மகனுக்கு மயிலு சொன்ன மேட்டர்!
வாரிசுகள் களம் இறங்குவது சுலபம்தான். அதே நேரத்தில் இறங்கிய இடத்தில் ஒரு செங்கல்லை நட்டு வைப்பது கூட ரொம்ப ரொம்ப கஷ்டம்! அப்பா மாதிரி இல்லேப்பா… என்று ஒரே போடாக போட்டுவிடுவார்கள். அப்படியிருந்தும் பிள்ளைகளுக்காக பிள்ளையாரை கரைக்கக் கிளம்பும் அப்பாக்கள், தானும் தடுமாறி, நம்பி வர்ற தயாரிப்பாளரையும் அதே கிணற்றில் போட்டு கரைத்துவிடுவார்கள். அவ்ளோ அனுபவசாலியான விஜயகாந்தே தன் மகனை உப்புமா படத்தை விடவும் சுமாரான ஒரு படத்தில் நடிக்க வைத்த கொடுமைக்கு பின் அது பற்றியெல்லாம் விரிவாக பேசியென்ன ஆகப் போகிறது? ஆனால் நகைச்சுவை நடிகர் மயில்சாமி அப்படியல்ல! ஆள் கெட்டி…
மகன் அன்புவை விஸ்காம் படிக்க வைத்ததுடன், உன் பிழைப்பு உன் கையில் பார்த்துக் கொள் என்று கூறிவிட்டார். “சார்… உங்க பையன் பார்க்க லட்சணமா இருப்பாராமே, கொஞ்சம் போட்டோ அனுப்பி வைக்க முடியுமா?” டைரக்டர் எஸ்.ராஜசேகர் கேட்க, “….ந்தா நேர்லேயே அனுப்பி வைக்கிறேன். நல்லா பாருங்க” என்று மகனையே அனுப்பி வைத்துவிட்டார். வந்தவரை பார்த்த ராஜசேகருக்கு திருப்தி. ‘அந்த 60 நாட்கள்’ என்ற படத்தை தயாரிக்க நினைத்த எஸ்.ராஜசேகரின் அப்பாவுக்கு அதைவிட திருப்தி.
கிட்டதட்ட நாலு மாசம் ஹீரோ தேடுறதே வேலயா இருந்தோம். அன்புவை பார்த்த அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் எங்க படத்துக்கு ஹீரோவை முடிவு பண்ணிட்டோம் என்கிறார் ராஜசேகர். அந்த 60 நாட்கள் படத்தின் கதை என்ன? தற்கொலை செய்து கொள்ளும் ஹீரோ மேலோகத்திற்கு போக, உனக்கு எக்ஸ்பயரி டேட் இது இல்லையேப்பா… என்கிறார் மிஸ்டர் எமன். பூமியிலே நீ பெண்டிங் வச்ச வேலையை ஆறு மாசத்துக்குள்ள செஞ்சு முடி. இல்லேன்னா உன் தலை வெடிச்சுரும் என்று மீண்டும் பூமிக்கே திருப்பி அனுப்பி வைக்கிறார். திரும்பி வரும் ஹீரோ அந்த வேலையை செய்து முடித்தாரா? என்பதுதான் க்ளைமாக்ஸ்.
படத்தில் 40 காமெடி நடிகர்கள் நடித்திருக்கிறார்களாம். சந்தானம் வடிவேலு என்று கற்பனையை தட்டிவிட்டால் கஷ்டம். இவர்கள் அடுத்த லெவல் காமெடியன்கள். சரி போகட்டும்… அன்புவுக்கு அப்பா மயில்சாமி சொல்லிக் கொடுத்த அட்வைஸ் என்ன? “தம்பி… தயாரிப்பாளர் டைரக்டர் என்ன சொல்றாரோ, அதை கேட்டு நடந்துக்கோ. தானா சினிமாவுல முன்னேறலாம்”.
மயிலு மாதிரி ஒவ்வொரு அலட்டல் ஹீரோவுக்கும் ஒரு அப்பா இருந்திருந்தா இன்டஸ்ட்ரி எவ்வளவு நல்லாயிருந்திருக்கும்?