‘உங்களை பார்த்தா சினேகா மாதிரியே இருக்கு! ’ ஆடியோ விழாவில் ஹீரோயினை கணக்கு பண்ணிய ஹீரோ?
கேமிராவுக்கு பின்னேயும் முன்னேயும் எப்படி நடந்து கொண்டாலும், பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ்சின் கேமிராவுக்கு முன்னே பூனை போலாகிவிடுவதுதான் கதாநாயகர்களின் வழக்கம். ஆனால் எவ்வித சங்கோஜத்திற்கும் இடமில்லாமல் தன்னுடன் நடித்த ஹீரோயினை ஹீரோ மேடையிலேயே வர்ணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காதல் 2014 என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை ஆனந்த் தியேட்டர் கலையரங்கத்தில் நடைபெற்றது. படத்தின் ஹீரோ ஹரீஷ், நாயகி நேகாவை பாராட்டி பேசுவதாக நினைத்துக் கொண்டு வழிந்தார். இது போல ஓராயிரம் பட்டாம்பூச்சி பண்ணைகளையே பார்த்துவிட்ட பிரஸ்சுக்கு இந்த சிக்னல் எதற்காக என்பது சட்டென்று புரியவர, நல்லாயிருக்கட்டும் ஜோடி என்று மனசுக்குள் வாழ்த்தியபடியே இடத்தை காலி செய்தார்கள். அப்படி என்னதான் பேசினார் ஹரீஷ்?
‘இந்த படத்தின் ஹீரோயின் நேகாவுக்கு இது நாலாவது படம். படத்துக்கு படம் அவங்க மெருகேறிகிட்டேயிருக்காங்க. அழகாகிட்டேயிருக்காங்க. அவங்க சிரிப்பு ரொம்ப அழகா இருக்கும். சினேகாவுக்கும் நேகாவுக்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம். இவங்க சிரிப்பு கூட சினேகா சிரிப்பு மாதிரியே இருக்கு’ என்று வர்ணித்துக் கொண்டே போக, வெட்கத்தால் முகம் சிவந்தார் நேகா. காதல் எத்தனையோ கட்டங்களை தாண்டி வந்துவிட்டது. நான் இந்த படத்தில் சொல்லப் போகும் 2014 காதல். என்று ஒரு சஸ்பென்ஸ் வைத்து நிறுத்தினார் படத்தின் இயக்குனர் சுகந்தன். இவர் சேரனிடம் ஆட்டோகிராஃப் படம் வரைக்கும் பணியாற்றியவராம்.
பாய்ஸ் மணிகண்டன், இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். பைசல் இசையில் ஐந்து பாடல்களுக்கு மேல் உருவாக்கப்பட்டுள்ளதாம். இதற்காகதான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் ‘என் வீட்டுல நான் இருந்தேனே… அவ வீட்டுல அவ இருந்தாளே…’ பாடலை எழுதிய லலிதானந்த் இந்த படத்திலும் அதே போலொரு பாடல் எழுதியிருக்கிறார். அதை கானா பாலா பாடியிருக்கிறார். எங்க கூட்டணி இன்னும் பல வருஷத்துக்கு அப்படியே இருக்கணும் என்று வேண்டிக் கொண்டார் லலிதானந்த்.
வழக்கம் போல எல்லா விழாக்களிலும் தான் பாடிய பாடலை பாடி கூட்டத்தை மகிழ்விக்கும் கானா பாலா இந்த விழாவிலும் மேற்கூறிய பாடலை பாட, வழக்கம் போல விழா களைகட்டியது. கானா இருக்கிற வரைக்கும் பாலாவும், பாலா இருக்கிற வரை கானாவும் செழிப்பாகதான் இருக்கும் போல…