ஷங்கர் அழைத்தது எதற்காக? கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 06 ஆர்.எஸ்.அந்தணன்

என்னுடைய நண்பர் ஒருவர், தனது நெருங்கிய உறவினரை எனக்கு அறிமுகப்படுத்தி, ‘இவனுக்கு சினிமான்னா உசுரு. யார்ட்டயாவது அசிஸ்டென்ட்டா சேர்த்து விடுங்களேன்’ என்றார். பையன் பார்க்கதான் ஸ்மார்ட். மண்டையில் ஒன்றும் இல்லை என்று சில வார்த்தைகள் பேசும்போதே புரிந்து போனது. இருந்தாலும், சொன்னவர் முக்கியமானவர் என்பதால், ‘முயற்சி பண்றேன். முழுசா உத்தரவாதம் இல்ல’ என்று கூறி, என் இயக்குனர் நண்பர் ஒருவரிடம் அனுப்பி வைத்தேன்.

எடுத்த எடுப்பிலேயே அவர் கேட்ட கேள்வி இதுதான். ‘தம்பி… என்னெல்லாம் படிப்பீங்க?’

அதற்கு அவன் சொன்ன பதில்தான் டாப். ‘வண்ணத்திரை, சினிமா எக்ஸ்பிரஸ், ராணி’ என்று அடுக்கிக் கொண்டே போனான். விழி பிதுங்கி போனார் இயக்குனர். ‘வேண்டாம் போயிட்டு வா’ என்று நேரடியாக சொல்லாமல் ஒரு காரியம் செய்தார். ஜெயமோகனின் நாவல் ஒன்றை கையில் கொடுத்து ‘இதை படிச்சுட்டு என்னை வந்து பாரு’. என்று கூறி அனுப்பி விட்டார். அது நடந்து இரண்டு வருஷம் இருக்கும். மறுபடி அவன் என்னிடம் வரவேயில்லை. அந்த இயக்குனரையாவது சந்தித்தானா என்றால் அதுவும் இல்லை.

தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கிறது உதவி இயக்குனர்களை சேர்த்துக் கொள்கிற முடிவில். இயக்குனர் சிம்புதேவன் தன்னிடம் உதவி இயக்குனராக சேர விரும்புகிறவர் எப்படியிருக்க வேண்டும் என்று நினைக்கிறார் தெரியுமா?

திறமை குறைவாக இருந்தால் கூட பரவாயில்லை. அதீத ஆர்வம் இருக்கணும். கடும் உழைப்பாளியாக இருக்கணும். சினிமாவை பற்றி அடிப்படை அறிவு இருந்தால் போதும். இங்கே கற்பனையும் புத்திசாலித்தனமும் தனிப்பட்ட திறமை. ஒரு இயக்குனர் சிந்திப்பதை காட்சியாக கொண்டு வருவதற்கு தேவையான அடிப்படை விஷயங்களுக்கு உழைக்க தெரிந்தால் போதுமானது. நான் சேரன் சாரிடம் சேர்வதற்கு, விகடன் இதழில் வெளிவந்த என்னுடைய படைப்புகளும், காமிக்ஸ் ஓவியங்களும் காரணமாக இருந்தன. கிரியேஷன் தனி. எக்சிக்கியூஷன் தனி. என்னிடம் உதவி இயக்குனராக சேர்பவர்களுக்கு எக்சிக்கியூஷன் பவர் இருக்கிறதா என்பதைதான் நான் முக்கியமாக பார்ப்பேன் என்கிறார்.

சிலர் நிறைய படித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இயக்குனர் பாலுமகேந்திரா தன்னிடம் சேர வரும் இளைஞர்கள் நிறைய இலக்கியம் படித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

டைரக்டர் விக்ரமனின் கேள்வி வேறு விதமாக இருக்கிறது. ‘தம்பி கடந்த வாரத்தில் எத்தனை படங்கள் பார்த்தீங்க?’ என்பார். தினம் ஒரு படமாவது பார்ப்பவர்தான் அவருக்கு வேண்டும். அதற்கு காரணமும் இருக்கிறது. இவர் சொல்கிற சீன்கள் வேறு படங்களில் வந்திருக்கவில்லை. அல்லது வந்திருக்கிறது என்பதை சொல்வதற்காகவாவது இது பயன்படும் என்று நினைக்கிறார் அவர்.

சுசிகணேசன் இவரது கொள்கைக்கு நேர் விதத்தில் இருக்கிறார். தன்னிடம் வேலைக்கு சேர்வதற்கு முன் எப்படியோ? வேலைக்கு சேர்ந்துவிட்டால் அன்றிலிருந்து தியேட்டருக்கு போய் சினிமா பார்க்க கூடாது. டிவிடிகளையும் பார்க்கக் கூடாது. பத்திரிகைகள் படிக்கக்கூடாது என்று பல கூடாதுகள். ஏன்? கதை விவாதத்திலோ, காட்சி அமைப்பிலோ இவற்றின் தாக்கம் எதுவும் தனது படங்களில் வந்துவிடக் கூடாது என்பதற்காக.

இப்படி ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு தனித்தனி பார்வை இருக்கிறது. அதை கண்டு உதவி இயக்குனர்கள் குழம்பிவிடக் கூடாது. எல்லாவற்றுக்கும் தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

கடந்த அத்தியாயத்தில் இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்க போகும் போது எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று பட்டியலிட்டிருந்தேன். அவற்றின் தொடர்ச்சியை இந்த வாரம் சொல்வதாக கூறியிருந்தேன். இன்னும் சில ‘அப்ரோச்’சுகள் இருக்கிறது. அதையும் முழுசாக படித்து விடுங்களேன்…

இயக்குனர்களை சந்திக்கும்போது அவரை அழைக்கிற விதம் மிகவும் முக்கியமானது. ‘அண்ணே’ என்று அழைப்பதை விட ‘சார்’ என்று அழைப்பது எப்போதும் பாதுகாப்பானது. சென்ட்டிமென்ட்டான டைரக்டராக இருந்தால் ‘அண்ணன்’ செல்லுபடியாகும். இல்லையெனில் அதுவே தவறாகிவிடும்.

பெரிய இயக்குனர்களை நாடுவதை விட, அவர்களிடம் பணியாற்றும் இணை இயக்குனர்களிடம் முயற்சிக்கலாம். அவர் படம் இயக்குவதற்கு முன்பே நீங்கள் வாய்ப்பு கேட்பதால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்போது உங்களையும் அந்த கூட்டணியில் இணைத்துக் கொள்வார். இந்த முறை சற்று சுலபமானதும் கூட.

அல்லது ஒரு சில படங்களை இயக்கிய சில இயக்குனர்கள் அடுத்த படத்திற்காக காத்திருப்பார்கள். அவர்களை அணுகலாம். சும்மாயிருப்பவர்களை அணுகும்போது உங்கள் மீது ஒரு நல்லெண்ணம் ஏற்படும் அவர்களுக்கு. திடீரென்று அவரும் வெற்றிப்பட இயக்குனர் ஆகிவிட்டால் உங்கள் காட்டில் மழைதான்.

ஷங்கர், சேரன், கரு.பழனியப்பன் போன்ற இயக்குனர்கள் வருடத்திற்கு ஒருமுறை தங்களை தேடி வந்து வாய்ப்பு தேடும் இளைஞர்களுக்காக ஒரு தேர்வு வைப்பார்கள். ஒருவேளை அதில் ஃபெயில் ஆகிவிட்டால் அந்த இயக்குனர்களையே சுற்றி சுற்றி வராமல் அடுத்த இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு போய்விடுவது தொடர்ந்து ஏமாற்றம் வராமல் தடுக்கும் வழி.

இப்படி வைக்கப்படும் தேர்வில் தமிழில் உங்களுக்கு பிடித்த 10 படங்கள் பற்றி எழுதுங்கள் என்ற கேள்வி இடம்பெற்றால், சமீபத்தில் வந்த படங்களைதான் எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை. பழைய படங்களையும் குறிப்பிடலாம். இயக்குனர்களுக்கு பெருமை சேர்த்த படங்களைதான் எழுதவேண்டும். அதைவிட்டு விட்டு வெற்றியடைந்த ஹீரோயிசப் படங்களையும், அவர்கள் பேசிய பஞ்ச் டயலாக்கையும் வியந்து எழுதினால் நீங்கள் அந்த தேர்வுக்கே அன்ஃபிட்.

ஒவ்வொரு இயக்குனரும் சராசரி ஆறு மாதத்திலிருந்து இரண்டு வருடங்கள் வரை அலைய விடலாம். இந்த நேரத்தில் இருபது நாட்களுக்கு ஒருமுறையாவது  அவர்களை சந்தித்து முகத்தை பதிய வைத்தல் முக்கியம். முடிந்தால் படப்பிடிப்பு நடக்கும் அவுட்டோருக்கே கூட போகலாம். ஒருமுறைக்கு இருமுறை உங்களை அந்த இடங்களில் பார்க்கிற இயக்குனர்கள் மூன்றாவது முறை பார்க்கும்போது “சாப்பிட்டு போப்பா” என்று சொல்லக்கூடும். (அதுதான் உங்கள் லட்சியத்திற்கான முதல் மணி சத்தம்!)

நீங்கள் வாய்ப்பு கேட்டுக் கொண்டிருக்கும் இயக்குனரின் படம் ரிலீஸ் ஆகும்போது தியேட்டரில் படத்தை பார்த்துவிட்டு நேரில் சென்று விமர்சனங்களை வாய் வழியாக சொல்லலாம். (எழுதிக் கொடுப்பது ஆகவே ஆகாது) வாய்ப்பு வசதி இருந்தால், படம் ஓடுகிற தியேட்டருக்கே போய் ரசிகர்களின் கருத்துகளை பதிவு செய்து அதை டிவிடி யாக மாற்றி இயக்குனரிடம் கொடுத்து பார்க்க சொல்லலாம். (சேரனிடம் இப்படி சேர்ந்த உதவி இயக்குனர் இன்று அவரது டீமில் முக்கிய இடத்திலிருக்கிறார்.)

இயக்குனர்களின் அலுவலகத்தில் நீங்கள் அவமானப்படுத்தப் படலாம். அதற்கெல்லாம் அசரவே கூடாது. காலப்போக்கில் அங்கு வேலை செய்யும் ஆபிஸ் பாய் நண்பனாகலாம். அவன் மூலம், இயக்குனரின் அசோசியேட் டைரக்டர் நண்பராகலாம். இதற்கெல்லாம் பொறுமை மிகமிக முக்கியம். அதே இயக்குனரிடம் வேலை பார்க்கும் உதவி இயக்குனர்கள் கூட நமக்கு போட்டியாக ஒருவன் வந்துவிட்டானே என்ற கோபத்தில் திட்டலாம். விரட்டலாம். அந்த நேரத்தில் நீங்கள் மனதிற்குள் முணுமுணுக்க வேண்டிய ஒரே மந்திரம் பொறுமை… பொறுமை…

உதவி இயக்குனர்களின் உரிமை

ஏதோ உரிமை அது இது என்று பில்டப் பெரிதாக இருக்கிறதே என்று யோசிப்பீர்கள். இது கையை உயர்த்தி கோஷம் போடுகிற உரிமை அல்ல. நாம் எதற்காக இந்த துறையை தேர்ந்தெடுத்து வந்தோமோ, அதை செம்மையாக செய்து முடிப்பதற்காக நாம் எடுக்கும் சில உறுதியான செயல்பாடுகளைதான் இப்படி சொல்ல வேண்டியிருக்கிறது.

கதை விவாத அறையில் ஆரம்பிக்கிறது இந்த உரிமை. எல்லாரும் கதையை அக்கு வேறு ஆணி வேறாக அலசிக் கொண்டிருக்க ஒருவர் மட்டும் வாயை மூடிக் கொண்டிருந்தால் இவன் எதற்கு தேவையில்லாமல் இங்கே என்ற எண்ணம் வருமல்லவா? அதை போக்குவதற்காகவாவது பேச வேண்டும். நமது பேச்சை அந்த இடத்தில் மதிக்கிறார்களோ, இல்லையோ. காட்சி இப்படியிருந்தால் நல்லாயிருக்கும் சார் என்று தைரியமாக சொல்ல வேண்டும். அதுதான் உதவி இயக்குனரின் உரிமை. அவ்வளவு ஏன்? அந்த அறையின் மூலையில் பல்லி ஒன்று சுவற்றில் ஒட்டிக் கொண்டு இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவ்வப்போது ‘ப்ளூச் ப்ளூச்’ என்று ஏதாவது சொல்லிக் கொண்டேயிருக்குமல்லவா? அதுவே நான் இங்கதான் இருக்கிறேன் என்பது மாதிரி குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் போது ஒரு உதவி இயக்குனர் உரிமையோடு பேச வேண்டாமா?

பெரிய இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக சேர்கிற சிலர், அந்த இயக்குனர் சொல்கிற எல்லா விஷயத்தையும் சூப்பர் சார். பிரமாதம். ஆஹா என்று பாராட்டிக் கொண்டேயிருப்பார்கள். அந்நியன் படத்தின் கதை விவாதத்திலும் அதுதான் நடந்தது ஷங்கருக்கு. அவர் என்ன செய்தார் தெரியுமா? பல வருடங்களுக்கு முன் தன்னோடு உதவி இயக்குனராக இருந்த செந்தமிழனை வீடு தேடிப் போய் அழைத்துவரச் செய்தார். இருவரும் பவித்ரனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர்கள்.

அதன்பின் ஷங்கர் பல வெற்றிகளை கொடுத்து உயர்ந்த இடத்துக்கு போய்விட்டார். செந்தமிழனுக்கு அவ்வளவு பெரிய வெற்றி வாய்ப்புகள் இன்னும் அமையவில்லை. பல வருடங்களாக இருவரும் சந்திக்கவும் இல்லை. போனில் கூட ஒரு ஹலோ சொன்னதில்லை. இந்த நிலையில்தான் திடீரென்று இவர் வீட்டுக்கு வந்து நின்றது ஒரு கார். “ஷங்கர் சார் உங்களை அழைச்சிட்டு வரச் சொன்னார்” என்றார் வந்தவர்.

இந்த திடீர் அழைப்பை ஏற்றுக் கொண்டு அங்கு போன செந்தமிழனிடம் ஷங்கர் சொன்ன வார்த்தைகள்தான் இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்.

அது என்ன என்பது அடுத்த வாரம்…

(தொடர்ந்து கூப்பிடுவேன்…)

எச்சரிக்கை – இந்த கட்டுரையும் இனி வரப்போகும் கட்டுரையின் சாராம்சங்களும் தமிழ்சினிமா கலைஞர்களிடமிருந்து திரட்டப்பட்டவையே. இதில் ஏதேனும் திருத்தங்கள் மற்றும் கருத்து மாறுபாடுகள் இருப்பின் anthananpro@gmail.com ல் தெரிவிக்கவும். ஏற்புடையதெனில் திருத்திக் கொள்கிறேன். நன்றி

எச்சரிக்கை 2 – இந்த கட்டுரையை என் அனுமதியின்றி யாரும் மறு பிரசுரம் செய்யவோ, வெளியிடவோ அனுமதியில்லை.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இயக்குனர் இராம.நாராயணன் காலமானார்

பிரபல இயக்குனரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளருமான இராம.நாராயணன் அவர்கள் காலமானார். 1980 ல் மீனாட்சி படத்தில் துவங்கி, 2013 ல் வெளிவந்த ஆர்யா சூர்யா வரை அவரது...

Close