லைக்கா பெயர் கட்! உடைக்கப்பட்ட தியேட்டர்! கப்சிப் விஜய், முருகதாஸ்!
கத்தி வருமா, வராதா? என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இனிப்பாக வந்த அந்த செய்தி, அடுத்த கொஞ்ச நேரத்திலேயே இப்படி ஒரு கசப்பை தரும் என்று யாரும் நினைத்திருக்க முடியாது. நேற்று இரவு சுமார் பதினொரு அளவில் தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகனுடன் பேச்சு வார்த்தை நடத்தி அதில் சுமூக முடிவையும் எட்டியது கத்தி தயாரிப்பாளர் வட்டாரம். கத்தி விளம்பரங்களில் லைக்கா பெயரை பயன்படுத்துவதில்லை, படத்தின் டைட்டிலில் லைக்கா வழங்கும் என்கிற காட்சி வராது போன்ற முக்கிய நிபந்தனைகளுக்கு சம்மதித்த தயாரிப்பு தரப்பு, தமிழகம் மற்றும் பாண்டிச்சேரிக்கு மட்டுமே இந்த மாற்றம். மற்றபடி உலகம் முழுக்க வெளியாகும் பிரிண்டுகளில் இந்த மாற்றத்தை செய்ய இயலாது என்று கூறினர்.
அதற்கு சம்மதித்தாராம் வேல்முருகன். அதற்கப்புறம் நடந்ததுதான் அநியாயம். சுமார் 11.30 மணி அளவில் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள சத்யம் தியேட்டர் வளாகத்திற்கு ஆட்டோவில் வந்த சுமார் 30 பேர் கொண்ட கும்பல் கல்வீச்சு நடத்தியும் பெட்ரோல் குண்டுகளை வீசியும் தியேட்டரின் முகப்பை நாசம் செய்தார்கள். இதில் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி அறையினால் ஆன டிக்கெட் முன்பதிவு பகுதி முற்றிலும் சேதமானது. உடனடியாக அங்கிருந்து கும்பல் வெளியேறியது. நல்லவேளையாக தியேட்டர் ஊழியர்களுக்கு காயமோ, ஆபத்தோ இல்லை.
அப்படியே ராயப்பேட்டையில் உள்ள வுட்லண்ட்ஸ் தியேட்டரிலும் வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. (அதே நபர்களா, அது வேறு குரூப்பா?)
இதற்கிடையில் இன்று வெளியாகியுள்ள கத்தி நாளிதழ் விளம்பரங்களில் லைக்கா நிறுவனத்தின் பெயர் இல்லை. இந்த வன்முறை தொடர்பாகவோ, பேச்சு வார்த்தையின் முடிவு தொடர்பாகவோ விஜய்யோ, படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசோ இதுவரை கருத்து ஏதும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.