அந்த பொறுப்பை குஷ்புகிட்ட கொடுக்கலாம்! மாஸ் ஹீரோக்கள் மனசார முடிவு!
கேப்டன் ஆஃப் த ஷிப் ஆகிக் கொண்டிருக்கிறார் விஷால். கடனில் சிக்கிய நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தவர் விஜயகாந்த் என்றால், அங்கு கட்டிடம் கட்ட மல்லுக்கு நிற்பது விஷால் தலைமையிலனா குரூப். ‘அடுப்பு பத்த வைக்கிறேன்னு வீட்ட கொளுத்திட்டு போயிராதீங்க’ என்று இந்த சண்டை சச்சரவு பற்றி பேச ஆரம்பித்தாலே மீடியாக்களிடமிருந்து எஸ்கேப் ஆகிவிடுகிறார் அவர். இருந்தாலும், என் உயிரே போனாலும் அந்த இடத்துல கட்டிடம் கட்டாம ஓய மாட்டேன் என்று அவர் சபதம் எடுத்திருப்பதால், வேலைகள் ஜரூர்.
விஷால், ஆர்யா, கார்த்தி, ஜீவா என்று மார்க்கெட்டில் படா படா சம்பளம் வாங்குகிற ஹீரோக்கள் நால்வரும் சேர்ந்து முக்கிய வேடத்தில் நடிக்கப் போகிறார்கள். அந்த படத்தின் வருமானத்தில் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவதாக திட்டம். இதுல எங்களை ஏன் பாஸ் விட்டுட்டீங்க? என்ற கேள்வியோடு நாளொரு ஹீரோவும் பொழுதொரு ஹீரோயின்களும் விஷாலை நெருக்கிக் கொண்டிருக்கிறார்களாம். முக்கியமான மேட்டர் என்னவென்றால், ஒருவருக்கும் சம்பளம் நஹி. இலவசமாக நடித்துக் கொடுக்க வேண்டும்.
சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி மாதிரி லேட்டஸ்ட் முன்னணி ஹீரோக்களும் தானே முன் வந்து ‘உள்ளேன் ஐயா’ சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. மார்க்கெட் டல்லாக இருந்தாலும், இன்றைய தேதிக்கு நாளொன்றுக்கு பத்து லட்சம் சம்பளம் வாங்கும் சந்தானம், ‘ஒரு பைசா வேணாம். கால்ஷீட் எத்தனை நாள் வேணும்னாலும் தர்றேன். நான் ரெடி’ என்று கூறியிருக்கிறாராம். ஹீரோயின்கள் ஏரியாவிலிருந்து ஹன்சிகாவும் ஆர்வம் காட்டுகிறாராம்.
இப்படி தினந்தோறும் எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ்களுடன் வேகமாக புறப்பட்டிருக்கிற இந்த கலெக்ஷன் கல்லா பெட்டியை வடிவமைப்பது யார்? அதாவது அந்த படத்தை இயக்கப் போவது யார்? இதுதானே பெரிய கேள்வியாக இருக்க முடியும்? விசாரித்தால், அவரையும் தேர்ந்தெடுத்துவிட்டாராம் விஷால். சுந்தர்சிதான் அந்த இயக்குனர். எல்லாருக்கும் நல்லவர். யார் மனசும் புண்படாமல் பேசக் கூடியவர். ஆடிய மாட்டை ஆடியும் பாடுற மாட்டை பாடியும் கறக்கிற ஆள். பொறுப்பை அவர்கிட்ட கொடுத்துட்டா டென்ஷன் இல்ல என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். இதற்கு அவரும் சம்மதித்திருக்கிறார். அதோடு விட்டாரா என்றால் அதுதான் இல்லை. ‘நீங்கள்லாம் எப்படி சம்பளம் வாங்காம நடிச்சுக் கொடுக்கிறீங்களோ, நானும் சம்பளம் வாங்காமதான் இயக்குவேன்’ என்று கூறிவிட்டாராம்.
இருந்தாலும் படத்தை தயாரிப்பவர்தானே முக்கியம்? இங்கு விஷால், கார்த்தி, ஆர்யா, ஜீவா ஆகிய நால்வருக்குமே சொந்தமான சினிமா கம்பெனி இருக்கிறது. அதனால் எல்லாருக்கும் பொதுவான ஒருவர் இருப்பதுதானே பொருத்தம்? எல்லார் கண்களும் குஷ்புவை நோக்கியே சென்றதாம். பொறுப்பை அவங்ககிட்ட கொடுத்துருங்க என்று கூறியிருக்கிறார்கள். ஏக மனதாக இந்த படத்தை தயாரிக்கும் பொறுப்பை குஷ்புவிடம் கொடுப்பதாக திட்டம்.
இந்த தெளிந்த குட்டையை யாரும் குழப்பாமல் இருந்தால், இதெல்லாம் சாத்தியம். இல்லையென்றால் தயாரிப்பாளர் யாரோ? இயக்குனர் யாரோ? சினிமாவில் கடைசி நேர மாறுதலுக்குட்பட்டதுதானே எல்லாம்?
எல்லாம்னா…? எல்ல்ல்ல்ல்ல்லாம்தான்!