‘லிங்கா ’ க்ளைமாக்ஸ்… அண்டா அண்டாவாக தயாராகும் சாப்பாடு
ரஜினி, விஜய், அஜீத் மாதிரி கமர்ஷியல் ஹீரோக்களின் படங்கள் வந்தால் யாருக்கு கொண்டாட்டமோ, இல்லையோ? ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகள் என்று சொல்லப்படும் கிரவுட் புல்லிங் ஆசாமிகளுக்கு கொண்டாட்டமோ கொண்டாட்டம்! நிச்சயம் கிளைமாக்ஸ் காட்சியில் கூட்டத்தோடு கூட்டமாக நிற்கிற மாதிரி ஒரு சீனாவது எடுப்பார்கள். அந்த ஆயிரத்தில் ஒரு ஆளாக நின்றாலும் தினந்தோறும் துட்டு என்கிற கால்குலேஷன்தான் அது. (கமல் படங்கள் அப்படியல்ல, சில நேரங்களில் அவர் ஒருவரே தனியாளாக நின்று கிளைமாக்சை முடிவுக்கு கொண்டு வந்துவிடுவார்)
ரஜினி படங்களில் இன்னும் விசேஷம். தனக்கு தெரிந்தவர்கள், சினிமாவில் பல வருடமாக நடித்துக் கொண்டிருந்தாலும் வாய்ப்பில்லாமல் தவிப்பவர்கள், இவர்களோடு வாய்ப்பு தராவிட்டால் சந்து முனையில் நின்று வம்பு கிளப்புகிறவர்களையும் சேர்த்துக் கொள்வார். லிங்கா எப்படி? பெரும் திருவிழா கொண்டாட்டமாக இருக்கிறதாம். அதுவும் இப்போது கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். கர்நாடகா மாநிலம் ஷிமோகா நீர்வீழ்ச்சியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சுமார் 3000 ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகள் நடித்து வருகிறார்களாம். வம்பே வேண்டாம் என்று தமிழ்நாட்டிலிருந்தும் கணிசமான அளவுக்கு ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகள் அழைக்கப்பட்டிருக்கிறார்களாம். இந்த நேரத்தில்தான் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். ஒரு அசம்பாவிதம் நடந்தாலும் ஊரைக்கூட்டி உடுக்கை அடித்துவிடுவார்கள் என்பதால், கவனமாக இருக்க சொல்லியிருக்கிறாராம் ரஜினி.
அத்தனை பேருக்கும் உணவு தயாரிக்க வேண்டும். பரிமாற வேண்டுமல்லவா? சுமார் 100 சமையல்காரர்கள் இதற்காகவே பணியமர்த்தப்பட்டுள்ளனராம். குக்கிங் காட்சியையே ஒரு மேக்கிங் வீடியோவாக்கலாம் போலிருக்கிறதே?