மாஸ் என்கிற மாசிலாமணி- விமர்சனம்
சாமியார், சடாமுடி, சாம்பிராணிப் புகை, எதுமில்லாத ஆவிகள் படம்! ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்குரிய அத்தனை பலாபல திருப்பங்களுடன் அமைந்திருக்கும் படத்தில் ஆவியுலகத்தின் சென்ட்மென்ட்டையும் நுழைத்த விதத்தில் சமார்த்திய சடுகுடு ஆடுகிறது திரைக்கதை. வெங்கட்பிரபுவின் ‘டேக் இட் ஈஸி’ கொள்கையோடு, ஹரியின் ‘தூக்கி போட்டு அடி’ பாலிஸியும் கை கோர்த்தால் என்ன வருமோ? அதுதான் இந்த படத்தின் படபடப்பும், பரபரப்பும்!
நார்த் மெட்ராஸ் ஏரியாவில் தானுண்டு, தன் திருட்டு உண்டு என்று இருக்கும் மாஸ் என்கிற மாசிலாமணிக்கு திடீரென ஒரு ஆக்சிடென்ட். கண்விழிக்கும் அவருக்கு பெரிய சர்பிரைஸ். சில பல ஆவிகள் மட்டும் இவர் கண்ணுக்கு தெரிகிறார்கள். முதலில் அஞ்சுகிற அவர், ஒரு கட்டத்தில் அவர்களையும் கூட்டு சேர்த்துக் கொண்டு பேய் விரட்டும் தொழில் செய்ய ஆரம்பித்துவிடுகிறார். செம கலெக்ஷன். ‘இப்படி இல்லாத ஒரு விஷயத்தை இருக்கிறதா சொல்லி துட்டு பார்க்குறீயே…. உனக்கெல்லாம் லவ் எதுக்கு?’ என்று காதலி நயன்தாரா கோபித்துக் கொண்டு விலகிவிட, அவரிடம் கூட உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கிறார் மாஸ் என்கிற சூர்யா. அந்த நேரத்தில்தான் படத்தில் இன்னொரு திருப்பம். இவரை நெருங்கி நெருங்கி வருகிறது இன்னொரு ஆவி. அது வேறு யாருமல்ல, தன்னுடைய அப்பாதான் என்பதை சூர்யா அறிந்து, அவருக்காக வில்லன்களை பந்தாட கிளம்ப, ஆக்ஷன் மசாலா படங்களில் வரும் அடிதடி ரத்த பொடிமாஸ் சகிதம் இந்த யுத்த இடி மாஸ்க்கும் என்ட்!
இரண்டு சூர்யாக்களில் யார் பெஸ்ட் என்றால், சந்தேகமென்ன? நயன்தாராவின் காதலர்தான்! சும்மாவே பம்பரம் போல சுற்றுகிற சூர்யாவுக்கு இதில் ஃபோர் ட்வென்ட்டி கேரக்டர். ஊர் முழுக்க களவாடுவது இருக்கட்டும். வெகு அசால்ட்டாக நயன்தாரா மனசை களவாடுவது டாப்! அப்படியே பொசுக்கென்று அவரை லவ்வர் என்று உரிமை கொண்டாடுகிற நேரத்தில் கண்ணில் ஒரு மின்னலடித்து அக்சப்ட் பண்ணிக் கொள்கிறார் நயன்தாராவும். அதற்கப்புறம் நயன்தாராவுக்கு லஞ்சப்பணம் தேற்ற இவர் கிளம்புவதும், மெல்ல ஆவிகள் நட்பில் அடைக்கலமாவதுமாக யதார்த்த நடை நடக்கிறது கதை. ஒருகட்டத்தில் தன் உயிர் நண்பன் பிரேம்ஜி கூட ஆவியாகதான் தன்னுடன் சுற்றி வருகிறான் என்பதை அறிந்து சூர்யா கலங்குவது ஃபெதர் டச் மூவ்மென்ட்!
அப்படியே சூர்யாவுடன் சுற்றும் சுமார் ஒரு டஜன் ஆவிக்கும் ஒரு பின் கதையை வைத்து அது நிறைவேறியதும் அவர்கள் ஆத்மா சாந்தியடைவதையும் காட்டுகிறார்களா? இனி சுடுகாடு பக்கம் ராத்திரி 12 மணிக்கு திரிந்தால் கூட, எதிரில் வரும் நபரிடம், ‘என்னா பிளாஷ்பேக்கும்மா உனக்கு?’ என்று கேட்கிற அளவுக்கு நெருக்கமாகிவிடுகிறது அவர்களின் முன் கதை சுருக்கம். இந்த போர்ஷனில் மட்டும் ஏதோ விளையாட்டு பிள்ளை விரதம் இருக்க கிளம்பியது மாதிரி நகர்கிற காட்சிகளுக்கு நடுவில் ஈழத்தமிழ் பேசி வரும் சூர்யா என்ட்ரியானதும் சீரியஸ்தனமும் என்ட்ரியாகிறது. ‘எங்களட துயரம் தெரியுமாடா உனக்கு?’ என்று சூர்யா பேசும் அடுக்கடுக்கான பஞ்ச், என்னவோ தெரியவில்லை, மண்டைக்குள் இறங்க வெகு நேரம் பிடிக்கிறது.
கனடாவிலிருக்கிற ஈழத்தமிழரான சூர்யா அன் பேமிலியை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து காவு கொடுக்கிற போதே புரிந்துவிடுகிறது, ‘நாங்கள்லாம் அப்படிதாண்டா’ என்பதை வெங்கட்பிரபு ஒரு குறியீடாக சொல்ல வருகிறார் என்று! (அரசியல்?) அரசியல்வாதிகள் சுருட்டுகிற பணம், எங்கெல்லாம் கப்பலில் சுற்றி சுற்றி வருகிறது என்பதை போகிற போக்கில் காட்டுகிறார் வெங்கட்பிரபு. பகீர் என்கிறது.
படத்தில் இரண்டு ஹீரோயின்கள். நயன்தாராவும், பிரணிதாவும். இவர்கள் போர்ஷனை மட்டும் ஊறுகாய் பாட்டிலில் ஒட்டப்பட்டிருக்கும் லேபிளுக்கு அடியில் எழுதியிருப்பார் போலும் டைரக்டர். ரொம்பவே நறுக் சுருக்! மூக்கும் முழியுமாக இருக்கிறார் பிரணிதா. ஆனால் சில காட்சிகளில் முழியும் மூக்குமாக(?) இருக்கிறார் நயன்தாரா. கேமிராமேன், மேக்கப் மேன், அல்லது நயன்தாராவே கூட…? என்னாச்சுங்க எல்லாருக்கும்?
கொஞ்ச நாட்களாக கொஸ்டீன் பேப்பரிலேயே கூட குட் மார்க் வாங்கும் சமுத்திரக்கனியை நன்கு சவுட்டிய கனியாக்கியிருக்கிறார் வெங்கட்பிரபு. அதுவே ஒரு துணிச்சல்தான். அதைவிட துணிச்சல் படம் முழுக்க சூர்யாவுடன் பிரேம்ஜியை நடமாட விடுவது. போன பிறவியில் வெங்கட் பிரபு ராமனாகவும், பிரேம்ஜி பரதனாகவும் பிறந்திருக்கக்கூடும். ‘அயோத்தி கவுருமென்ட்டு உனக்குதாண்டா தம்பி’ என்று அரவணைத்துக் கொண்டேயிருக்கிறார் இந்த பாசக்கார அண்ணன். இருந்தாலும் அந்த கேரக்டரில் ஒரு சந்தானமோ, அல்லது சூரியோ இருந்திருந்தால் எப்படியிருக்கும் என்று ஏங்காத மனசு இருந்தால் சொல்லுங்களேன்?
முன்னாள் ஹீரோ பார்த்திபன் இந்த படத்தில் அசத்தலான ஒரு போலீஸ் ஆபிசர் கேரக்டரில் வருகிறார். முன்னாளோ இன்னாளோ, என்னாளும் சேதாரமில்லாத பார்த்திபன்தான் இப்போதும். அவரது நக்கலென்ன? நையாண்டியென்ன? புரிந்து கொண்டு சிரிக்கிறது தியேட்டர்.
யுவன்சங்கர் ராஜா இசையில் காலத்திற்கு ஏற்ற மெட்டுகள். மெட்டுகளுக்கு ஏற்ற குத்துகள்! பின்னணி இசையில் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் யுவன். ஆர்.டி.ராஜசேகரின் கேமிராவுக்கு எக்கச்சக்க வேலை. குறிப்பாக பைட் காட்சியில் பின்னி பிடலெடுக்கிறது. முறையே பைட் மாஸ்டர் சில்வியாவுக்கும் ஒரு பலே! இருந்தாலும், மோகினி நயன்தாராவை அழுகுணியா காமிச்சதுக்காக சுளையா ஐம்பது மார்க்கை உருவிடறோம் ஆர்.டி.சார்…
பேய் கதைக்கெல்லாம் ஒரு ஃபார்முலா இருக்கிறது. அதையும் விட்டுக் கொடுக்காமல், அதற்குள்ளும் விழுந்து புரளாமல் குளிர குளிர கொக்கோ கோலா கொடுத்திருக்கிறார் வெங்கட்பிரபு.
மாஸ்… பொழுதுபோக்கு விரும்பிகளுக்கான முழுநீள சாய்ஸ்!
-ஆர்.எஸ்.அந்தணன்