‘இது மனம் இல்ல. மணம்… மணம்ங்க… வாசனை, ஸ்மெல்’ தலைப்பை புரிய வைக்க தவியாய் தவித்த படக்குழு
நடிகையின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் இருக்கிறதா என்று நவீன நக்கீரனாக கிளம்பி சந்தேகம் கிளப்புவார்கள் போலிருந்தது ‘மணம் கொண்ட காதல்’ படத்தின் பாடல்களை பார்க்கும் போது. ஹீரோயின் கூந்தலில் முகம் புதைத்து காதலித்துக் கொண்டிருந்தார் அறிமுக நாயகன் முத்துராம்.
‘இது மனம் இல்ல. மணம்… மணம்ங்க… வாசனை, ஸ்மெல்’ என்று நாலாவகையிலும் போராடி தலைப்பில் இடம் பெற்ற ‘மணம்’ என்ற வார்த்தைக்கு விளக்கம் சொன்னார்கள் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில். (ஒருவேளை ஹீரோ படத்தில் சென்ட் வியாபாரியாக வருகிறாரோ என்னவோ?) நோபியா, மற்றும் ஸ்ரியா என்று இரண்டு கதாநாயகிகள். இரண்டு பேரையும் உண்டு இல்லை என்றாக்கிக் கொண்டிருந்தார் முத்துராம். சும்மாவா பின்னே? இவர்தான் படத்தின் தயாரிப்பாளரும் கூட. ஆனால் இவர் எப்படி கதைக்குள் ஹீரோவாக வந்தார் என்பதை விளக்கினார் பேச வந்த ஒரு விஐபி.
டைரக்டர் புகழேந்திராஜ் இவரிடம் கதை சொல்லப் போனாராம். முழு கதையையும் கேட்ட முத்துராம், யாரை ஹீரோவா நடிக்க வைக்கப் போறீங்க என்று கேட்க, நல்ல ஹீரோவா தேடிக்கிட்டு இருக்கேன் என்றாராம் அவர். அதற்கப்புறம் ஒரு வாரம் ஆச்சு. ஹீரோ கிடைச்சாச்சா… ஹீரோ கிடைச்சாச்சா… என்று தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டேயிருக்க, இல்லைங்க இல்லைங்க என்று சொல்லிக் கொண்டேயிருந்தாராம் புகழேந்திராஜ். அதற்கப்புறம் பொறுக்க முடியாமல் முத்துராம் கேட்டது இந்த கேள்விதான். ஏன்… நானே ஹீரோவா நடிக்கிறேனே?
‘இதை உங்க வாயாலேயே சொல்ல வைக்கதான் நானும் வெயிட் பண்ணினேன்’ என்று டைரக்டர் கூலாக பதில் சொல்ல, ‘அட ங்கொப்புறானே ’ என்றாரானாராம் தயாரிப்பாளர். அந்த கதையை தயாரிப்பாளராக இருந்து முத்துராம் கேட்டாரில்லையா? அப்போதே அவரது எக்ஸ்பிரஷன்களை வைத்து, இவரையே ஹீரோவா நடிக்க வச்சுரலாம் என்று முடிவெடுத்துவிட்டாராம் டைரக்டர். அந்த நேரத்தில் கேட்டால், ஏதோ படம் கிடைக்கணும் என்பதற்காக சோப் அடிக்கிறார் என்று நினைத்துவிடுவாரோ என்ற அச்சம். அதனால் அவர் பொறுமை மேல் பொறுமை காக்க, கடைசியில் நடந்ததைதான் சொல்லிவிட்டோமே?
விக்ரம் வர்மன் என்பவர் இசையில் மூன்று பாடல்களை திரையிட்டார்கள். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டு குண்டான் குவளைகளை தட்டிவிட்டு போகிற டூபாக்கூர் இசையமைப்பாளர்களுக்கெல்லாம் ஒரு பாடமாக இருந்தது இசை. அவ்வளவு நேர்த்தி… அதிலும் வரிகள் புரிகிற மாதிரியான துள்ளல் இசை. இவரெல்லாம் ஏன் இன்னும் வெளியில் தெரியாமலிருக்கிறார் என்றும் புரியவில்லை. இதற்கு முன்பே நான் இரண்டு படங்களுக்கு இசையமைச்சுட்டேன் என்று அவர் சொன்னபோது, ‘அப்படியா…’ என்று ஆச்சர்யப்படவே தோன்றியது.
அதிருக்கட்டும்.. ஹீரோ ஹீரோயின்கள் எப்படி? ஏழைகளின் விஜய், ஏழைகளின் த்ரிஷா நயன்தாராவாக இருந்தார்கள். நல்ல படங்கள் வந்தாலும் அது சின்ன படங்களாக இருந்தால் ஒரே அமுக்காக அமுக்கி விடும் பெரிய தயாரிப்பாளர்களை முத்துராம் வந்து என்ன மொத்து மொத்தப் போகிறாரோ?
I am follow With Your Story Advoice and Ideas Thank You Sir