பிரதமர் மோடிக்கு… அன்புள்ள அணில் எழுதும் கடிதம்…!
திமுக தலைவர் கலைஞரை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறியிருக்கிறார் ரஜினி. அத்துடன் தனது கோச்சடையான் படத்தை பார்க்க வருமாறும் அழைப்பு விடுத்திருக்கிறார். கலைஞர் முதல்வராக இருந்த நேரத்தில் வள்ளுவர் கோட்டம் அருகிலிருக்கும் ஃபோர் பிரேம்ஸ் தியேட்டர் எந்நேரமும் அலர்ட்டாக இருக்கும். ‘தலைவர் படம் பார்க்க வர்றேன்னுட்டாரு. அதனால் உங்க படம் கேன்சேல்…’ என்று முன்பே ஒப்பந்தம் போட்டவர்களுக்கு கூட அவ்வப்போது திடீர் குண்டு வீசுவார் பொறுப்பாளர் கல்யாணம். கடந்த சில மாதங்களாகதான் இந்த பக்கமே வருவதில்லை கலைஞர். இருந்தாலும் இந்த சந்திப்பு அவரை மீண்டும் அங்கு கொண்டு வந்து சேர்க்கும் என்று நம்புவோமாக!
அப்படியே இன்னொரு தகவல். மோடியின் அணில் போல செயல்பட்ட விஜய், டெல்லிக்கு கடிதம் எழுதிவிட்டு காத்திருக்கிறாராம். எதற்கு? மோடியின் அப்பாயின்ட்மென்டுக்கு! பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தார் விஜய். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு ராஜபச்சேவையும் வரவழைத்திருந்தார்கள் அல்லவா? இதனால் பீறிட்டு கிளம்பிய தன் சந்தோஷத்தை சூட்கேசிலேயே அடைத்துவிட்டு அமைதியாகிவிட்டார் விஜய். இப்போது மீண்டும் அந்த ஆசை கிளம்பியிருக்கிறதாம். முறையாக பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. அங்கிருந்து நல்ல தகவல் வந்து சேர்வதற்கு முன் அவர் விஜயகாந்த்தை ஒரு முறை சந்தித்துவிடுவது உத்தமம் என்கிறார்கள் அரசியல் நிருபர்கள்.
காரணம்? இப்படிதான் விஜயகாந்தின் கன்னத்தை பிடித்து கிள்ளி தன் அன்பை வெளிப்படுத்திய மோடி, தனது பதவியேற்பு விழாவன்று விஜயகாந்துக்கு மேடையிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் சீட் ஒதுக்கினார். அதுவும் கேட்கப்பட்ட 10 பாஸ்களுக்கு மூன்றே மூன்று பாஸ்களை மட்டும் வழங்கி. இந்த அதிர்ச்சியின் காரணமாகவே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் சென்னை திரும்பினார் அவர். இந்த சோக கதையை விஜயகாந்த் வாயால் சொல்லி கேட்ட பிறகு விஜய் கிளம்பினால், எதற்கும் தயார் மன நிலையில் செல்லலாம் அல்லவா?
அரசியல்ல அணிலா இருந்தா என்ன? அனகோண்டாவா இருந்தா என்ன? சூழ்நிலைதான் சுளுக்கெடுது!