மாயா – விமர்சனம்
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் தமிழகத்தில் ‘கரண்ட் கட்’ காலம் ஒன்று இருந்ததல்லவா? அந்த காலத்தில் சிந்திக்கப்பட்ட கதையாக கூட இது இருந்திருக்கலாம்! எங்கும் கும்மிருட்டு. ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் லைட்டுங்குகள் படத்திற்கு மேலும் அழகு சேர்க்க, அந்த க்ளைமாக்ஸ் பேய்க்காக காத்திருக்கிற (துர்)பாக்யம் நமக்கு! இறுதிக் காட்சியில் கூட பேயின் அகோர முகத்தை காட்டாமல் அதன் மனசை காட்டி படத்தை முடிக்கையில், ‘பேய்க்கும் உண்டு பெருங்கருணை’ என்ற முடிவோடு நடையை கட்டுகிறான் ரசிகன். மற்றபடி ஒரு பேய் படத்திற்குரிய எல்லா அமானுஷ்யங்களோடும் தயாரிக்கப்பட்ட மர்ம சூப்தான் மாயா!
மாயவனம் என்ற காட்டுப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மனநோயாளிகள் கூடத்தில், கொடூரமான சித்ரவதைகள் நடக்கிறது. அப்போது இறந்துவிடும் அவர்களை ஆங்காங்கே புதைத்து வைக்கிறார்கள். அப்படி புதைக்கப்படுகிற ஒருத்திதான் மாயா. அவளுக்கு ஒரு குழந்தையும் உண்டு. மாயாவின் மரணத்திற்கு பின் அந்த குழந்தை என்னவானாள்? மாயாவின் விரலில் இருந்த பல கோடி மதிப்பிலான மோதிரம் எங்கே போனாது? ஒவ்வொரு இரவிலும் அங்கு நடக்கும் அமானுஷ்யங்களின் அனுபவம் என்ன? இது குறித்தெல்லாம் கதை எழுதி வருகிறார் ஒருவர். இது படத்தில் வரும் ஒரு சினிமாதான். ஆனால் சினிமா என்று ரசிகனுக்கு சொல்லாமலே காட்சிகள் நகர, இன்னொரு புறம் கணவனை பிரிந்து கைக்குழந்தையுடன் கஷ்டப்படுகிறார் நயன்தாரா. கடன்காரனின் தொல்லை வேறு.
மேற்படி படத்தை தனியாக அமர்ந்து எவ்வித அச்சமும் இன்றி ரசித்தால் ஐந்து லட்சம் பணம் தருவதாக அறிவிக்கிறார் படத்தின் இயக்குனர். கடனை அடைக்க வேறு வழியில்லாமல் படம் பார்க்க போகும் நயன்தாராவுக்கு நடக்கும் விபரீதங்கள் என்ன? (கூட்டிக்கழித்து பார்த்தால், இதுதான் கதையாக இருக்கும்! ) கலராக தெரிவதெல்லாம் நிஜம் என்றும், பிளாக் அண் வொயிட் போர்ஷன் படத்தில் வரும் சினிமா என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளவே அரை படமாகிவிடுகிறதா? சற்றே குழப்பம். ஹி…ஹி…
தண்ணீரையும் தயிரையும் ஒன்று சேர்த்து மோராக்குவது மாதிரி, நயன்தாராவின் நிகழ்காலத்தையும், சினிமாவில் வரும் ஆவியையும் ஒன்று சேர்த்து ஜோராக்கியிருக்கிறார்கள். படத்தின் மிக முக்கியமான மையப்புள்ளியே இதுதான். நின்று விளையாடியிருக்கிறார் எடிட்டர் டி.எஸ்.சுரேஷ்.
படத்தின் ஆகப்பெரிய சொத்தே நயன்தாராதான்! கணவரின் பிரிவு. கைக்குழந்தையோடு அல்லாடும் வாழ்க்கை. வறுமையின் கிடுக்கிப்பிடி என்று எல்லாமும் சூழ்ந்து நின்று அடிக்கிறது அந்த கண்களில். டைரக்டர் ஒரு சுச்சுவேஷன் சொல்லி நடி… என்றதும், தன் சொந்த வாழ்க்கையை நினைத்து அவர் கொடுக்கும் பர்பாமென்ஸ், ‘அதாண்டா நயன்தாரா’ என்கிறது. தியேட்டருக்குள் படம் பார்த்துக் கொண்டிருக்கும் அவர், அப்படியே படத்திற்குள் ஐக்கியமாகி அந்த மாயவனத்திற்குள் செல்வதும், சில நிமிஷங்கள் ஒன்றும் புரியாமல் தவிப்பதும், அதற்கப்புறம் புரிந்து கொண்டு லயிப்பதுமாக நயன்தாராவின் கண்களில்தான் எத்தனை எக்ஸ்பிரஷன்ஸ்!
நயன்தாராவின் தோழியாக நடித்திருக்கும் லட்சுமிப்ரியாவுக்கும் அத்தனை முக்கியத்துவம் இருக்கிறது படத்தில். சரியாக உள்வாங்கிக் கொண்டு சபாஷ் வாங்குகிறார்.
லேசான கண்டிப்போடும், எந்நேரமும் சிந்தனையோடும் ஒரு வெற்றிப்பட இயக்குனருக்குரிய திமிருடனும் அப்படியே வாழ்ந்திருக்கிறார் மைம்கோபி. கல்பிரைட் நீதானா சாமி என்று கடைசி கடைசியில் இவரையும் போட்டுத் தள்ளுகிறார் டைரக்டர் அஸ்வின் சரவணன்.
என்ன ஒன்று? ரசிகனின் மண்டையில் உதிக்கும் அநேக ஏன்…ஏன்…ஏன்?களுக்கு வேலை வைக்காமல் எடுத்திருக்கலாம். ஆனால் பேய் படத்தில் லாஜிக் பார்ப்பவனும், பிரஷர் மாத்திரையில் ருசி இருக்கா என்று நாக்கை சப்புக் கொட்டுகிறவனும் அறிவாளின்னு பெயர் எடுத்ததா சரித்திரமே இல்லை என்பதால் அதற்கப்புறமும் இந்த படத்தை நோண்டுவது நியாயம் இல்லை.
சத்யன் சூரியனின் ஒளிப்பதிவும் ரான் யோஹனின் இசையும் இந்த படத்தை கிரேன் வைத்து உயர்த்தியிருக்கிறது.
மாயா- பேய்களின் பிரசவ வார்டில் மேலும் ஒரு குவா குவா…!
-ஆர்.எஸ்.அந்தணன்