இளம் நடிகை ஷாக் -மனிஷா கொய்ராலா அவ்வளவு ஆறுதலாக நடந்து கொண்டாரா?

உவமைகள் எல்லாம் உண்மைகளானால் உலகம் தாங்குமாடா கலகநாதா? புனல் மின்சாரம், அனல் மின்சாரமெல்லாம் அவசியமேயில்லை. ‘மீனா கண்ணே… கண்ணே மீனா!’ என்று கவிதையிலே மின்சாரம் எடுத்து, எழுத்திலேயே சம்சாரம் பிடிப்பவர் பார்த்திபன். எப்பவோ அவர் எழுதிய அந்த ரெண்டு வரி கவிதை இருக்கிறதே… அதுமாதிரியான அப்ரோச், இன்னும் தமிழ்சினிமாவில் நிகழவேயில்லை. செத்துப்போன கவிச்சக்கரவர்த்திகள் எல்லாம் சேர்ந்து வந்து பிறப்பெடுத்தாலும், பார்த்திபனின் தமிழுக்கு முன்னே பல்டிதான் அடிக்கணும். இப்படி ‘உவமைகளே பேட்டரி, உள்ளம் கேட்குதே லாட்டரி…’ என்று அவர் காலம் நகர்ந்தாலும், அந்த உவமைகள் ஒவ்வொன்றும் உண்மையானால்?

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக
நான் பறந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற…

என்றொரு பாடல். அப்படியே அவளது பின்னந்தலை கூந்தல் பிய்த்துக் கொண்டு, வானத்திற்கும் பூமிக்குமாக கனெக்ஷன் எடுத்து, மேகத்தோடு மேகமாக கலந்து நிற்கிறது என்று வைங்களேன்… அவளை பெண் என்பீர்களா? பிசாசு என்பீர்களா? இருந்தாலும் உவமைகள் அழகுதான். அதுவும் கூந்தல் பற்றிய வர்ணனைகளை கட் பண்ணிவிட்டால், தமிழ்சினிமாவில் ‘சிகையலங்காரம்’ என்கிற டிபார்ட்மென்ட்டே இருக்காது. சவுரி முடி யாவாரத்திற்கெல்லாம் சங்குதான்!

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா? என்ற மதுரை மன்னனின் சந்தேகத்தில் துவங்கிய இந்த இம்பார்ட்டன்ஸ், ‘முடி உதிர்வா? தலை வழுக்கையா?’ என்று சும்மா போறவனையெல்லாம் இழுத்து வச்சு கேள்வி கேட்கிறது. ரயில்வே ஸ்டேஷன், பீச் ஸ்டேஷன், இன்னும் என்னென்னவோ ஸ்டேஷன்களில் போஸ்டர்களாக கதையளக்கிறது. நல்லவேளை… போலீஸ் ஸ்டேஷனை மட்டுமாவது விட்டுவைத்தார்கள்.

முடிக்கும் சினிமாவுக்குமான தொடர்பு அலாதியானது. சில இடங்களில் கலவரத்திற்கெல்லாம் காரணமாகியிருக்கிறது அந்த முடி. ஒரு ஹீரோவுக்கு அந்த படத்தின் தயாரிப்பாளரோ, இயக்குனரோ, பிடிக்கவில்லை என்று வைங்களேன். பெரிசாக எந்த ரியாக்ஷனும் காட்ட மாட்டார். மறுநாள் ஷுட்டிங் இருக்கும்போது சொல்லாமல் கொள்ளாமல் போய் தலை முடியை ஷேப் பண்ணிவிட்டு வந்துவிடுவார். அவ்வளவுதான்… அந்த மறுநாள் ஷுட்டிங் மர்கயா. ‘கன்ட்டினியூடி போச்சே’ என்று கதறுவார்கள் இயக்குனர்கள். ‘எங்கிட்ட சொல்லாம ஏன் முடி வெட்டுனே?’ என்ற கேள்வி ஸ்டார்ட் ஆகி, அதற்கப்புறம் அதுவே வெட்டுக்குத்து லெவலுக்கு பிரமோஷன் ஆகி, கடைசியில் படமே டிராப் ஆன கதையெல்லாம் இங்கு நிறைய உண்டு.

ஆனால் இதற்கெல்லாம் மசியாத சில இயக்குனர்கள் இருக்கிறார்கள். ‘நீ முடியதான் வெட்டு. மொட்டைதான் அடி. எனக்கு எதுக்கு கன்ட்டினியூடி?’ என்கிற ரகம். படத்துல கதையேயில்ல…. இந்த லட்சணத்துல கன்ட்டினியூடி முக்கியமாக்கும் என்கிற அலட்சிய புருஷர்கள் அவர்கள். முதல் காட்சியில் முழு தாடியோடு காட்சியளிக்கும் ஹீரோ, அடுத்த காட்சியிலேயே மழித்துக் கொண்டு நிற்பது மாதிரியான எத்தனையோ படங்களை நாம் பார்த்திருக்கலாம். அடேய்… கிச்சன்ல அம்மாட்ட பேசிட்டு இருக்கும்போது மழமழன்னு நிக்குறான். கிச்சன்லேர்ந்து ஹாலுக்கு வர்றதுக்குள்ள இவ்ளோ தாடி முளைச்சுருச்சேடா… என்று தியேட்டரே கைதட்டி கொலீர் என்று சிரிக்கும். அதெல்லாம், நம்ம அலட்சிய புருஷர்களின் ஆயுள் ரேகை படைப்புகள்தான்!

ஷுட்டிங் ஸ்பாட்டில் ஒரு ஹீரோ அவஸ்தைப்பட்டதை இப்போது நினைத்தாலும் வயிறு பிய்ச்சுக்கும்! அவர் நடித்த படம் ஒன்றின் ஷுட்டிங் ஒரு வாரமாக நின்று போயிருந்தது. கடைசியாக அவர் நடித்தது ஒரு பாடல் காட்சியில் வரும் ஒரு வரிக்காக. அது தேவதாஸ் வேஷம். கையில் சாராய பாட்டில். முகத்தில் நாலு நாள் தாடி. பக்கத்தில் ஒரு நாய். அதன் முதுகை தடவிக் கொண்டே அவர் பாடுவதாக வரிகள். பாதி வரிதான் முடிந்திருந்தது. அதற்குள் தயாரிப்பாளரை எந்த பார்வதி ஏமாற்றினாளோ? ‘போங்கடா உங்க ஷுட்டிங்கும் நீங்களும்’ என்று பிரேக் விட்டுவிட்டு தேவதாஸ் ஆகிவிட்டார் அவர். இந்த இடைவெளியில்தான் தன் தாடியை சுத்தமாக ஷேவ் பண்ணிவிட்டு வழவழ என்றாகிவிட்டார் ஹீரோ.

திடீரென ஒரு நாள் டைரக்டருக்கு போன். தயாரிப்பாளர்தான். ‘யோவ்… இன்னைக்கு நைட் ஷுட் வச்சுக்கோ!’ டைரக்டருக்கு அது முதல் படம். இந்த படமே கோவிந்தாதானோ என்றெல்லாம் கலங்கி நின்றவருக்கு இப்படியொரு போன் வந்தால் எப்படியிருக்கும். சந்தோஷத்தில் ஹீரோ வீட்டுக்கு ஓடினார். போனால்? முகமெல்லாம் மழ மழ… வழ வழ… ‘என்ன சார் இப்படி பண்ணிட்டீங்களே?’ பேரதிர்ச்சியுடன், ரிட்டர்ன் ஆனார். ஒட்டு தாடி வைக்கலாம். ஆனால் ரொம்ப அமெச்சூரா இருக்கும். என்ன பண்ணலாம்? மேக்கப் மேனோடு விரிவாக விவாதித்ததில் பாதி மூச்சு வந்தது. திட்டமிட்டபடி ஷுட்டிங். ஏழுமணிக்கு கேமிராவை ஒட விட்றணும்.

ஹீரோவுக்கு நான்கு நாள் தாடியை செட் பண்ணணுமே? குதிரை வாலிலிருந்து கொஞ்சம் முடியை நறுக்கி எடுத்து வந்திருந்தார்கள். அவரது முகத்தில் சொல்யூஷனை தடவி, அந்த நான்கு நாள் தாடிக்கு நிகராக சன்னமாக நறுக்கப்பட்ட குதிரை வால் முடியை தடவினார்கள். பார்க்க பப்பரக்கா… என்றிருந்தது. இருந்தாலும் நேரமில்லை. இந்த நேரத்தில் சாதுர்யம் முக்கியம். மளமளவென செயல்பட்ட இயக்குனர், ஒரு கருப்பு போர்வையை கொண்டு வந்து, மலையூர் மம்பட்டியான் போல ஹீரோ தோளில் போர்த்திவிட்டார். அது பாதி தாடியை மறைத்திருப்பது மாதிரி, செட் பண்ணியும் கொடுத்தார். லைட்டிங் விஷயத்தில் கொஞ்சம் முகத்தில் ஷேட் அடிக்க வைத்தார்கள். இப்போது எல்லாம் ஓ.கே.

‘ஏம்ப்பா… நாயை கொண்டாந்து அவரு பக்கத்துல விடு…’ விட்டார்கள்! அந்த சொல்யூஷன் வாசனை, ஹீரோவின் ஒட்டுத்தாடி முகத்தில் திட்டு திட்டாக காட்சியளித்த குதிரை முடி. எல்லாம் சேர்ந்து நாயை கலவரமாக்க… சந்து கிடைத்தால் போதும். சைலன்ட் ஜம்ப்தான் என்ற நோக்கத்திலேயே அது இங்கும் அங்குமாய் திரும்பி வள் வள் என்றது. ‘யோவ்… நாயை இன்னும் குளோஸ்சா போவச் சொல்லு’ என்று டைரக்டர் கத்தினாலும், நாய் ஒத்துழைக்கணுமே? பெருங்குரலில் வள்ள்ள்ள்ளென்றது. ‘சார். கடிச்சுரப் போவுது சார்…’ நாயின் சப்தத்தை மீறி இப்போது ஹீரோவின் உதறலும் இயக்குனருக்கு கேட்க, ‘சும்மா அப்படியே உட்காருங்க சார். கேட்காம போய் தாடிய மழிச்சுட்டு இப்ப பயம் வருதாம்ல பயம்?’ என்று வெளிப்படையாகவே முணுமுணுத்தார்.

‘பயப்படாதடா செல்லம்… போன வாரம் கூட எங்கூட நடிச்சியே… இப்ப ஏன் பயப்படுற?’ என்று ஹீரோ நடுக்கத்தோடு நாயின் முதுகை தொட, அதுவோ புதுப்பொண்டாட்டி போல சர்வ தேகத்தையும் சிலிர்த்துக் கொண்டு நின்றது. கிட்டதட்ட ரெண்டு மணி நேரம். குதிரை முடி, அந்த சொல்யூஷன் வாசனை எல்லாம் கடந்து அதற்கு பழகிய ஒரு சவுரியமான நேரத்தில் ஷுட்டிங் நிகழ்ந்தேறியது.

ஒரு ஆணுக்கே இப்படியென்றால் பெண்களுக்கு? அதுவும் ஒரு ஷுட்டிங் ஸ்பாட்தான். மனிஷா கொய்ராலா மீண்டும் ரி என்ட்ரியாகிற தமிழ்ப்படம். இப்போதுதான் தயாரிப்பு நிலையிலிருக்கிறது. இதில் நடிக்க பெங்களூரிலிருந்து ஒரு அறிமுக நடிகையை இறக்குமதி செய்திருந்தார்கள். கதைப்படி அவர் ஒரு பெண் போலீஸ் அதிகாரி. பெரும்பாலும் அன் யூனிபார்ம். அர்ஜுன், ஷாம், மனிஷா கொய்ராலா போன்ற நட்சத்திர அந்தஸ்து இருந்தாலும், டைரக்டரே தயாரிப்பாளர் என்பதால், சிக்கனமாகவே நகர்கிறது எல்லாமும்.

இந்த இளம் நடிகைக்குதான் ஹேர் டிரஸ்சர் இல்லை. பெங்களூரிலிருந்து வந்திறங்கிய உடனே, ‘சார்… நான் என்னோட ஹேர் டிரஸ்சரை பார்க்கணும்’ என்றார் நடிகை. ‘வருவாரு… வருவாரு…’ என்று அசுவாரஸ்யமாக ஒரு பதிலை சொல்லிவிட்டு நகர்ந்த தயாரிப்பு நிர்வாகி, ‘யோவ்… அந்த பொண்ணுக்கு மேக்கப் போட்டுட்டு அப்படியே ஹேர் டிரஸ்சர்லாம் தனியா யாரையும் வைக்கலன்னு சொல்லிடு. அப்படியே நீயே ஹேர் ஸ்டைல் பண்ணிவிட்ரு’ என்று கூறிவிட்டார். கேமிராவுக்கு முகம் காட்டுகிற ஆரம்ப கால கட்டத்திலேயே அடங்காத ஆசையோடு வந்திருந்தார் போலும் அந்த நடிகை. தனக்கென குடை பிடிக்க தனி ஆள். மேக்கப் போட தனி ஆள். ஹேர் டிரஸ்சிங் செய்ய தனி ஆள் என்றெல்லாம் காத்திருக்க, இங்கு எல்லாமே ‘சிங்கிள் விண்டோ சிஸ்டம்தான் தங்கச்சி’ என்றபடி வந்தார் மேக்கப்மேன்.

தனக்கு தெரிந்த வரைக்கும் எப்படியோ தலையை வாரிவிட்டு கிளம்பினார். ‘ஐயோ… இப்படியாகிருச்சே. இதுக்குன்னு ஒருத்தர் ஸ்பெஷலா இருந்திருந்தா நாம ஸ்கிரீன்ல எவ்வளவு அழகா இருந்திருப்போம்?’ மனசு முழுக்க கவலையால் நிரம்பிய நடிகை, ஷாட் பிரேக்கில் அதையே ஒரு பெரிய விஷயமாக முணுமுணுத்துக் கொண்டிருந்தார். ‘ஏம்மா இப்ப டென்ஷன் பண்ணுற? நல்லாதான இருக்கு இது’ என்று வள்ளென்று விழுந்த டைரக்டர், பரபரவென ஷுட்டிங்கை தொடர்ந்தாலும், மழைக்கால தவளை போல வறட் புரட்டென்று புலம்பிக் கொண்டேயிருந்தார் அந்த அறிமுக நடிகை.

ஷாட் பிரேக்கிலும் இந்த புலம்பல் தொடர, அதுவரை எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த மனிஷா கொய்ராலா, ‘இங்க வாம்மா’ என்றார் அந்த நடிகையை. லேசாக அவரது தலையை வருடிக் கொடுத்தவர், ஆறுதலாக… ‘நிஜம்மா நல்லாயிருக்கு. ஏன் கவலைப்படற? இங்க பார்’. என்று தனது செல்போனை ஆன் செய்து அவரது ஹேர் ஸ்டைலை மட்டும் தனியாக படம் எடுத்து காண்பித்தார்.

என்னது? மனிஷா கொய்ராலாவா அவ்வளவு ஆறுதலா நடந்து கொண்டார்? மணிரத்னம், ஷங்கர் படங்களில் எல்லாம் நடித்த ஒரு ஹீரோயின். பாலிவுட்டில் நிறைய படங்களில் நடித்தவர். அவர் மனசிலும் இப்படியொரு ஈரமா? புது நடிகை தடுமாற, அதற்கப்புறம் மனிஷா காட்டிய வழி இருக்கிறதே… அது கருணை மழையே மேரி மாதா டைப்!

‘இங்க பார்… ’ என்று அவர் செல்போனிலிருந்த போட்டோ கேலரியை ஓப்பன் செய்தார். எல்லாமே மனிஷா சில வருடங்களுக்கு முன் எடுத்துக் கொண்ட படங்கள். வித விதமான ஹேர் ஸ்டைல். விதவிதமான அழகு. பெரும்பாலும் தமிழ் தெலுங்கு பட ஹீரோக்களுடன் அவர் பேசிக் கொண்டிருக்கும் காட்சிகள், இந்திப்பட ஜாம்பவான்களுடன் அவர் அரட்டையடிக்கும் காட்சிகள். அப்படியே கேலரி இன்னும் இன்னும் விரிந்தது. இப்போது பலத்த ஷாக் அறிமுக நடிகைக்கு.

உடல் மெலிந்து கன்னமெல்லாம் வற்றிப் போய் தலை முடியை இழந்து, மொட்டை கோலத்திலிருந்தார் மனிஷா. ‘இதுவும் நான்தாம்மா… ’ என்றபடி பேச ஆரம்பித்தவர் ‘எந்த படத்தில் இந்த கெட்டப்புன்னுதானே கேட்கிற?’ என்றார்.

‘யெஸ் மேம்…’ இது அறிமுக நடிகை.

‘இது கெட்டப் இல்ல. நிஜம். எனக்கு கேன்சர் வந்து நான் அந்த நோயோட போராடுனப்ப எடுத்தது. தலைமுடி… அழகு… எல்லாமே பாசிங் க்ளவுட்ஸ்தான். அந்தந்த நேரத்து வாழ்க்கைதான் இனிமையானது. இதோ- இப்போ நான் வச்சுருக்கறது கூட விக்தான்! நீ நம்ப மாட்டேல்ல… என்றார் மனிஷா.

அதற்கப்புறம் அந்த நடிகை ஷுட்டிங் ஸ்பாட்டில் புலம்பவேயில்லை. காலம், சிட்டுக்குருவியிலிருந்து யானை வரைக்கும் எல்லாருக்கும் ஒரு ‘பாட’திட்டம் வைத்திருக்கிறது! எது நடந்தாலும் ‘ஹேர்’ரே போச்சு என்று இருப்பவர்களால் மட்டுமே எல்லா பாடத்தையும் கடக்க முடிகிறது!

(குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிவரும் கோடம்பாக்கம் செக்போஸ்ட் தொடரிலிருந்து…)

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கார்த்திகா அப்படி ஆனதுக்கு காரணம் நான்தான்! ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் தந்த அதிர்ச்சி

தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு என்று நான்கு மொழிகளில் சுமார் 18 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார் ஏகாம்பரம். ‘புறம்போக்கு’ அவரது ஒளிப்பதிவில் வந்திருக்கும் லேட்டஸ்ட் படம். இனி...

Close