மதுரை சீசன்? புதுப்பிக்க வரும் மதுரை மா வேந்தர்கள்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை மதுரையை குத்தகை எடுத்திருந்தது தமிழ் சினிமா. அரிவாளோ, கத்தியோ, உருட்டுக்கட்டையோ, ஏதோ ஒன்றை முதுகுக்கு பின்னால் மறைத்தபடி வரும் ஹீரோ, வர்றவன் போறவனையெல்லாம் குத்தி கிழிக்கிற கதைகளை அங்கு வைத்துதான் படமாக்கினார்கள். அப்படியொரு பருத்தி வீரன், சுப்ரமணியபுரம் வாசனைக்கு பழகிய ‘நுகர்வோரை’ அதற்கப்புறம் வேறு திசைக்கு இழுப்பதென்பது நடக்காத காரியமாகவே இருந்தது.

எப்படியோ நடுவில் பேய் சீசன் வந்து, அது உள்ளூர் பேயா, வெளியூர் பேயா, வெளிநாட்டு பேயா, என்றெல்லாம் யோசிக்க விடாமல் பயமுறுத்தியது. இதோ- மீண்டும் மதுரை சீசன். துவங்கி வைக்கப் போகிறவர் வி.கே.விஜய்கண்ணா. இவர் லண்டனில் இயக்குனர் பயிற்சி படித்தவராம். (லண்டன்ல படிச்சாலும் படமெடுக்க எங்க மண்ணுக்குதாண்டீய் வந்தாகணும்) நல்லவேளையாக இவர் கத்தி கபடா போன்ற ஆயுதங்களுக்கு அதிகம் வேலை வைக்கவில்லை. இவர் இயக்கியிருக்கும் ‘மதுரை மா வேந்தர்கள்’ படம் முழுக்க நகைச்சுவை ஒன்றையே மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது.

சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் ஒரு அமைச்சரிடம் கொடுத்து ஏமாறுகிறது ஒரு நடுத்தரக்குடும்பம். மீண்டும் அதை எப்படி ஹீரோ மீட்கிறான் என்பதுதான் கதை. தீம் என்னவோ, கவலையும் கண்ணீருமாக இருந்தாலும், சீன் பை சீன் சிரிக்க வைப்பதுதான் எங்கள் நோக்கம் என்கிறார் வி.கே.விஜய் கண்ணா. ஹீரோவாக அஜய் நடிக்க அவருக்கு ஜோடியாக அர்ச்சனா நடித்திருக்கிறார். படத்தில்-ஆக்ஷ்ன் இருந்தால் கூட பரவாயில்லை. கோவளம் கடலுக்குள் ஒரு பாடல் காட்சி எடுத்தார்களாம். படகில் ஹீரோயின் மூவ்மென்ட் கொடுத்துக் கொண்டிருக்க, பொங்கி வந்த அலையொன்று படகை ஷேக் பண்ணியதாம். அவ்வளவுதான்… ஹீரோயின் ஒரே குய்யோ முய்யோ. படகு கவிழ்ந்து எப்படியோ எல்லாரையும் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தார்களாம்.

அப்படியே படத்தையும் கரையேத்திருங்க வி.கே.விஜய்கண்ணா! அப்புறம் நீங்கதான் விஜய்கே அண்ணா!

குறிப்பு- படத்தை பிரபல விநியோகஸ்தர் தணிகை வேல் ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர் சார்பில் தயாரிக்கிறார்.

Read previous post:
போடி வாடி அவளே இவளே… கடுப்பான த்ரிஷா! கலைஞ்சுருச்சு முழுசா?

அட்சதை போடும் போதே நாலைஞ்சு அரளிப்பூக்களையும் அள்ளிப் போடுகிற ஊர் ஆச்சே இது? த்ரிஷாவுக்கும் ஆயிரம் கோடியோ, அதற்கு மேலோ சொத்து பத்துள்ள வருண் மணியனுக்கும் கல்யாணம்...

Close