத்த கால்ல நிக்குறான். சேர்த்துக்க முடியுமா?’ என்று அவர் தொலைபேசியில் கேட்க, ‘அனுப்பி வைங்களேன்’ என்றாராம் பாலா.

அவரும் ஏராளமான கனவுகளோடு பாலா ஆபிசுக்கு வந்தார். ‘தம்பி அப்படி உட்காரு’ என்று கூறிவிட்டு வேலையை பார்க்க போய்விட்டார் பாலா. இப்படியே நாட்கள் நகர்ந்தன. தினமும் அவர் வருவதும் ஆபிசில் அமர்வதுமாக போனது. கிட்டதட்ட அந்த இளைஞனை மறந்தே போன பாலா, ஒரு நாள் ஆபிசுக்குள் வந்தபோது, இவரை பார்த்துவிட்டு ‘தம்பி… நீங்க?’ என்று இழுக்க, அவர் சொன்ன பதில்தான் அடங்காத காமெடி. ‘சார்… நான்தான் உங்க அசிஸ்டென்ட்!’

சிபாரிசுகள் எல்லா இடங்களிலும் எடுபடுவதில்லை என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம்தான் இது.

உதவி இயக்குனராக சேர முடிவெடுத்துவிட்டால், முதலில் விட்டொழிக்க வேண்டிய விஷயங்கள் இங்கே நிறைய இருக்கிறது. அதில் ஒன்று ஆடம்பரம். எளிமையாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அட்ராக்ஷனாகவும் இருக்க வேண்டும். வெட்டி படாடோபங்கள் ஆகவே ஆகாது. அதற்கும் ஒரு உதாரணத்தை சொல்லி விட்டு அதற்கப்புறம் ஒரு இயக்குனரை எப்படி அப்ரோச் செய்ய வேண்டும் என்பதை சொல்கிறேன்.

பிரபலமான இயக்குனர் அவர். என் இனிய தமிழ் மக்களின் கை பிடித்து தியேட்டருக்குள் அழைத்து வந்த மாபெரும் ஜாம்பவான். அவருக்கு நெருங்கிய உறவினரின் வாரிசுக்கு தனது பெரியப்பாவை போல மிகப்பெரிய டைரக்டர் ஆக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. லட்சியம் இருந்தது. வெறி இருந்தது. ஆங்காங்கே சில இயக்குனர்களிடம் முயற்சியும் செய்து கொண்டிருந்தார். நினைத்தால், பெரியப்பாவிடம் சொல்லி யாரிடமாவது சேர்த்துவிட சொல்லியிருக்கலாம். ஆனால் சொந்தக்காலில் முன்னேற வேண்டும் என்கிற வெறியும் இருந்தது.

எப்படியோ ஒரு லைம் லைட்டில் இருக்கக் கூடிய ஒரு இயக்குனரை சந்தித்து பேசிவிட்டார். தான் யாரென்பதையோ, தனது பேக்ரவுண்ட் பற்றியோ அவர் இயக்குனரிடம் சொல்லவில்லை. ஏதோ ஒரு வேலையாக இருந்த இயக்குனர், ‘தம்பி நாளைக்கு இதே நேரத்திற்கு வா. பேசுறேன்…’ என்று கூறி அனுப்பி வைத்துவிட்டார். மறுநாள் இவர் குறிப்பிட்ட நேரத்தில் ஆபிசுக்கு செல்ல, அதே நேரத்தில் டைரக்டரும் வெளியில் நின்று கொண்டிருந்தார்.

இந்த இளைஞர் போய் இறங்கியது பிரமாண்டமான வெளிநாட்டு காரில். இயக்குனர் நிற்பதை கூட கவனிக்காமல் ஸ்டைலாக வட்டமடித்து காரை நிறுத்திய இளைஞர், கையில் கார் சாவியை சுற்றிக் கொண்டே இறங்கினார். அவரது தோற்றத்தையும், ஆடம்பர காரின் அழகையும் பார்த்துக் கொண்டே நின்றிருந்தார் இயக்குனர். இப்போதுதான் இயக்குனர் வெளியே நின்று கொண்டு தன்னை பார்ப்பதை கண்டார் இளைஞர்.

அப்படியே உடம்பை இங்கிலீஷ் ‘எஸ்’ ஆக்கி ஒரு வணக்கம் போட்டார். டைரக்டர் இவரிடம் வேறெதுவும் கேட்கவில்லை. ‘கார் உன்னுதாப்பா…?’ என்றார். இளைஞரும் ‘ஆமாம் சார்’ என்க, ‘தம்பி உனக்கு இங்க வேலையில்ல’ என்று ஒரே வார்த்தையில் கூறிவிட்டு பொசுக்கென்று உள்ளே போய்விட்டார்.

வெளிநாட்டு கார்ல வேலைக்கு வந்தா சேர்த்துக்கக் கூடாதா? என்று தோன்றும். ஆனால் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். ஏன்? ஏன்னா அப்படிதான்…! சரி, ஒரு இயக்குனரை எப்படிதான் அணுகுவது?

நமது யோசனை கை கூடுகிறதா பாருங்கள்.

சினிமா இயங்குகிற கோடம்பாக்கம் சாலிகிராமம் பகுதியில் தனது வசிப்பிடத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். சொந்த ஊரிலிருந்து வாரத்திற்கு ஒருமுறை வந்து முயற்சிப்பது அவ்வளவு பலனை தராது.

இயக்குனர்களை அவர்களின் வீடுகளிலோ, அலுவலகங்களிலோ, படப்பிடிப்பு தளங்களிலோ அணுக வேண்டும். இது நேரடியான முறை. சிபாரிகளின் மூலமாகவும் வாய்ப்புகளை பெறலாம். (ஆனால் அது பல நேரங்களில் வொர்க் அவுட் ஆகாது. பல நேரங்களில் ஆகும். அது இயக்குனரின் மன நிலையை பொருத்த விஷயம். அதற்காகதான் பாலா கதையை சொன்னேன்)

வாய்ப்பு தேடுகிற காலங்களில் அன்றாட வாழ்க்கைக்கே பிரச்சனை வருகிற மாதிரி இருத்தல் கூடாது. பொருளாதார விஷயங்களில் குறைந்த பட்ச நிறைவுடனாவது இருக்க வேண்டும்.

திரைப்படக் கல்லு£ரியில் படித்தவர்கள், விஷுவல் கம்யூனிக்கேஷன், மற்றும் போட்டோகிராபி, வீடியோ எடிட்டிங், டிசைனிங் போன்ற டெக்னிகல் வேலைகள் தெரிந்தவர்களை இயக்குனர்கள் உடனே சேர்த்துக் கொள்கிறார்கள். காரணம், தமது படம் தொடர்பான வேலைகளுக்கு இவர்களின் பங்கு தேவைப்படுமே என்பதால். உதாரணமாக வாய்ப்பு கேட்டு வரும் ஒரு இளைஞனை ஒரு போட்டோவோ, அல்லது வீடியோவோ எடுக்க நினைத்தால் அருகிலேயே இவர்கள் இருப்பது அந்த வேலையை இன்னும் சுலபம் ஆக்கும் அல்லவா?

உலக சினிமாவை பார்த்துவிட்டு அந்த தாக்கத்தோடு வருகிறவர்களுக்கு முன்னுரிமை தருகிறார்கள். அவ்வளவு கூட தேவையில்லை. தன்னுடைய தாய் மொழியில் வந்த நல்ல சினிமாவை நேசிக்கிறவர்களாக இருந்தால் கூட போதுமானது.

குறைந்தபட்சம் +2 வரையிலாவது படித்திருக்க வேண்டும்.

வெகுஜன பத்திரிகைகளில், அல்லது கணையாழி, காலச்சுவடு, உயிர்மை போன்ற இலக்கிய பத்திரிகைகளில் படைப்புகள் வந்திருந்தால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

குறும்படங்கள் எடுத்தவர்களாக இருந்தால் சுலபம்

வாய்ப்பு கேட்க வரும்போது அவர்களது அணுகுமுறை இயக்குனரால் கவனிக்கப்படுகிறது. கூனிக்குறுகி தன்னம்பிக்கை இல்லாமல் வருகிறவர்களாக இருந்தால் முதல் பார்வையிலேயே இவன் லாயக்கற்றவன் என்ற முடிவுக்கு வரக்கூடும்.

டிரஸ்சிங் சென்ஸ் கவனிக்கப்படும். பழைய ஆடையாக இருந்தாலும், அதை துவைத்து அயர்ன் செய்து போட்டுக் கொள்வது முக்கியம்.

தலைக்கு எண்ணெய், க்ளீன் ஷேவ், முக்கியமாக முக மலர்ச்சி என்பன போன்ற ‘தன்னை பராமரித்தல்’ முக்கியம். இப்போதெல்லம் தோற்றப் பொலிவும் ஒரு தகுதியாக பார்க்கப் படுகிறது என்பது வேதனையான விஷயம்தான். சற்றே அழகில்லாதவர்கள் திறமைசாலிகளாக இருந்தாலும், அதை உணர்கிற வரை அலட்சியப்படுத்தப்படுவதும் நடக்கிறது.

வாய்ப்பு கேட்டு போகிற இடத்தில் ‘ஒரு கதை சொல்லுங்க பார்ப்போம்’ என்று இயக்குனர் கேட்கக் கூடும். அப்போது சொல்வதற்கு ஒரு கதையோடு செல்ல வேண்டும். ‘இந்த கதைக்கு ஒரு ஸ்கிரீன் ப்ளே பண்ணிட்டு நாளைக்கு வாங்க’ என்று அவர் சொன்னால், மறுநாள் அவர் சொன்ன நேரத்தில் தெரிந்த அளவுக்கு ஸ்கிரீன் பிளே எழுதிக் கொண்டு போக வேண்டும். இந்த இடத்தில் உங்களின் சின்சியாரிடிதான் கருத்தில் கொள்ளப்படுமே தவிர, ஸ்கிரீன் பிளே அல்ல.

படிக்கிறார்களோ, இல்லையோ, நீங்கள் எழுதிய சிறுகதையை அழகாக டி.டி.பி செய்து எடுத்துச் செல்லலாம்.

நீங்கள் எழுதுகிற பயோ-டேட்டா வித்தியாசமாக அமைந்திருக்க வேண்டும். நிச்சயமாக, பெயர்- தகப்பனார் பெயர்- முகவரி- என்று சம்பிரதாயமாக இருந்தால் அது உடனே குப்பைக்குதான் போகும்.

நீங்கள் பார்த்த வெற்றிப்படங்களையோ, அல்லது தோல்விப்படங்களையோ அலசி ஆராய்ந்து சில குறைகளை கண்டுபிடித்து எழுதி எடுத்துச் செல்லலாம். அது சம்பந்தப்பட்ட இயக்குனருக்கு உங்கள் மேல் அபிமானத்தை ஏற்படுத்தும். அதற்காக யாரை பார்க்க போகிறீர்களோ, அவர் படத்தையே குறை சொல்லி எழுதிச் சென்றால் பெரும்பாலும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

மணிரத்னம், ஷங்கர், கவுதம் மேனன் போன்ற பிரபல இயக்குனர்களிடம் மட்டும்தான் சேருவேன் என்று பிடிவாதமாக இருப்பது காலதாமதத்தையும், தோல்வியையும்தான் ஏற்படுத்தும். எனவே இவர்களிடம் சேருகிற எண்ணத்தை குறிப்பிட்ட காலம் வரைக்கும் வைத்துக் கொள்வது. அந்த காலம் தாண்டினால், வேறு இயக்குனரிடம் சேர முயற்சிப்பது என்ற முடிவுக்கு முன்பே வந்துவிட வேண்டும்.

நீங்கள் சந்திக்க போகும் இயக்குனரிடம், “சார் பத்து கிலோ மீட்டர் நடந்தே வர்றேன்” என்றோ, “நான் சம்பாதித்துதான் என் தங்கச்சிக்கு கல்யாணம் செய்யணும்” என்றோ பரிதாப கதையை சொல்ல முற்பட்டால், உங்கள் முயற்சிக்கு ஒரு சதவீதம் கூட அது பயனிளிக்காது. எந்த நேரத்திலும் இந்த பரிதாப டெக்னிக் பலன் தரவே தராது.

அப்புறம்…? இன்னும் இருக்கிறது. அதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

(தொடர்ந்து கூப்பிடுவேன்…)

எச்சரிக்கை – இந்த கட்டுரையும் இனி வரப்போகும் கட்டுரையின் சாராம்சங்களும் தமிழ்சினிமா கலைஞர்களிடமிருந்து திரட்டப்பட்டவையே. இதில் ஏதேனும் திருத்தங்கள் மற்றும் கருத்து மாறுபாடுகள் இருப்பின் anthananpro@gmail.com ல் தெரிவிக்கவும். ஏற்புடையதெனில் திருத்திக் கொள்கிறேன். நன்றி

எச்சரிக்கை 2 – இந்த கட்டுரையை என் அனுமதியின்றி யாரும் மறு பிரசுரம் செய்யவோ, வெளியிடவோ அனுமதியில்லை.

 

1 Comment
  1. RaviShankar.M says

    அந்தணன் அற்புதமான தொடர் …..கண்டிப்பாக எதிர்கால திரை சந்ததிகளுக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.எழுத்து நடை கோர்வையாக , அருமையாக உள்ளது.உங்கள் திறமைக்கு ஒரு சல்யூட்!வாழ்த்துக்கள்!
    அன்புடன் ரவிஷங்கர்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நான்தான் பாலா- விமர்சனம்

வெறும் வேர்க்கடலை வறுப்பதற்கு, எதற்கு பாற்கடலை கடையணும்? ‘விவேக் ஹீரோவாக நடிச்சா நல்லாதானய்யா இருக்கும்’ என்று கவலைப்பட்டவன்தான் தமிழன். அவனுடைய கவலைக்கு பால் ஊற்றுகிறேன் பேர்வழி என்று...

Close