‘எக்ஸ்பயரி‘மென்ட்டல்‘ மூவி’ என்று ஒற்றை வரியில் விமர்சனத்தை முடித்துவிடலாம். ஆனால் தூக்கி போட்டு துவைத்தவர்களை சும்மா விடுவதா என்கிற கோபம் வந்து தொலைக்கிறதே, என்ன செய்ய?
மண்டைக்கு வெளியே மாவுக்கட்டு போடுகிற கும்பல் சினிமாவுக்கு வெளியேதான் இருக்கிறது, அதுவும் இலக்கிய உலகத்தில் என்று நம்பிக் கிடந்த நமக்கு, பேரெச்சரிக்கைதான் இந்தப் படம். இந்த ஜோல்னா பை சோல்ஜர்களிடம் சிக்கி சீரழிந்த அத்தனை பேரும் அரை மவுனத்தோடு தியேட்டரை விட்டு வெளியே வருகிறார்கள். சில அறிவாத்மாக்கள் மட்டும், ஆஸம்… ஆஸம்… என்கிறார்கள். இந்த மாதிரி சினிமாவையெல்லாம் புரிந்து கொள்ள ஆழ்வார்ப்பேட்டையில் ஒருவரும், அட்ட ராத்திரியில் கூலிங் கிளாஸ் போட்ட இன்னொருவரும்தான் சரி. நானெல்லாம் இன்னும் பால்வாடியில்தான் இருக்கிறேன்.
சரி… அப்படியென்ன சினிமாவின் சட்டையை கிழித்து சம்பவம் பண்ணி விட்டார்கள்? இதுதான் கதை என்று ஒரு வரியில் சொல்லிவிடலாம். அதை விரிவாக சொல்வதற்குள் நாக்கு தள்ளிவிடும். இத்தனைக்கும் இந்த நாட், முன்னாள் பாக்யராஜ், பாண்டியராஜ்களின் கையில் சிக்கியிருந்தால் ஒரு ஹன்ட்ரட்டேஸ் மூவி கன்பார்ம். (கவனிக்க- பாண்டிராஜ் இல்லை, பாண்டியராஜ்) அப்படியொரு நாட். தூங்கி கண்விழிக்கும் ஒருத்தனின் பின் பக்கத்தில் வால் முளைத்திருக்கிறது. ‘ஏண்டா இது நமக்கு வந்து தொலைஞ்சுச்சு?’ என்று தேடக் கிளம்புகிறான். பதில் கிடைத்ததா என்பதே படம். (எஸ்.வி.சேகர் நாடகத்தில் ஒருவனுக்கு வால் முளைக்கும், அவன் என்ன பாடு படுகிறான் என்பதை அப்பவே சொன்னவர் அவர்)
கலையரசன்தான் ஹீரோ. தொங்குகிற வாலை சுமந்து கொண்டும், அவ்வப்போது தக்கு புக்கென்று குதிக்கிறஅதை சகித்துக் கொண்டும், உடம்பை ஒரு நிமிஷத்துக்கொரு முறை குலுக்கிக் கொண்டும் முடிந்தவரை எரிச்சலூட்டுகிறார். ‘ஏன்யா வாலுதானே அது. என்னவோ வேட்டை நாய் கடிக்கிற மாதிரி பீலிங் கொடுக்கிறியே?’ என்று யாராவது ஷுட்டிங் ஸ்பாட்டில் கேட்டிருக்க வேண்டாமோ? இந்தக்கொடுமையை எவ்வளவு நேரம்டா சகிக்கிறது என்று பொசுங்குகிற நேரத்தில், அவரது சின்ன வயசுக்கு போகிறது சீன். அந்த பாழுங்கிணத்துல ஏண்டா எம்ஜிஆர் விழுந்து சாகணும்? என்றெல்லாம் கேட்க முடியாது. ஏனென்றால் இந்த கதையே ஒரு கனவுதானாம். கனவில் சம்பந்தமில்லாமல் ஏதேதோ வருமல்லவா? அதனால்தான் இப்படி.
இந்தக் கதையை ஒரு நேர்க்கோட்டில் சொல்லியிருந்தால் இப்படி சீர்கெட்டு புலம்ப வேண்டிய அவசியமே இல்லை. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத காட்சிகள். கணையாழியின் பக்கங்களை கிழித்து ஆளுக்கொருவர் கையில் கொடுத்து படிங்களப்பா.. அதுதான் வசனம் என்று சொல்லிப் படுத்திய கொடூரம். நம்பி தியேட்டருக்குள் வந்தவனை ஆட்டோவில் ஏற்றி மூத்திர சந்தில் வைத்து அடித்திருக்கிறார்கள்.
கதாநாயகிகள் என்று இருவர் கூட இருக்கிறார்கள். ஜன்னலுக்கு பக்கமாய் உட்கார்ந்து கொண்டு மோட்டுவளையை பார்த்து அவ்வப்போது டயலாக்குகளை பேசுகிறார்கள். அப்பறம் மறைந்து விடுகிறார்கள். இப்படி ‘நான்தான் ஹீரோயின்‘ என்று வெளியே சொல்ல முடியாதளவுக்கு அவர்களின் கனவையும் சிதைத்திருக்கிறது இந்த கனவு. முக்கியமாக ஒரு விஷயத்தை சிரத்தையெடுத்து செய்திருக்கிறார்கள். படத்தில் வரும் கேரக்டர் எதுவும் நேருக்கு நேர் கண் பார்த்து பேசக் கூடாது என்பதுதான் அது.
வீடு முழுக்க சாக்பீசால் கணக்கு போட்டுக் கொண்டேயிருக்கும் ஒரு கணக்கு வாத்தியார், ஒரு பில்லி சூனிய ஜோசியக்காரன், பொட்டிக் கடையில் அக்குளை சொறிந்து கொண்டே இருக்கும் ஒரு ஒரு ஆசாமி என்று எங்கு திரும்பினாலும் மென்ட்டல்களின் பிம்பங்கள்.
அபூர்வமாக ரசிக்க முடிந்தது இந்த படத்தில் குட்டி குட்டியாய் வரும் பாடல்களைதான். பெயின்ட்டிங் போலிருக்கும் ஒளிப்பதிவு. அதற்கப்புறம் (இலக்கியமாய் பேசினாலும்) அந்த பாட்டி.
மற்றபடி இந்த படத்தையும், இதில் வரும் குறியீடுகளையும் அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முடியாத பாவியாகிவிட்டேனே ஏசுவே… என்று கை கூப்பி கதறுவதை தவிர வேறு வழியில்லை.
ஷ்யாம் சுந்தர், மனோஜ் லியானல் ஜாசன் என்ற இரட்டை இயக்குனர்களின் சொந்தப்பணமோ, அல்லது தயாரிப்பாளரே விரும்பி தந்த பணமோ, மொத்தத்தில் காட்சியாய் கரைந்து, கண்றாவியாக தொலைந்த பணம்.
குதிரை வால்- கூமுட்டை தோல்!
-ஆர்.எஸ்.அந்தணன்
Comments are closed.