அந்த கேரக்டருக்கு போட்ட நாமம் வடகலையா? தென்கலையா? விவகாரத்தை கிளப்பிவிட்ட கார்டூனிஸ்ட் மதன்!
தமிழ்சினிமாவில் எம்.ஜி.ஆர், கமல்ஹாசனெல்லாம் தொட்டும் முடியாத ஒரு விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார் பி.சரவணராஜா. சுமார் 20 கோடி செலவில் பொன்னியின் செல்வன் கதையை 2D அனிமேஷன் முறையில் படமாக்கி வருகிறார். அனிமேஷன் டைரக்டர் எம்.கார்த்திகேயன். இதன் ட்ரெய்லர் லாஞ்ச் இன்று சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் கார்ட்டூனிஸ்ட் மதன், ஐ.ஏ.எஸ்.அதிகாரி ராஜேந்திரன், கல்யாண மாலை மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில்தான் சும்மா கிடந்த சங்கை ஊதிவிட்டு போனார் கார்ட்டூனிஸ்ட் மதன். ‘பெரிய பெரிய படத்தையெல்லாம் கூட முப்பது நாற்பது நாளில் எடுத்துர்றாங்க. இந்த படத்தை ஏன் ரெண்டு வருஷமா எடுத்துட்டு இருக்காங்கன்னு யாரும் கேட்க கூடாது. ஏன்னா ஒரு படத்தை 2டி யில் பண்ணுறது சாதாரண விஷயமில்ல. சுமார் 150 பேர் சிஸ்டத்துக்கு முன்னாடி உட்கார்ந்து கடுமையா வேலை பார்க்கணும். அதனால்தான் தாமதம்’ என்றெல்லாம் கூறினார். அப்படியே போகிற போக்கில் படத்திற்கு குண்டு வைத்துவிட்டு கிளம்பியதுதான் அதிர்ச்சி. அவர் சொல்லாவிட்டால், அந்த விஷயம் பெரிசாக பேசப்பட்டிருக்கப் போவதேயில்லை.
இந்த கதையில் ஆழ்வார்க்கடியான் என்றொரு கேரக்டர் வருது. எனக்கு என்ன டவுட்டுன்னா அவர் நாமம் போட்ருக்காரில்லையா? அது தென் கலையா, வடகலையாங்கறதுதான். அது தென்கலைதான், வடகலைதான் என்று யாராவது கோர்ட்டுக்கு போயிட போறாங்க. அதுக்கு முன்னாடியே நீங்க ரெண்டுமா தெரியுற மாதிரி அந்த நாமத்தை டெக்னிகலா போட்டுடலாமே? என்றார். கல்கியின் கதைக்கு படம் வரைந்த ஓவியர் கூட, அந்த நாமத்தை ரெண்டுமா பீல் பண்ணுற மாதிரிதான் இழுத்துவிட்ருப்பார் என்று ஒரு ஐடியாவும் கொடுத்தார்.
நல்லவேளையாக பின்னாலேயே பேச வந்த ராஜேந்திரன் ஐஏஎஸ், கதையில் ஆழ்வார்க்கடியான் குடும்பம் ஸ்ரீரங்கநாதரை வழிபடுற மாதிரி கல்கி எழுதியிருக்கார். அதனால் அவர் தென்கலைதான் என்று கூறி விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
சில அறிவாளிகளையும் சான்றோர்களையும் பட விழாக்களுக்கு அழைக்கவே அச்சமாக இருக்கிறது. எந்த குண்டுக்கு தீவைத்துவிட்டு போவர்களோ?