குற்றம் கடிதல் – விமர்சனம்

அ-வில் ஆரம்பித்து அக்கன்னாவை(ஃ) முடிப்பதற்குள் மாணவர்களின் நாடி நரம்பெல்லாம் பயத்தை பரவ விடும் ஆசிரியர்கள்…. இது ஸ்கூல்தானா, இல்லை மாட்டுக் கொட்டடியா? என்று பதற வைக்கும் தண்டனைகள்! ‘அடிச்சாதான் படிப்பு வரும்’ என்று ஒரு கருத்தும், ‘அடிக்கறதுக்கு குழந்தைகள் என்ன கிரிமினல் குற்றவாளிகளா?’ என்று இன்னொரு கருத்தும் உலவி வரும் இந்த சூழலில் மிக மிக பொருத்தமாக வந்திருக்கும் படம் குற்றம் கடிதல்! உலக பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை அள்ளிக் கொண்டு வந்த படம்! ஏன் இத்தனை விருதுகள் என்பது படம் பார்க்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே நமக்கு புரிய வைக்கிறார்கள். அந்த இரண்டு மணி நேரமும் அடி வயிற்றில் ஓடுகிறதே ஒரு திகில்…? அதுதான் இந்த படத்தின் சுருதி சுத்தமான திரைக்கதை வித்தை!

ஒரு முக்கியமான பிரச்சனையின் எல்லா பக்கமும் நின்று அலசுகிற பாங்கும், இம்மியளவும் கூடவோ குறைச்சலோ இல்லாத நியாயமும் இப்படத்தின் டைரக்டர் பிரம்மாஜி முன் தலைவணங்க வைக்கிறது. கூட்டம் கூட்டமாக கேரக்டர்கள் இல்லை. அளந்து வைத்த மாதிரி ஆறேழு பேர்கள்தான். ஒவ்வொரு கேரக்டருக்கும் பொருத்தமான நடிகர்களை தேர்ந்தெடுத்திருக்கும் இவரது சாமர்த்தியத்திற்கும் சேர்ந்தார் போல ஒரு தலைதாழ் வணக்கம்!

தன் வகுப்பு மாணவனை கூட அல்ல, பக்கத்து வகுப்பு மாணவன் அதே வகுப்பில் படிக்கும் சிறுமிக்கு ஹேப்பி பர்த் டேவுக்காக முத்தம் கொடுத்துவிடுகிறான். இத்தனைக்கும் ‘காதல்’ என்று எழுதினால் கூட எழுத்துக் கூட்டி படித்துவிடுகிற வயசு இல்லை அவர்களுக்கு. ஆனால் கடுப்பாகும் டீச்சர், அவன் கன்னத்தில் அறைய படக்கென்று மயக்கம் போட்டு விழும் அவன் அதற்கப்புறம் பிழைப்பானா என்கிற அளவுக்கு போகிறது சூழ்நிலை. “என்ன வேணும்னாலும் நடக்கலாம். இங்கிருந்து எஸ்கேப் ஆயிடுங்க” என்று பள்ளி நிர்வாகத்தால் அனுப்பி வைக்கப்படும் டீச்சர் மெர்லினும், அவருக்கு துணையாக கிளம்பும் அவரது கணவரும் டிராவலில் படுகிற பதற்றம் ஒரு பக்கம்…

மாணவனை மருத்துவமனையில் சேர்த்து விட்டு பெற்றோருக்கும் பதில் சொல்ல முடியாமல், மாணவனும் பிழைத்துவிட வேண்டுமே என்று தவியாய் தவிக்கும் ஸ்கூல் தலைமை மறுபுறம்… இந்த திடுக் திடுக் நிமிடங்களை படத்தின் இறுதிக்காட்சி வரை நமக்கு காட்டி ஒரு வழியாக நம்மை நல்லபடியாக வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார் டைரக்டர் பிரம்மா. (சாமீய்… நல்ல முடிவா வச்சீங்க, இல்லேன்னா படம் பார்க்குற ரசிகர்கள் எத்தனை பேருக்கு ஐசியூ வில் இடம் இருந்திருக்குமோ?)

படத்தின் எல்லா கேரக்டர்களுமே மில்லி மீட்டர் தாண்டாமலும், குறையாமலும் நடித்திருந்தாலும், அந்த மெர்லினின் நடிப்பு…? கிரேட்! மெர்லினாக நடித்திருக்கிறார் ராதிகா பிரசித்தா. தான் தப்பித்துவிட வேண்டும் என்று தவிக்காமல், குற்ற உணர்ச்சியால் அழுது தவித்து, என்ன நடந்தாலும் சரி. அவங்க அம்மாவை பார்க்கணும் என்று பாதியிலேயே திரும்பி வந்து அந்த தாயின் காலடியில் விழுந்து கதறுகிற காட்சியெல்லாம் நாம் தியேட்டருக்குள்தான் இருக்கிறோம் என்ற உணர்வற்று போக வைக்கும் தருணங்கள். ராதிகா பிரசித்தாவின் ஒவ்வொரு சென்ட்டிமீட்டரும் நடித்திருக்கிறது. வாழ்த்துக்கள் பெண்ணே…!

அதற்கப்புறம் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவர் அந்த ஆட்டோ டிரைவர் பாவெல் நவகீதன்! ஒரு கொதிக்கிற பாத்திரமாக என்ட்ரி கொடுத்து, மெல்ல மெல்ல சூழ்நிலையின் நியாயம் புரிந்து ஜில்லாகிறார். மிக கோபத்தோடு தலைமையாசிரியர் வீட்டுக்குள் என்ட்ரியாகி குமுறும் அவர், அந்த டீச்சரம்மா பேச்சின் அடர்த்தியான அர்த்தம் உணர்ந்து திரும்பும்போது நெகிழ வைக்கிறார். இந்த இடத்தில் அந்த டீச்சரின் வசனத்தில் அப்படியொரு ஜீவனும் உண்மையும்! ஸ்தோத்திர நேரம் முடிகிற வரைக்கும் வெளியிலேயே காத்திருந்து எல்லாரும் போனபின், ‘உங்க பொண்ணு எங்கே?’ என்று மிரட்டுகிற போது மத நல்லிணக்கமும் மரியாதையோடு எட்டிப்பார்க்கிறது.

அந்த குழந்தையின் அம்மாவை எங்குதான் பிடித்தார்களோ? அவரது உடல் மொழியும், ஒல்லியான தேகமும், நிலைகுத்தி நிற்கும் பார்வையும் வறுமை தின்ற தோற்றமும் அப்படியே உருக வைக்கிறது. தன் காலில் விழுந்த டீச்சரை அந்த இக்கட்டான சூழலிலும் கட்டிக் கொண்டு ஆறுதல் சொல்கிற காட்சியில் எளிய மனிதர்களைப் போல இருப்பவர்கள் எல்லாம், மனதாலும் எளியவர்கள் அல்ல என்பதையே உணர்த்துகிறது.

சாதாரணமாக விடுகிற ஒரு அறை, மத நம்பிக்கை வரைக்கும் டிஸ்ட்ரப் செய்வதாக காட்டியிருக்கிறார் டைரக்டர். ஆங்காங்கே கிறிஸ்துவ கோஷங்கள் வந்தாலும், எந்த காட்சியிலும் மத துவேஷம் இல்லை. அப்படியே இருப்பதை போல உணர்வு ஏற்பட்டாலும், எல்லாவற்றையும் மறக்கடிக்கிறது யதார்த்தம்.

சாய் ராஜ்குமார், மாஸ்டர் அஜய், சத்யா, குலோத்துங்கன், துர்கா, பிரத்தி, நிகிலா கேசவன், ஐஸ்வர்யா என்று படத்தில் இடம் பெற்ற இன்னும் பல கேரக்டர்களும் தனித்தனியாக பாராட்டப்பட வேண்டியவர்கள்.

இதுபோன்ற ஒரு பிரச்சனை கிளம்பினால், மீடியாவின் அரிப்பு எந்தளவுக்கு இருக்கும் என்பதையும் அவ்வப்போது காட்டுகிறார்களா? நம்மையும் அறியாமல் ஒரு குற்றவுணர்ச்சி வருகிறது.

சின்னதாய் பாடல்கள். ஸ்தம்பிக்க வைக்கிற இசை என்று தன் பங்குக்கு ஸ்கோர் அடிக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் ஷங்கர் ரங்கராஜன். வசனம் தேவைப்படுகிற இடங்களில் கூட அதற்கு பதிலாக மணிகண்டனின் ஒளிப்பதிவு பேசிவிடுகிறது. சி.எஸ்.பிரேம் தன் மிக நுணுக்கமான எடிட்டிங்கில் அந்த பையன் பிழைத்தெழுந்தான் என்பதை காட்சிப்படுத்தாமலே உணர வைக்கிறார்.

இந்த படத்தை பொறுத்தவரை குற்றம் (கண்டுபிடிப்பதுதான்) கடினம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

முக்கிய குறிப்பு- பள்ளிகளில் குழந்தைகளுக்காக படங்கள் திரையிடப்படுவது தடை செய்யப்பட்டிருப்பதாக அறிகிறோம். குற்றம் கடிதல் படத்திற்காக அந்த விதியை தளர்த்தலாம். பிற பாடங்களை விட, இந்த படம் சொல்லும் பாடம்தான் முக்கியமானது… மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கும்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சங்கடத்தில் கே.வி.ஆனந்த்! சிக்கலில் ஆர்யா! காரணம் யார்யா?

காதல் விவகாரங்களில் நின்று அடித்தாலும், கலெக்ஷன் விவகாரங்களில் நொண்டியடித்துக் கொண்டிருக்கிறார் ஆர்யா. ராஜா ராணி படத்திற்கு பிறகு தொடர்ச்சியாக ஐந்தாறு பிளாப் கொடுத்த நடிகர் அநேகமாக இவராகதான்...

Close