பொம்பளையாடா அவ…?

ரொம்ப பேருக்கு சூரியன் அடங்குற நேரத்துலதான் கட்டுவிரியன் கண்ண தொறக்குது! அந்த ‘கட்டிங்’ விரியனுக்கு தன்னையே காவு கொடுக்கிற கொள்ளை பேரு, சாயங்காலம் ஆச்சுன்னா சர்வ பெரிய ஆர்ப்பாட்டங்களுக்கும் தயாராகிடுறாங்க. ஆறு மணிக்கு மேல அந்த அலெக்சாண்டரே கூப்பிட்டாலும், “நம்ம கையி வாளை எடுக்காதே!” என்பார்கள் வீரமாக! ‘நடை தளர்ந்து நம்பிக்கை போறதுக்குள்ள கடை அடைந்து ‘கட்டிங்’ போட்டுரணும்’ என்று ஆத்திரமும் ஆவேசமுமாக அவர்கள் ஓடுகிற ஓட்டம், ஒலிம்பிக்ஸ்சே வியக்கிற ஓட்டம்!

தொழிலாளியா இருந்தா டாஸ்மாக். முதலாளியா இருந்தா டீசன்ட்டான ஓட்டல். ரெண்டு கெட்டானுங்களுக்கு ஆபிஸ் வாசலோ, ஃபிரண்டு ரூமோ! நேரம் செல்ல செல்ல, ஓனிக்ஸ் குப்பை தொட்டியா இருந்தா கூட பரவால்ல. உட்கார்ந்து சாப்பிட ஒரு இடம் கிடைச்சா போதும் என்று குட்டிசாத்தானுக்கு பிறந்த குரங்காகிவிடுகிறது குடிகாரர்கள் மனசு. ரயிலில் போகிறவனுக்கு பாத்ரூமே ‘பார்!’ பஸ்சில் போகிறவனுக்கு குறையாக நிரம்பிய கோக் பாட்டில் போதும்! வாழ்க்கையெனும் போராட்டத்தில் வெடியும் திரியுமாக இருக்க வேண்டிய ஒவ்வொருத்தனும், குடியும் மப்புமாக வாழப் பழகியிருக்கிறான். “என்னது, நீங்க குடிப்பீங்களா?” என்கிற அதிர்ச்சி போய், “என்னது குடிக்கவே மாட்டீங்களா?” என்கிற அளவுக்கு பெரு முதிர்ச்சி வந்துவிட்டது அனைவருக்கும்.

இந்த தீரா நதியில் தினம் தினம் குளித்து அழுக்கு சேர்த்துக் கொண்டிருக்கும் இந்த குடி மகா ஜனங்கள், தனியாக வேறொரு படித் துறையில் குளித்துக் கொண்டிருக்கும் சினிமாக்காரர்களை வியந்து வியந்து ரசிக்கிறார்கள். “ஏன்… அந்த சிம்பு ரசம் சோறெல்லாம் சாப்பிட மாட்டானா?” என்று ‘காக்கா முட்டை’ ஜோ மல்லூரியாகி விடுகிறார்கள் எல்லாரும். “ஏன் அவன் சரக்கடிக்க மாட்டானாமா?” என்று குடிக்காத சில நடிகர்களை குறித்து கோபப்படுகிறார்கள். கண் கலங்குகிறார்கள்.

இந்த சினிமா ஏரியாவில்தான் ஒரு ஷுட்டிங்கின் சாயங்கால பொழுதொன்றில் சாமியடிச்சு சாய்ஞ்சான் ஒருவன். அது யாரு? அந்த சாமி யாரு? செம்…ம இன்ட்ரஸ்ட்டிங் ஸ்டோரி அது.

நிர்வாக விஷயத்தில் ஆணைவிட பெண்தான் அதிக மார்க் வாங்குவாள். முகப் பவுடர் முக்கியமா? முருங்கைக்கீரை முக்கியமா? என்பதை முற்றிலும் அறிந்தவள் அவள்தான். அப்படி வரவு செலவு கணக்குகளில் வாழ்நாள் அனுபவம் பெற்றவர்கள் பெண்கள் என்பதால், பல அலுவலகங்களில் பெண்ணுக்கே கேஷியர் பொறுப்பு அமைகிறது. அப்படிதான் ஒரு நடிகையாக அறிமுகமாகி, நல்லதொரு கணவருக்கு வாழ்க்கை பட்ட அந்த பட முதலாளியம்மாவும்.

ஷூட்டிங்குக்கு அந்தம்மா வந்தால், ஆணியடிக்கிற ஆசாரி கூட, சுத்தியலை சத்தம் போட்டு அடிக்க மாட்டார்.

‘டேய்… அடிக்காத சுத்தியல.
வலிக்குதுடா நெத்தியில.
உறைக்குதாடா உன் புத்தியில…’

என்று பழக்க தோஷத்தில் கேட்டாலும் கேட்டு வைப்பார் என்பதால் வந்த அச்சம் அது. டாண் டாணென்று வேலைகள் நடக்கும். யாரு பார்க்கப் போறா? என்று உட்கார்ந்தே கோழித் தூக்கம் போடுகிறவன், நாலு லிட்டர் பாலுக்கு நாலு கிலோ சர்க்கரை வாங்கி காபி டீ போட்டதாக கணக்கு எழுதுகிறவன், துளியூண்டு ஜெனரேட்டருக்கு, பேரல் பேரலா பெட்ரோல் பில் எழுதுறவன் எல்லாரும், தொடை நடுங்கி தோல் பொம்மை ஆடி விடுவார்கள் அவர் முன்னால். அப்படியொரு ஸ்டிரிட்டு அவங்க.

எல்லாரும் அவரை ‘அக்கா அக்கா’ என்பார்கள். அவரோ, இந்தாப்பா… நான் என்ன சொன்னேன்? நீ என்ன பண்றே? என்று எல்லாவற்றுக்கும் எரிந்து விழுவார். வார்த்தைகளில் அசால்ட்டாக வந்து விழுகிற ‘தே… அண் சன்ஸ்’ கெட்ட வார்த்தையை அவர் வேண்டுமென்றே பேசுவதில்லை. பழக்க தோஷம்! தப்பே செய்யவில்லை என்றாலும், தட்டி வைக்கணும் என்றே குறை கண்டு பிடிப்பார். அங்கு வேலை செய்யும் பலருக்கும் அவர் வந்தாலும் கை நடுங்கும். வராவிட்டாலும் கை நடுங்கும். ஏனென்றால் சரக்குக்கு தேவைப்படுகிற அந்த சாயங்கால ‘பேட்டா’ பணமே அந்தம்மா கையால்தானே வழங்கப்படும்?

அப்படியாப்பட்ட பெண்மணியைதான் இப்படியாப்பட்ட வார்த்தைகளால் வர்ணித்தார் அந்த புரடக்ஷன் அசிஸ்டென்ட். “குண்டுமணிய முழுங்கிட்டு கோழி முட்டைய துப்புற இந்த ஊர்ல, அந்த பொம்பள பண்ணுன வேலைய பார்த்தியாடா, இவ்ளோ பேரும் நேரா பார்த்துட்டானுங்களே… இந்த கருமத்தை ஒன்றுக்கு பத்தாக எங்கெல்லாம் போய் ஒப்பிக்க போறானுங்களோ?” என்று அரண்டு மிரண்டு ஓடினார்.

அப்படியென்ன பண்ணிவிட்டார் அந்தம்மாள்?

ஆறு மணி ஆவதற்குள், ‘பேக்கப்’ என்ற சொல்லுக்காகவே காத்துக் கிடப்பார்கள் பல ஹீரோக்கள். அந்த தேமதுர வார்த்தை காதில் கேட்டதும் விழுந்தடித்துக் கொண்டு இடத்தை காலி செய்யும் அவர்கள், வீட்டில் குளித்துவிட்டோ, அல்லது விடாமலோ நேரே குடிமடத்துக்குதான் ஓடுவார்கள். இதில் நாம் மதிக்கும் பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் கூட அடக்கம். நம்ம புரடக்ஷன் அசிஸ்டென்ட்டும் அப்படியொரு ரகம்தான். ஒரு ஹாஃப்புக்கு தேற்றிவிட்டால் போதும். அதற்கப்புறம் அந்த இரவு சொர்க்கம் என்பதாக டிசைன் செய்யப்பட்டிருந்தது அவரது மண்டையும், உடல் நடுக்கமும். ஆறு மணிக்குள் சரக்கு பாட்டில் கைக்குள் வருகிறதோ, இல்லையோ? அதற்கான காசு சட்டை பைக்குள் வந்தாகிவிட வேண்டும். அப்பதான் நிம்மதி.

அந்த தொழிலாளியின் துரத்திருஷ்டம். மூன்று நாட்களாக யாருக்கும் பேட்டா தரவில்லை அந்தம்மா. ஷுட்டிங் முடிகிற நேரத்தில் எல்லாரும் கையை பிசைந்து கொண்டு நின்றாலும், யாரையும் கவனிக்காத மாதிரி காரேறி சென்று கொண்டிருந்தார். காருக்குள் ஏறும்போது மட்டும், ‘யோவ்… எல்லாத்தையும் சேர்த்து நாலைஞ்சு நாள் கழிச்சு வாங்கிக்கோங்க’ என்று ஆந்தை குரலில் பிரகடனம் செய்துவிடுவார். கதவு சாத்தப்படும். அதற்கப்புறம் கடவுளே வந்து கதவை தட்டினாலும், சன்னலை திறந்து ‘பேட்டா பொறவுதான்…’ என்று கூறிவிட்டு பறக்க ஆரம்பித்துவிடுவார். ஹ்ம்ம்… அவரது ஆறு மணி நடுக்கம் அவருக்கு!

அன்றும் அப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்று வானம் பார்த்த பூமியெல்லாம் வரம் வேண்டி தவம் நின்றனர். மாலை மூன்று மணிக்கெல்லாம் வந்துவிட்டார் அவர். மளமளவென்று ஷுட்டிங் நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு தொழிலாளியும், நேத்து முந்தா நேத்து மாதிரி, இன்னைக்கும் அந்தம்மா கௌம்பிறப் போவுது. போறதுக்கு முன்னாடியே வாய திறந்து ரெண்டு நாள் பேட்டாவையாச்சும் கேட்டுடணும் என்று காத்திருந்தார்கள். பேட்டா வராத அந்த மூன்று நாளும் கடன் வாங்கி குடித்ததையும் ரிட்டர்ன் செய்தாக வேண்டுமே?

சூரியன் சரக்கடிக்க கிளம்ப இன்னும் ஒரு மணி நேரம்தான் மீதி. நம்ம புரடக்ஷன் அசிஸ்டென்ட், மெல்ல மெல்ல தயங்கி தயங்கி அந்தம்மாவின் அருகில் சென்றான். ஆளரவம் கண்டு இவன் பக்கம் திரும்பிய அந்தம்மா, என்னய்யா…? என்றார் எரிச்சலுடன். புடவை கட்ன அந்த இடி அமீன்ட்ட, ஐயோ பாவம். இந்த குடி அமீன்தான் என்ன செய்வான்?

அவன் நோக்கம் முழுக்க அந்தம்மாவை எப்படியாவது இம்ப்ரஸ் பண்ணி பேட்டாவை பிடுங்கிவிட வேண்டும் என்பதிலேயே இருந்தது. இந்த உலகத்திலேயே எல்லாரையும் கலங்கடிக்கிற சென்ட்டிமென்ட், அம்மா குழந்தை உறவுதான். கடுகு பெறாத குடிக்கு, காலகாலமாக வரும் அந்த அம்மா சென்ட்டிமென்ட்டை கையிலெடுத்துக் கொண்டான் அவன்.

அக்கா… என்றான் மெல்ல. என்னய்யா… ? என்று வாட்சை பார்த்தவர், “இங்க என்ன பண்ணிட்டு இருக்க? போய் வேலைய பாரு” என்று விரட்டினார்.

இல்லக்கா… ஒரு.. . விஷயம்… சொல்லணும்…

புதையல எடுக்கணும்னு திட்டம் போடுறவன், அதுக்கு மேல வளையலை வச்சு வட்டமா அடையாளம் போட்ட மாதிரி மெதுவாக மிக மெதுவாக, தான் சொல்ல வந்த விஷயத்தை சொல்ல ஆரம்பித்தான். “இல்லக்கா… ஒரு குழந்தை பாலுக்கு அழுதா, அது யாருகிட்ட போய் கேட்கும்? ஒரு தாய்கிட்டதானே கேட்கும்!” மளமளவென சொல்லிவிட்டு, “ஏன்யா… நான் சரியாதானே பேசுறேன்” என்று உள் மனசிடம் ஒரு முறை கன்பார்ம் பண்ணிக் கொண்டான்.

அதற்குள் சேரை விட்டு எழுந்து நின்று கொண்டது இடி அமீன். “என்ன சொன்ன?” என்று தனது கட்டை குரலில் கட்டிங் பிளேயரை எடுத்தது.

இல்லங்கக்கா… ஒரு குழந்தை பாலுக்கு அழுதா… மென்றும் முழுங்கியும் சொல்ல வந்ததை உடைந்தும் உடையாத டைப்பிங் மெஷினில் அடித்த மாதிரி சொல்லி முடித்திருந்தான் இவன்.

இப்போது அவனை மிக மிக நெருங்கியிருந்தார் அந்தக்கா. அல்லது பட முதலாளினி. அவன் மனசுக்குள் பேசினால் கூட கேட்கிற நெருக்கத்திலிருந்தார் இப்போது. அப்படியே அவன் தோளில் கையை போட்டுக் கொண்டார். அங்கு கூடியிருந்த சுமார் 90 பேர் இவர்களையே பார்த்துக் கொண்டிருக்க, அவன் தோளில் போட்ட கையை எடுக்காமல் அப்படியே அந்த மைதானத்தின் மூலைக்கு தள்ளிக் கொண்டு நடந்தார்.

என்ன சொன்ன? சத்தமா சொல்லு…!

“அட… எழவெடுத்த தைரியமே. எங்கதாண்டா போன? ஆஃப் பிராந்திய வாங்கி அப்படியே வாயில கவுக்குறேன். வந்து கொட்றா…” என்று அடிக் குடலுக்கு போன அத்தனை வார்த்தைகளையும் எடுத்து மீண்டும் கம்போஸ் செய்தான் அவன்.

“இல்லக்கா… ஒரு குழந்தை பாலுக்கு அழுதா… அவங்க அம்மாட்டதானே கேட்கும்?”

இப்போது அந்த மைதானத்தின் மூலைக்கு சென்றுவிட்டார்கள் இருவரும். அவர்கள் பேசுவதோ, செயல் நடவடிக்கையோ யார் கண்ணுக்கும் புலப்படாது. அப்படியொரு தொலைவு அது. அங்கு வைத்துதான் அவன் எதிர்பாராத ஒரு காரியத்தை நொடிப் பொழுதில் செய்துவிட்டார் அவர். படக்கென்று விலக்கி, “குடிச்சுக்கோ….” என்றார் கொஞ்சம் கூட கூச்சப்படாமல். உலகத்துல எந்த பொம்பளையும் இப்படியொரு வேலைய செய்ய மாட்டா… அட கண்றாவியே… என்று ஒரு நிமிஷம் திடுக்கிட்டவன், எடுத்தான் ஓட்டம்!

அவன் திடுதிடுவென ஒடுவதையும், அந்தம்மாள் அவனை நோக்கி சிரித்துக் கொண்டே ஏதோ கேட்பதையும் மட்டும் 90 பேர் தொலைக்காட்சி பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தார்கள். தங்களை கடந்து ஓடும் அவனிடம், ‘யேய்… ஏன்யா ஓடுறே?’ என்று அவர்கள் கேட்டதற்கு அவன் சொன்ன பதில் இதுதான்.

பொம்பளையாடா அவ?

அதற்கப்புறம் அவன் குடியை நிறுத்தியிருப்பானே? மண்ணாங்கட்டி! வரவேண்டிய பேட்டாவை, கொடுக்கும் போது வாங்கிக் கொள்ள பழகியிருந்தான்!

(ஜனனம் இதழில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிவரும் மாலை நேரத்து மயக்கம் தொடரிலிருந்து)

7 Comments
  1. Aiyya says

    யாருய்யா அந்த மொதலாளியம்மா?

  2. Tiger says

    kushboo or radhika

  3. RightMantra Sundar says

    அருமை. இந்த அத்தியாயத்தை “கிசுகிசு… கில்மா…” ரேஞ்சுக்கு பார்க்கவில்லை. இது ஒரு இலக்கியம். அந்தணன் சாரைத் தவிர வேறு யாரும் இதை இத்தனை சிறப்பாக எழுதமுடியாது.

    போகிற போக்கில் திரையுலக குடிமகன்களின் (?!) வாழ்க்கையை டாராக கிழித்து தொங்கப்போட்டு விட்டார். சபாஷ்!

    “ஒரு சாண் வயித்துக்கு என்ன பாடு படவேண்டியிருக்கு…” என்கிற டயலாக் திரையுலகை பொறுத்தவரை “ஒரு பாட்டில் தண்ணிக்கு என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கு…” என்று மாறி பல வருடங்கள் ஆச்சு போல…!

    வாழ்க கலை! வளர்க குடி!!

  4. Dandanakka says

    T Ranjendar wife Usha.

    1. Latisha says

      You can always tell an expert! Thanks for cougtibnrint.

  5. Rim says

    T.Rajendar’s wife Usha

  6. அந்துவன் மொந்தைக்கள்ளு says

    இந்தக் கத நாலாவது வாட்டியா ஓடுது அந்து. படிச்சுப் படிச்சு அரதப் பழசாப் போச்சு. ஏதாவது புதுசா சொல்லலாமே?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மாயா – விமர்சனம்

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் தமிழகத்தில் ‘கரண்ட் கட்’ காலம் ஒன்று இருந்ததல்லவா? அந்த காலத்தில் சிந்திக்கப்பட்ட கதையாக கூட இது இருந்திருக்கலாம்! எங்கும் கும்மிருட்டு. ஆங்காங்கே...

Close