விலகிய கையோடு வெளிநாடு பயணம் குஷ்புவின் ராஜினாமா முடிவை ஏற்குமா திமுக?
கடந்த சில மாதங்களுக்கு முன்பிலிருந்தே திமுக விலிருந்து விலகும் முடிவுக்கு வந்துவிட்டார் குஷ்பு. அரசல் புரசலாக மீடியாக்கள் இதை செய்தியாக்கிய போதும் கூட கற்பனையான செய்திகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறி அது குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டார். இதையடுத்து அவரை ஓரம் கட்டி வைத்திருந்த திமுக தலைமை, மீண்டும் அழைத்து பிரச்சாரத்திற்கு அனுப்பி வைத்தது. ஆனால் அந்த சந்தோஷமும் நீடிக்கவில்லை அவருக்கு.
தேர்தல் பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துவிட்டு சென்னைக்கு வந்துவிட நிர்பந்திக்கப்பட்டார். அதற்கப்புறம் மோடி பிரதமரானதை வரவேற்றும், அவருக்கு ஆதரவாகவும் தொடர்ந்து ட்விட் செய்து வந்த குஷ்பு நேற்று மாலை எடுத்த முடிவு, திமுக வுக்கு நல்லதா, கெட்டதா என்பதை அவர்களே பட்டிமன்றம் வைத்து விவாதித்துக் கொண்டால்தான் உண்டு. ஏனெனில் குஷ்பு ஆதரவு கூட்டம் ஒன்றும் இருக்கிறது திமுகவில். நேற்று மாலை திமுக தலைவர் கருணாநிதிக்கு அவர் அனுப்பிய கடிதத்தின் நகல் பத்திரிகையாளர்களுக்கும் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் குஷ்புவின் கருத்தை அறிந்துவிட வேண்டும் துடியாய் துடித்த பிரஸ்சுக்கு அவரை ரீச் பண்ணவே முடியவில்லை. நேற்றிலிருந்து அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப். சரி, நேரில் போவதுதான் சரி என்று அவரது வீட்டின் முன் குவிந்தது கூட்டம். அப்போதும் குஷ்புவிடம் பேச முடியவில்லை ஒருவராலும். இந்த நிலையில்தான் இன்று ட்விட் செய்திருக்கும் குஷ்பு ‘என் வீட்டிற்கு வெளியே நிற்கும் பிரஸ் நண்பர்கள் கலைந்து சென்றுவிடுங்கள். ஏனென்றால் நான் வெளிநாட்டுக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன்’ என்று தகவல் தெரிவித்திருக்கிறார்.
கலைஞர் என்னுடைய தந்தை மாதிரி. நான் வேறொரு கட்சியில் இணையும் எண்ணம் இல்லை என்றும் கூறியிருக்கிறார் அவர். இருந்தாலும், அவரை வேறு கட்சிகள் சேர்க்க துடிக்காமல் இருக்குமா? அல்லது அவர்தான் சேராமல் இருப்பாரா? இல்லை…. திமுகவில் குஷ்புவின் ராஜினாமா கடிதம் ஏற்காமல் திருப்பி அனுப்பப்படுமா? என்று ஓராயிரம் துணை கேள்விகள் எழுகின்றன. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா….!