மருது- விமர்சனம்
ஊரிலிருந்து கிளம்பும்போதே, “ரத்தம் பார்க்காம ஓய மாட்டேன்” என்று கிளம்பி வந்திருப்பார் போலிருக்கிறது மருது பட இயக்குனர் முத்தையா! படத்தில் யாராவது சிரித்தால் கூட, ‘பல்லிடுக்கில் ரத்தம் வருதா பாரு…?’ என்று அலட்ர்ட் ஆகிறது கண்கள்! ஒவ்வொரு தியேட்டர் வாசலிலும் பிளட் பேங்க் வேனை நிறுத்தினால், நேரடியாக குழாய் போட்டே உறிஞ்சி எடுக்கலாம். அவ்ளோ கொட்டுது ஒயிட் ஸ்கிரீனில்! நல்லவேளை ரத்தத்துக்கு நடுவில் ஒரு காதலையும், ஒரு அப்பத்தா பாசத்தையும் கலந்து பிசைந்து கறிச்சோறு போட்டு அனுப்பியிருக்கிறார் முத்தையா! (ரொம்ப தப்புய்யா… அடுத்த படத்துல பிளட் சேதாரம் பெருசா இல்லாமலிருக்கணும். புரியுதா?)
ஊரில் மூட்டை தூக்குகிற பேரனுக்கு, அதே ஊரிலிருக்கும் ஸ்ரீதிவ்யா மீது காதல் வர வைக்கிறார் விஷாலின் அப்பத்தா. இந்த அப்பத்தாவுக்கு எதுக்கு அந்த வேலை? என்று யோசித்தால், அதற்கு பின்னால் வலுவான ஒரு பிளாஷ்பேக். அது புரியாமல் ரொமான்சில் இறங்கும் விஷால், நண்பன் சூரியின் துணையுடன் ஸ்ரீதிவ்யாவின் பின்னால் சுற்ற, இன்னொரு புறம் அந்த ஊரின் கவுன்சிலர் சுரேஷ், ஸ்ரீதிவ்யாவையும் அவரது வக்கீல் அப்பாவையும் போட்டுத்தள்ள கிளம்புகிறது.
இவங்க ஏன் அவங்களை போடணும்? அப்பத்தா ஏன் அநியாயமா சாகணும்? சின்ன சின்ன பிளாஷ்பேக்குகளில் திடீர் திடீர் ஷாக் கொடுக்கும் டைரக்டர், மருதுவை மாநிலத்திலேயே முதல் நல்ல மனுஷனாக ஆக்காமல் ஓய மாட்டேன் என்று மிச்ச சொச்ச சண்டைகளை போட விட்டு சுபம் போடுகையில் விஷாலை ‘தென்னகத்தின் அர்னால்டே’ என்று மனசுக்குள் வாழ்த்தியபடியே வெளியே வருகிறான் ரசிகன். (ஆக்ஷன் மசாலான்னா அதுக்கு கால காலமா ஒரு ஃபார்முலா இருக்கு. அது அப்படியே இதுலேயும் இருக்கு)
விஷாலின் கோபத்தை ரசிக்கிறோமோ இல்லையோ? ஸ்ரீதிவ்யாவின் கோபத்தை ரசிக்க முடிகிறது. கோயிலில் எச்சில் துப்பும் ஒருவனின் கன்னத்தில் படீரென அறையும் அவர், அதற்கப்புறம் ஒரு சந்தர்ப்பத்தில் விஷாலையே ஒன்று ஓங்கி வைக்கிறார். (அட நம் காதுக்குள்ளே ஆயிரம் பறவை சிறகை பிய்ச்சுகிட்டு ஓடுதே?) அதற்கப்புறம் மிக சரியான ஒரு சந்தர்ப்பத்தில் அதே அறையை விஷால் திருப்பிக் கொடுக்க, ‘ஏது… ஜோடிகளை சேர விடாம சோலிய முடிச்சுருவார் போலிருக்கே?’ என்ற அச்சமே வந்துவிடுகிறது. அதற்கப்புறம் ஸ்ரீதிவ்யா விஷால் ரொமான்ஸ்…. அந்த கமலஹாசன் படத்துல கூட காணாதது!
பாட்டியும் சூரியும் பர்ஸ்ட் நைட் பற்றி விவாதிக்கிற காட்சியும், டயலாக்கும் ‘ஹல்லோ கொஞ்சம் அடக்கி வாசிங்கப்பா’ ! அப்பத்தாவாக நடித்திருக்கிற கொல்லப்புள்ளி லீலாவுக்கும், சூரிக்கும்தான் அவ்வளவு சூட்! பேச்சில் மலையாள வாடை அடித்தாலும், வம்படியாக மனசுக்குள் வந்துவிடுகிறார் அப்பத்தா. அதுவும் அவருக்கு தலையில் விளக்கெண்ணை தேய்த்து, ஐஸ் வாட்டரில் முங்க விட்டு, இளநீர் குடிக்க வைத்து அதற்கப்புறம் ஜன்னி வர வைக்கும் வில்லனிச கொடுமைக்கு ஆளாகும்போது, அப்பத்தா மீது தனி பாசமே வந்துவிடுகிறது.
விலங்கியல் பாடத்தில் மனுஷன் படத்தை நரம்பு எலும்பெல்லாம் தெரியும்படி வரைந்திருப்பார்களே, அப்படியிருக்கிறார் விஷால். இரும்பை குடிச்சு உடம்பை வளர்த்திருப்பாரோ என்று எண்ண வைக்கிறது ஒவ்வொரு அடியும். அதற்கேற்ப அமைக்கப்பட்ட ஸ்டன்ட் கம்போசிங்குகளுக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ். படம் முழுக்க விஷாலுக்கு பில்டப் கொடுத்து எழுதப்பட்ட வசனங்களுக்கு அவர் அடிமையாகிவிட்டார் என்றால், காலம் முழுக்க முத்தையாவுக்கு விஷால் பிலிம் பேக்டரிதான் பேட்டரி, ரீ சார்ஜ் எல்லாம்! வெளியே விடவே மாட்டார்.
அந்த ஊரிலேயே மகா மகா பெரிய மனுஷன் ராதாரவிதான் என்கிறார்கள். ஆனால் அசால்ட்டாக போட்டுத் தள்ளுகிறார் சுரேஷ். அப்புறமென்னய்யா அவரு பெரிய பெரிய பெரிய்ய்ய்ய்ய மனுஷன்? இந்த படத்தில் சுரேஷின் நடிப்புதான் பலே பலே. மனுஷன் அடர்ந்த தாடிக்குள்ளிருந்து காட்டுகிற அளவான எக்ஸ்பிரஷனே கிடுகிடுக்க வைக்கிறது. டப்பிங்கில் அவர் பேசும் அந்த மதுரை தமிழ், அட்சர சுத்தம்.
சூரி வருகிற காட்சிகளில் ‘இது வேணாம்’ என்று சொல்லும்படி ஒரு காட்சியும் இல்லை. தியேட்டரையே கலகலக்க விடுகிறார் மனுஷன். விஷாலின் மந்திரிசபையில் இவரே அரசவை புலவராகி அவரை அளந்து கொட்டுவதெல்லாம், திட்டமிட்ட பில்டப் போலிருக்கிறது.
சிலம்பம் மாரியம்மாவாக வரும் கூத்துப்பட்டறை ஆதிரா பாண்டிலட்சுமியை முதலில் காட்டும்போது பயங்கர பில்டப் கொடுக்கிறார்கள். ஆனால் படத்தில் வரும் சண்டையை மட்டும் ஹீரோதான் போட வேண்டும் என்று நினைத்துவிட்டால் எப்படி? அவரும் அவரது சிலம்பக்கலையும் ஒன்றுக்கும் உதவாமல் போகிறது.
‘உன் நிழலில் பேய் ஒதுங்குனாலே தாய் ஆகிடும். ஒரு பொண்ணு ஒதுங்குனா?…’ இப்படி படம் முழுக்க எழுதப்பட்டிருக்கும் வசனங்கள் தனியாக கவனிக்க வைக்கிறது. (அதற்காக எல்லா கேரக்டர்களும் அவரவர் டயலாக் பேப்பரை எடைக்கு போட்டு கார் வாங்குகிற அளவுக்கா எழுதித்தள்ளுவீங்க?)
இமான் இசையில் ‘அக்கா பெத்த ஜட்கா வண்டி’ நல்ல துள்ளல்! வேல்ராஜின் ஒளிப்பதிவும் வழக்கம் போல டிஸ்டிங்ஷன்.
சாதிய பெருமை பேசும் கதைகளை இன்னும் எத்தனை காலத்திற்கு ஆஹா ஓஹோ என்பது? எதிர்காலத்தில் விருதுக்கு வேணும்னா கூட ஆசைப்பட்டுக்கங்க. ஆனால் மறுபடியும் ஒரு மருதுக்கு ஆசை பட்டுடாதீங்க முத்தையா!
-ஆர்.எஸ்.அந்தணன்