வரம் எனப்படுவது யாதெனில்… பிரியாணியில் லெக்பீஸ்! காதலில் லிப் கிஸ்!
வரம் எனப்படுவது யாதெனில்… பிரியாணியில் லெக்பீஸ், காதலில் லிப் கிஸ்! முதல் படத்திலேயே அந்த வரம் கை கூடிவிட்டது லுத்ஃபுதீனுக்கு! யார் இந்த லுத்ஃபுதீன் என்பவர்களுக்கு சுருக்கமாக சொல்லிவிட்டால் மேற்கொண்டு பேச்சில்லை! பன்னெடுங்காலமாக தமிழரின் மனசில் நிறைந்த நடிகர் நாசரின் மகன்தான் இவர். சிங்கப்பூரில் படித்துக் கொண்டிருந்தவருக்கு திடீர் அழைப்பு விடுத்தவர் டைரக்டர் தனபால் பத்மநாபன். இவர் ஏற்கனவே ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ என்ற படத்தின் மூலம், நல்லபட இயக்குனர் என்று நாலு பேரிடம் கைதட்டல் வாங்கியவர். இவரது அடுத்த படைப்பு ‘பறந்து செல்ல வா’. இதில்தான் லுத்ஃபுதீன் அறிமுகம்.
முழுக்க முழுக்க காதலும், காதலை சுற்றிய கலகலப்பும்தான் படம். ட்ரெய்லரில் காண்பிக்கப்பட்ட அந்த லிப் கிஸ், லுத்ஃபுதீனுக்கு சங்கோஜத்தையும், பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு சந்தோஷத்தையும் கொடுக்க… முத்தம் பற்றிய நெடுங்கதைக்கு ஒரு பிளாஷ் பேக் அடித்தது அந்த மேடை! படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிரஸ்மீட்டில், இந்த முத்தம் குறித்து அதிகம் பதறியவர் மகனைவிட அப்பா நாசர்தான். “தம்பி… படத்துல அந்த காட்சியை தவிர வேற ஒண்ணும் விவகாரமா இல்லையே?” என்று மகனிடம் கேட்க, அவரோ முகங் கொள்ளாத வெட்கத்தோடு “இல்லப்பா…” என்றது தனி அழகு!
“முத்தக்காட்சி பார்த்துட்டு அம்மா என்ன சொன்னாங்க?” என்று நடுவில் புகுந்து கேள்வி வீசிய நிருபர் ஒருவருக்கு, “அவங்க ஒண்ணும் சொல்லல. ஆனா எதுவும் கேட்ருவாங்களோன்னு எனக்கு பயமா இருந்தது” என்றார் லுத்ஃபுதீன்.
கோடம்பாக்கத்தில் திரும்பிய இடத்திலெல்லாம் ஹீரோ கனவோடு இளைஞர்கள் திரிந்து கொண்டிருக்க, ஏன் இந்த லுத்ஃபுதீன்? தனபால் பத்மநாபன் விளக்கினார்.
இந்தக்கதையை நான் சொல்லாத ஹீரோக்கள் இல்லை. எல்லாருமே கதையே கேட்டுட்டு ஆஹா ஓஹோன்னு புகழ்ந்தாங்க. ஆனால், படம் முழுக்க ஹீரோ இருந்தாலும், முக்கிய முடிவுகள் எதையும் அவர் எடுக்க மாட்டார். மாறாக படத்தில் வந்து போகிற பெண் கேரக்டர்கள்தான் எடுக்கும். கடைசி ஒரு சீன்லயாவது அந்த முடிவை நான் எடுக்கிற மாதிரி மாற்ற முடியுமான்னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. கதையை மாத்த சொல்லாத ஹீரோ கிடைப்பாங்களான்னு நான் தவிச்ச நேரத்தில்தான் சைவம் படம் பார்த்தேன். அதில் சின்னதா ஒரு கேரக்டர் பண்ணியிருந்த லுத்ஃபுதீன் எனக்கு பிடிச்சிருந்தார். தயாரிப்பாளர் அருமைச்சந்திரனிடம் சொன்னேன். மறுபடியும் நானும் அவரும் சேர்ந்து அந்தப்படம் பார்த்தோம். அப்புறம்தான் கான்பிடன்ட்டாக அவரை புக் பண்ணினோம் என்றார்.
நானும் இதுக்கு முன்னாடி வாடா போடா நண்பர்கள், ஓம் சாந்தி ஓம் னு ரெண்டு படம் தயாரிச்சேன். ஆனால் அந்த படத்தில் எனக்கு வேறு அனுபவத்தை கொடுத்துட்டாங்க. ஆனால் தனபால் பத்மநாபன் இனிமையான அனுபவத்தை கொடுத்தார். அவருக்கு நன்றி என்றார் தயாரிப்பாளர் அருமைச்சந்திரன்.
ஒரு தயாரிப்பாளர் முதல் இரண்டு படங்களில் வலி சுமந்து, மூன்றாவது படத்தையும் நம்பிக்கையோடு எடுப்பது ஒரு சிறப்பு என்றால், அவர் வாயாலேயே “இந்த படம் இனிமையான அனுபவம்” என்று சொல்ல வைத்தாரே… அந்த டைரக்டரின் பண்புதான் அதைவிட சிறப்போ சிறப்பு!
பின்குறிப்பு- முத்த சர்ச்சைக்கு ஆளான அந்த நடிகையின் பெயர் நரேல் கெங். பூர்வீகம் சைனாவோ, மலாயோ?! படத்தில் அவர் போடும் பைட் ஒன்று, புரூஸ்லீயின் பொம்பளை வடிவம் என்று அவரை புகழ வைக்காமல் விடாது!