லட்சுமிமேனன் துளசி மாதிரியில்ல நான்… மனம் மயங்குதே ஹீரோயின் ரியா சஸ்பென்ஸ்
லட்சுமிமேனன், துளசியெல்லாம் பார்ப்பதற்கு டீச்சர் மாதிரியிருந்தாலும், அவங்க படிக்கறது ப்ளஸ் ஒன்தான். ஆனால் காலேஜ்ல படிக்கிற ரியா, ஸ்கூல் கேர்ள் ஆக நடிக்கிறார். யார் இந்த ரியா? இவருக்கு ஏன் இவ்வளவு பெரிய பில்டப்? என்றெல்லாம் நீங்கள் கேள்வி கேட்டால், அதற்கு நாம் பொறுப்பல்ல. ஏனென்றால், இந்த விஷயத்தை பெருமையோடு சொல்லி சொல்லி சந்தோஷப்பட்டது அதே ரியாதான். ‘மனம் மயங்குதே’ படத்தின் கதாநாயகி.
இந்த சின்ன பெண் (?) காதலில் விழுவதை போல கதை. அதுவும் ஒரு கொரியர் பையன் மீது காதல் வயப்படுவதை போல! நிஜத்துல உங்களுக்கு லவ் வந்திருக்கா? என்ற வழக்கமான கேள்வியை போட்டு ரியாவை வம்புக்கு இழுத்தால், ‘இன்னும் காதல் வரல. நல்ல ஆளைதான் தேடிக்கிட்டு இருக்கேன்’ என்றார் படத்தின் ஹீரோ லகுபரனையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு. அப்படின்னா லகுபரன் மீது காதல் வரலியா என்றால், படத்துல வர்ற கேரக்டர்தான் அவரை லவ் பண்ணுது. நான் இல்ல என்றார். இப்படி கோத்து வாங்கி பொழுதை ஓட்டிக் கொண்டிருந்த பிரஸ்சிடம், படம் பற்றி நாலு வார்த்தை என்று பேச ஆரம்பித்தார் இயக்குனர் ராஜீவ். இவர் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாத சுயம்பு. இதுதான் அவரது முதல் படமும் கூட.
நமக்கு என்னைக்காவது ஒரு கஷ்டம் வர்றப்போ அப்ப நாம எடுக்கிற முடிவுதான் நம்ம வாழ்க்கையை தீர்மானிக்குது. இந்த படத்தோட ஹீரோ ஒரு ‘கொரியர்’ பையனா வேலை பார்க்கிறான். அவன் வாழ்கையில் ஒரு சம்பவம் நடக்கு. அப்ப அவன் எடுக்கிற முடிவு வாழ்க்கையை எப்படி திசை திருப்பி போட்டுடுதுங்கறதுதான் படத்தோட கதை என்றார் ராஜீவ். அப்படியே அவர் வைத்த சஸ்பென்ஸ் ஒன்று, கிளம்புகிற வரைக்கும் ஒரு விடுகதை போல எல்லாரையும் சுற்றி சுற்றி வந்தது. கடைசி வரைக்கும் விடை சொல்லாமலே அனுப்பி வைத்தார் ராஜீவ்.
தமிழ்நாட்ல ஐந்து லட்சம் இளைஞர்கள் ஒரு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்காங்க. அதுல ஒருத்தன்தான் ஹீரோ என்றார் அவர். அது என்னவா இருக்கும்னு கண்டு பிடிங்க. இல்லேன்னா படம் ரிலீஸ் வரைக்கும் வெயிட் பண்ணுங்க என்றார். நமக்கு கடைசி வரை புரியல. ஒரு வேளை அந்த ஐந்து லட்சம் பேரில் நாம் ஒருவர் இல்லையோ?