மஹாபலிபுரம் படத்தின் பின்னணி இதுதான்!
‘காத்து வாங்க போனேன்… ஒரு கவிதை வாங்கி வந்தேன்’ கதைதான் இது.
வேறொன்றுமில்லை, நண்பர் கூட்டம் ஒள்று அடிக்கடி மஹாபலிபுரம் போவார்களாம். ‘கிரிக்கெட் விளையாடதான்’ என்கிறார்கள் அவர்கள். அப்படியே வைத்துக் கொள்வோம். ஆனால் போன இடத்தில், ‘ஏன் நாம மஹாபலிபுரத்தை பற்றி ஒரு படம் எடுக்கக் கூடாது?’ என்று டிஸ்கஸ் பண்ணி உடனே படமாகவும் எடுத்துவிட்டார்கள். படத்தின் தலைப்பே மஹாபலிபுரம்தான்!
கருணாகரன் உள்ளிட்ட நால்வர் நண்பர்களாக நடிக்க, அங்கனாராய், விர்த்திகா என்ற இரண்டு ஹீரோயின்கள் இருக்கிறார்கள் படத்தில். டான் சேன்ட்டி இயக்கியிருக்கிறார். தயாரிப்பாளர் விநாயக் மணியும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.
சில ஏரியாவில் வெறும் ஏழைகள் இருப்பார்கள். சில ஏரியாவில் வெறும் பணக்காரர்கள் இருப்பார்கள். ஆனால் எல்லாரும் இருக்கிற இடம் மஹாபலிபுரம். அது மட்டுமல்ல, உலகத்தின் எல்லா நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து தங்கியிருப்பார்கள். இப்படியொரு வித்தியாசமான சூழ்நிலையை உள்ளடக்கிய இந்த ஊரில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தைதான் படமாக எடுத்திருக்கிறோம் என்றார் இயக்குனர் டான் சேன்ட்டி.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இங்குள்ள சில சமூக விரோதிகள் கற்பழித்து கொன்றுவிடுகிறார்களே, கதை அதுவாக இருக்குமோ? இந்த கேள்வியை இயக்குனரிடம் கேட்டால் ‘நீங்க யூகிக்கிறது எதுவும் இல்ல. இது புத்தம் புதுசு’ என்கிறார். படத்தின் குவாலிட்டியை பார்த்து ஸ்டுடியோ 9 நிறுவனம் ரிலீஸ் செய்ய முன் வந்திருக்கிறதாம்.
சமீபத்தில் வெளியான சலீம் திரைப்படத்தையும் ஸ்டுடியோ 9 தான் வெளியிட்டிருக்கிறது.