மைந்தன் – விமர்சனம்

தமிழ்சினிமாவின் அகன்ற சந்தைகளில் ஒன்று மலேசியா! மலேரியா வரவழைக்கும் நம்ம ஊரு மொக்கை படங்களை கூட, மலேசியாவில் கொண்டாடுவார்களாம் தமிழர்கள். ‘நம்ம ஆளுங்க எடுத்த படம். ஓட்டிருவோம்டா…’ என்கிற பெருத்த மனசு காரணமாக இருக்கலாம்! அப்படியாப்பட்ட அன்பொழுகும் பூமியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் படம்தான் மைந்தன். முழுக்க முழுக்க மலேசிய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். மனசுல ஒட்டுவாங்களோ, மாட்டாங்களோ என்கிற சந்தேகமே வேண்டாம். முகம் மட்டுமல்ல, குளோஸ் அப்பில் காட்டப்படும் நகம் கூட, ‘அவிய்ங்க எங்க தமிளனுங்கடா…’ என்கிற சந்தோஷத்தை தருகிறது. அதிலும் ஹீரோ குமரேசனை பார்த்தால், இளைச்சுப்போன எஸ்.ஜே.சூர்யா போலவே இருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் இருவரில் புன்னகைப்பூ கீதா, நம்ம கோடம்பாக்கத்தில் ஏராளமான லட்சங்களை கொட்டி, எக்கச்சக்க நஷ்டங்களை அள்ளிக் கொண்டு போனவர். அதுக்காகவாவது கல்லாபொட்டிய நிரப்புங்க ரசிகர்களே…

கதை? தனது கார் மீது தீராத ஆசை வைத்திருக்கும் குமரேசன், சொந்த வாழ்வில் காதலியையும் இழந்து அப்பா அம்மா இல்லாத அநாதையாகவும் இருக்கிறார். ஒரே பொழுதுபோக்கு குவார்ட்டர் அடிப்பதும், குப்புற கவிழ்வதும்தான். இந்த நேரத்தில், இவரின் காரில் ஒரு குட்டிப் பையன் ஒளிந்து கொள்ள, வேறு வழியில்லாமல் அவனோடு ரூமிற்கு திரும்புகிறார். ‘ஒருவேளை சாப்பாடு, ஒரு ராத்திரி உறக்கம். சொல்லாம கொள்ளாம ஓடிப்போயிரு’ என்பதுதான் குமரசனின் கண்டிஷன். ஆனால் அந்த சிறுவனோ ‘கிடைச்ச இடம் கிஷ்கிந்தா’ என்று அங்கேயே செட்டில் ஆக துடிக்கிறான். நடுவில், சிறுவனை கண்டுபிடித்து திருப்பிக் கொண்டுபோக நினைக்கிறது வில்லன் கோஷ்டி. இவர்களின் வேலை அநாதை ஆசிரமம் நடத்துவது. அங்கிருக்கும் பிள்ளைகளை விற்பது. எப்படியோ அந்த வில்லன் கோஷ்டி குமரேசனை ரீச் பண்ணி குழந்தையை பறிமுதல் செய்து கொண்டு தப்பிக்க, விரட்டிக் கொண்டே கிளம்புகிறார் குமரேசு. ஒரு ஆக்சிடென்ட். அதிலிருந்து தப்பிக்கும் அவர் காரை அப்படியே போட்டுவிட்டு, வழியில் நிற்கும் புன்னகைப்பூ கீதாவையும் அவரது காரையும் கடத்திக் கொண்டு எஸ்கேப்.

அந்த காரும் பறிபோய் கீதாவும் இவரும் ஒரு காட்டுக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். லேசாக காதல் முளைக்கிறது கீதாவுக்கு. குமரேசன் அதை ஏற்றுக் கொள்வதற்குள் மீண்டும் சிறுவனை தேடி டிராவல் ஆகிறார்கள் இருவருமே! சிறுவன் கிடைத்தானா? வில்லன்கள் வெளுக்கப்பட்டார்களா? கீதாவும் குமரேசனும் ஜில் ஜில்லா? என்பதோடு முடிகிறது மைந்தன்.

எதிலும் சிக்காத புதுக் கலரோடு டிராவல் ஆகிறது படம். முழு புத்துணர்ச்சியோடு ஒரு ஹீரோ கிடைத்திருக்கிறார் மைந்தன் குமரேசன். படத்தின் இயக்குனரும் இவரே. காட்டுக்குள் இவருக்கும் புன்னகைப்பூ கீதாவுக்கும் நடக்கும் செல்ல சண்டைகளை ரசிக்கலாம். அதுவும் கீதா அடிக்கடி உச்சரிக்கும் ‘மாரியாத்தா காப்பாத்து’க்கு சம்பந்தமேயில்லாத காஸ்ட்யூம் அவருக்கு. (அதுதாண்டா கிக்! ) ‘இந்தா கயிறை பிடிச்சு மேலே வா’ என்று கீதா வீசுவது மலைப்பாம்பு. (ஹையே…!) காரில் கீதாவும் குமரேசனும் கொஞ்சம் எக்குதப்பான கோணத்தில் சண்டை போட, வெளியேயிருந்து கவனிக்கும் ஒரு மாமி, ஐயே என்று அருவருப்படைவது ஆஹா… ஓஹோவ்…! மலேசியாவின் நிஜ தொழிலதிபர் கீதாவை படத்தில் சிலுக்கு ரேஞ்சுக்கு காண்பிப்பது ரசிகர்களுக்கு அல்வா? கீதாவின் இமேஜுக்கு குல்லா! (அதிலும் ஒரு காட்சியில் உன் ‘பேக்’கை பார்க்கலாம்னா விட மாட்றீயே என்ற வசனமெல்லாம் வருகிறது கீதாவை நோக்கி.

அந்த சிறுவன் ஹனுமந்த் பேசும் வசனங்களில் பொங்கி வழியும் நியாய தர்மங்கள் சிந்தனை கூடை. அதற்காக பீர் பாட்டிலில் உச்சா போய், அதை குமரேசன் சிப் பண்ணுவதெல்லாம் உவ்வே சாமீய். குமரேசனின் பிளாஷ்பேக், மற்றும் கார் சேசிங் காட்சிகள் பரபரப்புக்கு உத்தரவாதம். அந்த முதல் காதலும் அந்த காதலியும் கோடம்பாக்க சினிமாவை மீறிய சென்ட்டிமென்ட்.

ஆக்ஷன் அடிதடி க்ளைமாக்ஸ்தான். நம்ம ஊரு ஸ்டன்ட் மாஸ்டர்களின் கடைசி அசிஸ்டென்ட் அமைத்த மாதிரியிருந்தாலும், அந்த சண்டை நடக்கும் கடல் பகுதி பரபரப்பை அள்ளி தருகிறது. பாடல்கள் இசையமைப்பாளர் மான்ஷா சிங் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’ என்கிற ரேஞ்சில் இசையமைத்திருந்தாலும், இசையை விட மலேசியாவின் அழகைதானே ரசிக்கிறோம். விட்ருங்க…

மைந்தன்…. பாஸ்போர்ட் ப்ளைட் டிக்கெட் இல்லாத மலேசியா பயணம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இருட்டு சந்தில் முரட்டு முத்தம்! ரகசியமாக கசிந்த சிம்புவின் சில்மிஷ வீடியோ?

ஆர்யாவுக்கும் சிம்புவுக்கும் அப்படியொரு இமேஜ்! ஆனால் இந்த இமேஜை வேண்டும் என்றே அவர்கள் தக்க வைத்துக் கொள்கிறார்களா, அல்லது வேணாம்னு ஒதுங்கினாலும் அது விரட்டி வந்து கொத்துகிறதா...

Close