மெட்ராஸ் திரைப்படத்திற்கு சாதிய அடையாளம் தேவையில்லை! -முருகன் மந்திரம்
கிராமத்து மக்களின் வாழ்வியல் என்பது வேறு, அடித்தட்டு மக்களின் வாழ்வியல் என்பது வேறு… அடித்தட்டு மக்கள் என்பவர்கள் கிராமத்திலும் இருக்கிறார்கள், நகரத்திலும் இருக்கிறார்கள்.
அடித்தட்டு மக்களின் வாழ்வியலையும், அவர்களில் இருந்து கதாநாயகர்களையும் கதாநாயகிகளையும் முன்னிறுத்தி, வணிக ரீதியிலான படங்கள் பெரும்பாலும் எடுக்கப்படுவதில்லை. அப்படியே அடித்தட்டு மக்கள் வாழ்க்கையோ, கதாபாத்திரங்களோ சித்தரிக்கப்பட்டாலும், கேவலமாகவோ, எதிர் கதாபாத்திரங்களாகவோ தான் சித்தரிக்கப்பட்டுள்ளன. அல்லது நாடகத்தனமாக அரைகுறையாக பொதுப்பதிவுகளின் தொடர்ச்சியாக மேல்தட்டு விருப்பங்களின் நீட்சியாக, சாட்சியாக சித்தரிக்கப்படுகின்றன.
அந்த வகையில் எஸ்.பி.ஜனநாதனின் பேராண்மை துருவன் ஒருவனே, சினிமாவில் கொண்டாடப்பட்ட அடித்தட்டு மக்களின் நாயகனாக நினைவுக்கு வருகிறான். அவர்களை சொல்லியும் குற்றமில்லை. அந்த வாழ்வியலையும் அதன் நீள, அகலங்களையும், ஆழங்களையும் தெரியாதவர்கள், அதை படம் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதே தவறு.
நகர பின்னணி கொண்ட அடித்தட்டு மக்களின் வாழ்க்கை என்பது, சினிமாக்களில் அதிகமாக சித்தரிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. அதுவும் குடிசை மாற்று வாரியம் மற்றும் வீட்டு வசதி வாரிய (ஹவுசிங் போர்டு) வாழ் மக்களைப் பற்றிய உண்மையான பதிவுகள் அவ்வளவாக இல்லை என்று தான் சொல்லவேண்டும். ஊறுகாய் அளவுக்கு எங்காவது சொல்லப்பட்டிருக்கலாம். அல்லது அரைகுறையாக எடுக்கப்பட்டவையாக இருக்கலாம்.
“மெட்ராஸ்” அந்த வகையில் பெரிய கவனத்தையும், வரவேற்பையும், பாராட்டுக்களையும், சாதகமான விமர்சனங்களோடு கூடிய வணிக வெற்றியையும் சாத்தியப்படுத்தி இருக்கிறது.
அதன் முக்கியமான காரணகர்த்தாக்களாக மூன்று பேரைச் சொல்லலாம். இயக்குநர் பா.இரஞ்சித், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, மற்றும் கதாநாயகன் கார்த்தி.
எங்கும் செயற்கைத்தனம் என்பதே தெரியாமல், யதார்த்தமான வாழ்வியலை பதிவு செய்திருக்கிறார் பா.இரஞ்சித். அதற்கு மிக அற்புதமாக அத்தனை நடிகர், நடிகையரும், தொழில்நுட்ப கலைஞர்களும் ஒத்துழைத்திருக்கிறார்கள். அதனால் தான் ஊரெங்கும் பாராட்டு குவிந்து கொண்டிருக்கிறது.
ஒரு படம் என்பதைத்தாண்டி “மெட்ராஸ்”-ன் வீச்சு வேறு வேறு எல்லைகளுக்குள், வேறு வேறு பரிமாணங்களுக்குள் கொண்டு சேர்க்கப்படுகிறது.
படம் பார்க்கிற எந்த ஊர் ரசிகனும், இதை ஒரு இனத்தின் படம் என்ற மனநிலையோடு பார்க்க முடியாது என்பது இந்த படத்தின் சிறப்பு. இது ஒரு தனிப்பட்ட இனத்தின் கதை என்றோ, தலித் கதை என்றோ உணர ஆரம்பிக்கும் நிமிடத்தில் இந்த படத்தின் மீதான விருப்பு, வெறுப்புகள் நிறம் மாறும் சாத்தியங்கள் இருக்கிறது. இதன் கதைக்களம், வட சென்னை என்பதும், ஹவுசிங் போர்டு மக்களின் கதை என்பதுமே ரசிகன் பார்வையாக இருக்கும் என்று தெரிகிறது. ஒட்டு மொத்த வடசென்னை மக்களும் தலித்துகளா? என்பதும், ஹவுசிங் போர்டுகளில் வாழ்பவர்கள் அத்தனை பேரும் தலித்துகளா என்பதும் என் சிற்றறிவுக்கு தெரியாத விஷயம்.
இந்த படத்தின் படப்பிடிப்பின்போது படக்குழுவினர், ஒருவரை ஒருவர் “தோழர்” என்றே அழைத்துக்கொண்டார்கள் என்பது ஆச்சர்யமாக இருந்தது. வாழ்க, வளர்க.
ஒரு சிலர் வலுக்கட்டாயமாக இது தலித்துகளின் கதை, படத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவரும் தலித்துகள் என்று பரப்ப எத்தனிக்கிறார்கள். பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கவின்மலர், தனது முகப்புத்தகத்தில் இந்த படத்தில் பங்குபெற்ற தலித்துகள் என்று ஒரு பட்டியலை வாசித்திருக்கிறார். அவர் மட்டுமல்ல, அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதும் கூட இது தலித்துகளின் படம் என்பதை போலவே அங்கு ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டது.
ஆனால், கலைஞர்களை சாதிய அடையாளங்களுக்குள் தள்ளுவது என்பது ஆரோக்கியமானதல்ல. அதிலும் வணிக ரீதியான ஒரு தொழிலில் தலித் கலைஞர்கள் என்று தனி அடையாளப்படுத்துவதும் அத்தனை அவசியமானதாய் தெரியவில்லை. உதாரணத்திற்கு அம்பேத்காரை நினைத்துக்கொள்ளலாம்.
பொதுவெளியில் எல்லோருக்குமான படைப்பாக, வணிகப்படமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றை ஒரு தனிவட்டத்துக்குள் சிக்க வைக்கிற முயற்சிகள் தெளிவானதாக ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியே எல்லோருக்குமான கலைஞனை பொதுவெளியில் பிரிவினைப் படுத்துவதும்.
ஒருவேளை இயக்குநரால், இது தலித்துகளின் கதை என்று ஆரம்பத்தில் ஆணித்தரமாக அந்த தயாரிப்பாளரிடம் சொல்லப்பட்டிருந்தால், இந்தப்படம் உருவாகாமல் இருந்திருக்க சாத்தியங்கள் இருக்கிறது. இந்தப்படம் உருவாகி விட்டது. இனியொரு புதுப்படத்தை, இது தலித்துகளின் கதை என்று ஆரம்பத்திலேயே உணர்த்தி உருவாக்குவது அத்தனை எளிதானதென்று சொல்ல முடியாது.
ஒரு பெரிய வணிக பலம் கொண்ட ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லி, வணிக சாத்தியக்கூறுகள் கொண்ட ஒரு கதாநாயகனை, கதைநாயகனாக நடிக்கவைத்து, அதில் ஒரு வாழ்வியலை பதிவு செய்த பா.இரஞ்சித்தையும் அவரோடு உழைத்த சக கலைஞர்களையும் கொண்டாடுவோம். கூடவே, தயாரிப்பாளரையும் கதாநாயகனையும் பாராட்டுவோம். இன்னும் நிறைய வாழ்வியல் பதிவுகளை வரவேற்போம். வெற்றி பெற வைப்போம்.
– முருகன் மந்திரம்