மாரி- விமர்சனம்

‘இந்த படம் தர லோக்கலு… உங்களுக்கெல்லாம் அதன் வாசனையை அனுபவிக்கிற அளவுக்கு மூக்கு ஸ்டிராங்கா இல்ல’ என்று ஒற்றை வரியில் விமர்சகர்களின் மூக்கை உடைக்கிற பக்குவத்திற்கு இந்நேரம் வந்திருப்பார் இப்படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன்! கலர் கலர் சட்டை… விதவிதமான பஞ்ச்…. விக்கலெடுக்க வைக்கும் கிக்குகள்… இதெல்லாம்தான் தர லோக்கலு என்று நம்புகிறவர்களுக்கு, பாலாஜிமோகனின் இந்த மாஸ், மணக்க மணக்க கிண்டிய ‘பொடிமாஸ்’தான். ஆனால் மற்றவர்களுக்கு?

கல்யாணத்துக்குதான் கெட்டி மேளம், மட்டைய போட்டா தாரை தப்பட்டை என்று கால காலமாக பின்னப்பட்டு வந்த பார்முலாவை அச்சு மீறாமல் இந்த தர லோக்கலு படத்திலும் அப்ளை பண்ணுகிறார் பாலாஜி. ஒரு ரவுடின்னா அவன் இப்படிதான் இருக்கணும். அந்த ஏரியாவுக்கு குடி வர்ற டீசண்ட்டான பொண்ணா இருந்தாலும், அந்த ரவுடியை லவ் பண்ணணும், ரவுடிக்கு அல்லக்கையா இருக்கிற ரெண்டு பேரு சதா அவன்கிட்ட அடி வாங்கிகிட்டேயிருக்கணும். போலீஸ்னா இப்படி… பொறுக்கின்னா அப்படி…ன்னு எதையும் மாற்றவில்லை அவர். ‘வந்தியா? ரசிச்சியா? போனீயான்னு இருக்கணும். மற்றபடி மூச்!’ என்கிற அதட்டல் உணர்வும் அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது அவரது திரைக்கதை கையாளலில்.

வடசென்னையில் குடியிருக்கும் தனுஷ்தான் மாரி. ஒரு பெரிய தாதா தன் புறாவை சேதமாக்கிவிட்டான் என்பதற்காக அவனை கத்தியால் குத்தி, ஒரே நாளில் தாதாவாக உருவெடுத்துவிடுகிறார்! முழு வேலை… மாமூல் வாங்குவது. பகுதிநேர வேலை… புறா பந்தயம். எல்லா போட்டியிலும் தனுஷின் புறாவே வெற்றியை அள்ள, எதிரணி புறா வளர்ப்பாளர்கள் தனுஷுக்கு எதிரியாகிறார்கள். சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கும் அவர்களுக்கு தோதாக வந்து சேருகிறார் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் விஜய் யேசுதாஸ். அப்புறமென்ன? கும்பலாக சேர்ந்து கொண்டு ஹீரோவை ஜெயிலுக்கு அனுப்புகிறார்கள். ஏழு மாசம் கழித்து திரும்பி வரும் அவருக்கு ஏரியா தரும் மாற்றம், மரியாதைகள் என்ன? தன்னை உள்ளே அனுப்பியவர்களுக்கு தனுஷ் தந்த பனிஷ்மென்ட் என்ன? இதுதான் க்ளைமாக்ஸ்.

தனுஷ் என்ற மகா நடிகனுக்கு ஏனிந்த தர லோக்கல் ஆசை? அப்படியே இருந்தாலும் அதற்கென்று ஒரு கலவை இருக்கிறதே, அதில் மெனக்கெடக் கூடாதா என்றெல்லாம் சின்ன கவலை வரத்தான் செய்கிறது. மற்றபடி அவரது நடிப்பு எந்நாளும் பட்டொளி வீசும் வைரம்தான் என்பதை இந்த படத்திலும் நிரூபிக்கிறார் அவர். தன்னை போலீசிடம் போட்டுக் கொடுத்ததே காஜல்தான் என்று தெரியவர, அவ்வளவு கூட்டத்திற்கு நடுவிலும் அவரை ஒரு பார்வை பார்க்கிறாரே… செம்ம்ம்ம்ம! ‘கூண்டு எரிஞ்சுருச்சுன்னா தப்பிச்சு போன புறா திரும்பவும் கூண்டுக்கு வராது’ என்று கூறும் எடுபிடியின் லாஜிக் கேட்டு கலங்குவதும், அதே புறா கூட்டம் அடுத்தடுத்த நிமிஷங்களில் வந்து சேர சந்தோஷத்தில் கலங்குவதுமாக தனுஷின் நடிப்புக்கு ஆங்காங்கே தீனி போட்டு திருப்தியாக்குகிறார் பாலாஜிமோகன். பெரிய ரவுடியாக இருந்தாலும் மனசுக்குள் குழந்தையாகவே இருக்கிறார் என்பதற்கு தனுஷ் ஆட்டோ ஓட்டும் சீன்களை காட்டி தியேட்டரையே களேபரமாக்குகிறார் டைரக்டர். தனுஷ், சிங்கிள் சிங்கிள் வெடியாக கொளுத்தி மாமூல் கேட்க வந்தவனின் வேட்டியை நோக்கி எறியும்போது எழுகிற கைதட்டல் பட்டாசு சப்தத்தையும் ஊமையாக்குகிறது. அடிக்கடி ‘செஞ்சுருவேன்…’ என்று தனுஷ் சொல்லும்போதுதான், “சொல்லிகிட்டேயிருக்கியே… செய்யேன்” என்று கதற வைக்கிறது ரசிகர்களை.

காஜல் என்ற பட்டு ரோசா ஏனிப்படி காகித ரோசாவாகிப் போனது? குளோஸ் அப்புகளில் ஏஜ் சர்டிபிகேட் தெரியுதேம்மா…!

ஸ்டன்ட் யூனியனில் சேர வேண்டிய ரோபோ சங்கர் ஏன் நடிகர் சங்கத்தில் உறுப்பினரானார்? அந்த பெருத்த கிடா உடம்பை வைத்துக் கொண்டு அவர் காட்டும் பாடி லாங்குவேஜ் காமெடி, எரிச்சலின் உச்சம். நல்லவேளை… அடி தாங்கியாக வரும் வினோத் சமாளித்திருக்கிறார். பெரிய பட்ஜெட் படங்களிலும், பெரிய ஹீரோக்கள் படங்களிலும் சந்தானம், சூரிகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று ரூல்ஸ் கொண்டு வந்தால், ரோபோ மாதிரி ஆட்கள் டி.வி பொட்டியை விட்டு தாண்டியிருக்க மாட்டார்கள். கடவுளே…

நன்றாக பாடிக் கொண்டிருந்த விஜய் யேசுதாசை வில்லனாக்கியிருக்கிறார்கள். அவரும் முடிந்தவரை முயல்கிறார். பால் டப்பா குழந்தையின் கையில் பளபள கத்தியை கொடுத்த மாதிரி சமயங்களில் பொருந்தவும் அடம் பிடிக்கிறது அந்த முறைப்பு.

தர லோக்கலு டானிக்கை அனிருத்துக்கும் புகட்டியிருக்கிறார்கள். குத்தோ குத்து…..! (கொழந்த ஒரு பாட்டுக்கு ஆடியும் இருக்கிறது)

பென்ஸ் கார் ஓட்டுறது ஒருத்தரு. பிரேக் பிடிக்கறது இன்னொருத்தருங்கிற மாதிரி, படத்துல என்னவோ குறை! ஆக்ஷன் மசாலா படங்களை பார்த்து பழகிக்கோங்க பாலாஜி!

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
மொட்டை ராசேந்திரன் பாடுனா, பத்த வைக்காத குக்கரே வெடிச்சுருமேய்யா…?

மறுபடியும் ஒரு பேய்க்கதை.... என்றுதான் இந்த நியூசை எழுதவே ஆரம்பிக்க வேண்டும். ஆனால், ‘அப்படியெல்லாம் ஆரம்பிச்சிங்கன்னா ஏமாந்து போயிருவீங்க... ஏன்னா இதுக்கு முன்னாடி ஆயிரம் பேய் படங்கள்...

Close