லிங்கா- விமர்சனம்

தலைக்கேற்ற கிரீடம் அமைந்துவிட்டால், தஞ்சை பெரிய கோவிலையே குனிந்து பார்க்க வைக்கிற அளவுக்கு மிரட்டுவார் ரஜினி. அப்படியொரு திரைப்படம்தான் லிங்கா! அறுபது வயதை கடந்த ஒருவரின் படத்தைதான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமா என்கிற வியப்பை நிமிஷத்துக்கு நிமிஷம் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார் அவர். அந்தஅழகென்ன, ஸ்டைல் என்ன, நுணுக்கமான நடிப்பென்ன, கம்பீரமென்ன…! மூன்று மணி நேர படத்தின் மோடி மஸ்தான் ரஜினி. ரஜினி மட்டும்தான்! இன்னும் ஐந்து வருஷத்துக்கு … ஏன், அதற்கப்புறமும் கூட ரஜினியின் இடத்தை ஒரு சுள்ளானும் நினைத்துப் பார்க்க முடியாது போலிருக்கிறது.

லாக்கப்பில் இருக்கும் ரஜினியை தன் சொந்த சாமர்த்தியத்தில் பேக்கப் செய்து அழைத்துக் கொண்டு செல்கிறார் அனுஷ்கா. வெளியே போனால்தான் தெரிகிறது, தாத்தா ரஜினி கட்டிய கோவில் ஒன்றை பேரன் ரஜினி வந்து திறக்க வேண்டும் என்பது. அனுஷ்காவை அன்பினிஷ்காவாக விட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிடலாம் என்று ரஜினி நினைத்தால், சுட சுட அவர் செய்த நெக்லஸ் திருட்டு ஒன்று விரட்டுகிறது. வேறு வழி? சில நாள் எஸ்கேப்பிசம் கருதி அனுஷ்காவுடன் தன் தாத்தா வாழ்ந்த கிராமத்திற்கே செல்கிறார். போன இடத்தில் தாத்தாவின் அருமை பெருமைகள் தெரியவர, பேரன் ரஜினியின் கடமைகள் என்ன? அதை செய்து முடித்தாரா என்பது க்ளைமாக்ஸ்.

முதலில் இந்த படம் குறுகிய கால தயாரிப்பு என்பதையே குறுகுறு பார்வையுடன் நோக்க வேண்டிருக்கிறது. படம் முழுக்க பிரமாண்டம்தான். அதுவும் தாத்தா ரஜினி ஒரு அணை கட்டுவதாக வருகிற காட்சிகள் எல்லாம் பணத்தை கொட்டி மனசை கொள்ளையடிக்கும் காஸ்ட்லி டெக்னிக்! நடுநடுவே கிராபிக்ஸ் கை கொடுத்தாலும், அந்த செட்..? சத்தியமாக சொல்லிவிடலாம், ரஜினியின் பிசினசில் கணிசமான பணத்தை கரைத்திருக்கும்.

அந்த இளம் ரஜினி, இப்போதிருக்கும் எல்லா ஹீரோக்களுக்கும் கூட சவால் விடுவார் போல. சந்தானம், கருணாகரன், பாலாஜி கோஷ்டிகளுடன் அவர் அடிக்கும் ரகளை செம ஸ்மார்ட். இடங்களை செலக்ட் பண்ணி திருடும் இந்த கோஷ்டியில், ரஜினி சொல்லும் ‘பறக்காஸ்…’ எதிலும் சேராத பஞ்ச் டயலாக் என்றாலும், அதை சொல்லும்போதெல்லாம் சிரிப்பு வருகிறது. நெக்லசை கொள்ளையடிக்க போன இடத்தில் அந்த கொஞ்சூண்டு இடத்தில் அனுஷ்காவும் ரஜினியும் சிக்கிக் கொள்வதும், குடு குடு ஓட்டத்துடன் ஓடி ஓடி ரஜினி திட்டம் போட்டு நெக்லசை அடிப்பதும் ரகளை. அந்த நேரத்திலும் கொஞ்சம் ரொமான்சை வழிய விட்டு அனுஷ்காவின் ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் போடுகிறார் டைரக்டர்.

இளைய ரஜினியின் துறுதுறுப்பை ரசித்து மீள்வதற்குள், அந்த பிளாஷ்பேக் ரஜினி என்ட்ரியாகிறார். அடடா… என்னவொரு லுக்? வெள்ளைக்காரனின் ராஜ்ஜியத்தில் ஒரு மாவட்டத்தின் கலெக்டர் இவர். விருட்டென்று தன் ராஜினாமாவை வீசிவிட்டு கிளம்பிவிடும் அவரை பிற்பாடு ஒரு மன்னராக காட்டும்போது அடடாவாகிறது தியேட்டர். தன் சொத்து முழுவதையும் அவர் அந்த அணைக்காகவும் மக்களுக்காகவும் செலவிட்ட பின்பும் ‘நம்ம மனுஷப்பயலுக எப்படியெல்லாம் நன்றி மறப்பானுங்க’ என்பதை போகிற போக்கில் போட்டுத் தாக்குகிறார் டைரக்டர். அணையை கல்லால் கட்டிவிட்டு அதற்கப்புறம் கட்டிய காட்சிகளையெல்லாம் சென்ட்டிமென்ட்டையே செங்கல்லாக அடுக்கி, ரஜினி பட ஃபார்முலாவை இன்னும் அழுத்தி பதிய வைக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

படம் முழுக்கவே ரஜினியின் ஒன்மேன் ஷோ என்றாகிவிட்ட பிறகும், அவரை மீறி ஸ்கோர் எடுக்கிற சாமர்த்தியம் ஒருவருக்கு மட்டும் இருக்கிறது. அவர்…? சந்தானம். மனுஷன் வாயை திறந்தால் தியேட்டர் கலீர் ஆகிறது. ஒரு காட்சியில் ‘நண்பேன்…’ என்று இவர் இழுத்து நிறுத்த, ரஜினியே அதை முடித்து வைக்கிறார் ‘…டா’ என்று! அந்தளவுக்கு ரஜினியின் இமேஜில் துக்குணுன்டு மண் கூட விழாமல் காப்பாற்றுகிறார்கள். சந்தானம் எல்லாரையும் உரசிப்பார்த்தாலும் ரஜினி விஷயத்தில் செம்ம்ம்ம்ம்ம அடக்கம். (அதுவும் நல்லதுதானே?) ஒரு டயலாக் வீச்சில் ரஜினிக்கு பி.எம். வரைக்கும் கூட பதவி கொடுக்க பரிசீலிக்கிறார் சந்தானம். ரஜினி விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அரசியலில் அவரை தள்ளாவிட்டால் அந்த வசனத்திற்கே விசனம் வருமோ என்னவோ?

சற்றே சதைப்பிடிப்புடன் இருக்கும் அனுஷ்காவும், அவரை விட டபுள் சதை பிடிப்புடன் இருக்கும் சோனாக்ஷியும் முறையே ரஜினியுடன் ஆளுக்கொரு டூயட் பாடி, அஜெண்டாவை நிறைவேற்றுகிறார்கள். அனுஷ்காவிடம் பிட்டிங் ஆகிவிடும் ரஜினி ஏனோ, சோனாக்ஷியிடம் முடிந்தவரை கட்டிங் ஆகி தள்ளியே நிற்கிறார். இருந்தாலும் அனுஷ்- ரஜினி ஜோடியை விட, சோனாக்ஷி -ரஜினி ஜோடி ரசிகர்கள் மனசை விரலால் தட்டி ‘உள்ள வரட்டா?’ என்கிறார்கள். விஜயகுமார், ராதாரவி என்று ரஜினி படத்திற்கேயுரிய செட் பிராப்பர்ட்டிகள் இந்த படத்திலும் உண்டு.

ரஜினியை புகழ்ந்து பாடும் அந்த வில்லேஜ் புலவனுக்கு ரஜினியும் திருப்பி சில பரிசுகள் அறிவிக்கிற காட்சியில், அவர் இந்த சமூகத்திற்கு எதையோ சொல்ல வருகிறார் என்பது மட்டும் புரிகிறது. அது என்னவா இருக்கும்?

ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் கேமிரா அனுஷ்காவை விட, சோனாக்ஷியை விட ரஜினி மீதுதான் அதிகம் கண் வைத்திருக்கிறது. அவரை இன்ஞ் இன்ஞ்சாக ரசித்திருக்கிறார் ரத்னவேலு. ரயில் ஃபைட் காட்சியில் சுற்றி சுழலும் அதே கேமிரா, மைசூர் மாளிகையின் அழகையும், அந்த அணைக்கட்டின் பிரமாண்டத்தையும் காட்டி வாய் பிளக்க வைக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையை சற்றே கவலையோடுதான் அணுக முடிகிறது. ரஜினியின் அறிமுகப்பாடல் இதற்கு முன் எந்த படத்திலும் இந்தளவுக்கு சுமாராக இருந்ததில்லை. டூயட்டுகளில் அனுஷ்காவுக்கு அதிர்ஷ்டமில்லை. ஆனால் சோனாக்ஷியுடன் ரஜினி பாடும் சின்ன சின்ன நட்சத்திரம் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது. ரஹ்மானின் குரலில் ஒலிக்கும் இந்தியனே… மற்றுமொரு வந்தேமாதரம்.

ஒரு யதார்த்தமான கதையில் இப்படியொரு நம்ப முடியாத கிளைமாக்ஸ் தேவையா என்கிற கேள்வி எழாமல் இல்லை. இந்த கதை அப்படியே பென்னிகுயிக்கின் கதையை தழுவி எடுக்கப்பட்டிருப்பதால், அந்த மகா மனிதனுக்கு டைட்டிலில் ஒரு கவுரவம் தந்திருக்கலாம்.

லெங்த்தோ லெங்த் என்று படம் குறித்து அஞ்ச வேண்டியிருந்தாலும், ரஜினி என்கிற மூன்றெழுத்து மந்திரம் என்னவோ தந்திரம் செய்து எல்லாவற்றையும் மறக்கடிக்கிறது.

லிங்கா- ரஜினி பக்தர்களுக்கு மட்டும் ரிவர் கங்கா!

-ஆர்.எஸ்.அந்தணன்

2 Comments
  1. Suriyanarayanan says

    மனித தெய்வம் ரஜினியின் லிங்கா படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி நடை போட்டு வருகிறது. இனி வரும் காலம் எங்களின் லிங்கா ஆட்சி தான்.

  2. Kathiresan says

    லிங்கா – தாராளமாகப் பார்க்கலாம்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
10th Year We Magazine Ceremony Event Stills

Close