மீகாமன் விமர்சனம்
அரையிருட்டு… அல்பாயுசில் போக வைக்கும் டூமீல் டூமீல்கள்… ஹஸ்கி வாய்சில் ரகசியம்… பழைய பங்களாக்களில் ஃபைட்…. இவையெல்லாம்தான் அண்டர்வேல்டு கிரைம் படங்களின் ஆண்டாண்டு கால ஃபார்முலா. அதையும் இழக்காமல், ‘அரைச்ச மாவுதாண்டா’ என்கிற அலுப்பையும் தராமல் ஒரு அண்டர்வேல்டு கிரிமினல்ஸ் படத்தை தர முடியுமா? முயற்சி செய்திருக்கிறார் மகிழ் திருமேனி.
கொக்கைன் கடத்தும் கொள்ளை கும்பலை கூண்டோடு பிடிக்க களம் இறங்குகிற போலீஸ், அவர்களுக்கு பொறி வைக்கிறது. ஆனால் உஷாராகும் கும்பல் தங்கள் கூட்டத்தில் புகுந்த கருப்பு ஆடுகளை தகுந்த நேரத்தில் கண்டு பிடிக்கிறது. அந்த கருப்பு ஆடுதான் போலீஸ் என்றும் அதில் ஒருவர்தான் ஆர்யா என்றும் சொல்லியா தெரிய வேண்டும் உங்களுக்கு? சவாலை சமாளித்து ஆர்யா அந்த கடத்தல் கும்பலை பிடித்தாரா? கொள்ளையை தடுத்தாரா? தலைவனை போட்டுத் தள்ளினாரா? என்பதுதான் இந்த படத்தின் ஹேர்பின் வளைவுகள். திடுக்கிடும் முடிவுகள்.
காக்கி சட்டை போடாத போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் ஆர்யா. எதிரெதிர் வில்லன்களை சாமர்த்தியமாக கோர்த்துவிட்டு அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்துகிற காட்சிகளுக்கு கைதட்டல் நிச்சயம். மிக இயல்பாக நகரும் திரைக்கதையில், ஆர்யா சிக்கிக் கொள்வாரோ என்கிற அச்சத்தை அடுத்தடுத்த காட்சிகளில் தொடர்ந்து ஏற்படுத்துகிற விதத்தில் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் மகிழ்திருமேனி. அந்த குறிப்பிட்ட காட்சி வருகிற நேரத்தில், ஒரு அதிபயங்கர ஆக்ஷன் ஹீரோவாக மாறி சகல சக்திகளையும் வெளிப்படுத்தி கைத்தட்டல்களை அள்ளிக் கொள்கிறார் ஆர்யா. குறிப்பாக அவர் க்ளைமாக்சில் போடுகிற கத்தி சண்டை பிரமிப்பு. ஆக்ஷன் இயக்குனர் அனல் அரசுக்கு சம்பளத்தையும் தாண்டி ஸ்பெஷல் போனஸ் கொடுத்தாலும் தவறில்லை. ‘ஹையோ… இவருக்கு லவ்வர் பாய் இமேஜ் வேறு இருக்கே’ என்று சுதாரித்துக் கொண்டு ஹன்சிகாவையும் ஆர்யாவையும் ரொமான்ஸ் பண்ண விடுகிறார் டைரக்டர். ஆனால் ஒட்டவே ஒட்டாத நான் ஸ்டிக் தோசையாக நிற்கிறது அந்த போர்ஷன் மட்டும். படத்தின் வேகத்திற்கு தடையாக இருப்பதும் கூட இந்த காதல் போர்ஷனே!
ஆர்யா மீது சந்தேகம் வந்தபின் மீண்டும் ஆர்யா அந்த கொள்ளை கூட்டத்திடம் சேர்கிற வரைக்குமான காட்சி, செம த்ரில்!
இதற்கு முன்பு ஜெனிலியா, லைலாக்கள் பண்ணிய ‘ஐயோ பாவ’ ரோலில் ஹன்சிகா! கொஞ்சம் கூட மேட்ச் ஆகவே இல்லை. ஆனால் எந்த படத்திலும் இல்லாத அளவுக்கு ஆர்யாவுடன் தாராளம் காட்டுவதால், சூடான ஐஸ்கிரீம் ஆகியிருக்கிறது ஹன்சிகாவின் தரிசனம். நல்லவேளை… டிபிக்கல் வில்லன்கள் நிறைந்த கதையில் ஹன்சிகாவை கடத்தி வைத்து இம்சித்துவிடுவார்களோ என்கிற அச்சத்தை போக்கியிருக்கிறார் மகிழ்திருமேனி. தப்பித்தோம். இன்னொரு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரமணாவுக்கு அழுத்தமான ரோல். வில்லன்களிடம் சிக்கி கொடூரமாக செத்துப் போகிறார்.
பின்னி மில்லும் சற்றே இருட்டும் இருந்தால் நிழல் உலக தாதாக்கள் படம் தயார் என்கிற இலக்கணத்தை சற்றும் மீறாமலிருக்கிறது அநேக காட்சிகள். வில்லனாக நடித்திருக்கும் சசித்தோ ராணே அதிகம் அலட்டிக் கொள்ளவே இல்லை. காது ஜவ்வை கிழிக்கிற அளவுக்கு கத்தவும் இல்லை. மிக மிக சாதாரணமாக நடிக்கிறார். ஆனால் அவர் வருகிற காட்சிகளில் இதயம் படக் படக்கென அடித்துக் கொள்கிறது.
ஆபரேஷனை லீட் செய்யும் அனுபமா குமார் ஒரு கட்டத்தில் டிபார்ட்மென்ட் அதிகாரிகளாலேயே அதிருப்தியாகி அல்பாயுசில் போவது திடுக் திடுக்தான்.
படத்தில் ஏராளமான போலீஸ் அதிகாரிகளை அறிமுகப்படுத்திக் கொண்டேயிருக்கிறார் இயக்குனர். ஒரு கட்டத்தில் ‘விடுங்க சார். போதும்’ என்றாகிவிடுகிறது. ஒரு வெட்டிப் பேச்சுக்கு கூட படத்தில் காமெடி நடிகர்கள் இல்லாதது பெருங்குறைதான். படம் முழுக்க துப்பாக்கி குண்டுகளால் முழங்கும் வில்லன் கூட்டம், க்ளைமாக்சில் மட்டும் ஒவ்வொருவராக வந்து அடிவாங்கிவிட்டு போவதெல்லாம் அதுவரையிலான படத்தின் எலாஸ்ட்டிக் தன்மையை பொசுக்கென அறுத்து, பெரும் சிரிப்பிலாழ்த்துகிறது.
இசை தமன். ஒன்றிரண்டு பாடல்கள்தான். பின்னணி இசை காட்சிகளை அர்த்தமுள்ளதாக்குகிறது. ஆக்ஷன் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார் லைட்டிங் அந்த பரபரப்பை இன்னும் கூடுதலாக்குகிறது. கரணம் தப்பினாலும், குழப்பத்தை ஏற்படுத்துகிற காட்சியமைப்புகள் இருந்தாலும், அதையெல்லாம் கச்சிதமாக வெட்டி கோர்த்து கவலை போக்குகிறார் எடிட்டர் ஸ்ரீகாந்த். குறிப்பாக கடத்தல் செயின் பற்றி வில்லனுக்கு விளக்குகிற காட்சி.
முட்டை பிரியாணியை கிளறும்போது அதில் முழு கோழியே உசிரோடு உட்கார்ந்திருந்தால் எப்படியிருக்கும்? அப்படியொரு திகிலையும் பிரமிப்பையும் கொடுக்கிறது படம். ‘இருந்தாலும் மகிழ்திருமேனி… உங்ககிட்ட நாங்க இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறோம்’.
-ஆர்.எஸ்.அந்தணன்