ரஜினி ஏன் திருப்பித் தரணும்? அக்ரிமென்ட் அப்படியா இருக்கு? அனல் பறக்குது கோடம்பாக்கம்.

லிங்கா படம் வெற்றியா? தோல்வியா? கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த சர்ச்சைக்கு நேற்று விடை கிடைத்துவிட்டது. ‘என்னை பொருத்தவரை லாபம்தான்’ என்று கூறிவிட்டார் சென்னைக்கு வந்து பிரஸ்சை சந்தித்த அப்படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ். ஆனால் லிங்காவை வாங்கி வெளியிட்ட வேந்தர் மூவிஸ் தலைமை நிர்வாகி டி.சிவா, ‘படம் எங்களுக்கும் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது. எங்களிடமிருந்து வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது. லிங்கா நஷ்டம்தான்…’ என்றார் தெளிவாக.

‘எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ரஜினியோ, அல்லது லிங்கா தயாரிப்பாளரான ராக்லைன் வெங்கடேஷோ திருப்பி தர வேண்டும். இல்லையென்றால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்’ என்று கூறுகிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தையும் சென்னையில் நடத்திவிட்டார்கள். பாதிக்கப்பட்ட கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் திருச்சி தஞ்சாவூர் விநியோகஸ்தரான சிங்காரவேலன். இந்த படத்தை எட்டு கோடிக்கு வாங்கியதாக கூறியிருக்கிறார் அவர்.

நிஜத்தில் அவர் பேசிய எட்டு கோடியில் ஐந்தரை கோடியைதான் கொண்டு வந்து கொடுத்தாராம். அதில் நாலரை கோடி தியேட்டர்காரர்களிடமிருந்து அட்வான்சாக பெறப்பட்ட பணம். கடந்த பல வருடங்களாகவே ஒரு படத்தை ஒரு குறிப்பிட்ட விலை பேசி அட்வான்ஸ் கொடுத்து வாங்கும் விநியோகஸ்தர்கள் ரிலீஸ் நேரத்தில் வந்து மீதித் தொகையை முழுவதும் செலுத்துவதேயில்லை. ‘இவ்ளோதான் இருக்கு. முடிஞ்சா படத்தை கொடு. இல்லேன்னா நான் கொடுத்த அட்வான்சை கொடு’ என்று நெருக்குவார்கள். சின்ன படங்களோ, பெரிய படங்களோ, எல்லாவற்றுக்கும் இப்படியொரு ‘அடியாள்’ போக்கைதான் கையாண்டு வருகிறார்கள் அவர்கள். வேறு வழியில்லாத தயாரிப்பாளர் ‘ஒழிஞ்சு போ’ என்று அவர்கள் பேசிய தொகையை விட குறைத்துக் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு படத்தை தருவார்கள்.

எல்லா படத்திற்கும் நடக்கும் இந்த கொடுமை கலெக்ஷ்ன் ராஜா என்று கொண்டாடப்படும் ரஜினி படத்திற்கும் நடந்ததுதான் வேதனை. அனைத்து ஏரியா விநியோகஸ்தர்களும் பேசிய தொகையிலிருந்து சில கோடிகள் குறைத்துதான் கொடுத்தார்களாம். அக்ரிமென்ட் என்ன தெரியுமா? எம்.ஜி. என்று சொல்லப்படும் மினிமம் கியாரண்டி. அப்படியென்றால்? விநியோகஸ்தர் ஒரு தொகையை தருவார். அது கலெக்ஷன் ஆகும் வரை வருகிற டிக்கெட் தொகையை அவரே எடுத்துக் கொள்வார். அதை தாண்டி கலெக்ஷன் வரும்போது அதை தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் பிரித்துக் கொள்வார்கள். ஒருவேளை விநியோகஸ்தர் கொடுத்த தொகை கலெக்ஷன் ஆகவில்லை என்றால், தயாரிப்பாளர் எவ்வித நஷ்ட தொகையையும் விநியோகஸ்தருக்கு தர தேவையில்லை. லிங்கா விஷயத்தில் போடப்பட்ட அக்ரிமென்ட் அதுதான்.

நாங்கள் வழக்கு போடுவோம் என்று கூறிய விநியோகஸ்தர்களுக்கு, நேற்று லிங்கா படத்தின் தயாரிப்பாளர் சொன்ன பதில் நியாயமானதுதான். ‘அக்ரிமென்ட்படி நாங்க திருப்பி தரணும்னு அவசியமில்ல. நீங்க வழக்கு போட்டா நான் சட்டப்படி அதை சந்திக்கிறேன்’ என்றார். ‘எல்லா விநியோகஸ்தர்களும் கடுமையா பாதிக்கப்பட்டிருக்காங்க. மனிதாபிமான அடிப்படையில் ரஜினி சாரும், ராக்லைன் வெங்கடேஷும் ஏதோ ஒரு தொகையை திருப்பி தர வேண்டும்’ என்கிறார் டி.சிவா.

ரஜினி சாரோட மனசு யாருக்கும் வராது. அவர் படங்களுக்கு மீடியேட்டர்கள் தேவையேயில்லை. படம் தானாக விற்கும். ஆனால் ‘மீடியேட்டர்கள் வந்தால் அவங்களை வேணாம்னு சொல்லிடாதீங்க. அவங்களுக்கும் பண்டிகை நாள் இருக்கு. குடும்பம் குழந்தைகள் சந்தோஷமா இருப்பாங்க இல்லையா? அவங்க மூலமா படத்தை வித்துக்கோங்க’ என்பார் ரஜினி சார். அவ்வளவு நல்ல மனசுக்காரர் அவர். இந்த பிரச்சனை ஆரம்பிக்கும் போது கூட என்னை கூப்பிட்டு, ‘நாலைஞ்சு வாரம் பொறுமையா இருக்க சொல்லுங்க. முழு கலெக்ஷனும் வந்த பிறகு கணக்கு வழக்கு பார்த்து அவங்க சந்தோஷப்படுற மாதிரி ஒரு தொகையை திருப்பி கொடுக்கலாம்னு சொல்லியிருந்தார். அதற்குள், ‘அவர் என்ன பெரிய தேசத்தலைவரா? 12 ந் தேதி அவர் பிறந்த நாளைக்குதான் லிங்காவை ரிலீஸ் பண்ணணுமா?’ன்னு கேட்டு டென்ஷன் ஏற்படுத்திட்டார் சிங்காரவேலன். அதையெல்லாம் தெரிஞ்சுதானே படத்தை வாங்குனீங்க? என்று பொங்குகிறார் ராக்லைன் வெங்கடேஷ்.

படம் 55 கோடிதான் பட்ஜெட். ஆனால் 220 கோடியை தமிழ்நாட்லேந்து ஒரு கன்னட தயாரிப்பாளர் கொள்ளையடிச்சுட்டு போயிட்டார்னு பேசுறார். அப்படியெல்லாம் பேசாதீங்க சிங்காரவேலன் சார். நீங்க சொல்றது உண்மைன்னு நிரூபிச்சிட்டா நீங்க கேட்கிற தொகையை கொடுத்துடுறேன். இல்லேன்னா பொது மன்னிப்பு கேட்கிறீங்களா? -ராக்லைன் வெங்கடேஷ் கண்ணீரும் ஆத்திரமுமாக இப்படி பொங்கி முடித்திருந்தார்.

நான்கு சுவற்றுக்குள் பேசி முடிக்க வேண்டிய ஒரு விஷயத்தை எல்லாரும் சேர்ந்து பொதுவில் வைத்து கும்மியடித்துவிட்டார்கள். மொத்தத்தில் ரஜினி இமேஜ் இவர்களால் கெட்டது!

1 Comment
  1. Uma says

    லிங்கா நிச்சயம் வெற்றிபடமே.ஒரு மாதம் கடந்தும் பல திரை அரங்குகளில் இன்னும் ஓடிகொண்டிருக்கிறது.ராக்லைன் வெங்கடேஷ் அவர்களின் வீடியோ பேச்சை கேட்டு என் மனம் கலங்கி விட்டது.நீங்கள் கவலை பட வேண்டாம் சார் ,எங்கள் மனதில் நீங்கள் இடம் பெற்று விட்டீர்கள் .இந்த அல்லக்கைகளை ஏவி விட்ட அந்த நடிகரின் படம் வரும்போது நாங்கள் பார்த்து கொள்கிறோம்.நிச்சயம் தலைவர் உங்களோடு மீண்டும் சேர்ந்து படம் பண்ணுவார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சேரனின் C2H திட்டம்… கிராமபுறங்களில் அமோக வரவேற்பு!

சேரனின் புதிய திட்டமான C2H எப்படியிருக்கும்? தேறுமா? தேறாதா? என்றெல்லாம் சைலண்ட்டாக ஒரு விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. ‘நம்ம பொழப்பை கொடுக்க ரூட் போடுறாரே இந்தாளு’ என்று...

Close