மீண்டும் ஒரு காதல் கதை- விமர்சனம்
கடுகு டப்பாவுக்குள் காதல், காய்கறி மூட்டைக்குள் காதல், சந்து பொந்து, சைடு கண்ணாடியெங்கும் காதல் என்று காதலை விதவிதமாக பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. பர்தா போட்ட முஸ்லீம் பெண்ணுக்கும், பட்டை போட்ட இந்து பையனுக்கும் லவ் என்பது மேற்படி சங்கதிகளுக்குள் ஒன்றாகிப் போய் அநேக வருஷங்களாகிவிட்டது. இந்தப் படமும் அப்படியொரு கிராஸ் காம்பினேஷன்தான். (அதென்னப்பா மணிரத்னம் எடுத்தால் மட்டும், அழுகிய முட்டையோடு அவர் வீட்டு முன் குவியுறீங்க, அதுவே வேற ஆள்னா, முட்டை செலவு மிச்சம்னு கழண்டுக்கிறீங்க?)
கதையும் மணிரத்னம் பட காரண காரியத்தோடுதான் ஆ-ரம்பம் ஆகிறது. இரண்டு சிறுவர்களில் ஒருவன் ‘பர்தா போட்ட முஸ்லீம் பெண்ணைதான் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கணும்டா’ என்கிறான். அவன் வளர்ந்து பெரியவனாகி, அதே லட்சியத்தை அடையப் போகிற அந்த தருணமும் வருகிறது. யெஸ்… ஒரு திருமண வீட்டில் இஷா தல்வாரை பார்க்கிறான். அடித்துப்பிடித்துக் கொண்டு வருகிறது லவ். மதம் என்கிற வேலியை தாண்டி, பயிர் மேய்கிறது காதல் ஆடு. அப்புறமென்ன? கசாப்புதான்… வெட்டுதான்! பெண்ணை பையனிடமிருந்து பிரிக்கிற வேலை நடக்கிறது. அதையும் மீறி அவள் எப்படி ஹீரோவுடன் கை கோர்த்தாள் என்பதுதான் க்ளைமாக்ஸ்.
முன்பெல்லாம் சாக்லெட் பாய் என்றால், ஒரு கிரேஸ் இருந்தது. இப்போதெல்லாம் அதே சாக்லெட் பாய்களை ‘தயிர் சாதம்’ என்று தள்ளி வைக்கிறார்கள் பெண்கள். இத்தகைய மோசமான கால கட்டத்தில்தான் முகம் கொள்ளா சிரிப்போடு அறிமுகம் ஆகியிருக்கிறார் சாக்லெட் பாய் வால்டர் பிலிப்ஸ். (நாங்க இதுக்கு முன்னாடி பார்த்த வால்டருக்கெல்லாம் பெரிய முறுக்கு மீசை இருக்குமேய்யா) எந்நேரமும் கிளிமூக்கு சைட் போசுடன் சிரித்துக் கொண்டேயிருக்கிறார் தம்பி. நல்லவேளை… நடிப்பில் குறை வைக்கவில்லை. அதிலும், தன் லவ்வை மூச்சிரைக்க அவர் சொல்லி முடிக்கும் அந்த காட்சி, வாவ்…. அந்த நேரத்தில் எழுதப்பட்டிருக்கும் வசனத்திலும் உயிர்ப்பு ஏராளம்.
நிலா வெளிச்சத்தை பிடித்து மெழுகி செய்தது போல இருக்கிறார் இஷா தல்வார். ‘தட்டத்தின் மறயத்து’ என்கிற படத்தின் மலையாள வெர்ஷனிலும் இவர்தான் ஹீரோயின். தமிழுக்காக இரண்டாம் முறை நடிக்க நேர்ந்தாலும், ஒரு அப்பழுக்கும் இல்லாத நடிப்பு. படம் முழுக்க வளவள பேச்சே இல்லை இஷாவுக்கு. அதுவே அவர் மீது ஒரு இனிப்பை தடவி வைக்கிறது. அதன் காரணமாகதான் அந்த பேசா மடந்தை, நறுக்குத் தெறித்தார் போல பேசும் அந்த கடைசி டயலாக்குக்கு செவி கொடுக்கிறது நமது மனசு. ‘காரைக்குடி சிவராமன் சார் வீட்டுல நான் தொழுவதற்கு எனக்கு ஒரு சின்ன இடம் கொடுப்பியா?’ என்பதோடு படம் முடிய, “என் வீட்டுக்கு வா… நான் தர்றேன்” என்று குரல் கொடுக்கிறார்கள் ரசிகர்கள். மனசுல பூந்துட்டியே மகராசி…
அந்த ஊரில் பெரிய அரசியல்வாதியாம் நாசர். ஆனால் கேரக்டர்தான் தம்மாத்துண்டு. நாசர் எப்படிதான் ஒப்புக் கொண்டாரோ? அவரது தம்பியாக நடித்திருக்கும் தலைவாசல் விஜய்யை ஓவர் ஆக்டிங் பண்ண விடாமல் அடக்கி வைத்த டைரக்டருக்கு ‘ஆல் இண்டியா நெஞ்சுவலிக் காரர்கள் சங்கம்’ ஒரு பெரிய நன்றியை செலுத்தும்.
வால்டர் பிலிப்சின் நண்பராக நடித்திருக்கும் அர்ஜுனன் பல காட்சிகளில் கலகலக்க விடுகிறார். மெல்ல வளரும் காமெடியன். மேலும் அழுத்தமான இடம் பிடிப்பார்.
படத்தில் பெரும் காமெடி பண்ணியிருப்பவர் போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் மனோஜ் கே ஜெயன்தான். ஏன்யா… போலீஸ் ஸ்டேஷன்னா வேற கேஸ் வராதா? ஹீரோவின் காதலை சேர்த்து வைக்க ஒரு போலீஸ் ஸ்டேஷனே ஓவர் டைம் போட்டு வேலை பார்ப்பதெல்லாம் உங்களுக்கே நியாயமா? ஹீரோயினை பார்க்கிற அத்தனை போலீஸ் காரர்களும், ஏதோ இவர்களே அவளை காதலிப்பது போல முக பாவனை போடுகிறார்கள். கடவுளே… கடவுளே…
விஷ்ணு சர்மாவின் ஒளிப்பதிவில் மனதிற்கு இதம் தரும் லைட்டிங்! அழகு!
ஜிவி.பிரகாஷ்தான் இசை. மை போட்டு மை போட்டு மயக்கத்தான் வந்தாளே பாடல் மட்டும் இனிமையோ இனிமை. அதற்கப்புறம் வருகிற எல்லா பாடல்களும் அநேகமாக ஒரே ட்யூன். அதிலும் ஐந்து நிமிஷத்துக்கொரு பாடலாக போட்டு ராவி விடுகிறார் ஜி.வி.
மலையாளத்திலிருந்து பொத்தி பொத்தி கொண்டு வந்த காதல் கிரிட்டிங்ஸ்-ஐ, இப்படி கரையான் அரிச்சுருச்சே!
-ஆர்.எஸ்.அந்தணன்