விதி வலியது. அந்த விதியை விட வலியது போதை!

உலகம் முழுக்க ‘இருக்கு’ன்னு சொல்றவனை விட, ‘இருக்கா?’ன்னு கேட்கிறவனோட எண்ணிக்கைதான் ஜாஸ்தியாயிருக்கு! அறிவிருக்கா? மூளையிருக்கா?ன்னு ஆரம்பிச்சு, நடு ராத்திரியில கதவ தட்டி, ‘உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?’ன்னு கேட்கிற வரைக்கும் நாளுக்கு நாள் வளர்ந்துகிட்டேயிருக்கு கேள்வி கேட்கிற கூட்டம். நல்லவேளை… ‘உங்க பிரஷ்ல கைப்பிடி இருக்கா?’ன்னு கேட்காம விட்டாய்ங்களே? அதிருக்கட்டும்… ‘இன்னைக்கு பார்ட்டி இருக்கா மச்சி?’ ‘எந்த பார்ல மீட் பண்றோம்?’ குவார்டரோட நிறுத்திக்கணுமா? ஆஃப் வரைக்கும் எகிறலாமா? என்கிற கேள்விகள் மட்டும் தமிழ்நாட்டில் வினாடிக்கொரு முறை கேட்கப்படுவதாகவும், இந்தியாவில் அரை வினாடிக்கு ஒருமுறை பயன்படுத்தப்படுவதாகவும் தன்னோட பல வருட ஆராய்ச்சியின் முடிவை எழுதி வச்சுட்டு போய் சேர்ந்துட்டாரு தத்துவமேதை ‘லார்ஜ்’ஸ்டாட்டில்!

நிற்பன… நடப்பன… ஊர்வன… போன்ற விலங்கினத்திற்கு பிறகு, தமிழ்நாட்டில் ‘தடுக்கி விழுந்து தவழ்வன…’ என்றொரு புதிய ரக மனித இனம் உருவாகியிருக்கிறது. அது தேவையா? இல்லையா? என்பது குறித்து திடீர் விழிப்புணர்வு ஏற்பட்டு அரசியல் கட்சிகள் போராட்டங்களை மேற்கொண்டிருக்கின்றன. ‘வரப்போற தேர்தலை மனசுல வச்சுகிட்டுதான் இந்த குதி குதிக்கிறானுங்க… நீ ஊத்து மச்சி’ என்று எதற்கும் கவலைப்படாமல் ஒரு கூட்டம் குடித்துக் கொண்டிருக்க, சரோஜாதேவி காலத்துலேயும் குடிச்சேன். நதியா காலத்துலேயும் குடிச்சேன். தமன்னாவோட பேத்தி காலத்திலும் குடிப்பேன்னு நிக்குற சினிமாக்காரங்களின் ‘குடி’ கதையை எழுதினா எப்படியிருக்கும்னு தோணுச்சு.

அதன் விளைவுதான் இந்த ‘மாலை நேரத்து மயக்கம்!’

‘கும்மோணம் போறீயாம்ல? வர்றச்சே கொஞ்சம் காபி பவுடர் வாங்கிட்டு வந்துர்றீயா?’ என்று கேட்கிற ருசியாளர்கள் இப்போதும் சென்னையில் இருக்கிறார்கள். ஆனால் அதே கும்மோணத்திலிருந்து கிளம்பி வந்த டைரக்டர் அவர். இத்தனை ஆண்டுகாலமாக ஜொலித்த அவரது வொயிட் கலர் லைப் இப்போ காபி பவுடர் கலருக்கு மாறியாச்சு. வாழ்க்கை ஒரு பொட்டலம்! மேல சுத்தியிருக்கிற சணலை பிரிச்சாதான் சந்தோஷம்! பிரிக்காமலே வச்சுருந்தா பிரயோஜனமேயில்ல என்கிற மளிகைக்கடை தத்துவத்தை மனசுக்குள் சுமந்தவராச்சே? வந்த கொஞ்ச வருஷத்திலேயே ஆனந்தமா டேக் ஆஃப் ஆகிட்டாரு.

வளர்ச்சி என்றால் வளர்ச்சி. அபார வளர்ச்சி. எடுத்த படமெல்லாம் ஹிட். தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர் என்ற பெயர் வந்துவிட்டது. அரையாண்டு பரீட்சையை காலாண்டிலேயே எழுதுற அளவுக்கு பையன் தேறிட்டாரே… என்று நினைத்த கூட்டம், நைசாக அன்னப்பறவையோடு ஆந்தையையும் அனுப்பி வைத்தது. பன்னீர் சோடாவுக்கே பகீர் ஆகிற மனுஷனை கோக்கோ கோலா பாட்டில் கிடைத்தால் கூட, அதை அடியில தட்டி, கழுத்தில் திருகிற வித்தையை கற்றுக் கொடுத்தது.

பார்ட்டி என்ற பெயரில் வரும் சாயங்கால அழைப்புகளுக்கெல்லாம் தவறாமல் போகும்படி ஆக்கியது அந்தஸ்து! அவ்வளவு அழைப்புகளுக்கு மத்தியிலும் சாம்பாரில் காய்கறி போல ஊறிக்கிடக்காமல், பொங்கலில் மிளகு போல பட்டும் படாமல்தான் கிடந்தார் அவரும். இன்றோ- அவரது மன உளைச்சல் போக்க தினம் ஒரு டாஸ்மாக்கை எழுதி வைத்தாலும் கூட போதாது என்கிறார்கள் திரையுலகத்தில். இன்றைய தேதியில் அவருக்கு கடன் 100 கோடிக்கும் மேல் என்கிறது சினிமாவுலகம்.

நல்லாயிருந்த மனுஷன் ஏன் இப்படி ஆனார்? எல்லாம் ஒரு பார்ட்டியால் வந்த வினை. அன்று மட்டும் அந்த பார்ட்டிக்கு அவர் போகாமலிருந்திருந்தால், அந்த பெரிய நடிகரை சந்திக்காமலே இருந்திருப்பார். அந்த சம்பவம் நிகழ்ந்தே இருக்காது. இப்பவும் கடனுக்கு அஞ்சாத கட்டிளம் காளையாக இன்டஸ்ரியில் இறுமாந்து சுற்றிக் கொண்டிருந்திருக்கலாம். எல்லாம் செந்தில் கையில் நசுங்கிய மேண்டிலாகிவிட்டது! ‘அண்ணேய்… இதுதான் மேண்டிலா?’ என்று அன்றாடம் வந்து ஆபிஸ் கதவை தட்டி ‘நசுக்கிவிட்டு’ போகிறார்கள் துஷ்டர்கள்.

வார்த்தைக்கு வார்த்தை சொல்வார் அவர். ‘நானெல்லாம் ஊர்லேர்ந்து வரும்போது என்னத்தை கொண்டு வந்தேன்? எல்லாம் இங்கு வந்தபின் கிடைத்தது. நான் பார்க்காத கோடியில்ல. நான் பார்க்காத புகழ் இல்ல. நான் பார்க்காத சொர்க்கம் இல்ல. இவ்வளவு இருந்தும் நிறைவேறாத ஒரு ஆசையிருக்கு. தமிழ்சினிமாவின் அடையாளமா இருக்கிற அந்த ரெண்டு பேரையும் வச்சு தனித்தனியாவோ, அல்லது சேர்த்து வச்சோ ஒரு படம் பண்ணிடணும். அதுக்காக என் சொத்தே அழிஞ்சாலும் பரவால்ல’

யாராவது ஏதாவது வேண்டினால், அதை காது கொடுத்து கேட்டுவிட்டால் ‘ததாஸ்து…’ என்பாராம் கடவுள். நம்ம டைரக்டர் அந்த கடைசி வாக்கியத்தை சொல்லி முடிக்கும்போது, அவர் என்ட்ரி! ‘ததாஸ்து…’ என்று வாய்நிறைந்து சொல்லிவிட்டார். அப்படியென்றால்? ‘அப்படியே ஆகட்டும்’ என்று அர்த்தமாம்!

அது ஒரு பிறந்தநாள் பார்ட்டி. இவருக்கும் அழைப்பு வந்தது. யாரெல்லாம் வர்றாங்க? என்று கேட்பதற்கு வேலையில்லை. ஏனென்றால் அந்த பார்ட்டியை வைப்பதே இவர் வியக்கும் அந்த பெரிய நடிகர்களில் ஒருவர்தான். அவரது பிறந்த நாளுக்கான கொண்டாட்டம்தான் அது.

சென்னையின் மையப்பகுதியிலிருக்கும் அந்த ஸ்டார் ஓட்டல், தனக்கான புது சட்டைகளை போட்டுக் கொண்டு தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஜாம்பவான்களையும், மிகப்பெரிய சாணக்கியர்களையும் வரவேற்க தயாரானது. அந்த பெரிய ஹாலில் கிளாரினெட் இசை மெல்லிசாக ஒலித்துக் கொண்டிருந்தது. தரை விரிப்புகளா, அல்லது ரத்தினக் கம்பளங்களா? என்று யோசிக்கிற அளவுக்கு பளபள உலகமாயிருந்தது அந்த இடம். இன்னும் சிறிது நேரத்தில், கிளாரிநெட் ஓசை மறைந்து கிளாஸ்நெட் ஓசைக்கு மட்டுமே வேலை.

சம்பிரதாயத்திற்காக கேக் வெட்டினார்கள். அவர் இவருக்கு ஊட்டினார். இவர் அவருக்கு ஊட்டினார். அங்கிருந்த மிச்சம் மீதி கேக்கை யாரோ யாருக்கெல்லாமோ ஊட்டி ஊட்டி நிமிடத்தில் கேக் மேசையை காலி பண்ணினார்கள். அவரைப்போல வருமா? என்று ஒப்புக்காக பேசினார்கள். உண்மையில் அத்தனை கண்களும் தப்பு பண்ணும் அந்த நேரத்திற்காக காத்திருந்தன.

சற்று நேரத்தில் கலர் கலரான ராஜகுமாரன்களை தாம்பாளத்தில் ஏந்தி வந்த ஓட்டல் ஊழியர்கள் அவரவர் மேசைகளில் அவற்றை வைத்துவிட்டு பவ்யமாக திறந்து கோப்பையில் ஊற்றியதுடன் அடுத்த கட்டளைக்காக காத்து நின்றார்கள். அதுவரை கேட்டுக் கொண்டிருந்த கிளாரிநெட் நாக்கெல்லாம் புரண்டு குளறிநெட் ஆனது. மெல்லிய கெட்டி மேளம் மெல்ல மெல்ல செண்டை மேளமானது. மாட்டு சந்தையில் ‘…ம்மா’ சப்தம் அதிகம் கேட்கும். ஆட்டு சந்தையில் ஒரே ‘ம்மே…..’தான். இது இரண்டும் கலந்த சந்தையல்லவா! குழறினார்கள்… குமுறினார்கள்… குதித்தார்கள்…

நம்ம டைரக்டரின் கண்கள் முழுக்க அந்த பெரிய ஹீரோவின் வசமே இருந்தது. அவரை அருகில் வரவழைக்க வேண்டுமே? இரு கைகளையும் தட்டி ‘லிசன் ப்ளீஸ்… ’ என்றார் ஓங்கிய குரலில். எல்லாரும் இவரையே திரும்பிப்பார்க்க, ஒரு தேர்ந்த சர்க்கஸ்காரனை போல அந்த மதுக்கோப்பையை எடுத்து மண்டையில் வைத்துக் கொண்டார். அப்படியே நின்றது அது. ‘நான் ஆடட்டுமா?’ என்றார். அதற்குள் அவரது ராஜகம்பீர ஹீரோ அருகில் வந்து அந்த கிளாசை அப்படியே கைப்பற்றிக் கொண்டார்.

‘எதுக்கு ஆடணும்? உட்கார்ந்தே சாப்பிடலாமே?’

உட்கார்ந்தார்கள்….

ஊரில் டூரிங் கொட்டாயில் மண்ணை குவித்து திரையில் பார்த்த அழகன். இதோ நம் அருகில். தொட்டு விடும் தூரத்தில்! அவருக்கு ஐநூறு கோடி சொத்து இருந்தால், அதற்கு சற்றே கம்மிதான் நம்ப அந்தஸ்து. ‘சார்… இந்த உலகம் என்னோட காலடியில கிடக்குது சார். நான் நினைச்சா என்ன வேணும்னாலும் முடியும். எதை வேணும்னாலும் அடைவேன்’ என்று குழறிக் கொண்டே எழுந்து, அவ்வளவு பெரிய நடிகரின் தோளில் கை போட்டார். ஒரு நொடி போதை இறங்கிய மொத்த கும்பலும் இவரையே பார்க்க, ஏதோ பல வருஷம் பழகிய பள்ளித் தோழனிடம் பேசுவது போல, அந்த மாபெரும் நடிகரிடம் பேசிக் கொண்டிருந்தார் இயக்குனர்.

எவ்வளவுதான் போதையாக இருந்தாலும், தன் தோளில் ஒருவர் கை போடுகிறார் என்றால் எப்படியிருக்கும்? சற்றே ஷாக் ஆகிப்போனார் ஹீரோ. அந்த ஷாக் அடுத்த வினாடியே கரைந்து போனது. ஏன்?

தயங்கத்தின் தாவங்கட்டையில் பொளிச்சென போடுகிற தைரியம் குடிக்கு மட்டுமே உண்டு. எதுகுறித்தும் அஞ்சாமல் தன் ஆசையை உடைத்தார் இயக்குனர். ‘சார்… நான் உங்களை வச்சு ஒரு படத்தை டைரக்ட் பண்ணனும். இல்லேன்னா தயாரிக்கணும். அது எத்தனை கோடியானாலும் பரவால்ல… நாளைக்கே பதில் சொல்லுங்க…’ அன்பும் போதையும் கலந்து கட்டி அடித்தது குரலில்.

மறுநாள் இருவருக்குமான சூரியன் பிற்பகலில்தான் வந்தான். அவ்வளவு போதையிலும் முதல் நாள் பேசியதன் மெமரி சிப் ஒரு ஜி.பி கூட ‘எரேஸ்’ ஆகாமல் இருந்தது அதிர்ஷ்டமா துரத்திருஷ்டமா? ‘படம் பண்ணலாம். ஆபிஸ் வாங்க’ என்றார் ஹீரோ. விழுந்தடித்துக் கொண்டு ஓடினார் இயக்குனர். அதற்கப்புறம் உருவானதுதான் அந்த படுதோல்விப் படம்.

விதி வலியது. அந்த விதியை விட வலியது போதை!

(ஜனனம் இதழில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிவரும் மாலை நேரத்து மயக்கம் தொடரிலிருந்து)

2 Comments
  1. R.Gopi says

    LINGUSAMY

    KAMAL HASSAN

    UTHAMA VILLAIN

  2. kk says

    Lingu should have done his homework.should have talked to dhanu , oscar ravichandran and many other producers who kamal has bankrupted for his selfish wishes.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அன்பு கெட்ட பொண்ணு மேல ஆசை உனக்கு எதுக்குடா ?

எலியும் பூனையுமாக உள்ள ஊர்களிலிருந்து நகமும் சதையுமாக ஒரு காதல் ஜோடி! கிராமத்துப் பின்னணியில் உயிரோட்டமான நகைச்சுவையுடன் வரும் படங்கள் வெற்றி பெற்று வருகின்றன. இந்த வெற்றி...

Close