மாப்ள சிங்கம்- விமர்சனம்

ஊர்ல இருக்கிற காதலையெல்லாம் ஒழிச்சு கட்டும் சிங்கம், தொப்புக்கடீர் என்று காதலில் விழுந்து ‘மாப்ளே’ ஆவதுதான் மாப்ள சிங்கம்! இதில் அரசியல், ஜாதி, வெட்டு, குத்து என்று மசாலா ஐட்டங்களை அள்ளிப்போட்டு தொங்கிக்கிடந்த விமல் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியிருக்கிறார் இயக்குனர் ராஜசேகர். (இனிமேலாவது வண்டி ஸ்டடியா ஓடுமா விமல்?)

‘என் சாதிதான் ஒசத்தி, அதனால் எனக்குதான் முதல் மரியாதை வேணும்’ என்று ஓயாமல் ஜம்பம் அடித்துக் கொண்டு திரியும் இரண்டு சாதிக்கட்சிக் காரர்களால் அந்த ஊர் கோவில் தேர் ஓடாமலே கிடக்கிறது. பஞ்சாயத்து பண்ண வருகிற கலெக்டரையே பஞ்சராக்கி அனுப்புகிறது அவர்களின் ஜாதி வெறி. இந்த காட்டுமிராண்டி கூட்டத்தின் கண்டக்டர் டிரைவரான விமல், எதிர்சாதி பெண்ணான அஞ்சலியை காதலிப்பதும், அதற்கப்புறம் அவர்கள் ஒன்று சேர்வதும், அதற்கப்புறம் தேர் நகர்வதும்தான் கதை. நாட்டிலிருக்கிற சாதிக் கட்சிகளை சாடித் தள்ளவும், அரசியல் கட்சிகளை அலறி ஓடவும் வைக்கிற அளவுக்கு வசனங்களில் ‘ஹோப்’ இருந்தும், நல்ல பிள்ளையாக வம்பு தும்புக்கு போகாமல், தானுண்டு தன் படம் உண்டு என அடக்கி வாசித்திருக்கிறார் டைரக்டர். அதுவே ப்ளஸ்… அதுவே மைனஸ்…!

நைச்சியமாக பேசி, போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த காதல் ஜோடியை விமல் பிரித்துவிடும் முதல் காட்சியிலேயே புரிந்து விடுகிறது அதற்கப்புறம் நடக்க போகிற அதகளங்கள். இப்படிதான் கதை போகும் என்று யூகிக்க முடிந்தாலும், அந்த சம்பவங்களுக்காக காத்திருக்க வைத்திருக்கிறார்களே… அங்கு நிற்கிறது திரைக்கதை! விமல் அறிமுக காட்சியை விட, அஞ்சலியின் அறிமுகக் காட்சிதான் அட அட அட! (இருந்தாலும் படம் ஆரம்பிச்சு இவ்ளோ நேரம் கழிச்சா அவரை காட்றது? நோ மன்னிப்பு டைரக்டர்)

“ரொம்ப எனர்ஜிடிக்காக வொர்க் பண்ணினோம்” என்று எல்லா பிரஸ்மீட்டிலும் சொல்வார்கள். ஆனால் படத்தில் அழுது வடிவார்கள். இந்த படத்தில் விமலும் அஞ்சலியும் இன்னபிற ஆர்ட்டிஸ்ட்டுகளும் அவ்வளவு எனர்ஜிடியாக தெரிகிறார்கள். அதிலும் விமல் முகத்தில் வழிந்தோடும் அந்த குறும்பும், கவலைப்பட வேண்டிய நேரத்தில் கூட, ‘ஜஸ்ட் லைக் தட்’ என்று டீல் பண்ணுகிற அசால்ட் தனமும், ‘மனுஷன் நல்லா வரணும்…’ என்று நினைக்க வைக்கிறது. சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிட்டாலும், அஞ்சலி ஜெயிக்கணும் என்று விமல் நினைப்பதும், இருவரது பிரச்சார காமெடிகளும் தியேட்டரையே உற்சாகத்தில் தள்ளுகிறது.

முன்பு பல படங்களில் பார்த்த அதே தெனாவெட்டு அஞ்சலி! இந்த படத்தில் இன்னும் இன்னும் அழகாகவும் திமிராகவும்…! விமல் தன் மீது உயிராக கிடந்து உருகுகிறார் என்று தெரிந்தபின், அவரை பார்த்தும் பார்க்காதது போல ஒரு அலட்சியம் காட்டுகிறாரே… அசத்தல்! நீதிமன்றத்தில் விமல் அண்டு கோஷ்டிகளுக்காக வாதாடி ஜாமீன் பெற்றுத் தருகிற போதும், அதே கம்பீர அஞ்சலி விமலோடு சேர்த்து ரசிகனையும் காதலில் விழ வைப்பார் போலிருக்கிறது.

படத்தில் சூரி இருக்கிறார். ஆனால் அவரது வாய் துடுக்குக்கு ஐம்பது சதவீத தள்ளுபடி கொடுத்துவிட்டார் போலிருக்கிறது. இருந்தாலும், அவ்வப்போது அவரது வசனம் புரட்டிப் போடுகிறது. ஆஸ்பிடலில் படுத்த படுக்கையாக கிடக்கும் விமலிடம், ‘கிளம்புடா வீட்டுக்கு’ என்று ராதாரவி சொல்ல, “சொல்லிட்டாருடா சீஃப் டாக்டரு… ” என்று சூரி மைண்ட் வாய்சில் கவுன்ட்டர் அடிக்க, கொல்லென சிரிக்கிறது தியேட்டர். விமலுடன் காளி வெங்கட்டும் சூரியும் டிராவல் ஆகிறார்கள். காளியை சற்றே அமுக்கிக் கொண்டு வெளிப்பட நினைத்திருக்கிறார் சூரி. அதையும் மீறி சிரிக்க வைத்திருக்கிறார் காளி.

படம் முழுக்க ஒரு இங்கிலீஷ் காரரையும் நடிக்க வைத்திருக்கிறார்கள். அவர் கேட்கும் சந்தேகங்கள் பல, சாதி வெறியர்களுக்கு எதிரானது. நியாயமானது. எல்லாவற்றையும் இவரே கேட்பதால் அவையெல்லாம் சிரிப்பு என்ற செக்ஷனுக்குள் அடங்கிவிடுவதுதான் ஐயே! பெரிய மீசையோடு வரும் மாமன் காரராக லொள்ளூ சபா சாமிநாதன், சிரிப்புக்கு கியாரண்டி கொடுக்கிறார். நம்ம முனிஸ்காந்தும் கூடதான்! ஜுனியர் ஆர்ட்டிஸ்டை போல சில காட்சிகளில் தலை காட்டுகிறார் யோகிபாபு. அவரை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம்.

படத்தில் இன்னொரு ஜோடியாக வரும் விஷ்ணு மதுபாலா லவ் மற்றும் திருப்பங்கள் அழகு. படிக்க நினைக்கிற மதுபாலாவை அடக்கி வைக்கும் சாதி வழக்கங்களும், அவற்றை மீறி அவர் படிக்கக் கிளம்புவதும் மனதில் பதிய வேண்டிய முக்கியமான தியரி.

ரகுநந்தனின் இசையில் வரும் ‘எதுக்கு மச்சான் காதலு’ அட்வைஸ் பாடல் எங்கேயோ கேட்ட மெட்டாக இருந்தாலும், காதுக்குள் இறங்கி திரும்ப திரும்ப ரிப்பீட் அடிக்கிறது. ஒருவாட்டி…. பாடல் எத்தனை வாட்டி கேட்டாலும் இனிக்கும்.

‘நம்பி வாங்க… சந்தோஷமா போங்க’ பார்முலா படம்தான் இதுவும்! எனவே… இது “மாப்ள தங்கம்!”

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
த்ரிஷா வளைப்பு! சிக்கினார் விஜய் சேதுபதி?

ஏஜ் ஏற ஏற ஏழெட்டு லார்ஜ் அடித்த மயக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. எல்லா புகழும் யோகாவுக்கே என்று சொல்கிற அளவுக்கெல்லாம் அவர் அனுஷ்கா அல்ல. அப்படியிருந்தும்...

Close