மான் கராத்தே / விமர்சனம்

உள்ளே நுழைந்து ஏழு படங்கள் கூட கிராஸ் ஆகாத நிலை. மார்க்கெட்டில் ‘மான் கராத்தே’ போட்டே மளமளவென முன்னேறிக் கொண்டிருக்கும் சிவகார்த்தியேன் இந்த கராத்தேவில் வாங்கியிருப்பது பிளாக் பெல்ட்டா? அல்லது பாண்டி பஜார் பெல்ட்டா?

கோடம்பாக்கமும், ‘கோபம்’பாக்கமும் இணைந்தே கவனித்துக் கொண்டிருந்த படம் இது, கேள்வியும் இதுதான். ஆனால் ச்சும்மா சொல்லக் கூடாது. நடிப்பில் தன் முந்தைய பட ரெக்கார்டை தானே முறியடித்திருக்கிறார் சிவா. முருகதாசின் கதையும் பாஸ் பாஸ்தான்… ஆனால் திருக்குமரனின் திரைக்கதை சற்றே ‘திருதிரு’க்கதையாகி நிற்கிறது.

காட்டில் வழி தெரியாமல் சிக்கிக் கொள்ளும் நான்கு ஐ.டி தோழர் குழு (அதில் ரெண்டு பேர் தோழிஸ்) ஒரு சித்தரை சந்திக்கிறது. ‘என்ன வரம் வேண்டும், கேள்’ என்கிறார் அவர். ஒரு துஷ்ட பிரகஸ்பதி ‘ஆயுதபூஜைக்கு மறுநாள் வரும் தினத்தந்தி பேப்பர் கொடுங்க சாமி’ என்று கேட்க, ஆச்சர்யம். பேப்பர் கைக்கு வருகிறது. பொதுவாகவே ஆயுதபூஜையன்று தந்தி ஆபிசுக்கு விடுமுறை. இந்த நிலையில் பேப்பரை புரட்டினால், ‘சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மூடப்படும்’ என்றொரு செய்தி அதில். ஊருக்கு திரும்புகிற அவர்கள் வேலை செய்யும் அதே சத்யம் கம்ப்யூட்டர்ஸ் பேப்பர் செய்திபடி கோவிந்தாவாகிறது. பதறியடித்துக் கொண்டு மற்ற மற்ற பக்கங்களை புரட்டும் ஐ.டி நண்பர்களுக்கு அதிரடியோ அதிரடி. அதில் கராத்தே போட்டியில் இரண்டு கோடி பரிசு வென்ற ராயபுரம் பீட்டரின் பேட்டி வெளியாகியிருக்கிறது. என் வெற்றிக்கு காரணம் இவர்கள்தான் என்று இந்த நால்வரின் பெயரையும் சொல்லியிருக்கிறார் அவர்.

அப்புறமென்ன? குழு கிளம்புகிறது. மேற்படி ராயபுரம் பீட்டரை சந்தித்து உங்களை குத்து சண்டை வீரனாக்குகிறேன் என்கிறார்கள். அவரோ, அப்படீன்னா இன்னா பாஸ்? என்கிறார். எப்படியோ இரண்டு கோடியை நோக்கி காயை நகர்த்துகிறது ஐ.டி.டீம். கடைசியில் பணத்தை கைப்பற்றியதா? ராயபுரம் பீட்டரான சிவகார்த்திகேயன் போட்டது கராத்தேவா? மான் கராத்தேவா? அதுதான் கிளைமாக்ஸ். நடுவே நடுவே செருகப்பட்டிருக்கும் திடுக் திருப்பங்கள் கூட ஓ.கே. ஆனால் முன்னணி ஹீரோ ஒருவரை வில்லனின் காலில் விழுந்து கதற வைத்திருப்பதுதான் சகிக்கல சாமீய்… (முன்னணி ஹீரோன்னா கால்ல விழக்கூடாதா என்பவர்களுக்கு… தமிழன் காலம் காலமாக பின்பற்றி வரும் ஹீரோயிச கொள்கை லேப்ல பிளட் டெஸ்ட் பண்றபோது கூட அந்த ரிசல்ட்டில் வருதேய்யா)

டோட்டலாகவே சிவகார்த்திகேயனை ஹைடெக் ஹீரோவாக்கிவிட்டார் திருக்குமரன். சீனுக்கு சீன் அவர் போட்டு வரும் காஸ்ட்யூம்கள் அழகோ அழகு. ‘நெய் குழந்தை மாதிரி இருக்கா. அவள கரெக்ட் பண்றதுக்காகவாவது போட்டியில ஜெயிப்பேன்’ என்று கையை முறுக்கும் சிவகார்த்திகேயன், அதே நெய் குழந்தைக்காக நைந்து நாராகிற அளவுக்கு அடி வாங்குவதும் மனசை கனக்க வைக்கிற காட்சிகள்தான். இருவருக்குமான காதல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் பசுமை பெயின்ட் அடித்திருக்கலாமோ? அந்த இன்னொரு குத்து சண்டை வீரன் ‘ஒருநாள் உன் லவ்வரை என் கூட இருக்க சொல்றியா? அப்படின்னா நான் தோற்றுப் போறேன்’ என்று வாயை திறந்து கேட்கும் போதே அவனை இவர் புரட்டி எடுத்தார் என்று கதையை நகர்த்தியிருந்தால் இறுதியில் பறக்கிற விசில் சப்தம் இன்னும் ஏழெட்டு முறை ஒலித்திருக்கக் கூடும். எப்படியோ? சிம்பு ஆர்யா போன்ற கலர்புல் ஹீரோக்களுக்கு அதே அழகுடன் ஒரு போட்டி வந்தாச்சு. தொடருங்க சிவா.

ஹன்சிகா படத்தில் வருகிற வர்ணனை போலவே நெய் குழந்தையாக இருக்கிறார். ‘நீ உள்ளே வந்தேன்னா என் கவனம் சிதறும். அதனால் வராதே’ என்று சிவா சொல்ல, ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடன் அவர் மைதானத்திற்கு வெளியே நிற்கிற காட்சிகளெல்லாம் டைரக்டர் நினைத்தபடியே ஆடியன்ஸ்சின் கண்ணீர் பிரதேசத்தை தட்டுகிறது. இருந்தாலும் இந்த மாதிரி நெய் குழந்தைகள், அட்டு அடாசு ஆசாமிகளை நம்பி பொசுக்கென லவ்வில் விழுவதெல்லாம் டூ மச் த்ரி மச்சையும் தாண்டிய சினிமாடிக் மச்! தன்னை நம்பியும் ஒரு கூட்டம் இருக்கிறது, கலெக்ஷ்ன் இருக்கிறது என்பதை உணர்ந்து நெய் பாட்டிலை தாராளமாக ஓப்பன் பண்ணி வைத்திருக்கிறார் இந்த நெய் குழந்தை ஹன்சிகா. இதற்காகவே ரிப்பீட் ஆடியன்ஸ்… ரிப்பீட்!

நான்தான் ரெப்புரி… என்று மேட்ச் நடுவராக ஸ்டேடியம் ஏறுகிறார் சூரி. இந்த கெஸ்ட் ரோலை ஜஸ்ட் லைக் தட் ஆக அவர் கடந்திருப்பது ரசிக்க வைக்கிறது.

வில்லன் வம்சி கிருஷ்ணா தமிழ் பட ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்தான். ஒரு குத்து சண்டை வீரனை போலவே உடம்பையும் வளர்த்து வைத்திருக்கிறார். வில்லன், ஹீரோவுக்கு சம பலத்துடன் இருக்க வேண்டியதுதான். அதற்காக இந்த அடியா அடிப்பது?

சந்தானத்தின் சிஷ்யனை போலவே டயலாக்குகளை கொட்டி குவிக்கிறார் சதீஷ். இறுக்கமானவர்களையும் சிரிக்க வைக்கிற அளவுக்கு ஹெல்த்தியாகதான் இருக்கிறது அதுவும். (இவர் கூடவே வரும் அந்த ரெண்டு வெல்லக் கட்டிகளும் யாருங்க? தனி மேடை கிடைச்சா நின்னு ஆடுவாங்க போலிருக்கே?) ஆனாலும் சதீஷுக்கு அதிகம் வேலை வைக்காமல் திருக்குறள் கூறுவதற்காக கிளம்பி வரும் ஒரு கோஷ்டி வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்கள் ரசிகர்களை. இந்த காலத்தில் இப்படியொரு அப்பனா என்று திகைக்க வைக்கிறார் சாயாஜிஷிண்டே. எப்படியாவது பத்து திருக்குறளை சொல்லி தன்னை அடைந்துவிடுவார் என்று ஹன்சிகா நம்பியிருக்க, சிவகார்த்திகேயன் குறளை, குரல் என்று புரிந்து கொண்டு அடிக்கும் ரகளைகளும் சி கிளாஸ் ரசிகர்களுக்கு ஜிலேபி.

அனிருத்தின் பாடல்களை கேட்டால், சைனா போனை ஆன் பண்ணிய மாதிரியே இருக்கு என்று யாரோ ஒருவர் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்ததை இந்த நேரத்தில் நினைத்து பார்க்க வைக்கிறார். இருந்தாலும், அந்த ‘டார்லிங் டம்பக்கு…’ இந்த வருடத்தில் குழந்தை குட்டீஸ்களின் பேவரைட் ஆகிவிடும்.

மான் கராத்தேவை தோளில் தாங்கி பிடிக்கிற பெரிய பில்லராக இருக்கிறார் ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார். ஒவ்வொரு காட்சியையும் திரும்ப பார்க்க தூண்டுகிறது இவரது வித்தை.

மான் கராத்தே- மீசையில் ஒட்டாத ‘மண்’ கராத்தே!

-ஆர்.எஸ்.அந்தணன்

2 Comments
  1. dinesh says

    Sivakarthikeyan acting superb..maan karathe blockbuster..siva rockz.

  2. rajesh N says

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
saivam official trailer

https://www.youtube.com/watch?v=EBzwSQzKK_A

Close