ஓய்… என்று எந்த பெண் கூப்பிட்டாலும் திரும்பி பார்க்கணும்! இல்லேன்னா…?

தமிழன் மறந்து போன தமிழ் அகராதிக்கெல்லாம் இப்பதான்யா மவுசு! அழி ரப்பர், ஷார்ப்னர், பென்சில் மாதிரி கோடம்பாக்க வீதிகளில் அம்புட்டு ஈசியாக கிடைக்கும் ஒரு விஷயம் தமிழ் அகராதிதான்! இந்த திடீர் மாற்றம் எப்படி? ஏன்? எல்லாம் சினிமாவுக்கான தலைப்பு பஞ்சம்தான். எந்த தலைப்பை வைத்தால் ரசிகர்களை கவரலாம் என்று மண்டையை பிய்த்துக் கொள்கிறார்கள் இயக்குனர்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கெல்லாம் ஆபத் பாந்தவனாக இருப்பதும் இந்த டிக்ஷனரிதான். கோ, அயன், அனேகன் என்று இது கே.வி.ஆனந்த் தொடங்கி வைத்த பழக்கமாக இருக்கலாம்.

‘ஓய்…’ இப்படியொரு தலைப்பை தன் படத்திற்கு வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பிரான்சிஸ் மார்க்கஸ். ஓய் என்றால் தமிழ் அகராதி சொல்லும் விளக்கங்களில் ஒன்று… ஜோடித்தல்! ஒரு விஷயத்தை ஜோடிச்சு சொல்றோமில்லையா? அதுதான் இந்த படத்தின் முக்கியமான ஏரியா. அதுமட்டுமல்ல, படத்தின் ஹீரோயின், ஹீரோவை பார்த்ததும் ஓய்னு கூப்பிடுவார். ஆனால் ஹீரோ அதை காதில் வாங்கிக்காம போயிடுவார். அதனால் ஏற்படும் பிரச்சனைதான் படத்தின் முக்கியமான நாட் என்கிறார் மார்க்கஸ்.

புதுமுக இயக்குனர், புதுமுக நடிகர் நடிகைகள், இப்படி பத்தோடு பதினொன்று லுக்கை சடாரென மாற்றிய ஒரே விஷயம், இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் என்பதுதான். ஓய் படத்தின் தயாரிப்பு நிர்வாகியாக சங்கிலி முருகன் உள்ளே வந்ததும், டைரக்டர் மார்க்கஸ் ஆசைப்பட்ட விஷயம் ஒன்றே ஒன்றுதான். சார்… நம்ம படத்துக்கு இளையராஜா சார் இசையமைக்கணும். அதுக்கு ஏதாவது வழியிருக்கா என்று கேட்க, அவர் கதை கேட்பார். புடிச்சிருந்தாதான் மற்றதெல்லாம். முதல்ல கதை கேட்பாரான்னு பார்க்கலாம் என்றாராம் சங்கிலி முருகன்.

“அவ்ளோ பெரிய இசையமைப்பாளர். மூன்று தலைமுறைகள் வியக்கும் இசையமைப்பாளர், என்னை உட்கார வைச்சு கதை கேட்டதே நான் செஞ்ச பாக்கியம். கதையை முழுசா கேட்டு முடிச்சதும், இப்பவே கம்போசிங்ல உட்காரலாம்னு சொல்லிட்டார். அதுமட்டுமல்ல, பொதுவா தான் இசையமைக்கும் படத்தின் பாடலாசிரியர்களை அவரே முடிவு செய்து கொள்வார். ஆனால் “உங்க மனசுல யாரை எழுத வைக்கணும்னு ஆசைப்படுறீங்க?” என்று கேட்டது இன்னும் வியப்பு. அப்புறம் நான் விவேகாவை பற்றி சொல்ல, இந்த படத்தில் மூன்று பாடல்களை விவேகா எழுதியிருக்கார்” என்றார் மார்க்கஸ்.

“கிட்டதட்ட நூற்றுக்கணக்கான பாடல்கள் எழுதிட்டேன். ஆனால் இசைஞானி கூட இப்பதான் முதன் முதலா எழுதுறேன். அதுக்கு நான்தான் இந்த டீமுக்கு நன்றி சொல்லணும்” என்றார் விவேகா!

ஒரே ஒரு இளையராஜா வந்து ‘ஓய்’-யை ஒரேயடியா ‘ஜாய் ஜாய் எஞ்ஜாய்’ ஆக்கிட்டாரே!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அரசியலை தொடர்ந்து சினிமாவிலும் தலை விரித்தாடும் சாதி! நல்லா வௌங்குச்சு போ!

கடந்த சில தினங்களுக்கு முன் கோடம்பாக்கத்தில் உலவிய வாட்ஸ் ஆப் தகவல் ஒன்று, “உலகம் எங்கய்யா போயிட்டு இருக்கு?” என்ற கவலையை ஏற்படுத்த தவறவில்லை. ஏன்? சமீபத்தில்...

Close