மணிரத்னமே இறங்கியாச்சு! சுபிட்சத்தை நோக்கி சூர்யா நகர்?
‘மக்களோடு ஒட்டி ஒழுகல்’ என்ற தத்துவத்தின் நேர் எதிரி என்கிற பிம்பம் கொண்ட டைரக்டர் மணிரத்னத்தையே இந்த வெள்ளம், ‘வடிய’ வைத்துவிட்டது. இந்த வெள்ளத்தில் மக்களை பற்றி யோசிக்கும் ஏராளமான திரை பிரபலங்கள் போலவே ஓடோடி வந்துவிட்டார் அவரும், அவரது மனைவி சுஹாசினியும். நாம் என்ற இயக்கத்தின் கீழ் செயலாற்றி வரும் அவ்விருவரும், சுற்றம் சூழ இந்த வெள்ள நிவாரண பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாம் இயக்கத்தின் சார்பாக சென்னை கோட்டுர், கோட்டுர் புரத்தில் உள்ள சூர்யா நகரை தத்தெடுத்துள்ளனர். தமிழக அரசு வேண்டிய நிவாரண உதவிகளை செய்து வரும் இந்நிலையில் நாம் இயக்கம் அரசுக்கு தோள் கொடுத்து உதவும் வகையில் இந்த பணியை செய்து வருவதாக குறிப்பிட்டார் சுஹாசினி.
சூர்யா நகரை தத்தெடுத்தபின் முதல்கட்டமாக அப்பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினர்கள் இருவரும். தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், இந்த கொடுமையான பாதிப்பிலிருந்து மன ரீதியாக அவர்களை வெளியேற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது நாம் அமைப்பு.
ஆடு மேய்ந்ததை போல ஆங்காங்கே தொட்டும் தொடாமலும் உதவி செய்வதைவிட ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தத்தெடுத்துக் கொள்ளும் இந்த முறையும் வரவேற்கப்பட வேண்டியதுதான்!